Monday, April 13, 2020

மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை திருவனந்தபுரத்திலிருந்து டாக்டர் உ.வேசா. வுக்கு எழுதிய கடிதம்

மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை திருவனந்தபுரத்திலிருந்து டாக்டர் உ.வேசா. வுக்கு எழுதிய கடிதம்

(மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், டாக்டர் உ.வே.சாமிநாதையரின் நண்பர்களில் ஒருவர்; மனோன்மணீய நாடகத்தின் பகுதிகள் பாடமாக வைக்கப்பட்ட காலங்களில் ஐயரவர்களை வேண்டி அவர்கள் செய்த திருத்தலங்களை விருப்பத்தோடு ஏற்று மகிழ்ந்தவர்)

சிவமயம்

  தயவு செய்து அனுப்பித்த எழுத்தும் திருத்தங்களும் கை சேர்ந்தன. நேற்று சாயரக்‌ஷைவரையும் இரண்டு பிரசங்கங்கள் எழுதி வாசிக்க வேண்டிய அவசர அலுவல் வழக்கமானவற்றோடு தொடர்ந்து கொண்டமையால் சற்று சாவகாசமில்லாமல் மறுபடிக்கும் வந்தனத்திற்கும் காலம் தாழ்த்தாமை மன்னிக்க வேண்டுகிறேன். திருத்தங்களைக் கவனித்து மேலும் யாதேனும் சந்தேகம் தோற்றூகிறவைகளைத் தெரிவித்துக் கொள்வேண். கண் வியாதியோடு இவ்வளவு எனக்காகச் சிரமம் எடுத்துக் கொண்டதற்காக மனப்பூர்வமாக நன்றி பாராட்டுதலன்றி மற்றென்ன உபசாரம் யான் சொல்லத் தக்கது? கண் வியாதிகள் அறிந்த நல்ல வைத்தியரிடம் அன்றீய சாதாரண மாணவர்களுடைய வார்த்தகளைக் கேட்டு யாதும் பிரயோகிக்கத் தக்கதன்றே. இப்போது ஏது தன்மையிலிருக்கிறதென்று அறிய அவாவுகிறேன். தாங்கள் தமிழுக்கு ஒரு கண். தங்கள் கண்ணுக்கு வருத்தமென்று கேட்க மனம் சகிக்கிறதில்லை. இனியும் தங்களால் ஆகவேண்டுமவை அனந்தம். சகாயத்திற்கு ஒன்றோ இரண்டோ ஆள் அவசியம். அவ்வகைச் செலவிற்கு என்ன செய்யக் கூடியதாக இருக்கும்? என்னாலியன்றவை செய்ய ஆயத்தம். தஞ்சாவூரில் மகா-ஸ்ரீ கல்யாணசுந்தரம் அய்யர் அவர்களை யான் சென்ற ஆண்டு கண்ட காலை இவ்வகையான முயற்சிக்குத் தாம் அனுகூலிக்கும் விருப்பமுடையராகப் பேசினர். அவர்கள் ஒரு வாக்குச் செலவிடுவதனால் மடங்களில் அழியும் பொருளில் எவ்வளவு இதில் கதியடையக் கூடாததாகும்? அவர்களைத் தாங்கள் ஏன் பிரோப்பிக்கலாது? சாது சேஷய்யர் அவர்கள் மூலமாயினும் இலகுவில்  நிறைவேறலாமே தாங்கள் இனித் தனியே யாவும் பார்க்கலாமென்ற எண்ணத்தைத் தயவு செய்து விட்டுவிட வேணும். சஹாயத்திற்கு ஆளின்றி இனியும் முயற்சிக்கல் எங்ஙனம் தங்கள் நேத்திர வியாதிவலுத்து விடுமோ என்று அஞ்சி யிவ்வளவு எழுதலானேன். நம்மனையார் தேக நிலையைக் கருதும்போது “இருதலைக் கொள்ளியினுள் ளெறும்பு” என்றே யுண்மை யாய் எண்ண வேண்டியதாக இருக்கிறது. உழைத்தால் சரீர உபாதி துணியாக நிற்கிறது. உழைக்காவிட்டால் சரீரமிருந்தென்ன பயனென்ற சோகமும் அப்படியே ஏதுசெய்ய? கடவுள் இச்சை போல நடக்கட்டும்.




தங்கள் நண்பன்
பி. சுந்தரம் பிள்ளை

திரு. அனந்தை
(29.11.1986)
16, கார்த்திகை

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
13.04.2020
#ksrposts
#மனோன்மணீயம்_சுந்தரனார்
#உவேசா
#காணக்_கிடைக்காத_கடிதங்கள்

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...