Thursday, February 19, 2015

மூன்று உலகப்புகழ் பெற்ற பெண் படைப்பாளிகள்.



கடந்த 116-02-2014 அன்று எமிலிஜோலா பற்றி எழுதியிருந்த பதிவைப் பார்த்த நண்பர்கள் சிலர் “ஜேன் ஆஸ்டின்” போன்ற ஆங்கில பெண் எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதக்கூடாதா? என்று கேட்டுக் கொண்டதிற்கிணங்க....
*
19ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இங்கிலாந்து ஒரு தொழிற்புரட்சி நாடாக மாறத்தொடங்கிது. அதுவரைக்கும் ஒரு விவசாய, நிலபிரபுத்துவ நாடாக இருந்த இங்கிலாந்தின் இந்த மாற்றம் பலஉலகநாடுகளின் வரலாறுகளின் மீதே தாக்கம் ஏற்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில் பல முதல்தலைமுறை கல்வி பெற்ற, ஓரளவு வசதியான குடும்பங்களுக்குள் ஏற்பட்ட உறவுகள், சமூக, போராட்டங்களை நாவல்களாக எழுதி பெரும்புகழ் அடைந்த மூன்று நாவலாசிரியைகள் தான் ஜேன் ஆஸ்டின், மிசிஸ் கேஸ்கல் மற்றும் பிராண்ட் சகோதரிகள்.
ஜேன் ஆஸ்டின்.
*******************************
ஜேன் ஆஸ்டின் 

ங்கிலாந்தில் உள்ள ஸ்டிவெண்டன் கிராமத்தில் 1775ம் ஆண்டு இறுதியில் பிறந்தவர். கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஜேனுக்கு காஸாண்ட்ரா ஆஸ்டின் என்ற சகோதரியும் உண்டு. ஆபே பள்ளியில் கல்வியை முடித்த ஜேன் அகஸ்டினை அவரது குடும்பத்தினர் எழுதுவதற்கு பெரிதும் ஊக்குவித்திருக்கிறார்கள். தன் இளம்வயதில் பலதரப்பட்ட இலக்கிய நடைகளில் எழுதிப் பரிசோதித்த ஜேன் தனக்கென்று ஒரு பானியை உருவாக்கிக் கொண்டார். ஜேனின் படைப்புகளில் யதார்த்தமும் நகைச்சுவையும் இழையோடியது. பெண்கள் சமூகத்தில் முன்னேறவும், பொருளாதார ஆதாயத்திற்காக ஆண்களையும், திருமணத்தையும் சார்ந்திருப்பதையும் தன் படைப்புகளில் சுட்டிக்காட்டினார்.
1811-16களில் வெளிவந்த இவரது புகழ்பெற்ற படைப்புகளான, சென்ஸ் அண்ட் சென்சிபிளிட்டி, பிரைடு அண்ட் பிரிஜுடைஸ், மான்ஸ்ஃபீல்டு பார்க், எம்மா ஆகிய நான்கு நாவல்கள் இவருக்கு அடையாளம் பெற்றுத்தந்தது. இந்த நாவல்கள் பலமொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு இன்றைக்கும் பரபரப்பாக பலபதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. பல்கலைக்கழக பாடப்புத்தகங்களில் ஜேனின் பெயரும் படைப்புகளும் பொறிக்கப்பட்டுள்ளது.
ஜேன் ஜூலை 18, 1817 அன்று தன் 42வது வயதில் காலமானார். அவரது மறைவுக்குப் பின் நார்த்தாங்கர் ஆப்பி, பெர்சுவேஷன் என்ற அவரது இரண்டு படைப்புகள் வெளியாகின. அப்போதுவரைக்கும் ஜேனை இலக்கிய உலகம் கண்டுகொள்ளவில்லை.
1869ல் வெளியான “எ மெமயர் ஆஃப் ஜேன் ஆஸ்டின்” என்ற ஜேனின் வாழ்க்கைசரிதம் அவரது படைப்புகள் மீது மக்களின் பார்வையை இட்டுச் சென்றது. அதன்பிறகே அவரது படைப்புகள் பெரும்புகழ் அடைந்து. இலக்கிய உலகில் இவர் ஒரு பெண் போராளி, இவருக்கென்ற எழுத்துபானியே தனி. தன்னுடைய துயர்களை நண்பர்களிடம்கூட காட்டிக்கொள்ளாத சுயமரியாதைக்காரர்,
நமது மகாகவி பாரதி இளம்வயதில் மறைந்தபோது அவரைக்கொண்டாட யாரும் வரவில்லை. இன்று அவருடைய படைப்புகள் நாட்டுடைமை. அதே நிலைமை தான் ஜேன் ஆஸிடினுக்கும்.

