Tuesday, February 2, 2021


———————————————————-
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு தலைவர் கலைஞர் அந்தத் தேர்தலில் கழகத் தோல்விக்கான காரணங்களை அறிய என்னை போன்ற சிலரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்தார்.
கழகத்தின் மூத்த முன்னோடிகளான கலசப்பாக்கம் திருவேங்கடம் (பலமுறை சட்டமன்ற உறுப்பினர்), திருத்துறைப்பூண்டி கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி, சச்சிதானந்தம் ஆகியோர் அந்தக்குழுவின் உறுப்பினர்களாக இருந்தோம். தோல்விக்கான காரணங்களையும், கட்சியில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் பரிந்துரைகளோடு எங்கள் அறிக்கையைத் தலைவர் கலைஞரிடம் வழங்கினோம். அப்போது இன்றைய கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் உடனிருந்தார்.

நாங்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் கழக அமைப்பு மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் குறுநிலமன்னர்களாக வலம் வருவதை தடுக்கவேண்டும், விளம்பர பதாகைகளில் பெரியார், அண்ணா, கழகத் தலைவர் கலைஞர் படங்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் என்று பரிந்துரைத்தோம். கழக விளம்பரங்களில், சுவரொட்டிகளிலும் தங்களுக்கு விளம்பர வெள்ளிச்சம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அவர்களின் முழு உருவப் படத்தை மக்கள் விரும்பவில்லை என்றும் அறிக்கையில் கூறியிருந்தோம். இப்படி பல பரிந்துரைகள், அவற்றையெல்லாம் வெளிப்படையாக பொதுவெளியில் சொல்லமுடியாது. அறிக்கை அளித்து ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, தலைவர் கலைஞரும் தற்போது இல்லை. இன்று அந்த பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்துள்ளன மகிழ்ச்சி. அதன் ஆதியும் அந்தமும் தெரியவேண்டுமல்லவா? தற்போது பலருக்கு ஞாபக மறதி அதிகம், just நினைவூட்டலுக்காக இந்தப் பதிவு. இதுவும் நாளைய வரலாற்று செய்திதான்.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
26-12-2020

No comments:

Post a Comment