Tuesday, February 10, 2015

திருவனந்தபுரம் : அன்றும் இன்றும்



டந்த 08-02-2015 அன்று தினமணி ஆசிரியர், நண்பர்.  கே,வைத்தியநாதன் அவர்களுடைய மகன்,  பிரகாஷ் - பாலா மணமக்களது திருமணம் திருவனந்தபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.  தமிழக-கேரள முக்கிய புள்ளிகள் பலர் கலந்துகொண்ட இவ்விழாவில் பழைய நண்பர்களைச் சந்திக்க திரு.வைத்தி அவர்களது இல்ல மணவிழாவில் வாய்ப்பு கிடைத்தது.

திருவனந்தபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, குற்றாலம், பொதிகை மலை என்பது 1950-60 களில் எங்களைப் போன்ற தெற்குச் சீமையில் பிறந்த சிறுவர்களுக்கு பயணம் செய்கின்ற இடங்களாகும். அப்போது சென்னை என்பது தொலைவிலுள்ள பட்டணமாக இருந்ததால் 1969 வரைக்கும் ஓரிருமுறைகளே சென்றுவர நேர்ந்தது. ஆனால் திருவனந்தபுரம் அப்படியான ஊர் அல்ல.

1958 காலக் கட்டத்தில் சிறுவனாக திருவனந்தபுரம் சென்றபோது, சிவப்பு வர்ணமடித்த இரட்டை அடுக்கு மாடிப் பேருந்துகளில் ஏறிப் பயணம் செய்ய முரண்டுபிடித்து அழுததும் மனத்திரையில் வந்து போகும் கால பிம்பங்கள். சிறுபிராயத்தில் திருவனந்தபுரம் என்பது கோவில்பட்டி, சங்கரன்கோவில் போல மனதில் ஒட்டிய நகரமாகிவிட்டது.

அன்றைக்கு மங்கலான நினைவுகளோடு திருவனந்தபுரத்தின் வீதிகளைச் சுற்றிப் பார்த்ததற்கும், இன்றைக்குப் பார்ப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் தெரியவில்லை. ஆனால், மக்கள் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது.  அன்றைக்கு அனந்த பத்மநாபர் கோவில் தெருவிலோ, அருகாமையில் உள்ள மேற்கு வாசலிலோ, அதையொட்டிய பேரூந்து நிறுத்தத்திலோ இவ்வளவு  கூட்டத்தினை பார்த்ததில்லை.  திருவனந்தபுர பிரதானச் சாலைகளில் 1960-70-80களில் கூட ஓருசிலரே நடமாடும் காட்சிகளைப் பார்க்கமுடியும்.



ஒன்றுபட்ட திருநெல்வேலி-கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள்  சாலைவீதிப் பகுதியில் மளிகைக் கடை, ஜவுளிக் கடை, நகைக்கடை போன்ற வியாபாரங்களை நடத்திவருவது தொடர்ந்து பார்த்து வருகிறேன். பத்மநாபசாமி கோவில் தெருவின் தொடர்ச்சிதான் இந்த  சாலை, இப்போது மறைந்த இ.கே.நாயனார் பூங்காவும், காந்திசிலையும் வைக்கப்பட்டு, இரண்டு தெருக்களுக்கான தொடர்பு மூடப்பட்டுள்ளது.





           தமிழ் படைப்பாளி ஆ.மாதவன் அவர்களின் கடையும் இங்குதான் உள்ளது.
தமிழ் இலக்கிய கர்த்தாகள் பலரின் காலடிபட்ட 
இடம் தான் சாலைஆ.மாதவன் அவர்களைச் சந்திக்கவேண்டுமென்று விரும்பியபோது, எழுத்தாளர் நெல்லை. சு.முத்துஆ.மாதவன் உடல்நலக்குறைவினால் வீட்டில் இருப்பதாகச் சொல்லிவிட்டார். எனவே, அந்த இரவு நேரத்தில் ஆ.மாதவன் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை,

கல்லூரிகால நண்பர் குமரி மாவட்டத்தின் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த  சாகுல் ஹமீதின் மளிகைக்கடையும் அந்தப்பகுதியிலே இருந்தது. 1970களின் துவக்கத்தில் திருவனந்தபுரம் போகும் போதெல்லாம் அந்தக் கடைக்குச் செல்வது உண்டு. நண்பரின் தந்தையார்  ஜனாப்.பீர்முகம்மது அவர்களிடம் பெற்ற பாசத்தையும் உபசரிப்பையும் எப்போதும் மறக்கமுடியாது.  எப்போது போனாலும் அத்தர்ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களைத் தருவார். அந்தக் கடைக்குச் சென்று அவரைப் பற்றி விசாரித்தபோது, வேறு ஒருவருக்கு கடையினை விற்றுவிட்டு மலேசியா சென்றுவிட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது.

