Sunday, March 6, 2016

நெட்டுல சுட்டதுங்க..

அருமையான விஷயமாய் இருந்தது. ஓய்வாயிருக்கும் போது படிக்கலாம் என சேர்த்து வைத்தேன்..

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..

சாய்ஜிங் என்ற சீனப் பெண் இயக்குநர் இயக்கி வெளியிட்ட “மாடத்திற்குக் கீழே” (Under the Dome) என்ற ஆவணப்படம் அண்மையில் வெளியானபோது, அதனை ஐந்தே நாளில் ஐம்பது இலட்சம் பேர் பார்த்தார்கள்.

இந்த ஆவணப்படம் ஒரு தாய் தனது பள்ளி செல்லும் மகளை வீட்டை விட்டு வெளியில் விளையாட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதன் காரணத்தை விளக்கும் போக்கில் விரிகிறது.

சீன நகரங்களில் எங்கும் பரவியிருக்கும் அடங்காத புழுதிப்படலங்கள் உள் இழுக்க தகுதியற்றவை, பல நோய்களை உருவாக்கும் ஆபத்து உண்டு என்பதால் தனது மகளை அத்தாய் வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்கிறாள். இச்சிக்கல் பற்றி, அந்த ஆவணப்படம் விவாதிக்கிறது. (சீனாவின் புழுதிப்படலம் குறித்து இவ்விதழில் வேறொரு கட்டுரை விரிவாக விவாதிக்கிறது).

மக்கள் ஏதாவதொரு இன்றியமையாப் பொருள் கிடைக்காமல் திண்டாடினால், அந்தப் பற்றாக்குறைச் சூழலை தனது சந்தை வாய்ப்பாகக் கருதுவதுதான் முதலாளியம். மக்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு என்றால் அது தண்ணீர் முதலாளிகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முதலாளியத்தின் சந்தை விதி அது!

இருபது - இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் குடி தண்ணீர் ஓர் விற்பனைப் பொருளாகும் என்று நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இன்று மாநகரங்கள், சிறு நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில்கூட தண்ணீர் வணிகம் விரிவடைந்துவிட்டது. நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்க மக்களுக்கு மளிகைப் பொருள் பட்டியலில் குப்பித் தண்ணீரும் சேர்ந்துவிட்டது. வரும் 2018-க்குள் இந்தியாவில் நடைபெறும் குடி தண்ணீர் வணிகம் 9 இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயைத் தொடும் என அரசின் ஆய்வறிக்கைகளே கூறுகின்றன.

தண்ணீரைத் தொடர்ந்து இப்போது, சுவாசிக்கும் காற்றும் விற்பனைப் பண்டமாக மாறத் தொடங்கி விட்டது. இது மனித குலத்தைச் சூழ்ந்துள்ள மிகப்பெரிய ஆபத்தைக் குறிக்கிறது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங் தொடங்கி அந்நாட்டின் பல்வேறு நகரங்கள் வாரக் கணக்கில் -- மாதக் கணக்கில், புழுதிப்படலத்தால் சூழப்பட்டு பகலிலேயே வாகனங்கள் விளக்கு வெளிச்சம் பாய்ச்சி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அங்குள்ள காற்று மூச்சுவிடத் தகுதியற்றதாக மாறிவிட்டது. மூக்கில் பாதுகாப்புக் கவசம் அணிந்து செல்வது என்பதையெல்லாம் தாண்டி, மிகப்பெரும் அளவிற்கு தூசுப்படலத்தின் அடர்த்தி அதிகரித்ததால்தான் கடந்த 24.12.2015 அன்று சீன அரசு அபாய அறிவிப்பை (Red Alert) வெளியிட்டது.

இந்த அபாய அறிவிப்பு கனடா நாட்டின் ஓர் நிறுவனத்தை மகிழ்ச்சிக் கூத்தாட வைத்தது. ‘வைட்டாலிட்டி ஏர்’ (Vitality Air) என்ற கனடா நாட்டின் தனியார் நிறுவனம் இதுவரை யாரும் நினைத்துப் பார்த்திராத ஒரு வணிகத்தில் இறங்கியது. அதுதான் காற்று வணிகம்!