பிராண்ட் சகோதரிகள். 
பிராண்ட் சகோதரிகள்
*******************************
பிராண்ட் சகோதரிகள் மொத்தம் நான்குபேர். அவர்களில் சார்லோட்டி பிராண்ட் எழுதிய நாவலான “ஜேன் அயர், எலிசபெத் பிராண்ட் எழுதிய புதரிங் ஹைட்ஸ், அன்னி ப்ராண்ட் எழுதிய ஆக்னஸ்க்ரே நாவல்கள் கிளாசிக் அந்தஸ்து பெற்றவை. தவிர இந்த நாவல்கள் மூன்றும் ஒரே ஆண்டில் (1847) வெளியானவை.
சார்லோட்டி பிராண்ட் 1849ல் ஷெர்லி, 1853ல் வில்லெட், 1857ல் தி ப்ரொபசர் ஆகிய நாவல்களை எழுதினார். சிறுவயதிலே எழுத்தின் மீதான ஆர்வம் கொண்ட சகோதரிகள் 19ம் நூற்றாண்டின் ஆங்கில இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஆளுமைகளாக வளர்ந்தார்கள். 1946ல் பிராண்ட் சகோதரிகளின் வாழ்க்கை டிவோஷன் என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. சார்லோட்டியின் கதாப்பாத்திரத்தில் பிரான்ஸ் நடிகை ஒலிவியா நடித்திருந்தார்.
சார்லோட்டி பிராண்டைப் பற்றி மிசிஸ்கேஸ்கல் எழுதிய “சார்லோட்டி பிராண்ட் வாழ்கை வரலாறு“ என்ற படைப்பு அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத்தந்தது. இவரது வாழ்க்கைவரலாறு இன்றும் அச்சில் உள்ளது. சார்லோட்டியின் வாழ்க்கை வரலாற்றினை மிசிஸ் கேஸ்கலை எழுதச் சொல்லி ஊக்குவித்தவர் பிராண்ட் எழுதிய ஜேன்அயர் நாவலை பதிப்பித்த ஜார்ஜ் ஸ்மித் என்பவர் தான். பிராண்டின் சரிதம் வெளியான முதல் ஆண்டிலே மூன்று பதிப்புகள் வெளிவந்தது. 1806ல் ஜார்ஜ் ஸ்மித் கார்ன்ஹில் மேகஸினை (Cornhill Magazine) வெளியிட்டவர். அந்தகாலகட்டத்தில் கார்ன்ஹில்லில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை.
துயரம் என்னவென்றால் பிராண்ட் சகோதரிகள் நான்கு பேருமே இளம் வயதிலே இறந்து போனார்கள். எழுத்தில் அடையாலப்பட்ட அவர்கள் சொந்த வாழ்க்கையில் அவர்கள் சோபிக்கவில்லை. ஆனால், மற்றவர்கள் படித்துப்பிரகாசிக்க மாசற்ற இலக்கியங்களை வழங்கிப் போயிருக்கிறார்கள்.