திருவிதாங்கோடு-தக்கலை இஸ்லாமிய சகோதரர்களும்திருநெல்வேலி-நாகர்கோவில்- தூத்துக்குடி நகரங்களைச் சேர்ந்த இந்து சகோதரர்களும் தங்களுக்குள் உறவுசொல்லி அழைத்துப் பேசிக்கொள்வது இன்றைக்கும் பார்க்கமுடிகிறது. 

உடன் வந்த நண்பர் கல்கி ப்ரியனிடம் இதையெல்லாம் குறிப்பிட்டுச் சொன்ன பொழுது, நண்பர்.கல்கி ப்ரியன்  என்னிடம் எங்களுடைய பாட்டனார் திருவிதாங்கூர் மன்னரின் அரசில் மாஜிஸ்த்ரேட்டாகப் பணியாற்றிவர். இதே சாலை பகுதியில் தான் தன்னுடைய தாயார் பிறந்தார் என்பதையும்   சொல்லி தன்னுடைய காலணிகளைக் கழட்டிவிட்டு வெறும் காலுடன் அந்த மண்ணில் சிலநிமிடங்கள் நடந்தார்.

அனந்தபத்மநாபன் கோவில் தெருவில் சென்றாலே திரு.நீல.பத்மநாபன் அவர்களின் பள்ளிகொண்டபுரம் புதினத்தின் காட்சிகள்   நம் கண்முன் நிழலாடும். இங்கிருந்து சற்று நகர்ந்தால் பேரூந்து நிறுத்தத்தில்  நகுலன் நடமாடிய இடங்கள் நினைவுக்கு வரும்.

கல்லூரி படிக்கும் காலங்களில் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்வது வாடிக்கை. 

ரவிவர்மாவின் ஓவியசாலை, கூட்டமில்லாத கோவளம் மற்றும் வர்கலா கடற்கரைகள், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் அருகே பாளையத்தில் உள்ள பழைய புத்தகக் கடைகள்,  
பருமனான சம்பா அரிசிச் சோறும், கார மீன்குழம்பும், புளிக்கும் மோர்க்குழம்பும் இன்றைக்கும் மனதில் நிலைத்து நிற்பவை. 




அந்தபத்மநாபன் கோவில் கட்டிடக்கலையும் , வெட்டவெளியின் கீழ் கோவிலின் உள்ளே மணற்பரப்பில் உள்ள பிரகாரமும், கற்தூண்களும், அழகிய வேலைபாடுகளுடைய கோயிலின் அமைப்பும்மற்ற கோயில்களைவிட தோற்றத்தில் மாறுபட்டது.  அமைதியாக காட்சிதந்த அக்கோயில் இன்றைக்கு பரபரப்பாகவும், காவல்துறையின் பாதுகாப்பு முறைகளும், சமீபத்தில் உலகளவில் இக்கோவிலைப்பற்றி நிகழ்ந்த விவாதங்களும் கோயிலுடைய பழைய இயல்பினையே மாற்றிவிட்டது. அனந்த பத்மநாபர் கோவில் வரலாறுபிரச்சனைகள்,விவாதங்கள்  குறித்து பேசும் பள்ளிகொண்டபுர ரகசியங்கள் என்ற என்னுடைய நூல்  விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

கோவில் குளத்தில் எப்போதும் தண்ணீர்தேங்கி நிறைந்திருக்கும். இப்போது அந்த குளத்தில் தண்ணீர் வற்றிபணியாளர்கள் அதனைச்சீர் செய்யும் காட்சிகளையும் காணமுடிந்தது.






1950களின் இறுதியில், அதிசயமாக பத்மநாப கோவில் தெருவில்   நான்கண்ட பெரிய கடிகாரம் ஒன்று இன்றைக்கும் பழமைமாறாமல் சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

பரபரப்பான உலகவளர்ச்சியில் திருவனந்தபுரம்  தன் பழமையினைப் பாதுகாத்துக் கொண்டும், வளர்ச்சியினை ஏற்றுக்கொண்டும் அமைதியான நகரமாக தன்னைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
          
