Wednesday, March 9, 2016

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் கூச்சல் குழப்பங்கள்



சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது.  பதினைந்தாவது சட்டமன்றம் அமைய இருக்கின்றது.  நாட்டில் நாடாளுமன்றமோ, சட்டமன்றங்களோ இப்போது சரியாக நடப்பதும் இல்லை.  கூச்சலும், குழப்பங்களும், மல்யுத்தங்கள்தான் நடக்கின்றன.  தகுதியானவர்கள் இந்த மன்றங்களுக்கு செல்லவும் முடியவில்லை.  மல்லையா போன்ற வியாபாரிகள்தான் செல்ல முடிகின்றது.  தகுதியே தடையாக இருக்கின்ற காலத்தில் தகுதியான ஆளுமைகளுக்கு இம்மன்றங்களில் இடம் இல்லை.  ஏற்கனவே சபாக்களில் நாட்டியமாடிய வைஜயந்திமாலா நாடாளுமன்றம் சென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாடாளுமன்றவாதி இரா. செழியன் வெற்றி வாய்ப்பை இழந்து நாடகம், கூட்டங்கள் நடக்கும் அரங்கங்களுக்கு செல்லவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

1960 களில் சிறப்பாக நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற விவாதங்கள் இப்போது இல்லை.  ஆரோக்கியமான விவாதங்கள், நேர்மையான பணிகள், அரசியல் மனமாச்சர்யம் கடந்த நட்புகள் அக்காலத்தில் இருந்தன. இவை படிப்படியாக சிதிலமாகி மக்கள் நலனைவிட தன்னுடைய நலனே என்ற நிலையில் இந்த மன்றங்களின் உறுப்பினர்கள் பணத்தை செலவழித்து தேர்தல்களில் வெற்றி பெற்றும் வந்துவிடுகின்றனர்.  நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் சரியாக செல்வதும் இல்லை. பேசுவதும் இல்லை.  இப்படிப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதை வரலாற்றில் பின்னோக்கி பார்த்தால் பல செய்திகளை சொல்லலாம். 

கி.பி. 44ல் ரோம நாட்டில் செனட் உறுப்பினர்கள் கூட்டத்தில்தான் ஜுலியஸ் சீஸர் கொல்லப்பட்டார். அன்றைக்கு அந்த செனட் உறுப்பினர்களுக்கு அவர் சர்வாதிகாரியாக பார்க்கப்பட்டார்.  அந்த அவையில் குழப்பங்கள் நடந்தது. அதுதான் மக்கள் பிரதிநிதிகள் அவையின் முதல் குழப்பம்.  1929ல் எஸ்தோனியா நாட்டு நாடாளுமன்றத்தில் பெரிய உறுப்பினர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு அமைச்சரை கன்னத்தில் அடித்து உதைத்த காட்சிகள் எல்லாம் அரங்கேறின.

ஐரோப்பா நாடாளுமன்றத்தில் 1988ல் போப்பாண்டவர் ஜான் பால் உரையாற்றும்போது உறுப்பினர்கள் தங்கள் கிடைத்த பொருட்களை கொண்டு அவர் முகத்தில் வீசி எறிந்தனர். 

நாடாளுமன்ற அவை என்பது கிரேக்க நாட்டின் நகர அரசுகளின் தொட்டிலில் வளர்ந்து ரோமில் நடை பயின்று நாடாளுமன்றத்தின் தாய் என்ற பிரிட்டனில் எழுந்து கம்பீரமாக நின்றது.  இப்போது பிரிட்டனிலும் மக்களவையிலும், பிரபுக்கள் அவையிலும் இதேபோல் குழப்பங்களும் பிரச்சினைகளும்; சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு லஞ்சம் வாங்கினார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து தாய் பாராளுமன்றத்திலும் அடிதடி. 