மிசிஸ் கேஸ்கல்.
*******************************
மிசிஸ். கேஸ்கல்

கேஸ்கல் பிறந்தது 1811ல் இவரது முதல் பெயர் எலிசபெத். லிலி என்று குடும்ப வட்டாரத்தில் அழைக்கப்பட்ட இவருக்கு மிசிஸ் கேஸ்கல் என்ற பெயரே பெரும்புகழ் பெற்றுத்தந்தது. சாதனை! புகழ்! உழைப்பு! அனைத்திற்கும் சொந்தக்காரரான கேஸ்கலின் படைப்புகள் இங்கிலாந்து சமூகத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றம் குடும்ப உறவுகள் பெண்களின் நிலைகளை எடுத்துச் சொல்வதாக அமைந்தது.
இலக்கிய அழகுகளாக மிளிர்ந்த பிராண்ட் சகோதரிகளின் வாழ்க்கையை நாவலாக்கினார் கேஸ்கல்.
ஜேன் ஆஸ்டினைப் போலவும், பிராண்ட் சகோதரிகள் போலவும் கேஸ்கல் வாழ்க்கையில் தோற்றவராக இல்லாமல் அந்தஸ்துடன் உயர்வடைந்தார். பல பெரிய குடும்பங்களோடு சமூகஉறவுகள் கொண்டு பழகினார், இத்தாலி, ரோம், பிரான்ஸ், பாரீஸ் நகரங்களுக்குத் தனியாகவே பயணித்தார். நீண்டகால நண்பர்களைச் சந்தித்தார். சமூகசேவையில் ஈடுபட்டார், ப்ளான்ரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாருடனும் அவருக்கு நட்பு இருந்தது. சிலகாலம் நைட்டிங்கேல் இல்லத்திலே தங்கியிருந்தார்.
இங்கிலாந்தில் ஒவ்வொரு கவிஞர் எழுத்தாளர்களுக்கும் அவர்களது புகழைப் பரப்ப தனித்தனி சொசைட்டிகள் இயங்குகின்றன. ஷேக்ஸ்பியர், வில்லியம் வேர்ட்ஸ் வொர்த், ஆங்கிலக்கவிஞர் டென்னிசன் ஆகியோருக்கு சொசைட்டிகள் உள்ளன. டென்னிசன் சொசைட்டி நியூஸ்லெட்டர்கள் இன்றும் வெளியாகின்றன. மிசிஸ் கேஸ்கல் பெயரிலும் சொசைட்டி ஜர்னல் பத்திரிக்கை வெளியாகிறது. சார்லஸ் டிக்கின்ஸன் தொடங்கிய “ஹவுஸ்ஹோல்ட் வேர்ட்ஸ்” இதழில் தன்னுடைய நாவல்களை வாரத்தொடர்களாக வெளியிட்டார் கேஸ்கல். இதன்மூலம் சார்லஸ் இலக்கிய உலகின் புகழ் உச்சியை அடைந்தார்.
கேஸ்கல் தன் கடைசிகாலத்தில் இறுதி நாவலுக்காக 1500பவுண்டு முன்பணமாகப் பெற்றார். அந்தகாலத்தில் அது மிகப்பெரிய தொகை. அந்த பணத்தைக் கொண்டு தன் 60வயது முடிந்ததும் ஓய்வெடுப்பதற்காக ஒரு இல்லத்தை வாங்கினார். ஆனால் சிறிது நாட்களிலே அவர் காலமாகிவிட்டார். அப்போது அவருடைய நாவலின் இறுதிப்பக்கங்கள் முடிக்கப்படாமல் இருந்தன.
*
இன்றும் இந்த ஆங்கில பெண் இலக்கியகர்த்தாக்களின் படைப்புகள் சிரஞ்சீவியாக உள்ளது. ஒரு கல்லூரிக்கு கருத்தரங்கிற்குச் சென்றபோது, ஆங்கிலப் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவரிடம் இவர்களைப் பற்றிச் சொன்னால் யார் இவர்கள் என்று என்னிடம் கேட்டது தான் கொடுமையிலும் கொடுமையாக இருந்தது. இப்படி, நம்முடைய கல்வி உலகம் உள்ளது. பலர் தேனீக்கள் போல இளமையில் அறிவைத்தேடுகின்றனர். சிலர் ஒப்புக்கு கல்வியை கற்கவேண்டியிருக்கின்ற நிலைமைதான்.
நாங்களெல்லாம் பட்டப்படிப்பு படிக்கும் போது ஆங்கில மொழிப்பாடத்தில் ஏதாவதொரு முழுமையான ஷேக்ஸ்பியர் டிராமா இருக்கும். அந்த வகுப்பை எங்களுக்கு எடுக்கும் பேராசிரியர் ஏற்ற இறக்கமாக ஷேக்ஸ்பியரின் பாட்த்தினை நட்த்துவார். அப்படியெல்லாம் இருந்த கல்லூரிகளில் புகழ்பெற்ற ஜேன் ஆஸ்டினைத் தெரியவில்லை என்றால் என்ன சொல்ல!

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...