முன்னாள் மத்திய அமைச்சர். இந்திரா காந்தியின் தளபதியாக இருந்த கே.பி.உன்னிகிருஷ்ணன்கேரளமாநில முன்னாள் அமைச்சர். நீலலோகிதாஸ் நாடார் ஆகியோர்களோடு திருவனந்தபுரத்தில் சுற்றியதும், உச்சநீதிமன்றம் வரை  தேசிய நதிநீர் இணைப்புக்கான வழக்கு நடத்த  ஆவணங்கள் கிடைக்கவும் இவ்விருவரும் உதவியதையும் நினைத்துப் பார்க்கிறேன். அமைச்சர். நீலலோகிதாஸ் வீட்டிற்கு அதிகாலையில் சென்றபொழுது ஒருகாவலர் மட்டும் வீட்டிலிருக்க, அழைப்புமணி அடித்தபோது அவரே கதைவைத் திறந்த எளிமையும் அன்பையும் மறக்கமுடியாது. இன்றைக்கு அரசியலில் நம் கைகாட்டி வளர்ந்தவர்களே  சந்திக்கும் போது அவர்கள் காட்டுகின்ற வெட்டிபந்தாக்கள் சகிக்கமுடியாதது.


கேரள சகோதரர்கள் எதிலும் எளிமையும், தங்களுடைய பழக்கவழக்கங்களையும், பாதுகாப்பார்கள்.  இத்தனைக்கும் கேரள அரசுமீது நதிநீர்பிரச்சனை, கண்ணகிகோவில் பிரச்சனை என்ற பல வழக்குகள் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளேன். ஆனால் கேரளமாநில நண்பர்கள் எண்ட கேரளா மேல் மோதும் சேட்டனே என்று என்னை அன்போடு அழைப்பதுமுண்டு. 


கவிஞர்.சந்தியா கேரள ஊடகங்களில் செய்திவாசிக்கும் சமூக ஆர்வலர். திருவனந்தபுரத்தில் இலக்கிய கூட்டங்களில் தவறாமல் இவரைப் பார்க்கலாம். இடதுசாரி சார்புள்ள இவர், கேரளாவின் பிரச்சனைகளை முற்றும் தெரிந்தவர். அவரைப் பார்த்தபொழுது கேரள நதிநீர் பிரச்சனைகள் பற்றி கூறிய கருத்துகள் நியாயமாகப் பட்டது. பால் சக்கரியா போன்ற மலையாள எழுத்தாளர்கள் தமிழகத்தின் நியாயத்தை உணர்ந்து நதிநீர் பிரச்சனையில் ஆதரவு அளித்ததும் உண்டு. 


திருவனந்தபுர பல்கலைக்கழக பேராசிரியர். சகோதரி. விஜய ராஜேஸ்வரி அவர்கள் என்னுடன் முகநூல் நட்பில் இணைந்த அன்றே நான் திருவனந்தபுரத்தில் இருப்பதை அறிந்து செல்பேசியில் என்ன சார், நம்பமுடியவில்லையே இன்று காலைதான் உங்களுக்கு நட்புகோரிக்கை அனுப்பியிருந்தேன். இன்றே நீங்கள் திருவனந்தபுரத்தில் இருப்பதை அறிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது  என்றார்.  அவர் ஒரு நல்ல  தமிழ் பற்றாளர். இவரைப்போல, பல தமிழர்களும்  கேரளாவில் பலதுறைகளிலும் பணியில் உள்ளனர். மோகமுள், பாரதி, பெரியார், கணிதமேதை ராமானுஜர் குறித்து திரைப்படங்களின் இயக்குனர்.ஞான.ராஜசேகரனும் கேரள அரசின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் உள்ளார். 

ப்படியான உறவுகள் தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இருந்தாலும், தவித்த வாய்க்கு தண்ணீரும் கேரள சகோதரர்கள் மறுப்பது ஏனோ? குமரிமாவட்ட நெய்யாறு, நெல்லைமாவட்டத்தின் அடவிநயனார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, விருதுநகர்மாவட்டம் அழகர் அணை, முல்லைப் பெரியாறு, பாம்பாறு, பாண்டியாறு- புன்னம்புழா, ஆழியாறு-பரம்பிகுளம், சிறுவாணி, அச்சன்கோவில்-பம்பை வைப்பார் இணைப்பு, போன்ற பிரச்சனைகள் கேரளாவின் நொண்டியாட்டம் நம்மை வேதனைப் படுத்துகிறது. 

பத்தினி தெய்வம் கண்ணகி கோட்டம் தமிழகத்தின் கம்பம் பள்ளத்தாக்கில் இருந்தாலும், தமிழகப் பயணிகளை தடுத்து அப்பகுதியை கபளீகரம் செய்துகொண்டதும் ஏனோ?  


“சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.”  

முண்டாசுக்கவி பாரதியின் வரிகளைத் தான் ஒருகணம்  சிந்திக்கக் கூடாதா? 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...