Wednesday, March 9, 2016

பாலாறு

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கத்தில் உற்பத்தியாகி கர்நாடகாவில் 93 கி.மீ. ஓடி, ஆந்திரத்தில் 23 கி.மீ. பயணித்து தமிழகத்தில், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 222 கி.மீ. சென்று வங்கக் கடலில் கலக்கின்றது.  பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால் இங்கு 200 அடிக்கு போர் அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை.  இதற்கு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.  கர்நாடகத்தில் நீர்த்தேக்க கிணறுகளின் மூலம் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளனர்.  பெங்களூருக்கு வரும் குமுதவதி ஆற்றில் நூற்றுக்கும் அதிகமான புனரமைப்பு நிலத்தடி நீர்த்தேக்க கிணறுகளால் நீர்வளம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதேபோல கர்நாடகத்தில் வேதவதியிலும் திட்டங்கள் தீட்டி அங்கும் நீர்வளம் அதிகரித்துள்ளதாக செய்திகள்.  இந்த நீர்வரத்து இத்திட்டத்தினால் சிறுக சிறுக உயரும். 

பாலாற்றில் கர்நாடக பகுதியில் புனரமைப்பு நிலத்தடி நீர்த் தேக்க கிணறுகள் அமைப்பதைப் போல தமிழகப் பகுதியிலும் அமைத்தால் நல்லது என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.  பாலாற்றின் கிளையாறுகளான மலட்டாறு, கல்லாறு, கவுண்டனா நதி, கோட்டாறு, வெள்ளக்கல், மண்ணாறு, கன்னித்தோப்பு, போன்ற பல்வேறு துணையாறுகளில் இத்திட்டங்களை செயல்படுத்தினால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களும், காஞ்சிபுரம் மாவட்டமும் பயன்பெறும். 

இத்திட்டம் எப்படி என்றால் ஆற்றுப்படுகையில் பள்ளம் தோண்டி ஜல்லி கற்களைக் கொட்டி 10 அடி தூரத்தில் 20 அடி ஆழத்திற்கு கிணறு தோண்டி கான்கிரீட் உறைகளை கீழே இறக்கினால் சிறுக சிறுக தண்ணீர் பெருகுகின்றது.  மழைப் பருவ காலங்களில் ஜல்லிக் கற்கள் மூலமாக மழை நீர் பூமிக்குச் சென்று அருகே வெட்டப்பட்டுள்ள கிணறுகளில் தண்ணீர் நிரம்புகின்றது.  நிலத்தடி நீரும் உயர்கிறது.  நீருற்று போன்று உறையால் அமைக்கப்பட்ட கிணறுகள் நிரம்பி வழிகின்றன. 

இது எளிய முறையில் அனைவரும் செய்யக்கூடிய செலவில்லாத நீர்வரத்தை அதிகரிக்கக் கூடிய திட்டமாகும்.  கர்நாடகத்தில் செயல்படுவது போல பாலாற்றிலும் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற கருத்தை நீரியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...