இதேபோல் அமெரிக்க செனட் காங்கிரஸிலும் கைகலப்பு தடியடி எல்லாம் நடந்தது.  அங்கு உறுப்பினர்கள் கொண்டு வரும் Walking Stick களை கொண்டு சண்டை போடுவதெல்லா சாதாரணமாகிவிட்டது.  இப்படியான உலகெங்கும் நிலைமை.  ஐரோப்பா நாடுகளிலும், பெரு, தைவான், நைஜீரியா, உக்ரைன், ஆஸ்திரேலியா, எகிப்து என அனைத்து நாடுகளிலும் பிரச்சினைகள் நடந்தாலும் இந்தியா போன்று நாடாளுமன்றம் முடக்கப்பட்டது எந்த நாட்டிலும் கிடையாது.  1988ல் எம்.ஜி.ஆர். மறைந்த பின்பு ஜானகி அம்மையார் முதல்வர் பொறுப்புக்கு வந்தபின், தன்னுடைய பெரும்பான்மையான ஆதரவை நிரூபிக்கவேண்டிய அவையில் நடந்த கூத்தும், கொடுமையும் இன்றைக்கும் மறக்க முடியாது. சட்டமன்றத்தில் இருந்த மைக்குகளையே ஜெயலலிதா தலைமையில் இருந்த அன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள் பிடுங்கிக்கொண்டு கம்பீரமாக திமீரோடு வெளியே வந்தனர். அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்றைக்கு அவர்களும் தலைவர்களாக வலம் வருகின்றனர்.

1989ல் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் ஆட்சி ஏற்பட்டு நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் வாசிக்க முற்பட்டபோது ஜெயலலிதா எழுந்து நின்று அன்றைக்கு நடந்தகொண்ட நாகரீகமற்ற முறையையும் மறக்க முடியாது. இந்தியாவிலேயே இப்படி தரங்கெட்ட வகையில் முதல்முதலாக நடந்தது தமிழக சட்டமன்றத்தில்தான்.  இப்போது நாடாளுமன்றத்தில் மிளகுப்பொடியை தூவி, கைகலப்புகள் போன்ற நாகரீகமற்ற வகையில் செயல்பாடுகள் நடந்தேறிவிட்டது.  தெலுங்கானா பிரச்சினையின்போது ஆந்திரா சட்டமன்றத்தில் தெலுங்கானா பகுதி ஆந்திரா பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே அடி, உதை என போர்களமாகியது. உத்தரபிரதேசம், காஷ்மீர், பீகார், ஒரிசா, கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற சட்டமன்றங்களிலும் அடிதடி, கைகலப்பு என நடந்த செய்திகள் எல்லாம் ஏடுகளில் வந்தன.  சமீபத்தில் கேரளா சட்டமன்றத்தில் ஆளுநரின் உரையின்போது எதிர்கட்சித் தலைவர் அச்சுதானத்தையே வெளியேறுங்கள் என்று ஆளுநர் சொன்னது நாடாளுமன்ற முறைக்கே களங்கம் ஏற்பட்டது.  இந்த முறை நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மட்டுமல்லாமல், நகர் மன்றங்கள், கிராம பஞ்சாயத்துக்கள் வரை கூட்டங்களை முறையாக நடத்தமுடியாமல் தள்ளப்பட்டுள்ளோம்.

இன்றைக்கு நகர மன்றங்களிளும், கிராம பஞ்சாயத்துக்களிலும் இப்படியான நிலை. ஒரு காலத்தில் ஓமந்தூரார், பேரரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், ராஜாஜி, காயிதே மில்லத் போன்றோர் வழிநடத்தினர்.  இன்றைக்கு நக்மாவும், குஷ்புவும் தலைமை பற்றாக் குறையால் அரசியல் இயக்கங்களை நடத்த வேண்டியுள்ளது.  இதெல்லாம் வாக்குச் சாவடிக்கு போவதற்கு முன் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தகுதியானவர்கள், தரமானவர்களை, நாட்டின் நலன் நாடுவோர்களை, தன்னலமற்றவர்களை மக்கள் பிரதிநிதி மன்றங்களுக்கு அனுப்ப வேண்டாமா? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்களே..... அந்த வகையில் மக்களாகிய மகேசன்கள் வாக்குக்கு பணம் வாங்கிக் கொண்டால் நாம் அனுப்பும் பிரதிநிதிகள் நம்மை அடிமையாக்கி அவர்கள் ராஜாவாக வலம் வந்து அவர்கள் செய்யும் அத்தனை அநீதிகளையும் தாங்கிக்கொள்ள வேண்டும். பிறகு எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்?

மக்களின் பிரதிநிதிகள் அவை கண்ணியத்தைக் காத்து நாட்டை முன்னேற்ற நல்லவர்களை நாம் தேர்வு செய்து, மக்களின் அவைகளுக்கு அனுப்புவதுதான் நமது அடிப்படை கடமை. 

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...