Thursday, October 3, 2019

ஆழ்துளைக் கிணறுகளை தவிர்த்து இயற்கையாகவே பழைய திறந்தவெளிக் கிணறுகளால் தான் நிலத்தடி நீர் பெருகும்.

ஆழ்துளைக் கிணறுகளை தவிர்த்து இயற்கையாகவே பழைய திறந்தவெளிக் கிணறுகளால் தான் நிலத்தடி நீர் பெருகும்.
வறட்சி அதிகரித்து வரும் நிலையில் ஆழ்துளைக் கிணறுகளை விடுத்து இயற்கை முறையில் பழைய முறையில் திறந்த வெளி கிணறுகள் மூலம் நிலத்தடி நீராதாரம் காக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. நமது தமிழகம் தொன்றுதொட்டு நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளது. நமது விவசாயம் என்பது ஊருணிகள், கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஆற்றுக்கால்வாய்கள் மற்றும் பாசன கிணறுகள் மூலமே நடந்து வந்தது. அந்த நிலை மாறி தற்போது ஆழ்துளைக் கிணறுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சுயநலப்போக்குடன் உருவாக்கப்படும் இத்தகைய கிணறுகளால் நிலத்தடி நீர்மட்டம் கற்பனைக்கு எட்டாத வகையில் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதன் விளைவு, மழைநீரை நம்பி ஓடிக் கொண்டிருந்த ஆற்றுப்படுகைகள் பாலை நிலங்களாக மாறியது மட்டுமின்றி, மணல் கொள்ளையர்களின் களமாகவும் கியுள்ளது.
நகரமயமாக்கலால் தற்போது ஏரிகளும், குளங்களும் கூட மனிதனின் சுயநலப்  போக்கினால் காணாமல் போகின்றன. வீடுகளின் புழக்கடைகளில் இடம்பெற்றிருந்த கிணறுகளும், வீதிகளின் மத்தியில் இடம்பெற்றிருந்த திறந்தவெளி குடிநீர் கிணறுகளும் படிப்படியாக தூர்ந்து சாலையாக மாறின. அதேபோல் நகரங்களை ஒட்டிய கிராமப்புற விவசாய கிணறுகளும் வீட்டுமனைகளாக முகம் மாற்றிக் கொண்டன. இருக்கும் திறந்தவெளி கிணறுகளும் வறண்டு காணப்படுகின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய திறந்தவெளி கிணறுகளே இப்போதும் பயன்தந்து வருகின்றன.
இத்தகைய காலக்கட்டத்தில்தான் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க ஆழ்துளை கிணறுகள் பக்கம் மக்களின் கவனம் மட்டுமின்றி அரசின் கவனமும் திரும்பியது. நினைத்த இடங்களில் நினைக்கும் நேரத்தில் பூமியை துளையிட்டு பயன்படுத்தும் நிலை இப்போது வரை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் சட்டைப் பைகளில் குறிப்பிட்ட சதவீதம் நிரப்பும் பணியை போர்வெல் போடுதல், சீரமைப்பு பணி என்ற ரீதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் திட்டம் செய்து வருகிறது. திறந்தவெளி கிணறுகள் அமைப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் மலையடிவாரங்களில் 700 முதல் 1700 அடி வரை சென்றுவிட்டது. ஆற்றுப்படுகைகளை ஒட்டி 350 முதல் 750 அடிவரை உள்ளது. கடற்கரையோரங்களில் 180 முதல் 450 அடி வரை உள்ளது. நகரங்களில் 750 முதல் 1200 அடிக்கும் கீழே நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான போர்வெல்கள் போடப்படுகின்றன. இவ்வாறு போடப்படும் போர்வெல்களில் 70 சதவீதம் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வறண்டு போகும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான போர்வெல்கள் உள்ளன.
இவை அனைத்தும் 100 சதவீதம் நீர்வளத்துடன் இல்லை என்பதே நிதர்சனம். தமிழகத்தில் பல மாவட்டங்களில் பல வட்டாரங்கள் நீர்வளம் இல்லாமல் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் நிலைப்பாடு வறண்டு கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை புத்துணர்வு செய்யப்பட வேண்டும் என்ற முடிவை நோக்கி உள்ளாட்சி அமைப்புகளை தள்ளியிருக்கிறது.
பல ஊராட்சி ஒன்றியங்களில் வறண்ட ஆழ்துளைக் கிணறுகளை சுற்றி மழைநீர் உறிஞ்சுகுழிகள் ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் விவசாய திறந்தவெளி கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் திட்டம் 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நிலத்தடிநீர் அளவிற்கு மிஞ்சி பயன்படுத்தப்பட்ட, நீர்மட்டம் இக்கட்டான அல்லது நெருக்கடியான நிலைக்கு சென்றுள்ள  ஆந்திரபிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகம், ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத் மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 1,180 வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போதுள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்த்துதல், நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்துதல், பற்றாக்குறை காலங்களிலும் நீர்இருப்பை தக்கவைப்பது மற்றும் ஒட்டுமொத்த வேளாண் விளைச்சலை அதிகப்படுத்துதல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
#நிலத்தடி_நீர்
#நீர்_மேலாண்மை
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-09-2019.

No comments:

Post a Comment

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100  சற்று முன் அவருடன் சந்திப்பு ———————————————————- புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன்  ஆர்நல்ல...