Thursday, February 19, 2015

உலகமயமாக்கலில் சமூகம் மற்றும் கலாசாரம் - மேற்கும் கிழக்கும் ஓர் ஒப்பீடு.



கலாசாரம் என்பது சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதது. அதன் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் கூட. உலகில் எந்த சமூகமும் அதற்கான சொந்த கலாசாரங்களை கொண்டே இயங்கி வருகிறது. கலாசாரமற்ற சமூகங்களை வரலாற்றில் நாம் காண்பது அரிது. பனிப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் சமூகங்களின் கலாசாரம் என்பது உலக அரசியலை வடிவமைக்கும் சக்தியாகவும் மாறி இருக்கிறது. தேசங்களிடையே, நாகரீகங்களிடையே, இரு மதங்களிடையே கலாசார யுத்தங்கள் அகவய மற்றும் புறவய நிலையில் நடந்து வருகின்றன. மனித வாழ்க்கையின் இயக்கத்திற்கு கலாசாரம் முக்கிய இயங்கு சக்தியாக இருக்கும் நிலையில் உலகமயமாக்கல் சூழலில் அது ஏற்படுத்தும் பாரிய தாக்கத்தை அவதானிக்க வேண்டியதிருக்கிறது.
இங்கு கலாசாரம் என்பது குறிப்பிட்ட மக்கட்தொகுதியினர் தங்களின் மனோபாவம், நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் நடத்தைகள் போன்றவற்றை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது என்பதாகும்.
இது கலாசாரம் குறித்த விளக்கமாக சில மேற்கத்திய அறிவுஜீவிகளால் பயன்படுத்தப்படுகிறது. அது எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது, பகிரப்படுகிறது என்பதற்கான அரசியல் ஆராயப்பட வேண்டும்.
உலகமயமாக்கல் உலக மக்களிடையே செயற்கையான உள்பிணைப்பையும், கூட்டிணைவையும் உருவாக்க முயல்கிறது. அதனை விரிவாகவும், ஆழமாகவும் நிகழ்த்த நம்மை எத்தனிக்கிறது. இந்நிலையில் உலக கிராமம் என்ற கருதுகோள் மேற்கண்டவற்றிற்கு தீவிர உயிரோட்டத்தை அளிக்கிறது.
மேலும் அறுபதுகளில் நிலாவை கண்டறிந்த நிகழ்வானது மூடியிருந்த உலகின் கண்களை திறப்பதற்கு காரணமாக அமைந்தது. நிலவின் பயணம் உலகம் ஒன்றோடொன்று வலைப்பின்னலாக இருக்கிறது என்பதை உணர வைத்தது.
அடுத்த நூற்றாண்டிற்கான உலகத்தை தயார் செய்ய அது ஒரு தொடக்கத்தை அளித்தது. மேலும் தேசங்களில் சமூக மாற்றத்திற்கான தொடக்கமும் அதன் மூலம் குறிக்கப்பட்டது. மேலும் நாடுகளில் அதிகரித்த மக்கள்தொகையானது பூமியின் வளங்கள் எல்லாம் வரம்பிற்கு உட்பட்டவை என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது. அதுவரையிலும் மனித சமூகம் வளங்கள் குறித்த பேராசையை மட்டுமே தன் இயல்பான நம்பிக்கையாக வைத்திருந்தது.

இந்நிலையில் உலகமயமாக்கல் மனிதனின் அசல்தன்மையை வலிமைப்படுத்தும் ஒன்றாக மாறியது. அதே நேரத்தில் தகவல் மற்றும் தொலை தொடர்பு துறையில் அது நிகழ்த்திய வேக பாய்ச்சல் சக மனிதனின் அசல்தன்மையை இழக்கும் ஒன்றாகவும் மாறியது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். மேலும் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ஊடுபாவல்களுக்கு பெரும் வழிவகுத்தது. அந்த ஊடுபாவல் இயங்கும் வகையிலான சந்தை வடிவத்தில் தான் இருந்தது.
முன்னை விட அதிக வர்த்தக போக்கு, மூலதனம், நிதி, சுற்றுலா, புலப்பெயர்வு, தகவல் மற்றும் அறிவு ஆகியவை உலகம் பின்னலுக்கு நெருங்கி வருவதை வெளிப்படுத்தின. மேலும் உலக கிராமம் (Global Village)என்ற கருத்தாக்கமும் சீன கன்பூசிய கருதுகோளான பெரும் ஒற்றுமை என்பதன் மறுவடிவம் தான். சீனாவின் கன்பூசியம் உலகம் பற்றிய சில பார்வைகளை வெளிப்படுத்தி விட்டு சென்றது.
