Tuesday, March 10, 2020

சிந்தனை_இதழ் #பேராசிரியர்_அ_சீநிவாசராகவன் #காஷ்மீர்_விவகாரம் _(1949) #அன்றும்_இன்றும்

#சிந்தனை_இதழ்
#பேராசிரியர்_அ_சீநிவாசராகவன்
#காஷ்மீர்_விவகாரம் _(1949) 
#அன்றும்_இன்றும்
————————————————
 

சிந்தனை என்ற இலக்கிய இதழ் நாடு விடுதலை பெற்ற பின் 1948இல் துவங்கப்பட்டது. அன்றைய இலக்கிய வட்டாரத்தில் கணையாழியைப் போன்று வாசகர்களால் ஈர்க்கப்பட்ட இரண்டு மாத இதழாக வெளியானது இதன் விலை எட்டணா.

இதன் நிர்வாக ஆசிரியர் அ. சீநிவாசராகவன். இதன் கெளரவ ஆசிரியர் எஸ். ராமஸ்வாமி நாயுடு. இதன் துணையாசிரியர் எஸ். விசுவநாதன். நாகப்பட்டினத்திலிருந்து புது நூல் நிலையம் இந்த இதழை வெளியிட்டது.

பேராசிரியர் அ. சீநிவாசராகவன் தஞ்சை திருவையாறில் பிறந்தாலும் சென்னையிலும், நீண்ட நாட்கள் நெல்லையிலும் தூத்துக்குடியிலும்தான் வாழ்ந்தார். நெல்லை இந்துக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியராகவும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரிப் பேராசிரியராகவும் பொறுப்புகளில் இருந்தார். தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆளுமை. சாகித்ய அக்காடமி விருதையும் பெற்றார். நாணல் என்ற புனைபெயரிலும் இவர் படைப்புகள் வெளிவந்தன. மேடைகளில் அருமையாக கருத்துகளை எடுத்துவைப்பார். இந்த இதழில் கெளரவ ஆசிரியர் ராமஸ்வாமி நாயுடு என் உறவினர். இவருடைய வீடு நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையத்தின் எதிரில் ஓர் அடையாளப் பகுதியாகத் திகழ்ந்தது.

காஷ்மீர் பிரச்சனை இன்றைக்கு முக்கியமாக அனைவராலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. 1948இல் காஷ்மீர் பிரச்சனை குறித்தான அன்றைய நிலை பற்றிய பதிவும் இந்த இதழில் வெளியாகியுள்ளது. அன்றும் இன்றும் என்ற நிலையில் காஷ்மீர் விவகாரம் இந்தப் பதிவில் வாசிக்கத் தூண்டியது. இதை கே. அஹமத் அப்பாஸ் இந்தியில் எழுதி, திருச்சி டி. ராஜன் தமிழாக்கம் செய்துள்ளார்.

  ‘’காஷ்மீரின் ஐந்து முகங்கள்I’’
————————————————-
புதிய காஷ்மீரில் நான் ஒளி நிறைந்த ஐந்து முகங்களைக் கண்டேன். முதலில் ஒரு குழந்தையின் முகம்! சிவந்த நிறம். பழுத்த ஆப்பிள் போன்ற கன்னங்கள் களை கூட்டிய முகம். மண்ணில் விளையாடியதால் தலையிலும் முகத்திலும் சற்று தூசு படிந்திருந்தது. ஓடியாடி விளையாடும் பருவம். களங்கமற்ற அந்தக் குழந்தையின் கண்கள் ஜ்வலித்தன. அதன் கையில் ஒரு கொடி! சிவந்த நிலத்தில் ஒரு ஏர். அந்தக் குழந்தை சிறுவர்களின் ஊர்வலத்திற்கு முன்னால் சென்றுகொண்டிருந்தான். சிறுவர்கள் வர்ணக் காகிதத் தொப்பிகள் அணிந்திருந்தனர். “காஷ்மீர் சிங்கம் நீடூழி வாழ்க! காஷ்மீர் சிங்கத்தின் லட்சியமென்ன? ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை” என்று அவர்கள் மண்ணும் விண்ணும் அதிரக் கோஷமிட்டனர். முதலில் செல்லும் குழந்தை ‘தாய்நாட்டைக் காக்க ரத்தம் சிந்துவோம்’ என்று கத்துகிறான். அவனோ மற்றவர்களை விட வயதில் சிறியவன்!

