Friday, March 25, 2016

Thamirabarani

நீரியல் சாதனையின் உச்சம் மருதூர் அணைக்கட்டு!
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
நதிகளாகிய உங்களை நவீன காலத்தில் நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பொறுத்து பார்த்துவிட்டுதான் வேறு வழியில்லாமல் அறுத்துக்கொண்டு ஓடுகிறீர்கள். கூவமே, உன் கோபம் புரிகிறது. அடையாறே உன் ஆவேசம் புரிகிறது. போதும் மழையே எங்களை விட்டுவிடு. நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள்தான் எங்களில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் துயரத்தை எழுதினால் வார்த்தைகளுக்கே வலி எடுக்கும். போதும் மழையே, நாங்கள் செய்தது பிழைதான். எங்களை மன்னித்துவிடு.
மக்களின் வேதனையைக் காணச் சகிக்கவில்லை. பச்சிளங் குழந்தைகள் பால் இன்றிக் கதறுகின்றன. தண்ணீருக்குள் நின்றுகொண்டு கர்ப்பிணி தாய்மார்கள் கதறுகிறார்கள். முதியவர்கள் மயங்கிச் சரிகிறார்கள். பாத்திரங்கள், அடுப்பு, துணிமணி, உடைமைகள் எல்லாவற்றையும் அடித்துச் சென்றுவிட்டாய். உண்ண உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை. ஏழைகளாகிய எங்களிடம் உயிரைத் தவிர எதுவுமே இல்லை. தனித் தீவாகித் தவிக்கிறோம். போதும் மழையே, உன்னை உணர்ந்துவிட்டோம். எங்களை மன்னித்து விட்டுவிடு. உலகின் ஆக்கமும் நீயே; அழிவும் நீயே. அத்தனை நாகரிகங்களையும் உருவாக்கியதும் நீதான். அழித்ததும் நீதான். இப்போது எங்களையும் அழித்துவிடாதே. சாமானியர்களாகிய எங்களிடம் சக்தி இல்லை.

ஒப்புக்கொள்கிறோம். உங்கள் மடி யில்தான் எங்கள் நாகரிகத்தின் வேர்களை உருவாக்கினாய். கி.மு.3200-களில் நைல் நதிக் கரை சுமேரியர்களின் நாகரிகத்தை தோற்றுவித்தாய். சுமேரிய வெள்ளங்களைக் கொண்டு பைபிளின் நோவாவை (Noa's Arc) உருவாக்கினாய். கி.மு. 1728 - 1686ம் ஆண்டுகளில் மன்னன் ஹம்முராபி உனக்காக உரு வாக்கிய தண்ணீர் சட்டம்தான் (Hammurabi codes) எழுத்து வடிவில் உரு வாக்கப்பட்ட உலகின் முதல் சட்டம். உன்னை எப்படி எல்லாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரிவாகச் சொன்னது அந்தச் சட்டம்.
உன்னைப் பராமரிப்பது ஓர் அரசனின் கட்டாய கடமை என்று அரசனுக்கே ஆணையிட்டாய் நீ. தவறுபவர்களுக்குத் தண்டனையும் தந்தாய். வாய்க்காலை பராமரிக்காமல் கரை உடைந்தால் அவரை அடிமையாக விற்க அந்த சட்டத்தால் வழி செய்தாய். ஒருவர் தனது வயலுக்கு அதிகம் தண் ணீரைப் பாய்ச்சி பக்கத்து வயல் களுக்கு சேதம் விளைவித்தால் அதற்குரிய நஷ்ட ஈட்டையும் பெற்றுத் தந்தாய்.

கி.மு.2750-களில் சிந்து நதியில் மொகஞ்சதாரோ - ஹரப்பா நாகரி கத்தைத் தோற்றுவித்தாய். அங்கு அணை யைக் கட்ட வைத்து விவசாயத்தைப் பெருக்கினாய். விளைபொருட்களை எகிப்துக்கும் சுமேரியாவுக்கும் ஏற்றுமதி செய்ய வைத்தாய். கி.மு.2200-களில் சீனாவில் யாங்ட்ஸே மற்றும் ஹுவாங்ஹோ நதிக்கரை நாகரிகத்தைத் தோன்றுவித்தாய். கி.மு.2627-ல் சீன மன்னன் ‘வீ’ உன்னில் உருவாக்கிய 1,000 மைல்கள் நீளம் கொண்ட கால்வாய்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. கி.மு.720-களில் பாரசீகம், எகிப்து, வட இந்தியா ஆகிய பகுதி களில் மழை நீரை சேகரிக்கும் ‘குவானத்’ அமைப்புகள் (Qanat) உரு வாக்க கற்றுத் தந்தாய். கி.மு. 500-களில் பழந்தமிழர் நாகரிகத்தைத் தோற்று வித்தாய்.
ஏரிப் பாசனங்களைக் கற்றுத் தந்தாய். கி.மு.200-களில் கல் லணை கட்ட வைத்தாய். உன்னைக் கொண்டுதான் சங்க காலம், பல்லவர் காலம், பிற்கால சோழர் காலம், பாண்டியர் காலம், நாயக்கர் காலங்கள் செழித்தன. உன்னைக் கொண்டுதான் ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டன. இன்று அத்தனை நாகரிகங்களும் அழிந்துபோயின. எங்கள் நாகரிகம் மட்டுமே எஞ்சி நிற் கிறது. போதும் மழையே, போதும் நதியே, உன்னை உணர்ந்துவிட்டோம். எங்களை வாழவிடு!

