Monday, April 13, 2020

#காந்திக்கும்_பிடித்த_அவரின் #தொண்டர்_இலங்கை_தியாகி #இராஜகோபாலன்

#காந்திக்கும்_பிடித்த_அவரின் #தொண்டர்_இலங்கை_தியாகி #இராஜகோபாலன்

#இந்திய_வரலாறோ_உலக_வரலாறோ #வெறும்_30_வருடத்தில்_அடங்கியது #என்பதை_நினைத்துக்_கொண்டு #பேசாதீர்
————————————————
இலங்கையைச் சேர்ந்த தியாகி இராஜகோபாலன் காந்திய தொண்டராக 1928ல் இந்தியாவுக்கு வந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு உப்புச் சட்டத்தை மீறி காய்ச்சும் சத்தியாகிரகத்திலும், சென்னை சட்டக் கல்லூரியிலிருந்து கொடியேந்தி ஊர்வலமாக இராஜகோபாலன் முன்வர இன்றைய மெரீனா கடற்கரையில் உப்புக் காய்ச்ச தொடங்கியபோது அந்த கொடியோடு  ஆங்கிலேயரால் தாக்கப்பட்டு கீழே விழுந்ததும் , மதுரையிலும், கல்லுப்பட்டியிலும், காந்தியின் சபர்மதி ஆசிரமத்திலும் அவர் செய்த பணிகளும் கலந்துக் கொண்ட போராட்டங்களும் அதிகம். காந்திக்கும் பிடித்த அவரின் தொண்டர்.




ஈழ இராஜகோபாலன் போல எத்தனையோ ஈழத்தமிழர்கள் இந்தியாவை நேசித்துள்ளார்கள் என்பதை பட்டியலிடலாம். தந்தை செல்வாவின் பேச்சுக்களை சற்று மீள்பார்வையில் பார்த்தாலே இந்த உணர்வுகள் வெளிப்படும்.

இலங்கையிலும் காந்திய கொள்கைகளை பரப்பியவர். திரிகோணமலையில் இருந்து காந்தியத்தை ஈழத்தமிழர்கள் மத்தியில் கொண்டு சென்றவர். ஈழ கேசரியிலும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியைப் பற்றி தொடர்ந்து எழுதியவர். இப்படி தன்னலம் கருதாத ஈழத்தமிழர் இராஜகோபாலனை இன்றைக்கு எத்தனை பேருக்குத் தெரியும். அவருக்கென்ன தலையெழுத்தா? அன்றைக்கு இந்தியாவுக்கு வந்து போராடி எப்படியும் காந்தியத்தை பின்பற்றி ஆங்கிலேயரால் குண்டாந்தடி அடிபட வேண்டும் என்று. இப்படியெல்லாம் தன்னலம் கருதாதவர்கள் பொதுவாழ்வில் இருந்தார்கள். இந்திய வரலாறோ உலக வரலாறோ வெறும் 30 வருடத்தில் அடங்கியது என்பதை நினைத்துக் கொண்டு பேசாதீர் அது தான் கண்ணியம்.  வீரத் தமிழர் இராஜகோபாலன் என்ற தியாகியைக்  குறித்து யாருக்காவது நினைவுக்கு வருமா? 




எத்தனையோ ஆளுமைகள் வ உ சி, ஓமாந்தூரார் குமாரசாமி ராஜா, பொதுவுடைமை தலைவர் ஜீவானந்தம், ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்திய சமூகநீதி என்ற ஜோதியைப் பிடித்த மதுரை வைத்தியநாத ஐயர்,  வ உ சிக்கும் ,பெரியாருக்கும், ராஜாஜிக்கும், காமராஜருக்கும் பெருந்துணையாக இருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின் நிறுவனர் செல்வந்தர் சேலம் வரதராஜு நாயுடு, கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத், நீதிக் கட்சி திராவிட இயக்கத்தில் பெண்களை வழிநடத்திய அலமேலு மங்கத்தாயார் அம்மாள், நாவலர் சோமசுந்தர பாரதி, சென்னை மாகாணத்தில் முதன் முதலாக போட்டியிட்ட பெண்மணி கமலபதி சட்டோபாத்யாயா, சிங்காரவேலர் இப்படி ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. பதவி,தன்னலத்தை விட பிறர்நலன், நாடு, பிறந்த மண் என்று நேசித்து வாழ்ந்த பிதாமகர்களின் பட்டியலின் பேர்கள் கூட அறியாமல் இன்றைக்கு நாம் போகிற போக்கில் பேசிக் கொண்டிருக்கின்றோம். அரசியல் என்பது வரலாற்றின் தொடர்ச்சி தான். இன்றைக்கு மட்டுமல்ல அரசியல். பரந்த வெளியில் ஒரு நீண்ட பார்வையோடு அரசியலைப் பாருங்கள். இப்படி எத்தனையோ இராஜகோபாலன்கள் பொதுப் பணியில்  மாசற்று கடமையாற்றிச் சென்றவர்களுடைய வீரத்தையும் தியாகத்தையும் எண்ணிப் பார்ப்பது செஞ்சோற்றுக் கடனாகும். நன்றி கூட செலுத்த வேண்டாம். அவர்களைப் பற்றி தரவுகளையாவது நாம் தெரிந்துக் கொள்வது தான் கடமையும் கண்ணியமுமாகும்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
12.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...