அவர்களிடும் கோஷங்களின் முழுக் கருத்தையும் அந்தச் சிறுவர் அறிந்திருக்க மாட்டார்கள் என்று நான் முதலில் எண்ணினேன். என் கேள்விகளுக்கு அவர்கள் சரியான பதில் அளித்தது கண்டு வியப்படைந்தேன்! அவர்களின் தளிர்க் கரங்களில் விளையாட்டுத் துப்பாக்கிகளும் தேசியக் கொடிகளுமிருந்தன. அவர்கள் ‘பேரேட்’ செய்துகொண்டிருந்தார்கள். விளையாட்டிலும் அரசியல் மனப்பாங்கின் அடிவர்ணத்தைக் கண்டு வியந்தேன்.

அமெரிக்க, ஆங்கிலேயச் சிறுவர்கள் உலகின் பல மற்ற ஜாதியார் மீது படையெடுத்து வெற்றியடைவது போன்ற விளையாட்டில் முனைவது வெகு சகஜம்! ஆனால் ஸ்ரீநகர் வீதிகளிலும் சந்துகளிலும் விளையாடும் சிறுவர்களின் வீரத்தையும் தியாக உணர்ச்சியையும் காணும்போது தேசபக்தியின் படிப்பினையை உணருகிறோம்.

II

இரண்டாவது முகம் முதலில் கண்ட குழந்தையை விடச் சற்று பெரியவனுடையது. அதில்தான் எத்தனை கம்பீரம்! வயது பதினான்குதான்! தோளில் சுமந்திருக்கும் துப்பாக்கி அவன் தோள்களை விட உயரமானது! அவனோ தனக்கு பதினெட்டு வயதென்று பிடிவாதம் பிடிக்கிறான். ஒருவேளை பதினான்கு என்று கூறிவிட்டால் ராணுவத்தில் சேர்க்க மாட்டார்களோவென்ற பயம் அவனுக்கு. அவன் யுத்தம் நடக்குமிடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் காவல் புரிந்துகொண்டிருக்கிறான். அவனுடைய கண்கள் அருகிலிருந்த பாலத்தின் மீது பதிந்திருந்தன. அவன் கர்வத்தோடும் ஆவேசத்தோடும் அந்தப் பாலத்தைத் தன் சொந்தச் சொத்தைக் காப்பவனைப்போல் காத்துக் கடமையைச் செய்துகொண்டிருக்கிறான்! பாலம் கிடக்கட்டும்; காஷ்மீரவாசி என்ற நோக்கோடு கவனித்தால், அந்நாட்டுச் சிறு துரும்புகூட அவனுடைய சொத்துதானே!

அவனொரு படகோட்டியின் புதல்வன். “நேஷனல் மிலிஷியா” (தேசியச்சேனை) வில் சேரும் முன் அவன் வாடகைக்குப் படகோட்டிக் கொண்டிருந்தான். எத்தனையோ சீமான்களையும் சீமாட்டிகளையும் படகிலேற்றி ‘ஜீலம்’ நதியைச் சுற்றிக் காட்டியிருக்கிறான். படகோட்டியாக இருந்தாலென்ன? அவன் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரியும் தேசபக்தியை யாரால் மறுக்க முடியும்?