அந்த நிறுவனத்தின் 2 முதலாளிகளில் ஒருவரான மோசஸ் லாம் சீன அரசின் அபாய அறிவிப்பு வந்த நாளில் இலண்டன் மாநகரத்தில் தி டெலிகிராப் என்ற இதழுக்கு அளித்த செவ்வியில், “சீன மாநகரங்களில் நீங்காமல் நின்று நிலைத்துவிட்ட புழுதிப்படலங்கள் எங்களுக்கு ஓர் புதிய சந்தை வாய்ப்பாக அமைந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி எங்கள் நிறுவனம் ஏற்கெனவே ஓர் கப்பல் நிறைய காற்று புட்டிகளை (பாட்டில்களை) சீனாவிற்கு அனுப்பிவிட்டோம். அது விரைவாக விற்றுக் கொண்டிருக்கிறது. காற்று வணிகத்திற்கு சீனா மட்டுமின்றி இந்தியா, துபாய் ஆகிய நாடுகளும் விரிந்த சந்தை வாய்ப்பை எங்களுக்கு வழங்குகின்றன. விரைவில் அந்த நாடுகளுக்கும் நாங்கள் எங்கள் காற்று வணிகத்தை விரிவாக்குவோம்” என்றார்.

இந்த காற்று புட்டிகள் இயல்பிலேயே எடைக் குறைவானவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒரு காற்று பாட்டில் எடை 15 கிராம்தான். எனவே, இந்த பாட்டில்களை இடுப்புப் பட்டையிலும் முதுகில் தொங்கவிட்டும் எளிதில் எடுத்துச் சென்றுவிடலாம். ஒரு காற்று பாட்டில் விலை இந்திய மதிப்பின்படி 1920 ரூபாய். “ஒரு பாட்டிலில் உள்ள தூயக் காற்றைக் கொண்டு 200 தடவை மூச்சு இழுக்கலாம்” என்று இந்த வைட்டாலிட்டி ஏர் நிறுவனத்தின் குப்பிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு தடவை மூச்சு இழுக்க ரூ. 9. 60.

இது எவ்வளவு பெரிய உயிர் வணிகம்!

“இப்போதைக்கு, தண்ணீரைவிட 50 மடங்கு உயர் விலையில் எங்களது தூயக் காற்று விற்பனையாகிறது. தேவை உயரும்போது எங்கள் வாடிக்கையாளர்கள் விலை உயர்வைப் பொருட்படுத்தாமல் இதை வாங்குவார்கள் என்று நம்புகிறோம்” என்கிறார் மோசஸ்லாம்.

உண்மைதானே! மூச்சுவிடாமல் உயிர் வாழ முடியாதது தானே! அதற்கு உயிர் வாழ விரும்பும் யாரும் காசு கொடுத்துதான் ஆக வேண்டும் என்றால் கொடுத்துத்தானே தீர வேண்டும்.

அதன் மறுபக்கம் என்ன? காசு கொடுத்து காற்று வாங்க வழியில்லாதவர்கள் சாக வேண்டும் என்பதுதானே!

முதலாளியத் தொழில் வளர்ச்சியும், அது வளர்த்துவிட்டுள்ள “வளர்ச்சி வாதமும்” (Growthism) எவ்வளவுக் கொடூரமானவை, மனிதகுலத்திற்கு எதிரானவை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

இது ஏதோ சீன நாட்டின் சிக்கல் மட்டுமல்ல. அது இந்தியாவையும் தமிழ்நாட்டையும் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) 2015 தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கை, உலகின் தூய்மைக் கேடான 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்றும், இந்நகரங்களின் தூசுப் படலம் அபாய அளவைத் தாண்டிக் கொண்டிருக்கிறது என்றும் எச்சரித்தது.

காற்று மண்டலத்தின் தூய்மை அளவை கணக்கிடுவதில் தூசு அளவு ஓர் முக்கியக் காரணியாகக் கொள்ளப்படுகிறது. இந்த தூசுப்படலங்கள் அவற்றின் சுற்றளவை வைத்து இரண்டு வகையாகப் பிரிக்கப் படுகின்றன. மிதக்கும் தூசியின் சுற்றளவை வைத்து அவை PM 2.5, PM 10 என வகைப்படுத்தப் படுகின்றன. இதில், 2.5 என்பது 2.5 மைக்ரோ மில்லி மீட்டர் சுற்றளவுள்ள தூசுத் துகள்களைக் (Particulate Matter) குறிக்கும், 10 என்பது 10 மைக்ரோ மில்லிமீட்டர் சுற்றளவுள்ள தூசுத் துகள்களைக் குறிக்கும். (1 மைக்ரோ மில்லி மீட்டர் என்பது மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கைக் குறிக்கும்).

