Monday, February 16, 2015

எமிலி ஜோலா!





பிரெஞ்சு இலக்கியத்தில் முக்கியமாக அறியப்பட வேண்டியவர் எமிலி ஜோலா. ஆரம்பகட்டத்தில் பாரிஸ் நகரில் இருளடைந்த சிறு அறையில் அடைபட்டு, பல ரணங்களை அனுபவித்தவர். பிரெஞ்சு இலக்கியத்தின் கலகக்காரன் என்று சொல்லப்பட்டவர். ஆட்சியாளரின் அடக்குமுறை அலங்கோலத்தை எதிர்த்த போராளி.

பிரான்சில் சுரங்கத் தொழிலாளர்கள் மீது அடக்குமுறை நடந்த பொழுது அதனை எதிர்த்துப் போராடியவர். பிரெஞ்ச் அரசுப் பரிவாரத்தில் இருந்த வர்க்கத்தினரை கடுமையாகச் சாடி, கிண்டலும் கேலியுமாக எழுதியவர். அவ்ர் எழுத்துக்கள் யாவும் எதார்த்தமாக இருந்தன, சர்ர்சைகள் நிறைந்தன. இயல்பாக  வெளிப்பட்டன. எனவே அதனை  நேச்சுரலிஸம் என்று ஆங்கிலத்திலும் இயற்கைவாதம் என்றும் அழைக்கப்பட்டது.

இவருடைய சகா பால் செசான் நல்ல ஓவியர். இவர்கள் இருவருமே பாரீஸில் வலம் வந்தார்கள். பாரிஸ் நகரத்தினருக்கு இந்த இரட்டையரைப்  பார்த்தால் நடுக்கம் ஏற்படும். நாநா பற்றி எழுதிய படைப்பு பல விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி, நல்ல விற்பனையாகி இவருக்கு 18ஆயிரம் பிரெஞ்ச் ஃப்ராங்க் ராயல்டியாக கிடைத்தது.

பாரீஸ் நகரத்தை வெறுத்து, அமைதியான சூழலுக்கு தன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள எமிலிஜோலா விரும்பினார். தனக்குக் கிடைத்த ராயல்டி பணத்தைக் கொண்டு பாரிஸிலிருந்து 40கி.மீட்டர் தள்ளி சோலைகள் நிறைந்த ஒரு வீட்டை வாங்கி அங்கிருந்து தனியே தன் இலக்கியப்பணிகளை ஆற்றினார்.

பல படைப்பாளிகள் களத்தில் கிடைக்கும் குறிப்புகளை குறிப்பேட்டில் எடழுதிக்கொள்வார்கள். ஆனால், எமிலிஜோலா அவையனைத்தையும் புகைப்படங்களாக எடுத்துக் கொள்வார். இவரிடம் விலைஉயர்ந்த 10காமிராக்கள் இருந்தது.
புகைப்படங்களைப் பதிவு செய்துகொண்டு, தன்னுடைய இல்லத்திலே 3 இருட்டறைகளை உருவாக்கி, கருப்பு வெள்ளை புகைப்படங்களிலே தன்னுடைய படைப்புகளுக்கான கருவையும் குறிப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வார்.

நீண்ட பயணங்கள் அதன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவரிடம் குவிந்திருந்தது. அப்போது புகைப்படம் எடுத்தாலே உடலில் கோளாறுகள் ஏற்படுமென்று ஒரு மாயை மக்களிடையே இருந்தது. அவரிடம் இருந்த  நாயுடன் யாரேனும் தெரிந்த நங்கையுடனும் நீண்ட நடைபயிற்சி செய்வது அவருக்கு பிடித்தமான காரியமாக இருந்தது. இது தனக்கு புத்துணர்ச்சியினைத் தெருகின்றது என்பார்.

தன் மனைவியை பல வடிவங்களில் புகைப்படம் எடுத்து நேசத்தோடு இருந்த எமிலி ஜோலா தன் வீட்டுக்கு வேலைக்கு வந்த தன்னைவிட 27வயது குறைவான ஜீனை ரகசியமாகக் காதலித்து தன் மனைவிக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, பாரீஸில் வாடகைக்கு வீடு எடுத்து அவரோடும் வாழ்க்கை நடத்தினார்.

பிற்காலத்தில் ஜோலாவின் மனைவிக்கு இந்தரகசியம் தெரியவர ஜோலா ஜீனைவிட்டுப் பிரிந்து தன் பண்ணைவீட்டின் அருகிலே ஜீனைக் குடியமர்த்தி தன்னுடைய வீட்டிலிருந்த பைனாகுலர் மூலம் அவரைப் பார்த்ததுக் கொள்வதுண்டு. திருட்டுத்தனமாக இம்மாதிரி இன்னொருவருடன் வாழ்வது தனக்கு மகிழ்ச்சையைத் தருகிறது என்றும் ஒப்புக்கொண்டவர் எமிலி ஜோலா!

தனது பிள்ளைகளின் மீதுள்ள பாசத்தினால் ஜீனோடு பட்டும் படாமல் ரகசியமாக வாழ்ந்தார். இருமனைவிகளுக்கும் வேறுபாடுகாட்டாமல் குடும்பத்தை கவனித்தார். இவர் மீது ராஜதுரோக குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்டு, பிரெஞ்சு நாட்டின் ரகசியங்களை ஜெர்மனிக்கு அனுப்பிவிட்டதாக டெவில்ஸ் தீவில் இருக்கும் சிறையில் சிறைவைக்கப்பட்டார்.

அதனை எதிர்த்து பத்திரிக்கைகளுக்கு கடிதமும் எழுதினார். தண்டனைகளிலிருந்து தப்பி இங்கிலாந்து சென்று தலைமறைவாக பாஸ்கல் என்ற பெயரில் வாழ்ந்தார். தன்னுடைய ஓவிய நண்பரான பால் செசானைப் பற்றி பணி என்ற நாவலையும் எழுதினார்.

எமிலி ஜோலா   படைப்பாளி, போராளி, வாழ்க்கையைக் கொண்டாடியவர், புதுமையினை விரும்பியவர், விடுதலை வேட்கையை நேசித்தவர், ஆட்சியாளர்களின் பொய்முகங்களைத் தோல் உரித்தவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர் ஒரு அறியப்படவேண்டிய ஆளுமை.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...