உலகமயமாக்கல் மேற்கு மற்றும் கீழை உலகங்களை ஒருங்கிணைய செய்ய மேற்கொண்ட முயற்சிகள் இரு துருவங்களிலும் சமூக மற்றும் கலாசார ரீதியாக சில தகர்வுகளை நிகழ்த்தி இருக்கின்றன. அதன் அரசியலானது சமூகங்களிடையே தொடர்பு, வலைப்பின்னல், பரிமாற்றம், கூட்டிணைவு போன்ற அம்சங்களில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியில் மேற்கின் பகுத்தறிவு தாக்கத்தால் உருவான தொழிற்துறை, நகரமயமாக்கல், மேற்கத்திய மயமாக்கல் மற்றும் நவீன மயமாக்கல் போன்ற கருத்தாக்கங்கள் கீழைநாடுகளின் கலாசார, நிறுவன மற்றும் கட்டமைப்பு வித்தியாசங்களை பெருமளவில் தகர்த்தது. ஒரே சீரான உலகம் என்பதை செயற்கையாக முன்வைக்க தொடங்கியது. இதன் காரணமாக ஏகாதிபத்திய கருத்தாக்கம் வலுப்பெற்று ஆங்கிலம் உலக சொல்லாடலாக, அமெரிக்க வகையான கேளிக்கை முறை, துரித உணவு முறை, அவசர முறை மற்றும் இளைய தலைமுறை கலாசாரம் போன்றவை கீழை நாடுகளை ஆக்கிரமிக்க தொடங்கின.

இதனால் உலகம் ஒரு முனையை நோக்கி குவிவது ஏற்பட்டது. கீழை சமூகம் மற்றும் அதன் கலாசாரமும் ஒரு முனையை நோக்கிய குவியமாக மாறியது. அதுவே கீழை சமூகத்தினரை அமெரிக்க கனவை நோக்கி நகர்த்தியது. 90 களில் ஆசியாவின் படித்த மத்தியதர வர்க்கத்தினரிடையே உருவான அமெரிக்க கனவு இதன் நீட்சி தான். இதன் எதிரிடையாக கீழைநாடுகளின் சமூக அறிவுஜீவிகள் ஆசிய மதிப்புகள், வலைப்பின்னல் முதலாளித்துவம் மற்றும் ஆசிய பசிபிக் நூற்றாண்டு போன்ற கருத்தாக்கங்களை முன்வைத்தனர்.
ஒரே சீரான உலகம் என்ற பெயரில் மேற்குலகம் கீழைநாடுகள் மீது தொடுக்கும் சமூக கலாசார யுத்தத்திற்கு பதிலடியாக இதனை முன்வைத்தனர். கிழக்காசிய நாடுகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அறிவார்ந்த மற்றும் ஆன்மீக தளங்களில் இது அதிகமும் ஊடுருவியது. குறிப்பாக சீனாவில் வெகுஜன மக்களிடையே இது பற்றிய உரையாடல்கள் அதிகம் நடந்தன. 1919 ல் சீனாவில் உருவான அறிவியக்கம் நவீன மேற்குலகம் பற்றிய கருத்தாக்கத்தினை அறிந்து வைத்திருந்தது. அது பற்றிய தொலைநோக்கு உரையாடல்களையும் முன்வைத்தது.
மேலும் உச்சகட்ட கலாசார புரட்சியே சீனாவின் நாகரீக வளர்ச்சிக்கு உதவும் எனவும் அறிவித்தது. இந்நிலையில் பிரெஞ்சு தத்துவ மேதைகளான ழீன்பால் சார்த்தர், தெரிதா மற்றும் மிஷல் பூக்கோ போன்றவர்கள் மாவோயிசம் 1968 ல் நடந்த பிரெஞ்சு மாணவர் புரட்சிக்கு உதவியது என்று மாவோவை சிலாகித்தார்கள். மாவோயிசம் நீண்டகால புரட்சிக்கான சாத்தியபாடுகளை உள்ளடக்கி இருக்கிறது என்று சார்த்தர் ஒருமுறை குறிப்பிட்டார்.

