Saturday, April 18, 2020

மருத்துவக்_கழிவுகளை_தமிழக #எல்லையில்_கேரளா_கொட்டுவது #நியாயம் தானா?

#மருத்துவக்_கழிவுகளை_தமிழக #எல்லையில்_கேரளா_கொட்டுவது #நியாயம் தானா?*
————————————
கேரளாவில் கரானாவை கட்டுப்படுத்துவது சரிதான், மகிழ்ச்சி தான். கேரளா வடக்கு மாவட்டங்களில் இருந்து கரானா நோயாளிகள் மங்களூர் மருத்துவமனைக்குச் செல்ல காசர்கோடு அருகே உள்ள எல்லையினை கர்நாடகா திறக்க வேண்டும் என்று நீதிமன்ற படியேறுகிறது கேரளா அரசு. ஆனால் கேரள எல்லை ஓரத்தில் உள்ள தமிழர்கள் பாலக்காட்டிற்கு சிகிச்சைக்கு செல்ல கேரள அரசு மறுக்கிறது. அது மட்டுமா கேரள மருத்துவக் கழிவுகள் அனைத்தையும் தமிழகம் பாதிக்கக் கூடிய அளவில் இன்று வரை கொட்டி வருகிறது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினாலும் கேரள அரசுக்கு உறைக்காமல் அப்படி தான் கொட்டுவேன் என்று வாடிக்கையாக்கிவிட்டது. 




கேரளாவுக்கு வேண்டிய அரிசி, பருப்பு காய்கறிகள், சிமெண்ட் போன்ற பொருட்கள் தமிழகத்தில் இருந்து தான் அனுப்புகிறோம். திருட்டுத்தனமாக மணலும் போகின்றது. தமிழக தொழிலாளர்களை இரக்கமின்றி உடனே வெளியேறச் சொன்னது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நோய்கள் தாக்கும் நேரத்தில் இந்த மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையில் கேரளா கொட்டுவது நியாயம் தானா?

இப்போது இதை பேசுவது முறையல்ல, இருந்தாலும் அன்றைய சென்னை மாகாண அரசு தன்னுடைய சொந்த செலவில்  குமரி மாவட்டத்தில் கட்டிய நெய்யாற்றை மூடியதும், அடவி நயினார் (நெல்லை மாவட்டம்), செண்பகவல்லி (நெல்லை மாவட்டம்), அழகர் அணைத் திட்டம் (ஸ்ரீவில்லிப்புத்தூர்), அனைவரும் அறிந்த முல்லைப் பெரியாறு பிரச்சினை, கொங்கு  மண்டலத்தில் ஆழியாறு பரம்பிக்குளம், பாண்டியாறு, புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு என பத்துக்கு மேற்பட்ட நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழகத்தினுடைய உரிமைகள் கேரளாவால் மறுக்கப்பட்டதுமல்ல எந்த மாநில அரசும் செய்யத் துணியாத அளவில் ஒரு சொட்டுத் தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றாலும் சட்டமன்றத்தில் அனுமதி வேண்டும் என்று தீர்மானத்தையே முன்மொழிந்து தமிழகத்தை  மனதில் வைத்து சட்டமாக்கியது. அன்றைய மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்ட கண்ணகி கோவிலையும் ஆக்கிரமித்தது. 

இப்போது இதை பேசுவது பொறுப்பில்லை என்று எண்ண வேண்டாம். நினைவில் உள்ளதை சொல்ல வேண்டும் அல்லவா? அட்டப்பாடியில் தமிழர்கள் வாழ்வதையே சிரமமாக்கியதெல்லாம் மறக்க முடியுமா? கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்தில் கேரள அரசு பத்தாண்டுகளுக்கு முன்னால் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டதெல்லாம் எவ்வளவு அபத்தமான காரியங்கள். செங்கோட்டையில் இருக்கும் அடவிநயினார் அணையை உடைக்க அச்சுதானந்தன் கடந்த 2002ல் கடப்பாறை மம்பட்டியோடு வந்தாரே. தமிழக எல்லையோர மக்கள் கேரளாவில் போய் சிகிச்சை பெற முடியாது, ஆனால் இறைச்சிக்கு ஆடுகளை எடுத்துச் செல்ல வழிவகை செய்துள்ளார்கள். பாலக்காடுக்கு போக முடியாமல் சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவதென்றால் படாதபாடு. இப்படியான நிலை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
18.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...