Thursday, June 16, 2016

செண்பகவல்லி அணை உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

செண்பகவல்லி அணையை கேரள அரசு இடித்ததை குறித்து நேற்றைய (15 ஜூன் 2016) சங்கரன்கோவிலில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அடியேன் கலந்துகொண்ட செய்தியும், என்னுடைய ஆர்ப்பாட்ட உரையும் இன்றைய தினமணி (16.06.2016) வெளியிட்டுள்ளது.

செண்பகவல்லி அணை உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

செண்பகவல்லி அணை உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியினர் சங்கரன்கோவில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, திமுகவைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தமிழகத்திடம் இருந்து அண்டை மாநிலங்களால் பறிக்கப்பட்ட நீராதார உரிமைகளை மீட்டுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

செண்கபவல்லி அணை உடைப்பை சரி செய்யக் கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் சங்கரன்கோவில் தேரடித் திடலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தார்.

இந்த அணை விவகாரத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் பேசியது:

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், தமிழக - கேரள எல்லைப் பகுதியில், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் அப்போதைய சிவகிரி ஜமீனுக்கும் இடையே நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது.

பருவமழைக் காலங்களில் பெறப்படும் மழைநீரால், வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், ராஜபாளையம் முதல் சாத்தூர் வரையுள்ள விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் தமிழக எல்லைப் பகுதியை நோக்கி செண்பகவல்லி அணை அமைக்கப்பட்டது.

இதனால், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் 35 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வந்தன. காலப்போக்கில் இந்த அணையை உடைத்த கேரள அரசு, மீண்டும் கட்ட மறுத்து அடம்பிடித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு, அடவிநயினார் ஆறு, உள்ளாறு, திருநெல்வேலி மாவட்டத்தில் செண்கபவல்லி, விருதுநகரில் அழகரணைத் திட்டம் ஆகியவற்றிலும், முல்லைப் பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், சிறுவாணி விவகாரங்களிலும் தமிழகத்தின் நீராதார உரிமையை கேரள அரசு மறுத்து வருகிறது.

இதேபோல, காவிரி, ஒகேனக்கல், தென்பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடகமும், பாலாறு, பழவேற்காடு விவகாரத்தில் ஆந்திரமும் தமிழகத்தின் நீராதார உரிமையை பறித்து வருகின்றன. 30 ஆண்டுகளாக சட்ட ரீதியாக வழக்குத் தொடர்ந்து தீர்வு காண முயற்சித்து வருகிறோம்.

இருந்தும் அண்டை மாநிலங்களால் தமிழக உரிமை பறிக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருகிறது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். செண்பகவல்லி அணை உடைப்பை சீரமைக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவைச் சேர்ந்த தங்கவேலு எம்.பி., பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப. உதயகுமாரன் மற்றும் விவசாயிகள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

http://www.dinamani.com/tamilnadu/2016/06/16/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/article3484903.ece




No comments:

Post a Comment