மேற்குலகில் சமூக புரட்சிக்கு காரணமாக இருந்த கோட்பாடுகளில் மத சார்பின்மை (Secularism) முக்கியமானது. திருச்சபையின் ஆதிக்கத்திற்கு எதிராக 16 ஆம் நூற்றாண்டில் உருவான புரோட்டஸ்டண்ட் இதற்கான தொடக்கம் அளித்தது எனலாம். இந்த சொல்லை முதன்முதலாக உருவாக்கியவர் பிரெஞ்சு தத்துவமேதை பெர்டிணான்ட் பூஷன். 1841 ல் பாரிஸில் பிறந்த அவர் ஆரம்பக்கல்வி கற்று தத்துவம் மீதான ஆர்வம் காரணமாக பிரெஞ்சு பல்கலைகழகத்தில் தத்துவ படிப்பு படித்தார்.
அப்போதே அவருக்கு தாராள அரசியல் மீதான ஈர்ப்பு அதிகமானது.
மேலும் திருச்சபையின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடினார். திருச்சபையும் அரசும் பிரிக்கப்பட வேண்டும் என்பது அவரின் நீண்டநாள் கனவாக இருந்தது. அதற்காகவே Secular என்ற சொல்லாடலை பிரெஞ்சில் உருவாக்கினார். அதாவது Laicite என்ற பிரெஞ்சு சொல் இவரின் கண்டுபிடிப்பாகும். அதனைத்தொடர்ந்து இதன் பயன்பாட்டு அர்த்தத்தை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டார். பிரெஞ்சு தத்துவமேதையான ரூசோவின் சிவில் மதம் என்ற கோட்பாட்டின் மீது இவருக்கு அதிகம் ஈர்ப்பு இருந்தது.
மேலும் இதற்காக மதசார்பற்ற மனித உரிமை அமைப்பொன்றை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியில் 1882 ல் பிரான்சு அரசு பள்ளிகளில் மதசார்பற்ற கல்வி முறையை அறிமுகப்படுத்தியது. பூஷன் உருவாக்கி விட்ட இந்த சொல்லாடலானது ஆரம்பகாலகட்டத்தில் சில புரட்சிகர புரோட்டஸ்டண்ட் பிரிவை குறித்தாலும் கால போக்கில் பகுத்தறிவு இயக்கத்தை குறிப்பதாக மாறியது. மேலும் பிரெஞ்சு புரட்சி காலத்தில் மதத்திற்கும் அரசியலுக்குமான மோதல் உருவாகி இந்த சொல்லாடல் அரசு மற்றும் மதத்தை பிரிப்பதை குறித்தது. அதாவது தனியான சிவில் சமூகம் மற்றும் மத சமூகம் என்பதை குறித்தது.
இருபதாம் நூற்றாண்டில் Secular இன்னும் பரிணாமமடைந்து முழு முதலான சிவில் சமூகத்தை குறித்தது. மேலும் மனிதர்களை மோசமான மனசாட்சி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் முன்வைத்தது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் மதசார்பின்மை மேற்கத்திய நாடுகளில் மத சமூகத்திடமிருந்து முற்றிலும் விலகிய சிவில் சமூகத்தை அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை குறித்தது. அரசானது எல்லா மதத்தையும் சமமாக நிராகரிக்க வேண்டும் என்ற மேற்கத்திய அரசுகளின் கோட்பாடு இதன் தொடர்ச்சி தான். ஆனால் கீழை நாடுகள் இவற்றிலிருந்து வித்தியாசப்படும் ஒன்றாக இருக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகள் மதத்தை பின்பற்றும் நாடுகளாக, அதே நேரத்தில் மதசார்பின்மை கோட்பாட்டை பின்பற்றும் பிற நாடுகள் எல்லா மதத்தையும் சமமாக பாவிக்கும் விதமாக அதனை அர்த்தப்படுத்திக்கொண்டன. காரணம் இங்கு மதமே சிவில் சமூகத்தை தீர்மானிப்பதில் முக்கிய அம்சமாக இருப்பதால் தான். ஆசியா அதற்கு சரியான உதாரணம். மதசார்பின்மை கோட்பாடானது அதன் தொடர்ச்சியில் லௌகீக சமூகத்தின் மீது மதசார்பற்ற அறம் (Secular Morality)என்ற கோட்பாட்டை முன்வைத்தது. அதாவது மனித பிறப்பின் அடிப்படையிலான பொருளாயத மற்றும் அறிவார்ந்த சொத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது. உதாரணமாக வீடு, உணவு, கருவிகள், தொழில்நுட்பம், புத்தகங்கள் மற்றும் பிற அறிவு மூலங்கள் அனைத்தையும் இறப்பின் பலனாக கண்டது. இறப்பு என்பது இறப்பை தவிர வேறொன்றுமில்லை என்றது.
