Tuesday, February 17, 2015

கரிசல் காட்டு மிளகாய்க்கும் பிரச்சனையா?

கரிசல் பூமியில் அமோகமாக இந்த வருடம் பருத்தி விளைச்சல் இருந்தும் பருத்திக்கு கட்டுப்படியான விலையில்லை என்று தம்பி பிரபாகர் தெரிவித்திருந்தார். அதுகுறித்த விபரமான பதிவை கடந்த 13-02-2015 அன்று, முகநூலிலும் வலைப்பூவிலும் பதிவு செய்திருந்தேன். 






விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி தேனி மாவட்ட விவசாயிகள் கைப்பேசியிலும், முகநூல் குறுஞ்செய்திகள் மூலமாகவும், தொடர்புகொண்டு எங்கள் பிரச்சனையை இந்தஅளவு ஆழமாக சமூக வலைதளங்களில் பதிந்தது ஓரளவு மனநிறைவை எங்களுக்கு அளிக்கிறது என்று குறிப்பிட்டார்கள்.
வியர்வை விதைத்து வேதனையை அறுவடை செய்யும், உழைத்து உழைத்து ஓடாகிப்போன அப்பாவி விவசாயிகளுக்கு ஆறுதல்மொழிகள் மாத்திரம் அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வாகிவிடுமா? விவசாயிகளுடைய ரணங்களை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்களாலே மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.
நகர்வாசிகளும், மேல்தட்டு மக்களுக்கும் விவசாயிகள் பயிர் செய்து தருகின்ற பொருட்களைப் பயன்படுத்துவது மட்டுமே தங்கள் கடமைபோல வாழ்கிறார்கள். விவசாயப் பொருட்கள் எப்படி உற்பத்தியாகின்றன. அதற்கு விவசாயி படுகின்ற பாடுகளைப் பற்றி ஒருகணம் சிந்தித்ததுண்டா?

தெற்குச் சீமையில் கரிசல் மண்ணில் விவசாய விளைபொருட்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் இலாபகரமான விலை கிடைக்கும். மற்ற காலங்களில் விவசாயம் எப்போதும் நட்டத்திலே செய்யவேண்டிய நிலை. 

கோவில்பட்டி, சங்கரங்கோவில், இராஜபாளையம், சாத்தூர், விருதுநகர், தேனி ஆகிய ஊர்கள் பருத்திக்கும் மிளகாய்க்கும் விற்பனை கேந்திரநகரங்கள் ஆகும். இந்நகரங்களில் கமிசன்மண்டிகளில் பருத்தியும் மிளகாயும் நிறைந்திருக்க, கமிசன் மண்டிகளின் அதிபர்கள் தரையில் உட்கார்ந்துகொண்டு, கணக்கர் தரைமேசையில் கணக்கை எழுதுவதும், கடைக்குவரும் விவசாயிகளுக்கு பதில் சொல்வதுமாக, இருந்த காட்சிகளை 1960-75களில் கண்டதுண்டு.விளைந்த நவதானியங்களும், பருப்புவகைகளும் விவசாயிகள் மூட்டை மூட்டையாக விற்ற காலங்கள் உண்டு. இவையாவும் மலரும் நினைவுகள்.

இன்றைக்கு டைம் ஆஃப் கோவில்பட்டி- பதிவர் தன்னுடைய பதிவில் இந்தஆண்டு வத்தல் குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை போவதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஏ.சி. குடோன்களில் பாதுகாக்கப்பட்ட வத்தலுக்கு மட்டுமே கடந்த காலங்களில் நல்லவிலை கிடைத்தது. ஏக்கருக்கு 140கிலோ வீதம் விதை வெங்காயம் நடப்படுகிறது. என்ற அவலங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். என்ற வள்ளுவன் குறள்கள் அர்த்தமற்றதாகிவிட்டது.

ஒரு வேதனையான செய்தி என்னவென்றால், மனிதர்களுள் மாணிக்கம் என்ற பெருந்தகை பண்டிட் ஜவஹர்லால் நேரு நாட்டின் விடுதலைக்குப் பின், மற்ற துறைகளில் காட்டிய ஆர்வம் விவசாயத்திற்கும், கிராம வளர்ச்சிக்கும் அதிகம் காட்டவில்லை என்ற விமர்சனமும் அவர்மேல் உண்டு. லோக் நாயக். ஜெயப்பிரகாஷ் நாராயண், சௌத்ரி சரண்சிங், போன்றவர்கள் இந்த விமர்சனத்தை ஆதரித்ததும் உண்டு.

விவசாயி ஒரு இளைச்சவாயன், அடக்குமுறைக்குக் கட்டுப்பட்டவன் என்று ஆட்சியாளர்களும், செல்வந்தர்களும், தொழிலதிபர்களும் நினைத்தால் விவசாயி திருப்பி அடிக்கும் அடிக்கு யாரும் தாங்கமுடியாது.
திரும்பவும் விவசாயிகளுடைய சுயமரியாதையும் உரிமைகளையும் மீட்க 1970-80களில் நடந்த விவசாயிகளின் உரிமைப்போர் நிச்சயமாக எழும்.

விவசாயிகளே! உங்களுடைய ரணங்களைப் போக்கி உங்களின் உரிமையினை மீட்க ஒன்று கூடுங்கள். போராடுங்கள். வெற்றி உங்களுக்காக காத்திருக்கின்றது. மற்ற நாடுகளில் விவசாயிகள் சுயமரியாதையோடு நிலைதாழாமல் நஷ்டமில்லாமல் தங்களுடைய பாரம்பரியத் தொழிலை செய்துவருகின்றனர். பலநாடுகளில் விவசாயிகள்தான் அந்நாட்டின் செல்லப்பிள்ளைகள்.
அமெரிக்கா விவசாயிகளைக் கொண்டாடுகின்றது. நெதர்லாந்து, ஹாலந்து போன்ற நாடுகள் விவசாயம் மட்டுமில்லாமல் கால்நடைவளர்ப்பிற்கு மானியங்களை அள்ளித்தருகின்றது. இந்தியாவிலோ விவசாயிகளின் தற்கொலைகளும், மன அழுத்தமும், ஆளவந்தார்கள் கண்டுகொள்வதில்லை. எத்தனையோ பிரச்சனைகள் விவசாயிகளுக்கு... விவசாயிகளுடைய உரிமைகளை நிலைநாட்ட நீண்டபோராட்டங்கள் நட்த்தவேண்டிய நிலைக்கு உழவர்கள் அனைவரும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
 
The woods are lovely, dark and deep, 
But I have promises to keep, 
And miles to go before I sleep, 
And miles to go before I sleep.
- Robert frost.
என்னுடைய இலக்கை அடைய ரம்யமான இருண்ட காட்டை பலமைல் கடந்தபின் தான் எனக்கு தூக்கம். 
-
ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட்.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...