“ஒரு சமயம் ‘காஷ்மீர் சிங்கம்’ ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டபோது, தான் ‘ஹர்த்தால்’ செய்து மற்ற படகோட்டிகளுக்கு வழிகாட்டியவன்” என்று பெருமையோடு கூறுகிறான். அனேக நூற்றாண்டுகளுக்குப் பிறகு தாய்நாட்டைக் காக்கும் திருப்பணிக்காக, ஆயுதம் தாங்கும் அனுமதி காஷ்மீர ஜாதிக்குக் கிடைத்ததைக் கண்டு அவன் பெருமையடைகிறான்.

“ஆக்கிரமிப்பாளருக்குக் காஷ்மீரைக் காணவும் ஆணவம் உண்டோ?” என்று கூறிக்கொண்டே துப்பாக்கியைத் தோளில் வைத்து, அவன் நடக்கும் தோரணையே அலாதி!

III

மூன்றாவது, ஒரு வாலிபனுடைய களை சொட்டும் களங்கமற்ற முகம். அதில் புத்தி கூர்மை பிரதிபலிக்கிறது. அகன்ற நெற்றி. ஒளியுள்ள கண்கள். தேசிய உணர்ச்சியால் தூண்டப்பட்டுத் தன் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்த கன்பீரத் தோற்றம். அவன் பிறப்பில் காஷ்மீரப் பண்டிதன். தன்னைக் “காஷ்மீரி” என்றே கூறிக்கொள்ள ஆசைப்படுகிறான். ‘ஜாதி’ உணர்ச்சி அவனிடமில்லை! அவன் கதைகள் எழுதுவதில் விருப்பமுள்ளவன். பல ஆண்டுகளாகத் தேசிய மாநாட்டின் அங்கத்தினன். தொண்டர்களின் ‘தளபதி’யாக இருந்து தேசிய உணர்ச்சியை வாலிபர்களிடம் பரப்பி உறங்கிகொண்டிருந்த சமூகத்தைத் தட்டி எழுப்புகிறான். துப்பாக்கியால் சுடவும் பழகி வருகிறான்!

களை பொருந்திய முகத்தையும் கலைஞனுக்குரிய மெல்லிய விரல்களையும் உடைய அந்த எழுத்தாளன், இன்று பேனாவை விட்டு துப்பாக்கிச் சுமப்பது ஆச்சரியமில்லையா?

;நீ ஏன் இலக்கியத்தை விட்டு போர் செய்ய விரும்புகிறாய்; என்று கேட்டேன். “விரோதிகள் நாட்டை ஆக்கிரமித்தால் எந்த எழுத்தாளனும் இலக்கியமும் வாழ முடியாது. பண்பு, இலக்கியம், கலை எல்லாம் அழிந்துவிடும்” என்று கூறித் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சுட்டுப் பழகச் சென்றுவிட்டான்.

IV

நான்காவது, ஒரு கிழவனுடைய முகம். வயோதிகத்தின் சுருக்கம் நிறைந்தது. அதில் அடர்த்தியாகக் காணப்படும் தாடி அவனுடைய முதிர்ந்த கால அனுபவத்தைக் குறிப்பதுபோலிருந்தது.

’உன் வயதென்ன’வென்று கேட்டேன். ;நாற்பதோ, அறுபதோ’ என்று கேலிச்சிரிப்புடன் கைதட்டி “நான் பிறந்தபொழுது எனக்குத் தெரிந்திருந்தால் வயது நினைவிருக்கும்” என்றான். அவனுக்கு வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். அவன் சென்ற யுத்தத்தில் கலந்துகொண்டு 1916இல் பென்ஷன் பெற்றவன்!

இந்தக் கிழவன் தேசிய சேனையிலுள்ள இளைஞர்களுக்கு ‘பேரேட்’ கற்பித்து வருகிறான். முன்பு அவன் கிரமத்திலிருந்தான். தன் நாட்டை “மலைப்பிடாரி”கள் ஆக்கிரமித்திருப்பதைக் கேட்ட உடனே நாற்பது மைல் நடந்து வந்து ஸ்ரீநகரையடைந்தான். தன்னைச் சேனையில் சேர்த்துக்கொள்ள வேண்டினான். அவசரத்தில் தன் படுக்கையைக் கொணர மறந்துவிட்டானவன்! அதிகாரிகளிடம் கம்பளங்கள் அதிகமாக இல்லை. பாவம்! கிழவன் திரும்பி நடந்துசென்று, ஐந்து நாட்களுக்குப் பிறகு படுக்கையுடன் வந்து ஆஜரானான்!