மனிதர்கள் நற்செயல்கள் எப்போதும் அழிவதில்லை என்றது. இது பௌத்தம் மற்றும் கன்பூசிய கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டது. இரண்டுமே இதனை வேறுவடிவத்தில் முன்வைத்தன.
கலாசாரம் சமூகத்தின் வளர்ச்சியில் அல்லது அதன் இயக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அபரிதமானது. சமூக மனிதர்களின் நடத்தை, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் இவற்றின் ஒவ்வொரு நிலையிலும் இது ஊடுருவுகிறது.
இன்னும் இதனை ஆழ அகலங்களுடன் ஆராய்ந்தால் தனிமனித அல்லது சமூகத்தின் உடல் மற்றும் மன உணர்வு நிலை முக்கிய இடத்தை வகிக்கிறது. இது தனிமனித/சமூகம் பற்றிய விழிப்பு நிலை, கமுக்கத்தனம் மற்றும் உள்ளார்ந்த நடவடிக்கைகள் இவற்றின் மொத்தமாக இருக்கிறது. தனிமனித நிலையில் மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரை இம்மாதிரியான தன்மை வெட்கத்தனம், பயம் மற்றும் சமூக தகுதியின்மை போன்றவற்றை பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கின்றன. அதே நேரத்தில் கிழக்காசிய நாடுகளில் அல்லது தென்கிழக்காசிய நாடுகளில் இம்மாதிரியான தன்மை அடக்கம், பணிவு, சமூக தகுதி, சிறந்த நடத்தை போன்றவற்றை பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கின்றன.
மேற்கத்தியர்களை கூர்ந்து அவதானித்தால் நாம் மேற்கண்டவற்றை உறுதிப்படுத்த முடியும். அதே மாதிரியே சீனர்களையும், ஜப்பானியர்களையும் அவதானித்தால் மேற்கண்ட உடல் உளவியல் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
சமூக சார்பு நடத்தை (Prosocial behavior) என்பது சமூக கலாசாரத்தின் ஒரு பகுதி. அதாவது உதவி செய்தல், பகிர்தல், பராமரித்தல் மற்றும் விநயம் இவை அனைத்தும் சமூக சார்பு நடத்தையில் உட்படும் விஷயங்கள். பெற்றோர் -குழந்தை உறவு முறை மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகள் சார்ந்து இவை மதிப்பிடப்படுகின்றன.

மேலும் மேற்கத்திய குழந்தைகளை விட கிழக்காசிய நாடுகளின் குழந்தைகள் சமூக சார்பு நடத்தையில் தீவிரமாக இருக்கின்றன.
மேலும் தங்கள் குழந்தைகள் சமூக சார்பு நடத்தை உடையனவாக இருக்க வேண்டும் என்று கிழக்காசிய நாடுகளின் அன்னையர்கள் விரும்புகிறார்கள். இது கூட்டு உணர்வின் விளைவாகும். மேலும் இந்தியா போன்ற நாடுகளில் கூட நாம் கிராமம் மற்றும் நகரத்து குழந்தைகளிடம் இந்த பகிர்தல் மற்றும் உதவுதலை காண முடியும். உதாரணமாக சாக்லேட் சாப்பிடும் குழந்தையிடம் எனக்கு கொஞ்சம் கொடு என்று சொல்லும் போது பெரும்பாலான குழந்தைகள் கொடுத்து விடுகின்றன. இது இந்திய இலங்கை சமூகத்தில் காணப்படும் சமூக சார்பு மனோபாவத்தின் தொடர்ச்சி.