இந்த இரண்டுவகை தூசுத் துகள்களும் ஆபத்தானவைதான் என்ற போதிலும், PM 2.5 தூசுகள் மிக எளிதாக மூச்சுக் காற்றுடன் கலந்து உள்ளிழுக்கப் பட்டுவிடும். இந்த தூசுக் காற்றை சில மாதங்கள் சுவாசித்தால் ஆஸ்துமா நோயும், தொடர்ந்து சுவாசித்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களும் ஏற்படும்.

நாம் சுவாசிக்கும் காற்றில் இந்த PM 2.5 தூசு ஒரு கன மீட்டர் காற்றில் 25 மைக்ரோ கிராம் அளவுக்குள் இருந்தால், மனித உடலின் எதிர்ப்பு சக்தியே அவற்றை சரி செய்து கொள்ளும். அதற்குமேல் போனால், ஆபத்துதான்!

ஆனால், சென்னையின் காற்றின் மாசுபாட்டை அளந்து கூறிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை, சென்னையின் கத்திவாக்கம், அண்ணா நகர், வள்ளுவர் கோட்டம், தியாகராயர் நகர் ஆகிய அனைத்து மையங்களிலும் 2015 ஏப்ரல் தொடங்கி நவம்பர் முடிய இருந்த மொத்தமுள்ள 243 நாட்களில் 233 நாட்கள் அபாய அளவைத் தாண்டிய தூசு மாசோடுதான் சென்னையின் காற்று இருந்ததை அறிவிக்கிறது. அதாவது, அபாய அளவைத் தாண்டிய தூசுக் காற்றைத்தான் மிகப்பெரும்பாலான நாட்கள் சென்னை மக்கள் சுவாசித்திருக்கிறார்கள்.

இப்போது பெரு வெள்ளப் பேரிடர் தாக்கியப் பிறகு, திசம்பரில் தூசு அளவு பல மடங்கு உயர்ந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. அன்றாடம் சாலையில் பயணிப்போர் அனைவரும் உணரக்கூடிய பேரிடர் இது!

உலகின் தூசு மாசு நிறைந்த நகரங்களில் முன்னணி வரிசையில் உள்ள நகரம் தில்லி. இப்போது, அங்கு அடுக்குமாடி வீடு கட்டும் முதலாளிகள், “எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் மையப்படுத்தப்பட்ட காற்றுத் தூய்மையாக்கிகள் (Air Pàrifier) இணைக்கப்பட்டுள்ளன” என்று விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். தூயக் காற்றுள்ள வீடு வேண்டுமானால் அதற்கு அதிக விலை கொடுத்தாக வேண்டும்.

உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் காற்றுத் தூய்மையாக்கிகள் பொருத்தப்பட்டு அதற்கு தனியாகக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தில்லியில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இது விரைவில் சென்னைக்கும் - தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் வந்துவிடும்.

இது கற்பனையல்ல! தமிழகத்தை நெருங்கி வரும் ஆபத்து இது!

கடந்த 21.12.2015 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நலவாழ்வுத்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட ஓர் அறிக்கையில், சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 863 பேர் மாசுபட்ட காற்றை சுவாசித்து, அதனால் ஏற்பட்ட நோயால் இறந்து வருகிறார்கள் எனக் கூறப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் மாசடைந்த காற்றை சுவாசித்ததனால் ஏற்பட்ட நோய்களுக்காக, சென்னையில் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளில் 4 இலட்சத்து 62 ஆயிரம் பேர் அபாய நோயாளிகள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஏற்கெனவே முதுகில் தூக்கிச் செல்லக் கூடிய காற்றுத் தூய்மையாக்கிகள் சந்தைக்கு வந்துவிட்டன. இனி, வெளியில் செல்பவர்கள் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது போல், முதுகில் காற்றுத் தூய்மையாக்கிகளையும் சுமந்து செல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் விலை உண்டு! அதுவும் காற்றின் விலை தண்ணீரைவிட பல மடங்கு அதிகமானது.

பணமுள்ளவர்கள் உயிர் வாழட்டும் என்ற கொடிய சந்தை வாழ்க்கையை வரவேற்கப் போகிறோமா அல்லது அதை மறுத்து வாழத் தகுந்ததாக நமது மண்ணைப் பாதுகாக்கப் போகிறோமா என்பதே நமது கழுத்தை நெருக்கிக் கொண்டிருக்கும் கேள்வி.
=================================================

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...