Wednesday, March 2, 2016

மனிதநேயம் ஆர்வலர்களின் சிந்தனைக்கு

ராஜீவ் காந்தி கொடூர கொலையில் வேலூர் சிறையில் வாடும் நளினி தன்னுடைய தந்தை மறைவின் இறுதிச் சடங்குக்கு பரோலில் வந்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டில் 8 மணி நேரம் மட்டுமே தங்கியபோது, தனது துக்கத்தோடு ஜூனியர் விகடன் இதழுக்கு அவர் அளித்த பேட்டியின் இறுதியில் சொன்ன பதில் வேதனையை தந்தது.

இந்த பதில் ஜூனியர் விகடன் 2.3.2016 தேதியிட்ட இதழில் ஏழாவது பக்கத்தில் வெளியாகியுள்ளது.

" ஜூனியர் விகடன்:   "பிரியங்கா காந்தி உங்களைச் சந்தித்தபோது என்ன பேசினார்?"

நளினி:   "அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். அங்கிருந்து பிரியங்கா கிளம்பும்போது எனக்கு எந்த வசதியும் செய்து தரக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார்."

இதைப் படிக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவராக நளினி இருந்தாலும், இப்படி பிரியங்கா நடந்து கொண்டது வேதனைக்குரியது. இந்த இதழ் வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன.  இந்த மனிதநேயமற்ற நடவடிக்கைக்கு எந்த கண்டங்களும் இதுவரை வரவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் சிறையில் வாடுகின்றனர். இதில் சம்பந்தமே இல்லாமல் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு சோதனை மேல் சோதனை. பேரறிவாளன் தன்னுடைய இளமையையே பலியிட்டுவிட்டார். ராஜீவ் படுகொலை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  அது வேறு விஷயம். ஆனால் சரியாக அந்த வழக்கு புலனாய்வு நடந்ததா?  சரியான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா என்பது நமது நேர்மையான வினா.

இந்நிலையில் வேலூர் சிறைக்கு வந்த பிரியங்கா, நளினியிடம் நடந்தகொண்ட நாகரிகமற்ற முறையை கண்டிக்கவும் வேண்டும். இவர் யார் நளினியை சந்தித்து இவ்வாறு நடந்துகொள்ள?  பிரியங்காவிற்கு என்ன உரிமை உள்ளது?  இது சட்டத்துக்கு புறம்பானது.  நளினியினுடைய பேட்டியில் சொல்லப்பட்டது உண்மையென்றால் பிரியங்காவும் சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.  குற்றவாளிகள் என்றவர்கள் சட்டத்தின்படியே நடத்தப்பட வேண்டும்.  சட்டத்திற்கு மீறிய அதிகாரம் பிரியங்காவிற்கு யார் வழங்கியது என்பதை விசாரிப்பதும் அவசியமான பொறுப்பாகும். மனித உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியையும் யாரும் கையில் எடுத்துக்கொண்டோ காலில் போட்டோ மிதிக்க முடியாது. பிரியங்கா நளினியிடம் நடந்துகொண்ட முறை கண்டனங்களுக்கு உட்பட்டதாகும்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...