மேற்குலகம் மற்றும் கீழைத்தேய பிரதேசங்களின் சமூக கலாசார அம்சங்களில் சுதந்திரமும், கூட்டிணைவும் (Independent and Interdependent) முக்கிய இடத்தை வகிக்கின்றன. சுதந்திரம் அதிக போட்டி மனோபாவத்தையும், குறைந்த சமூக உறவாடல் மனோபாவத்தையும் உட்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கூட்டிணைவு என்பது குறைந்த போட்டியையும், அதிக சமூக உறவாடலையும் உட்கொண்டிருக்கிறது. மேலும் குறுக்கு கலாசாரத்தின் முக்கிய காரணியாகவும் கூட்டிணைவு இருக்கிறது. இந்நிலையில் மேற்குலகம் சுதந்திரத்திற்கும், கிழக்குலகம் கூட்டிணைவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இரண்டிற்குமான தர்க்க மற்றும் நடைமுறைரீதியான வித்தியாசங்களை நாம் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
பிரிவு சுதந்திர சமூக நோக்கு நிலை கூட்டிணைவு சமூக நோக்கு நிலை
மதிப்பு மற்றும் நம்பிக்கைகள் தனிமனிதன் தனித்துவம் கூட்டுநிலை
சமூக இணக்கம் சுயம் சுதந்திர சுயகட்டுப்பாட்டை கொண்ட சமூக அடையாளம் சுயம் எல்லைக்குட்பட்டது கூட்டிணைந்த சுய கட்டுப்பாடு
உறவு முறையிலான சமூக அடையாளம் சுயம் என்பது மற்றவர்கள் மீது நெருக்கத்துடன் இணைந்திருக்கிறது. உணர்ச்சிகள்
சமூக செயற்பாடற்ற உணர்ச்சிகரமான நாட்டம்
மகிழ்ச்சி என்பது செயற்பாடற்ற உணர்ச்சியாக
சமூகசெயற்பாட்டுடன் கூடிய உணர்ச்சிகரமான நாட்டம்
மகிழ்ச்சி என்பது செயற்பாடான உணர்ச்சியாக
நோக்கம்
தனிப்பட்ட சாதனை சுய வளர்ச்சி
ஈகோ குழு சாதனை சுய விமர்சனம்
சுயம் - மற்றவர்களுடன் உறவாடல்
மேற்கண்ட வித்தியாசங்களை நாம் இன்னமும் இரு கோளங்கள் சார்ந்த மக்கட்தொகுதியினரை அவதானிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இன அடிப்படையில் மேற்கு மற்றும் கிழக்கிற்கு அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. மொழியியல் அடிப்படையும் கூட. ஐரோப்பிய மொழிகள் அனைத்துமே பெரும்பாலும் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை. கிழக்கத்திய மொழிகளில் இருந்து கட்டமைப்பு ரீதியாகவே மாறுபடுகின்றன.
மேலும் இரு பூகோள பகுதிகளுக்கும் மிகப்பெரும் கலாசார வித்தியாசங்கள் இருக்கின்றன. கிழக்கு ஆசியா நாடுகளில் கன்பூசியமும், தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் அதிக தாக்கத்தை செலுத்தின. அதே நேரத்தில் மேற்கு நாடுகளில் கிரேக்க தத்துவம் அதன் வழிமுறைகள் அதிக தாக்கத்தை செலுத்தியது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் சமூக வேறுபாடுகள் அதன் கால அளவை பொறுத்து மாறுபடுகின்றன.
உதாரணமாக மேற்குலக நாடுகள் கீழைத்தேய நாடுகளை விட முன்னரே தொழில்மயமாகி விட்டன. மேலும் அரசியல் நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவை முந்திக்கொண்டன. மேற்கண்ட இரண்டும் கீழை நாடுகளை வந்தடைய வெகுகாலம் பிடித்தது. மேலும் உடல் மற்றும் முக மொழி கூட இரண்டிற்கும் வேறுபடுகின்றது. கண்ணோடு கண்ணாக பேசுவது என்பது மேற்கத்திய சமூகங்களை பொறுத்தவரை இயல்பானதாக, நேர்பேச்சாக,தைரியத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. அதே நேரத்தில் கிழக்காசிய சமூகங்களில் வெட்கம், பயம், இயல்பின்மையின் வெளிப்பாடாக இருக்கிறது. சீனர்களில் பெரும்பாலானோர் கண்களை சற்று தாழ்த்திக்கொண்டு தான் உரையாடுவார்கள்.
கீழை மற்றும் மேற்கின் சமூக கலாசார வேறுபாட்டில் மிக முக்கியமானது தனிநபர்வாதமும், கூட்டுவாதமும் (Individualism and Collectivism). மேற்கு அதிகமும் தனிநபர் வாதத்தை முன்வைக்கிறது. குடும்பம் என்ற நிறுவனம் அங்கு அதிக வலுவானதாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. காதல் என்பதும், திருமணம் என்பதும் பெரும்பாலும் தனிநபர் சார்ந்த விஷயமே.
