Sunday, March 6, 2016

இயற்கை வளங்கள் கொள்ளை

நூறு வருசத்துக்குமுன் இந்த மண்ணை உழுது பயிரிட்டவர் யார் என்பது தெரியுமா? இன்னும் நூறு வருஷம் கழித்து இந்த மண் யாரிடம் இருக்கப் போகிறது யாராவது சொல்ல முடியுமா? இன்னும் மனுசன் நிலைத்து வாழ்கிற மாதிரி இருந்தால் எல்லாமே தனக்குத்தான் என்று தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்வான்.

-  பெருமாள்முருகன்

-----------------------------------------------------------------------------

இந்தப் பதிவை இன்று காலை 10 மணிக்கு முகநூலிலும், வலைதளத்திலும் பதிந்தேன். விடியற்காலை விடியலில் காலை 6 மணிக்கு ஆற்றுப் படுகைகளில் நூற்றுக்கணக்கான லாரிகள் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் ஆற்றுத் தாயிடம் உள்ள மணலை சூறையாட காத்திருக்கின்றன. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆற்றங்கரைகளிலும் வைகறை பொழுதில் நூற்றுக்கணக்கான லாரிகள் தினமும் அள்ளிச் செல்கின்ற மணலுக்கு கணக்கில்லை.  ஆற்றில் மணல் பெருக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் நொடிப் பொழுதில் பொக்லைன் வைத்து ஆற்று மணலை கபளீகரம்  செய்துவிடுகின்றனர். இவர்களும் பெரிய மனிதர்களாக நாட்டில் வலமும் வருகின்றனர்.

இதைப் பார்த்து பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆற்று மணலை அள்ளி குவித்த எனக்கு தெரிந்த ஒருவர் சரியாக படைப்பாளி திரு. பெருமாள்முருகன் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் செய்த தவறுகளை உணர்கிறேன் என்று சொன்னது இந்தப் பதிவு பயன்பெற்றுள்ளது என்று மகிழ்ச்சி அடைந்தேன்.

நீர் குமிழிகள் சில நொடிகள் ;  மானிட வாழ்க்கை சில வருடங்கள். அகிலத்தில் உயிரினங்கள் எதுவும் நிரந்தரமல்ல.

"ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?

தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி

சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்" 

என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

டார்வின் கோட்பாடுபடி வாழ்க்கை வாழ்வதற்கு போராட்டம்தான். இல்லை என்று மறுக்கவில்லை. அந்த போராட்டம் நேர்மையாக, நியாயமாக இருக்க வேண்டும்.

எந்தத் துறையிலும் இன்றைக்கு போலியான வினைகள், பொய்யான பகட்டுகள், நெறி சாரா செயல்கள், புரையோடிய பொதுவாழ்க்கை, அறம் சாராத செயல்பாடுகள், தகுதி, தரமற்ற அமைப்புகள்.

தகுதியான ஆளுமைகளை புறந்தள்ளுதல், இயற்கை தாய் வழங்கிய அருட்கொடைகளை சுயநலத்துக்காக சூறையாடுதல், வனங்கள் அழிக்கப்பட்டன. மலைகள் உடைக்கப்பட்டன. ஆற்று மணல்கள் அள்ளப்பட்டன,  தன்னலமற்ற தாகத்தை தீர்க்கும் தண்ணீரையும் சூறையாடி விற்பனை சரக்காகிவிட்டது.  வணங்க வேண்டிய இயற்கையும் அதன் கொடையையும் நாம் கண்ணியத்தோடு காக்காமல் புறந்தள்ளுவது சுனாமி போன்ற இயற்கையின் தண்டனைகள் மானிடத்தை நோக்கி வரும் என்பதை அறியாத மானிடம் இருந்து என்ன பயன்?  மானிடம் இருப்பதோ தற்காலிகம். ஆனால் நிரந்தரத்தை அழித்தால் இடைக்காலத்தில் இருக்கும் சமுதாயத்திற்குத்தான் கேடு.

அற்புதமாக முண்டாசுக் கவி குறிப்பிட்டவாறு

காடு , மலை, அருவி, ஆறு, கடல், நிலம், நீர் காற்று, தீ, வான், ஞாயிறு, திங்கள், வானகத்துச் சுடர்கள்.... எல்லாம் தெய்வங்கள்.....

எப்படியோ இந்த பதிவினால் இயற்கையை சூறையாடிய ஒருவர் மனம் திருந்தி உள்ளார் என்பது மனதிற்கு ஆறுதல் தருகிறது.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...