Friday, April 10, 2020

தனிமைப்படுத்தல்_அன்றும்_இன்றும்.*

*தனிமைப்படுத்தல்_அன்றும்_இன்றும்.*
————————————
‘’பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்.கருணை உள்ள நெஞ்சினிலே அவன் கோவில் கொள்கிறான்....’’ என அனைவரும் நினைந்து இருக்க காலம் செய்த கோலம், கரானா....

ஒரு காலத்தில் அம்மைப் போட்டு இருந்தால் வைசூரி வந்துள்ளது அந்த வீட்டிற்கு செல்லாதீர்கள் என்று சொல்வார்கள். மாரியம்மாள், காளியம்மாள், மகமாயி என்று தெய்வ பக்தியடன்  கவனிப்பார்கள்.அந்த வீட்டுக்காரர்களும் வீட்டிலேயே முடங்கி இருப்பார்கள். அந்த வீட்டில் அம்மை போட்டவருக்கு வேப்பிலையும் தனியாக படுக்கையும், உணவு தண்ணீர் கூட சற்று தூரத்தில் வைத்து விடுவார்கள். இளநீர், நன்னாரி சர்பத் என அம்மை நோய் சீராகும் வரை அம்மைப் போட்டவர் குடும்பத்தாரிடம் இருந்து தனிமைப்பட்டு இருப்பார். அம்மை நோய் இறங்கியவுடன் வேப்பிலையும் மஞ்சளும் போட்டு தண்ணீர் விட்டு குளிப்பாட்டுவார்கள். அந்த தண்ணீரை சுட வைக்காமல் வெயிலில் சூடு படுத்துவார்கள். அதன் பின் மூன்று நாள் கழித்து இதே மாதிரி தலைக் குளியல் நடக்கும். 




உறவினர்கள் வீட்டின் வெளியே  நின்று விசாரித்துவிட்டு சர்பத் பாட்டில்களையும் பழங்களை வாசலிலேயே கொடுத்து விட்டு செல்வார்கள்.

1963 காலக்கட்டத்தில் இம்மாதிரி அம்மை எனக்கு போட்ட போது தனிமையாக இருந்தேன். எல்லாரும் படித்து முடித்த பின் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், அன்றாட செய்தித் தாள்கள் கைக்கு வரும். கல்கி, ஆன்ந்த விகடனில் வெளிவந்த கதைத்தொடர்களின் பைண்ட் செய்த புத்தகங்கள் தான் துணையாக இருக்கும்.  வீட்டில் வானொலிப் பெட்டியில் இருந்து செய்திகளும், பாட்டுகளும் காலையிலும் மாலையிலும் கேட்கலாம்.  இப்படியான நெருக்கடிக் கட்டம் அப்போது இருந்ததில்லை. 

கரானா பெரும் பாதிப்பையும் தொழில்கள் முடக்கமும் நாட்டையே புரட்டிப் போட்டாலும் சில விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. 

•காற்றும் தண்ணீரும் மாசடையவில்லை. 

•லஞ்ச லாவணியம், கையூட்டுகள் அறவே இல்லை என்றாலும் குறைந்து விட்டது. 

•நீண்ட விலை உயர்ந்த கார்களையும் தேவையற்ற சக்தி மிகுந்த ஒலிப்பான்களை ஒலித்துக் கொண்டு வேகமாக போக்குவரத்துக்கு இடையூறாக செல்லும் பந்தா வாகன கோஷ்டிகள் அறவே இல்லாமல் ஆகி விட்டது. 

•போலித்தனத்தை பெருமையாக சொல்லும் கட்அவுட், போஸ்டர்ஸ் இல்லை.

• ஒலி பெருக்கிகள் இல்லை.வெட்டி சவடால்கள், பாசாங் பேச்சுக்கள் இல்லை.

•திருமணங்கள் சிறப்பாக நடக்க வேண்டும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வெட்டியாக செலவு செய்து அமர்க்களப்படுத்தும் திருமணங்கள் நின்று விட்டது. உண்மைய சொல்லிடுவோம்..
திடீர்னு கல்யாணம் முடிஞ்சது... எல்லாரையும் கூப்பிட முடியல... சூழ்நிலை அப்படி... எல்லாருடைய வாழ்த்துக்கள் எனக்கு வேணும்...இப்படியான குரல்களை கேட்க முடிகிறது.

•வீட்டிலுள்ள உறவுகளோடு பேசக் கூட நேரமில்லாமல் ஓடித் திரிந்த கால்கள் ஒய்வுக்கும், சிந்திக்கவும், குடும்பத்தாரோடு இருக்கவும் கரானா மனிதர்களை கட்டிப் போட்டு விட்டது. 

•சரி எதையாவது படிப்போம் என்ற சிந்தனைக்கும் மக்கள் தள்ளப் பட்டுள்ளார்கள்.

•விவசாயம், பொது சுகாதாரம், கல்வி முக்கியம் அடிப்படை என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர முடிந்தது. 

•எல்லாவற்றிற்கும் மேல் சட்டம் ஒழுங்கு, கொலை போன்ற கொடிய குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்று தெரிகிறது. 

•பேருந்து, இரயில், விமானங்கள் போக்குவரத்து இல்லாமலும் எளிமையாக வாழலாம் என்று வாழ்க்கைக்கும் பாடம் கற்றுத் தந்துள்ளது. 

•இந்தியாவுக்கு செய்யும் மருந்துகள் உலகத்திற்கு அத்தியாவசியமானது என்பது நிரூபணமாகிவிட்டது. 
இப்படி பல நல்ல மாற்றங்கள்.......

கரோன தோற்று முடியும் போது வேறு ஒரு உலகத்தை பார்ப்பீர்கள். மனிதர்கள் சுபாவம் கூட மாறிப்போயிருக்கும்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
09.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...