Wednesday, February 11, 2015

தாமதமாகும் (சென்னை-தென்காசி) செங்கோட்டை-புனலூர் தொடர்வண்டி பாதை.





சென்னையிலிருந்து தென்காசி-செங்கோட்டை வரை  ஓடும் பொதிகை விரைவு ரயில் புனலூர் செல்லவேண்டுமென்றால் வருகின்ற ரயில்வே நிதியறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும்.
தற்போது ஆமைவேகத்தில் பணிகள் நடக்கின்றன.

இதுவரை 14000 மீட்டர் தண்டவாளப்பாதை போடப்பட்டுள்ளன. தற்போது செங்கோட்டை பகவதிபுரத்தில் போடப்பட்ட தண்டவாளங்கள் பழையவை. அவை அரக்கோணத்தில்  தயாரிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் 10டிகிரியில் 52 வளைவுகளும், 10டிகிரிக்குமேல் 5வளைவுகளும் 12டிகிரிக்கு மேல் ஒரு வளைவும் உள்ளது.

இனிமேல் தொடர்வண்டி நிலையங்கள் அமைக்கவேண்டியவை செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, புதிய ஆரியங்காவு, எடப்பாளையம், கல்துருத்தி, தென்மலை, ஒத்தக்கல், எடமன், புனலூர் வரை ஆகும். இதுவரை பணிகள் மீதம் உள்ளன.

இந்த மார்க்கத்தில் தமிழக எல்லைப்பகுதியில் 13கி.மீட்டரும் கேரள மாநிலப்பகுதிகளில் 33.38கி.மீ என மொத்தம் 49.38கி.மீ பாதை அமைக்கப்பட வேண்டும். 2010ல் இந்த வழித்தடத்தில் தொடர்வண்டி சேவை நிறுத்தப்பட்டது. 2011ல் 375கோடி ரூபாயில் பணிகள் துவங்கப்பட்டன. 2011-2014வரை 85 கோடி ரூபாயும், பின் 35 கோடி ரூபாயும் மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல ஆரியங்காவு மலைகளுக்கிடையே செல்லும் 13கண் பாலமும்,குகைப்பாதைகளும் முக்கிய அங்கங்களாக இந்த மார்க்கத்தில் திகழ்கின்றது.  சங்கரன்கோவிலிலிருந்து இந்த வழியாக புனலூர் கொல்லம் வரை பயணிக்கும் போது பச்சப்பசேலென   இயற்கை கண்களுக்கு விருந்தாகும். 1960-70களில் அடர்த்தியாக இருந்த மரங்களும், படிப்படியாக சில ஆசாமிகளால் வெட்டப்பட்டன. இந்தப் பாதையில் எந்த இடத்தில் இறங்கினாலும் அருகில் குளிப்பதற்கு சிற்றருவிகள் இருக்கும். தென்மலையும் அட்டிங்கலும் ரம்மியமான இடங்களாகும்

ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் அமைத்த ரயில் மார்க்கமாகும். இதில்தான் வாஞ்சிநாதன் போன்ற விடுதலைப் போராளிகள் எல்லாம் பயணம் செய்தனர். செங்கோட்டையை திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தமிழ்நாட்டோடு இணைக்கப் போராடிய கரையாளர் போன்றோரெல்லாம் கைது செய்யப்பட்டு இந்த பாதையில் தான் திருவனந்தபுரம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


1904ல் நவம்பர் 26ம் தேதி 21குண்டுகள் முழங்க கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு முதல் புகைவண்டி புறப்பட்டது. அப்போது செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க இரயில் பாதையினை காலங்கடத்தாமல் விரைவில் முடிக்கவேண்டுமென்பது தமிழக கேரளமக்களின் கோரிக்கையாக உள்ளது.

எனவே, மத்திய அரசு வருகின்ற இரயில்வே நிதிஅறிக்கையில் போதுமான நிதியை ஒதுக்கி செங்கோட்டை-புனலூர் இரயில்பாதையின் பணிகளை முடிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...