மேலும் தனிநபர்வாதம் தனிநபரின் சாதனை, படைப்பாற்றல், கலைத்திறன், வாழ்வியல் வெற்றி போன்றவற்றிற்கு சமூக அந்தஸ்தை அளிக்கிறது. மேற்குலகம் பெரும்பாலும் இதனை சார்ந்திருக்கிறது. கீழை நாடுகளை ஒப்பிடுகையில் மேற்குலகில் அறிவியல் மற்றும் பிற அறிவுத்துறை செயல்பாடுகள் அதிகம் நிகழ இந்த தனிநபர் வாதமும் ஒரு காரணம். கூட்டு வாதம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆப்ரிக்காவை நாம் சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். அங்கு தனிநபர்கள் சந்தேகத்தோடு பார்க்கப்பட்டார்கள். அவர்களின் உணவு பகிர்தல் இனக்குழுக்களோடு இணைத்துக்கொள்ளப்பட்டது. கூட்டுத்தண்டனை முறையும் அமலில் இருந்தது.
மேலும் சமூக ஒதுக்கல், தகுதி இழப்பு போன்றவையும் அங்கு வழக்கில் இருந்தன. இந்திய இலங்கை சமூகங்களில் சாதிய பஞ்சாயத்து முறைகள் மற்றும் சாதிவிலக்கம் போன்ற தண்டனை முறைகள் இப்போதும் வழக்கில் இருக்கின்றன. இது கீழைத்தேய கூட்டுவாதத்தின் பின் தொடர்ச்சியாகும்.
கலாசார உளவியல் (Cultural Psychology)என்பதில் மேற்கண்ட தனிநபர் மற்றும் கூட்டு வாதத்தின் வித்தியாசங்கள் ஆழமான நிலையில் மிகுந்த தாக்கத்தை செலுத்துகின்றன. அது நடத்தை மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகள் மீது மனித சமூகத்தில் பல வித்தியாசங்களை உருவாக்குகிறது. மேலும் மனிதனின் சுயம் (Self)மீதும் தாக்கம் செலுத்துகிறது. மேற்கு மற்றும் கீழை சமூகங்களிடையே ஒரே மாதிரியான சமூக பொருளாதார தகுதியை கொண்ட மனிதர்களை அல்லது குடும்பங்களை நாம் அவதானிக்கும் போது அவை தங்களுக்குள் தனிநபர் மற்றும் கூட்டுவாதம் சார்ந்த கலாசார வேறுபாடுகளை கொண்டிருப்பதை கண்டறிய முடியும்.
சமூகங்களிடையே பேஷன், மரபு மற்றும் பழக்கவழக்கங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை பற்றி பிரபல சமூக விஞ்ஞானியான மாக்ஸ் வெபர் ஆராய்ந்தார். பயன்பாடு (Usage)தான் இதன் தொடக்கம் என்றார். மனிதனின் அன்றாட செயல்பாடு சார்ந்த பயன்பாடு தொடர்ச்சியாக நிகழும் போது அது ஒழுங்குமுறையாகிறது. உதாரணமாக கடலில் மீன் பிடிக்கும் மீனவர் மீன் அதிகம் இருக்கும் இடங்களில் தன் வலையை விரிக்கிறார். விற்பனையாளர் தன் வாடிக்கையாளரை தொடர்ந்து தொடர்பு கொள்கிறார். நாம் அன்றாடம் உடையை இயல்பாக உடுத்திக்கொள்கிறோம்.
இம்மாதிரியான செயல்பாடுகள் தொடர்ந்து நிகழும் போது அதுவே ஒழுங்குமுறையாகி ஒரு சமூகத்தின் பழக்கவழக்கமாகிறது (Custom).
மேலும் ஒழுங்குமுறையானது அதன் புதுமைக்காக பகுதியாக பின்பற்றப்படும் போது அது பேஷனாக மாறுகிறது என்றார் மாக்ஸ் வெபர். இதன் அடிப்படையில் இந்திய இலங்கை சமூகம் அல்லது சில கீழை சமூகங்களை பொறுத்தவரை உடை என்பது பேஷனாக, நவமயப்பட்டதாக இருக்கிறது.
