Sunday, March 27, 2016

பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே. சம்பத்

பேரறிஞர் அண்ணா, ஈ.வி.கே. சம்பத் அவர்கள் குறித்த தினமணி கதிர் கட்டுரையில் குற்றாலம் பயணத்தைக் குறித்து படிக்க நேர்ந்தது. அண்ணாவை பார்த்தது மட்டும் உண்டு. ஈ.வி.கே. சம்பத் அவர்ளோடு பழ. நெடுமாறன் அவர்கள் மூலமாக நெருக்கமும், தொடர்பும் உண்டு. கோவில்பட்டி வள்ளிமுத்து எங்கள் ஊர்க்காரர். 1989 தேர்தலில் போட்டியிடும்போது, வெற்றிபெற வேண்டும் என்று என்னை வாழ்த்தியவர்.  இவர்களை குறித்து வந்த தினமணி கதிர் பத்தி சற்று மனதை ஈர்த்தது.

அது வருமாறு:

சீசனில் குற்றாலம் செல்ல வேண்டுமென்று அண்ணாவுக்குக் கொள்ளை ஆசை. கோவில்பட்டி வள்ளிமுத்து கூட அடிக்கடி அழைப்பார். நெல்லை செல்லும்பொழுது கே.வி.கே. சாமி நினைவுபடுத்துவார். தொல்லை மிகுந்த லட்சிய வாழ்க்கையில் இந்த உல்லாசங்களுக்கு இடமேது?

கே.ஆர். ராமசாமிக்கு ஒரு யோசனை தோன்றியது. அண்ணாவையும் சம்பத்தையும் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்ற தம் எண்ணத்தை அண்ணாவிடம் வெளியிட்டபோது, ""தம்பி சம்பத் மாணவர் இயக்கத்தில் தீவிரம் காட்டுகிறான். அவன் குடந்தை வருகிறபோது சொல். நாம் போய் வரலாம்'' என்றார் அண்ணா.

அண்ணா, கே.ஆர்.ஆர்., சம்பத் மூவரும் இணைந்துவிட்டால் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விடுவார்கள். சுற்றுலா என்றால் கேட்கவா வேண்டும்?

சிந்தையைக் குளிப்பாட்டும் "சில்'லென்ற மென் தென்றல் தவழ்ந்துவரும் குளிர் குற்றாலம் சென்றனர் மூவரும். அவர்களோடு நகைச்சுவை நண்பர் சி.வி. ராஜகோபாலும் சேர்ந்து கொண்டார். பணிவிடைக்குப் பழம்பெரும் சுயமரியாதை இயக்கத் தலைவர் பொன்னம்பலனார் உடனிருக்கக் குறைவேது? தென்பாண்டி மண்ணின் சிறப்புகளுக்கு ஆலோலம் பாடும் குற்றாலத் தேனருவி. ஆல விழுதிறங்கும் பான்மையில், ஆடிச் சலசலக்கும் ஐந்தருவிக் காட்சியை அவர்கள் கண்டுகளித்தனர். வெள்ளியினால் செய்த வெகு நீளச் சங்கிலி போல் வெள்ளருவி துள்ளிவரும் காட்சியைக் கண்டு ரசித்தனர். உடல்வலி போக்க எண்ணெய் தேய்த்து அருவியில் குளித்தெழுந்தால் உடலுக்குக் குளிர்ச்சி; உள்ளத்திற்கும் மகிழ்ச்சி.

தம்பி சம்பத்தை உட்கார வைத்து அண்ணா எண்ணெய் தேய்த்து விடுகிறார். உடன்பிறந்த அண்ணனுக்குக் கூட அந்த அளவு அக்கறை இருக்காது. தம்பி சம்பத் தளிர்க் கரங்களால் அண்ணனுக்கு எண்ணெய் தேய்த்து விடுகிறார். மகிழ்ச்சியும் குதூகுலமும் போட்டியிடுகின்றன. அண்ணாவின் நகைக்சுவை தென்றலினும் இனிமை காட்டுகிறது. அனைவரும் ஐந்தருவியில் நீராடுகின்றனர். அண்ணாவுக்குத் தண்ணீரில் இறங்கவே பயம். அவரை ராமசாமியும், ராஜகோபாலும் தூக்கி வந்து அருவியில் நிறுத்துகின்றனர். அண்ணாவோ பதறுகிறார். பாய்ந்து விளையாடும் தம்பி சம்பத்துக்குத் தீங்கேதும் ஏற்பட்டுவிடக்கூடாதென்று கவனம் முழுவதையும் தம்பியின் பக்கம் திருப்புகிறார். ""எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று தைரியம் கூறுகிறார் கே.ஆர்.ஆர்.

""அண்ணா இந்த இன்பமான சூழ்நிலையில் கே.ஆர்.ஆரின் இசை கேட்டால் எப்படி இருக்கும்?'' என்கிறார் சம்பத். உடனே எட்டுக்கட்டை சுருதியில் கே.ஆர்.ஆர். ராக ஆலாபனை செய்கிறார். சுற்றுலா வந்தவர்கள் சுகமாக இசையில் நீந்துகின்றனர். அண்ணாவுக்கு இத்தகைய அனுபவங்கள் தனிச் சுகம் தரும்.

அப்போது அங்கே மனிதனை மனிதன் இழுத்து செல்லும் கை ரிக்ஷாக்கள் உண்டு. ஆனந்தத்திலும், ஆர்வம் மிகுதியிலும் அண்ணா சம்பத்தைத் தூக்கி ரிக்ஷாவில் வைத்துத் தாமே இழுக்கிறார். சம்பத் குதித்திறங்கி அண்ணாவை ரிக்ஷாவில் ஏற வைத்து அவர் இழுக்கிறார். இப்படி ரிக்ஷா ஓட்டிக்குச் சந்தர்ப்பம் தராமலே இருவரும் மாற்றி மாற்றி ரிக்ஷா இழுப்பதை அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். ஒரு நாளல்ல, இரண்டு நாட்கள் குற்றால இன்பச் சுற்றுலா குதூகலம் தந்தது. காஞ்சி திரும்பிய அண்ணா, "குற்றாலம் கண்டோம்' என அந்தக் குதூகலத்தைக் கட்டுரையாகவும் தீட்டி மகிழ்ந்தார்.

- தினமணி கதிர்.


No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...