Thursday, February 26, 2015

அப்பாவி விவசாயிகளை சவக்குழிக்குத் தள்ளும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம். (1)




Agriculture Lands Acquisition ...

அப்பாவி விவசாயிகளை சவக்குழிக்குத் தள்ளும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம்.
_________________________________________________________________

விவசாயிகளை எந்த அரசாங்கம் வந்தாலும் வஞ்சித்து காவு வாங்குகிறது. தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள்  எண்ணிக்கை லட்சக்கணக்கிற்கும் மேலாகிவிட்டது. எவ்வளவோ விவசாயப் போராட்டங்கள். ஆனாலும் அவர்கள் வாழ்வில் விடியல் மட்டும் ஏற்படவில்லை.

 சிவசேனை, அகாலிதளம், லோக் ஜன சக்தி, போன்ற தோழமை கட்சிகள் எதிர்த்தும் வம்படியாக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவருவதே குறியாக இருக்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு.  அவசரச் சட்டமாக பிறப்பித்தபோது இதனை ” கருப்பு அவசரச்சட்டம்” என்று அனைவரும் கண்டித்தார்கள்.

மோடி அரசு, கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதி சில திருத்தங்களோடு இந்த அவசர சட்டத்தைப் பிறப்பித்து, உடனடியாக அது நடைமுறைக்கு வருகின்றது என அவசரமும் காட்டியது. பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு இருந்தும் நாடாளுமன்றத்தில் விவாதித்து இதனை சட்டமாக்குவதை விட்டுவிட்டு, இத்தனை அவசரப்பட்டதில் பல சந்தேகங்கள் எழுகின்றன.   நாடுமுழுவதும் இச்சட்டத் திருத்தத்திற்கு  எதிர்ப்பு கடுமையாக கிளம்பியுள்ளது.

நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தில், நில உரிமையாளரிடம் நிலத்தைக் கையகப்படுத்தும் போது, சில தேவைகளுக்காக அவர்களின் அனுமதி நாட வேண்டியதில்லை என ஏற்கனவே சட்டப்பிரிவு 10 (ஏ) சொல்கிறது.

மேலும், தேசியப்பாதுகாப்பு, இராணுவத்தேவை, மின்சார திட்டங்கள், இரயில் வழித்தடங்கள், சாலைகள், தொழில் பூங்காக்கள், வறியவர்களுக்கு வீடுகள் கட்டுதல்  போன்ற அடிப்படையான தேவைகளுக்கு, நில உரிமையாளர்களிடம் அனுமதி இல்லாமல் நிலங்களை ஆர்ஜிதப்படுத்தலாம்.

ஆனாலும், நிலத்தை எடுத்துக்கொள்ளும் பொழுது, விவசாயத்திற்கு ஏற்ற வளமான நிலம்தானா என்று கவனிக்கவேண்டியது அவசியம் என்று ஏற்கனவே இருந்த சட்டத்தில் பிரிவுகள் இருந்தன. இப்போது உள்ள வரைவுச் சட்டத்தில் செழிப்பான விவசாய நிலமாக இருந்தால் கூட அதனை கவனிக்க அவசியமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கைகளுக்கு  எந்த  அனுமதியும் தேவையில்லை.

அதுமட்டுமல்லாமல், கீழ்குறிப்பிட்ட சட்டங்களும்  நிலம் கையகப் படுத்தும் சட்டத் திருத்தங்களோடு இணைத்து நடைமுறைக்கு வருகின்றது.

1) நிலக்கரி வளமுள்ள பகுதிகளில் நிலம் கையக்கப்படுத்துதல் மற்றும்       வளர்ச்சித் திட்டங்களுக்கான சட்டம்.
                    *இச்சட்டம் மீத்தேன்/நியூட்ரினோ திட்டத்திற்கும் இது    பொருந்தும்.

2) தேசிய நெடுஞ்சாலை திட்டம் -1956.

3) சுரங்கங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்துதல்.

4) அணுசக்தி திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டம் -1962.

5) பெருநகர் ரயில்வே கட்டுமானப் பணிச் சட்டம் -1978.

6) இந்திய டிராம்ஃபே சட்டம் -1886.

7) இரயில் வழிப்பாதை சட்டம் -1989.

8) தொல்பொருள் மற்றும் பழங்கால நினைவகங்கள் ஆய்வுச்சட்டம் -1958.

9) பெட்ரோலிய கனிம வள குழாய் பதிப்புச் சட்டம் -1962.

10) மின்சாரச் சட்டம் -2003.

11) அசையா  சொத்து கேட்பு மற்றும் ஆர்ஜிதப்படுத்தல் சட்டம் -1952.

12) மறு குடியேற்றங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம்.

13) தாமோதர் பள்ளத்தாக்கு ஆணையச் சட்டம் -1948.

*

ஏற்கனவே, குஜராத், மகராஷ்ட்ரா, மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றுப்படுகையில் பெரிய அணைகள் கட்டப்படும் என்று விவசாயிகளைத் துரத்தப்பட்டதை கண்டித்து மேதா பட்கர் தலைமையில் கடுமையாக போராடினார்கள்.

மேலும் இந்த நில ஆக்கிரமிப்புகளால் மக்கள் கொதித்தெழுந்து
மேற்கு வங்க நந்திகிராமத்திலும், தூத்துக்குடி மாவட்டத்தில் டாடா டைட்டானியம் மணல் ஆலையும் துரத்தப்பட்டதெல்லாம் நாம் அறிந்ததே...