ஆனால் மேற்கத்திய சமூகத்தில் அது தட்ப வெப்பத்தோடு இயைந்த பழக்கவழக்கமாக இருக்கிறது. குடும்பம் என்ற நிறுவனம் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய சமூகங்களில் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமான மாறுதல்களை அடைந்திருக்கிறது. பருண்மையான அறம் என்பதிலிருந்து உருவான பழிவாங்குதல் முறை உலக சமூகங்களிடையே குடும்பம் என்ற நிறுவனத்தின் உள்ளிருந்து பல்வேறு வித மோதல்களையும், போர்களையும் உருவாக்கி இருக்கிறது. குடும்ப கௌரவம் என்பதாக இது அர்த்தப்படுத்தப்பட்டது. அதாவது குடும்பத்தில் உள்ள ஒருவர் தன் பலத்தை நிரூபிக்க மற்றவர்களுடன் மோதுவது அல்லது பழிவாங்குவது என்பது இதன் விரிவாக்கம்.கிரேக்கத்தின் ஒடிசியஸும், காலத்தின் நகர்வில் இது பல நூற்றாண்டுகளை கடந்து பரிணாமம் அடைந்து குடும்பம் என்ற நிறுவனம் மேற்குலகில் கருத்தளவில் சிதையும் நிலைக்கு சென்றிருக்கிறது.
தனிநபர்வாதம் மற்றும் சுதந்திரம் முன்வைக்கப்படும் நிலையில் கீழை சமூகங்களில் இது இன்னும் வலுவாக இருக்கிறது. குறிப்பாக இலங்கை மற்றும் இந்தியாவில் குடும்பம் என்ற கட்டமைப்பு மேலும் வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக சாதிய சமூக அமைப்பின் பின்புலத்தோடு அறுபடாத சங்கிலி போன்று பின்னி பிணைந்திருக்கிறது.
அது நேரற்ற வேர்களாக குறுக்கு மடுக்குமாக அமைந்திருக்கிறது.
மேலும் ஆசிய சமூகத்தில் கலாசாரம் என்பது சில தருணங்களில் தட்பவெப்பத்தோடும், புவியியல் அமைப்போடும் இயைந்திருக்கிறது. ஆசியாவின் பெரும்பாலான வீடுகளில் கழிவறை இல்லாமல் திறந்த வெளியாக இருப்பது இதற்கு உதாரணம். பாரம்பரிய விவசாய நாடான ஆசியாவில் சக மனிதன் தன் விவசாய நிலத்தோடு இணைந்தே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். தண்ணீரும் அதனோடு இணைந்து இருந்த காரணத்தால் அதனோடு அவன் பயணம் செய்தான். அதன் தொடர்ச்சியும் எச்சம் தான் இன்றைய கழிவறை அற்ற நிலை.
மேலும் வற்றாத ஜீவநதிகளை, அதன் இயல்பான ஓட்டத்தை கொண்டிருக்கும் ஆசியாவில் தண்ணீர் சார்ந்த கலாசாரங்கள் பல வழக்கில் இருப்பதை கவனிக்க முடியும். மேற்குலகில் இதனை நாம் பார்க்க முடியாது.
சமூகமும் கலாசாரமும் ஒரே தடத்தில் பயணம் செய்யும் போது அது தனிமனிதனை அல்லது ஒரு பலவீனமான குழுவை பாதிக்காமல் நகரும் போது இங்கே மோதல்கள் இல்லை. ஆனால் அதுவே ஆதிக்கமாக, அதிகாரமாக மாறும் போது மனித இனத்தை பாதிக்கிறது.
மிதிக்கப்படும் வஸ்துக்கள் போன்று குழுக்கள் விளிம்பு நிலை குழுக்களாக மாறுகின்றன. பொருளாதாரரீதியாக உலகை ஒருமைப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் சமூக கலாசாரங்களையும் அதன் ஓட்டத்தையும் தடை செய்ய முயல்கிறது. இது மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய சமூகங்களை அதிகம் பாதித்திருக்கிறது. இரு கோளங்கள் சார்ந்த கலாசார மோதல்கள் இன்னும் நடந்து வருகின்றன. இலக்கிய பிரதிகள் வேறுபட்ட கலாசாரத்தை தாண்டும் போது வாசகனை பாதிப்பது மாதிரி, மேற்கும், கிழக்கும் இன்று உள்வாங்கலுக்கும், மோதலுக்குமான இடைவெளியில் போராடிக்கொண்டிருக்கின்றன. இதுவும் ஒருவகையான உலக இயங்கியலே..

- ஈழத்து நிலவன் -

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...