Monday, February 16, 2015

மருதம் சூழ்ந்த மாமதுரை. (தொடர்ச்சி)


ராணி மங்கம்மாள் சிலை






மருதம் சூழ்ந்த மாமதுரை. (தொடர்ச்சி)
*****************************************************

 “வீரம்ங்கை ராணி மங்கம்மாள்”

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வேண்டுமென்று கேட்கின்ற காலத்தில் தென்பாண்டி மண்டலத்தில் வீரத்துடன் வலம் வந்த ராணிமங்கம்மாள், வேலுநாச்சியார் ஆகிய இருவரையும் மறக்கமுடியாது.

திருமலைநாயக்கரின் பெயரர் சொக்கநாத நாயக்கரின் மனைவிதான் ராணி மங்கம்மாள்.  மூன்றாம் முத்துவீரப்பருக்கும் முத்தம்மாளுக்கும் 1689ல் பிறந்த விஜயரங்க சொக்கநாதர்.   இவர் கருவிலிருக்கும் பொழுதே இவருடைய தந்தை முத்துவீரப்பர் அம்மை நோயினால் காலமானார். அவருடைய மனைவியும் விஜயரங்க சொக்கநாதர் பிறந்த நாலாம்நாள் தன்னுயிரை   மாய்த்துக்கொண்டார்.

விஜயரெங்க சொக்கநாதர் என்ற குழந்தையினை வளர்க்கும் பொறுப்பு ராணி மங்கம்மாளுக்கு ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் 1689லிருந்து 1706வரை சார்பரசியாக மதுரையினை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சியினை மேற்கொண்டார்.

மங்கம்மாள் ஆட்சி ஏற்றபோது வடபுலத்தில் ஔரங்கசீப்பினுடைய பராக்கிரமம் ஓங்கியிருந்தது. மராட்டியத்தில் சிவாஜியும் மறைந்த நேரம். தெற்கே இருந்த அரசர்கள் யாவரும் ஔரங்கசீப்புக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டனர். மங்கம்மாளும் ஔரங்கசீப்புக்கு வரி செலுத்தி தனக்கு எதிரிகளாக இருந்த தஞ்சை அரசரையும், உடையார்பாளையம் குறுநிலமன்னரையும் மதுரையின் தெற்கே சிலபகுதிகளையும் ஔரங்கசீப்பின் உதவியோடு தனக்கு எந்த பிரச்சைனையும் எழாவதவாரு பார்த்துக்கொண்டார்.

காவேரி ஓட்டத்தைத் தடுத்த மைசூர் மன்னர் சிக்கதேவராயரரை மண்டியிட வைத்து அணையை உடைக்கப் படையினைத் திரட்டும் போது கனமழையினால் அணைக்கட்டே உடைந்தது. ராணி மங்கம்மாள் காலத்திலே காவிரிச் சிக்கல் இருக்கத்தான் செய்தது. காவிரிக்காக தஞ்சை அரசருக்கு ஆதரவாகக ராணி மங்கமாள்  செயல்பட்டார்.

ராணி மங்கம்மாள் சைவத்தையும் வைணவத்தையும் ஆதரித்தாலும், கிறிஸ்தவருக்கும் , இஸ்லாமிய சகோதரர்களுக்கும் உரிய ஆதரவையும் கொடுத்தார்.  தன் ஆட்சிகாலத்தில் சாலைகளும், சாலையோர மண்டபங்கள், அன்னசாலைகள், சுமைதாங்கிகள், சாலை இருபுறங்களிலும் மரங்கள், குளங்கள், கிணறுகள் தண்ணீர் பந்தல்கள் என அடிப்படை வசதிகளை மதுரை நகரத்தில் இருந்து கிராமங்கள் வரை செய்தவர்தான் இராணி மங்கம்மாள். மதுரை நகரில் உயர்ந்த கல்தூண்களில் பிரகாசமான ஜுவாலையில் எரியும் விளக்குகளையும் அமைத்தார்.

இன்றைக்கும் மங்கம்மாள் சாலைகள் என்று கிராமப்புர ஆவணங்கள் குறிப்பிடப்படுவது உண்டு. மதுரை மீனாட்சிகோவிலின் முன்பாகத்தில் உள்ள நகரா மண்டபத்தில் ஐந்துவேளை வழிபாடு நடத்தும் போது இசைக்கருவி மூலம் ஒலியெழுப்ப வைத்தார். இந்த மண்டபத்தில் இவருடைய பேரன் விஜயரங்கன் சொக்கநாதன் நிற்கும் சிற்பமும் உள்ளது.

திருப்பரங்குன்றம் கோவிலின் முன்புள்ள மண்டபம், அதே கோவிலின் முருகன் தெய்வயானை திருமணக் கோலத்தில் ராணிமங்கமாளும் வணங்குவது போன்ற காட்சி இன்றைக்கும் உள்ளது.  மதுரை காந்தி மண்டபம் மங்கம்மாள் கட்டிய மண்டபம் ஆகும். மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் மேற்புரத்தில்  மீனாட்சி திருமண ஓவியக் காட்சியில் மங்கம்மாள் இருப்பதுபோல காட்சிகள் உள்ளன.

ராணி மங்கம்மாளுடைய அரண்மனை மீனாட்சியம்மன் கோவிலுக்கு  வட-கிழக்கு புரத்தில் இருந்தது. இப்போது காய்கறி மண்டியாகவும் சிலவை இடிக்கப்பட்டு சமீபத்தில் பிரச்சனைகளாக பேசப்பட்டவைகளாகும்.  மதுரை அருப்புக் கோட்டை சாலையை ஆரம்பக் கட்டத்தில் மங்கம்மாள் சாலையாக இருந்து விரிவாக்கப் பட்டதாகும்.

மங்கம்மாள் காலத்தில் தான்  அனுமார் கோவில் மதுரையில் கட்டப்பட்டது. மதுரை அவனியா புரத்தில் வல்லாந்தபுரம் என்ற குடியிருப்புப் பகுதி பாண்டிய மன்னனால் அழைக்கபட்ட இந்த ஊரில், பெருமாள் கோவில் கட்டி அதற்கான திருப்பணிகளையும் ராணி மங்கம்மாள் செய்தார். மதுரையின் வடக்கே திண்டுக்கல் -  மேலூரில் இருந்து தெற்கே களக்காடு வரை பல இடங்களில் இந்த அம்மையார் அக்காலத்திலே  சாலைகள் அமைத்தது வரலாற்று செய்தியாகும்.

கிறிஸ்துவர்களுக்கு தேவாலயங்கள் கட்ட இடமும், இஸ்லாமியர்களுக்கு மசூதிகள் கட்ட  நிலங்களையும் கொடுத்து  உதவிகளையும் செய்தார்.  இன்னுமொரு கவனிக்கப்பட வேண்டிய செய்தி, இன்றைக்கு சர்ச்சையாகப் பேசப்படுகின்ற  “கட்சத்தீவு”  நாயக்கர்கள் ஆட்சிகாலத்தில் இராமநாதபுரம் சமஸ்தானத்திற்குக் கொடுக்கப்பட்டதாகவும் நம்பப்படுகின்ற செய்திகள் ஆகும்.

அ.கி பரந்தாமனார் இவரை ஒரு தெலுங்குத் திருவிளக்காக இருந்தாலும் தமிழ் மண்ணின் குலவிளக்காக இவர் ஆற்றிய பணிகளை மறக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.

--கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...