அது கிழவனின் முகம்தான். ஆனால் இளமையின் கம்பீரம், களைப்புற்ற அவன் கண்களில் ஒரு மிடுக்கான பார்வை, அதில் வீர ஒளி விகசிக்கிறது! “நீ ஏன் சேனையில் சேர்ந்தாய்” என்று கேட்டேன். “மலைப்பிடாரிகள் நாட்டைக் கைப்பற்றிச் சின்னாபின்னமாக்கப் படையெடுத்துவிட்டார்களென்பது உனக்குத் தெரியாதா? சேனையில் சேராமல் மூலையில் பெண்களைப்போல் வளைகளையணிந்து உட்காருவேனா?” என்றான். அவன் கடைசியில் கூறிய வார்த்தகள் வசைமாரிப் பொழிவதைப் போலிருந்தன!

கிழவனைக் கிண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நோக்கத்தோடு மேலும் கேள்விகள் போட்டேன். “அது கிடக்கட்டும்! ‘மலைப்பிடாரி’களிடம் ஏன் போர் செய்ய வேண்டும்? அவர்களும் முஸ்லிம் சகோதரர்கள்தானே! அவர்கள் காஷ்மீரிகளை விடுவிக்கத்தானே போரிடுகிறார்கள்?”

உடனே வசவுகளும் திட்டுகளும் ‘மெஷின் கன்’னிலிருந்து குண்டுமாரிப் பொழிவதைப் போலக் கிளம்பிவிட்டன. ”மலைப்பிடாரிகளை முஸ்லிம்களென்கிறாயா? அவர்கள் படுமோசக்காரத் திருட்டுப்பயல்கள்! எங்களைக் கொள்ளையடித்து வீடுவாசல்களை எரிக்கும்படி அவர்களுக்கு எந்த மடையன் சொன்னான் என்று கேட்கிறேன்?” அவன் பேசிய வேகத்தையும் துடிப்பையும் பார்த்தால், ஒருவேளை நான் ‘மலைப்பிடாரி’ இல்லாவிட்டாலும் அவர்களை ஆதரிப்பவன் என்று நினைத்தானென்று எனக்குத் தோன்றியது. மேலும், கிழவனைக் கேலிசெய்யத் துணிவு ஏற்படவில்லை! நான் பயந்து ஓடத் தொடங்கினேன். நிச்சயமாகக் கிழவன் என்னை ‘மலைப்பிடாரி’, ‘காட்டுமிராண்டிகளின் கூட்டாளி’ என்று நினைத்திருந்தால் என் கதி என்னவாகியிருக்கும்?

V

நான் கண்ட ஐந்தாவது முகம் ஒரு பெண்ணுடையது. நல்ல இளம் பருவம்! அவளுடைய சிவந்த கண்களில் சங்கோஜம் குடிகொண்டிருந்தது. அவளுடைய நயனங்கள் வெட்கத்தால் கீழ் நோக்கியிருந்தன. அவள் கையிலும் துப்பாக்கி இருந்தது! வாழ்நாளிலே முதல் தடவையாக ஆயுதமேந்தியிருக்கிறாள்! அனுபவசாலியைப் போல் திடமுடன் மிடுக்காக ‘பேரேட்’ செய்கிறாள்!

