Wednesday, March 16, 2016

வினைகள், எதிர்வினைகள், முடிவுகள் - Ends and means

ஆல்டஸ் ஹக்ஸ்லி (Aldous Huxley)யின் 1937ல் வெளிவந்த Ends and means என்ற கட்டுரைத் தொகுப்பு இன்றைய நிலைக்கும் பொருத்தமான கட்டுரைகளை உள்ளடக்கியது. கடந்த இரண்டு நாட்களாக இதில் உள்ள அத்தியாயங்களை படிக்கும்போது பல சிந்தனைகளுக்கு அழைத்து செல்கின்றது.  சமூக சீர்திருத்தம், பயங்கரவாதம் இல்லாத சமுதாயம், திட்டமிட்ட நாடு, இயற்கையான நவீன அரசு, அதிகாரம் பரவலாக்கப்பட்ட வட்டார மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், கல்வி, சம உரிமை, மத வழிபாடு, நம்பிக்கைகள், நேர்மை, போர்கள் என்ற தலைப்பில் பல்வேறு செய்திகள் இன்றைக்கும் உள்ள சிக்கல்களை 80 ஆண்டுகளுக்கு முன்னால் ஹக்ஸ்லி சொல்லியிருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது.

வினைகள், எதிர்வினைகள், தீர்வுகள் என்பது வாதமாக இருந்தாலும் எதற்கும் ஒரு முடிவு உண்டு. அந்த இறுதி நேர்மையாக இருக்கவேண்டும். அதுவே இயற்கையின் நீதியாகும். அந்த வகையில் Ends and means என்று ஹக்ஸ்லி வைக்கின்ற வாதங்கள் அனைத்தும் தீர்வுகளோடு முடிவுகளுக்கும் செல்கின்றன. இப்போது முடிவுகளும், தீர்வுகளும் நேர்மையாக இருப்பது சந்தேகத்துக்குரிய விடயமாகும். ஆனால் எப்படியோ ஒரு முடிவு உண்டு. ஆண்ட பொறுப்பற்ற சாம்ராஜ்யங்கள் வீழ்ந்ததும் முடிவுதான். மண்ணாசையில் அலெக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர் என்போர் துவக்கத்தில் பீடுநடை போட்டாலும், முடிவுகள் எப்படி ஆனது? இதுவே Ends and means என்ற வகையில் முடிவுகள் அனைத்தும் செய்திகளை சொல்லும். அந்த செய்திகள் நல்லவையாக, ஏற்றவையாக, பொருந்துவையாக இருக்கப்பட வேண்டும். தப்பிலித்தனமான முடிவுகள் யாவும் நெருக்கடிகளை சந்திக்கும். அந்த வகையில் பொருத்தமானவர்கள், தகுதியானவர்கள், தரமானவர்கள், கண்ணியமானவர்கள், நேர்மையானவர்களிடம் வினைகளை விடவேண்டும். அங்குதான் வெற்றியும் கிடைக்கும். இவர்களைத்தான் அங்கீகரிக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில்தான் பொதுவாழ்வு தூய்மையாகும்.

Ends and means பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் விரும்பிப் படித்தது உண்டு. பத்திரிகையாளர் சாவி அவர்கள் டெல்லியில் காமராஜரை மெட்ராஸ் இல்லத்தில் (இன்றைக்கு பழைய தமிழ்நாடு இல்லம்) சந்திக்கும்போது, அவர் தன்னுடைய படுக்கையின் அருகே Ends and means ஐ வைத்திருந்தார் என்றும் அதைப் பற்றி குறிப்பிடும்போது அரசியல் தலைவர்கள் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய நூல் என்று காமராஜர் கருத்து தெரிவித்தார் என்று சாவி கூறியுள்ளார்.

இதே கருத்தை காமராஜரின் சகாவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எனது உறவினர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு ஒருமுறை சொல்லும்பொழுது Ends and means நேரு விரும்பிய நூல். அந்த நூலை பெறவேண்டும் என்று காமராஜர் டெல்லியில் பல புத்தகக் கடைகளில் ஏறி இறங்கியதாக என்னிடம் சொல்லியுள்ளார்.  பேரறிஞர் அண்ணாவும் இதை நன்கு ரசித்து படித்த நூல் ஆகும். இந்த இடத்தில் காமராஜரிடம் அறிமுகமாகி, மாணவர் அரசியல் இயக்கங்களில் பணியாற்றியதெல்லாம் நெஞ்சத்தை தணிக்கும் பழைய நினைவுகள். அவரோடு, பிரதமர் இந்திரா காந்தி, மொராஜி தேசாய், கவிஞர் கண்ணதாசன் போன்ற ஆளுமைகளோடு எடுத்த புகைப்படங்கள் யாவும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தையொட்டி நானும் என்னோடு தங்கியிருந்த பிரபாகரனின் உடைமைகளையும் அந்த இல்லத்தையும் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மோகன்தாஸ் என்ற காவல்துறை அதிகாரி 6 மணி நேரம் சோதனை நடத்தி அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர். இந்தத் தலைவர்களோடு எடுத்த புகைப்படங்களாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் 1983, 84ல் உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமனை தலைமைச் செயலகத்துக்கும், கடற்கரை எதிரே உள்ள காவல்துறை தலைமையகத்திற்கும் அலைந்து அலைந்து என் காலணிகளே தேய்ந்துவிட்டன. இந்த நேரத்தில் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இப்படியெல்லாம் சிந்தனையோட்டத்தோடு இருந்த தலைவர்களை பார்க்க நேர்ந்ததே என்ற ஒரு மகிழ்ச்சிதான். ஆனால் அதில் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எம்.கே.டி. சுப்ரமணியம் மூலமாக கிடைத்தது.
இந்த எம்.கே.டி.எஸ். யாரென்றால் பெரியாருக்கு நெருக்கமானவர். அண்ணா ராபின்சன் பார்க்கில் தி.மு.க.வைத் பெத்தாம்பாளையம் பழனிசாமி தலைமையில் துவக்கும்போது 6 பேரில் இவர் பெயரையும் பேரறிஞர் அண்ணா சேர்த்திருந்தார். இது ஒரு வரலாற்று நிகழ்வு. இவர் கொடுத்த புகைப்படத்தில் அக்டோபர் 2, 1975 அன்று பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் வைத்திருந்தபோது நெடுமாறன் அருகே ஒரு மூலையில் சற்று முகவெட்டு மட்டும்தான் தெரியும். அதுதான் இன்றைக்கு பழைய நினைவுகளுக்கு எச்சமாக கைவசம் உள்ள புகைப்படம்.

40 ஆண்டுகளுக்கு முன்னால் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களும், காமராஜர் விரும்பிப் படித்த Ends and means ஐ நினைவில் கொண்டு சற்று அசை போட்டேன்.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...