நதியின் நெடிய வரலாற்றை பார்த்தோம். அந்த வரலாற்றின் பண்டைய நாகரி கங்கள் அழிந்துவிட்டாலும், அவர்கள் கட்டிய அணைக்கட்டுகள் அழியாமல் நிற்கின்றன. நாயக்கர்கள் காலத்தில் (கி.பி. 1429 - 1738) திருநெல்வேலி தாமிரபரணி நதியில் பல்வேறு அணை கள் கட்டப்பட்டன. இன்றும் அந்த அணைக்கட்டுகளுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நீரியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்கிறார்கள். இந்தக் அணைக்கட்டுகள் ‘ட’ மற்றும் ‘குதிரை லாடம்’ வடிவங்களில் அமைக்கப்பட்டன. ஆற்றில் ஒரு கால்வாய்ப் பிரியும் இடங்களில் ‘ட’ வடிவ அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டன. இரு கால்வாய்கள் பிரியும் இடங்களில் குதிரை லாட வடிவ அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டன. ஆற்றில் நீர்வரத்து குறைந்திருந்த காலத்திலும் தண்ணீர் முழுமையாகக் கால்வாய்க்குள் செல்வதற்கு இந்த வடிவமைப்பு உதவியது. நீரியல் விதிகளின்படி ஓர் அணையின் நீர் மட்டம் உயர்வது அணையின் உயரம் மற்றும் நீளத்தைப் பொறுத்தது. அணையின் நீளம் குறைவாக இருந்தால் நீர்மட்டம் அதிகமாக இருக்கும். நீளம் அதிகமாக இருந்தால் நீர்மட்டம் குறைவாக இருக்கும்.
தாமிரபரணி நதியின் இரு பக்கங்களிலும் வயல்கள் இருந்தன. மேட்டுப் பகுதிகளில் இருக்கும் வயல் களில் இருந்து வழியும் தண்ணீரும் ஆற்றுக்குள் வடிந்தது. எனவே, இந்தப் பகுதிகளில் அணைக்கட்டுகளை கட்டு வதால் அணையில் நீர் மட்டம் விரைவாக உயர்ந்து வயல்கள் தண்ணீரில் மூழ்கும். எனவே, வயல்கள் தண்ணீரில் மூழ்காதபடி இந்த அணைக்கட்டுகள் மிக நீளமாக அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் மருதூர் அணைக்கட்டு. இதன் நீளம் 4,000 அடி. அணையில் 12 மணல் வாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அணையின் முன்பாக மணல் சேர்வதில்லை.
மருதூர் அணையை நீர் நிறைந்தி ருக்கும்போது நீளவாட்டத்தில் பார்த் தால் நீர்மட்டம் சரிவாக இருப்பது தெரியும். அதுதான் இந்த அணையின் தொழில்நுட்பச் சிறப்பு. அதாவது, அணையின் இடதுபுறம் தலைமதகு அருகே இருக்கும் நீர் மட்டத்தைவிட வலதுபுறம் மதகு அருகே துல்லியமாக 60 செ.மீட்டருக்கு நீர்மட்டம் உயர்ந் திருக்கும். மேலும் வலதுபுற அமைப்பே வாய்க்கால் போல் அமைக்கப்பட்டுள் ளது. இதனால், வலதுபுற மதகில் நீர்மட்டம் உயர்ந்து, மேடான பகுதியில் இருக்கும் ஏரிகளுக்கும் தண்ணீர் செல்கிறது.
இவ்வாறாக அணையின் மேலக் கால்வாயில் இருந்து முத்தாலங்குறிச்சி குளம், குட்டக்கால் குளம், கொல்லி வாய் குளம், நாட்டார் குளம், செய் துங்கநல்லூர் குளம், தூதுகுழி குளம், கருங்குளம், பொட்டைக்குளம், கால்வாய் குளம், வெள்ளூர் குளம், தென்கரை குளம், நொச்சிக் குளம், கிழபுதுக் குளம், முத்துமாலை குளம், வெள்ளரிகாயூரணி குளம், தேமாங்குளம் ஆகிய குளங்கள் சங்கிலித் தொடர் குளங்களாக நீரைப் பெறுகின்றன. கீழக்கால்வாயில் இருந்து பட்டர்குளம், செந்திலாம் பண்ணை, திருவைகுண்டம் கஸ்பா, பேரூர், சிவகளை, பெருங் குளம், பத்மநாபமங்கலம் கீழக்குளம், பாட்டக்குளம், பீக்கன் குளம், ரெங்க நாதன் புதுக்குளம், எசக்கன் குளம், கைலாசப்பேரி, தருமனேரி,நெடுங்குளம் தண்ணீர் பெறுகின்றன.

மருதூர் அணை கட்டப்பட்டு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பு அதே தாமிரபரணியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது ஸ்ரீவைகுண்டம் அணை. ஆனால், மருதூர் அணையின் தொழில்நுட்பத்தின் அருகில்கூட நெருங்க முடியாது ஸ்ரீவைகுண்டம் அணையின் தொழில்நுட்பம். அதனால் தான் இன்று ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் ஏறிக்கிடக்கிறது. விவசாயிகள் நொந்து கிடக்கிறார்கள். படிக்காத பழந்தமிழருக்கும் மெத்தப் படித்த ஆங்கிலேயருக்கும் இருந்த வித்தியாசம் இதுதான். அது என்ன என்பதை நாளை பார்ப்போம்!

#savethamirabarani #save_thamirabarani #boycott_pepsi #boycott_cocacola

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...