அவளோ இளம்பெண், அழகிய முகம், சிவந்த ரோஜாக் கன்னங்கள், செவ்வாம்பல் மலர் உதடுகள், அவளுடைய முகத்தில் செயற்கைப் பவுடர் பூச்சு இல்லை! மானைப் பழிக்கும் மையுண்ட கண்களமைந்து மயக்கும் அழகுராணி அவள். அந்த முகம் கவிஞர்களின் கருத்தைக் கவரும் வசந்தகாலச் சந்திரிகை. காதல் பார்வை புரள வேண்டிய வட்டக் கருவிழிகளில் வீரத்தீப்பொறி பறக்கிறது. அவளுடைய கவனம் தன் அழகில் லயிக்கவில்லை. பத்திரிகை நிருபர்களிடமும் புகைப்படக்காரர்களிடமும் அவளுடைய சிந்தை செல்லவில்லை. பத்திரிகையாளர்கள் அந்த வீராங்கனையின் படத்தை வெளியிடுகிறார்கள். அதில் அவளுடைய கவனம் செல்லுவதில்லை. வெகு தொலைவிலுள்ள லட்சியப் பாதையில் அவளுடைய நினைவு நிற்கிறது. அந்தப் பார்வையில் உறுதியும், விரோதிகளை அடியோடு ஒழித்துப் பழிவாங்கத் துடிக்கும் சங்கல்பச் சுடரும் காணப்படுகின்றன.

அவள் மற்ற பெண்களோடு ‘பேரேட்’ செய்து பழகிவருகிறாள். ஆனால் கூட்டத்திலும் தனியாகவே காணப்படுகிறாள்! நோக்கமோ துப்பாக்கி மீது செல்கிறது. அவள் துப்பாக்கியைத் தன் ‘ஆருயிர் தோழி’ என்றே எண்ணுகிறாள். சந்தேகமில்லை! அது அவளுடைய மரியாதையையும் கற்பையும் காக்கும் தோழிதான்.

காதலுக்காகப் படைக்கப்பட்டிருக்கும் அந்த மதிவதனத்தில் காதற்பொலிவைக் காணவில்லை. வாழ்க்கையின் வசந்தம் ஆதரவுடன் அவளை அணைக்கவில்லையா? ‘நிஷாத்’ தோட்டத்திலே கீதமிசைக்கும் ‘வானம்பாடி’ அவளுடைய இதயத் தந்தியை மீட்டி இன்பகீதமிசைக்கவில்லையா? ஐயோ! அவளுடைய வாழ்வில் காதலே கிடையாதா?

கிடையாது! ஏன்? சிறகொடிந்த பறவைக்கும் அவளுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. அவளுடைய காதலன் தன் தேசிய லட்சியத்திற்காக ‘மலைப்பிடாரி’, ‘காட்டுமிராண்டி’களால் கொல்லப்பட்டு ‘வீரசுவர்க்கம்’ புகுந்துவிட்டான்!

அந்தப் பார்வையில் தோன்றும் உணர்ச்சி ‘மலைப்பிடாரி’களை மறந்துவிட்டதாகவோ மன்னித்துவிட்டதாகவோ காணப்படவில்லை! அவளுடைய கண்கள் பழிவாங்கத் துடிக்கும் இரத்தவெறிக் கனலைக் கக்குகின்றன!

நான் கண்ட கடைசி முகம்! பூரண ஆன்மீகப் பொலிவோடு தோன்றும் சித்திரம்! அது ‘காஷ்மீரச் சிங்கம்’ ஷேக் அப்துல்லாவினுடையது. சிங்கத்தின் மாட்சிமை பொருந்திய முகத்திலே குழந்தையின் மாசற்ற தன்மை! சிறுவனின் திடம்! நவயுக எழுத்தாளனின் சீரிய சிந்தனைகள்! கிழவனின் ஆவேசம்! இளம்பெண்ணின் மடம், பயிர்ப்பு எல்லாம் தோன்றுகின்றன.

ஷேக் அப்துல்லா காஷ்மீரின் ‘பெருமை’ மாத்திரமில்லை! அவர் காஷ்மீரின் ஆன்மா!

#சிந்தனை_இதழ்
#பேராசிரியர்_அ_சீநிவாசராகவன்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-03-2020.
#KSRadhakrishnan_Postings 
#KSRPostings
http://ksradhakrishnan.in


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...