தமிழகத்தில் மீத்தேன்; கெயில் குழாய் பதிப்பு; நியூட்ரினா என மத்திய அரசின் திட்டங்கள் பிசாசுகளைப் போல விவசாயிகளைத் தொடர்ந்து துரத்துகின்றன.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வனாந்திரங்களில் வாழும் பூர்வகுடிகளுக்கு எதிராக வனச்சட்டங்களையும் கொண்டுவர முயற்சித்தனர். வியாபாரிகளுக்கும், கார்பரேட் முதலாளிகள், கனிம வளங்களைச் சுரண்டுபவர்களுக்கும் தான் மத்திய அரசுகள் கட்சி பேதமில்லாமல் விசுவாசமாக நடந்துகொள்கிறது. பொதுநலன் என்று சொல்லிக்கொண்டு கொழுத்த பணக்காரர்களுக்கு இச்சட்டங்கள் சாதகமாக அமைகின்றன.

ஆளவந்தார்கள் தேர்தல் நேரத்தில், தாங்கள் தேர்தல் நிதியாகப் பெற்ற பெருந்தொகைகளுக்கு இம்மாதிரி சட்டங்கள் மூலம் தங்கள் செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்கின்றார்கள். ஏற்கனவே என்னுடைய பழைய பதிவில் குறிப்பிட்டவாறு, நேரு  காலத்திலிருந்தே டெல்லி சிவப்புநாடாக்கள்  விவசாயிகள் என்பவர்கள் தீண்டப்படாதவர்கள் என்ற மோசமான மனநிலையினை உருவாக்கிவிட்டார்கள்.

நேருவின் ஐந்தாண்டுத் திட்டங்களில் தொழில் துறைக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டது. விவசாயத்திற்கு அனுகூலமாக எந்த திட்டங்களும் இல்லை. தில்லி யோஜனா பவனில் செயல்பட்ட திட்டக் குழுவும், இப்போது பிரதமர் மோடியால் மாற்றியமைக்கப்பட்ட நிதி ஆயோக் (NITI Aayog) -ம் விவசாயிகள் மீது அக்கறையற்ற தன்மையில் தான் இருக்கிறது.  டெல்லி அதிகார மையங்கள் அப்பாவி விவசாயிகளின் வயிற்றில் அடித்து, அவர்கள் நொந்து சாகடிக்கப்படவேண்டுமென்ற திட்டங்கள் தீட்டுகின்றார்களா?

ஆட்சியாளர்களே! பிரான்ஸில்  வயிற்று பசிக்கு ரொட்டி கேட்ட விவசாயிகளிடம்  “கேக் சாப்பிடுங்கள்” என்று திமிர் பிடித்த ராணி மேரி ஆண்டாய்னட் மமதையில் சொன்னதால் தான்
பிரெஞ்சு புரட்சி தோன்றியது.

உழவன் உழுதால் தான் உலகம் உயரும். அவன்  பாடுபடும்  நிலங்களைப் பிடிங்கிக்கொண்டு, அவனை வஞ்சித்தால் அவன் போர்குணத்தோடு  எழுவான்.  அந்த எழுச்சி உங்கள் ஆணவங்களை அளித்தொழிக்கும். இதனை கவனத்தில் கொண்டு விவசாயிகளை அணுகுங்கள்.

*
 "விளை நிலங்கள் எல்லாம் விடியல் தருமென
காலம் காலமாய் காத்து...
காகிதமாய் வந்த கரன்சி
விலை நிலமாய் பிடுங்கி கொள்ள...

அதிகாலை கதிரவன் கரம் படும் முன் எழுந்து,
மீதி நிலமாவது காப்பாற்றும் என்று உழுதிட்ட உழவும்,
முன்பு பெய்த சிறு மழையை,
வற்றியமண்ணே முகர்ந்துகொள்ள....

நிலத்தடிநீரை நினைவில் வைத்து இறைத்தால்
வண்ணம் ஆக்கப்பட்ட சாயா ரசயான கழிவும்
சாக்கடையாய் ஓன்று சேர்ந்து கொல்கிறது
பொன்னான மண்ணையும், மனிதனையும்....

வாய்தா வாங்கி வாடி போனது போட்ட விதை
எப்படியாயினும் கலங்காமல் உழைத்த,கலப்பை
தன்னை சொல்லி கொண்டு காட்சி பொருளாய் இன்று...
தானியங்கள் அள்ளிய முறம் கூட முற்றத்தில்
மரணித்து விடும் நிலையில் இருக்கும், மாடுகள்
சந்தையிலிருந்து காசப்புகடைக்கு,கண்ணீருடன்...

"தனியொருவனுக்கு உணவு இல்லையென்றால்.....என்றான் பாரதி உணவளிக்கும் உழவே வழியின்றி உணவின்றி
சிறிது சிறிதாக இறப்பை நோக்கி,
இனியும் மாறும் என்று...

இவ்வுலகில்,மரங்கள் வைத்து மழை வரவழைத்து,
இனியும்,பூமிக்கு தீங்கு எதுவும் செய்யமால்,
செயலில் வாழ்வாதாரத்தை பெருக்கினால் ஒழிய,
தொன்று தொட்டே சொல்லப்பட்டுவந்த,
"எதிலும் முதன்மையானது உழவு"
இந்த வரிகள் நிஜமாகுமா ? ” -கவிஞர் நந்த கோபால்.

பின் குறிப்பு : விவசாயிகள்  தற்கொலைகள் குறித்து தேசிய
மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான தரவுகள் திரட்டப்பட்டு , மனுவும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...