Tuesday, June 21, 2016

ஒரு சமய தேர்தல் (தேர்தல் சீர்திருத்தம்)

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தவேண்டும் என்ற நிலையில் ஒரு சமய தேர்தல் என்ற பரிந்துரையை லா கமிஷன் பரிந்துரைத்தும் நாடாளுமன்ற குழுவும் பரிந்துரைத்தும் இந்திய தேர்தல் ஆணையம் இது போன்ற "ஒரு சமய தேர்தல்" நடத்த தயார் என்று குறிப்பிட்டுள்ளது. இது வரவேற்கக் கூடிய நடவடிக்கை ஆகும். ஒரே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் என்றால் நாட்டினுடைய கஜானாவிலிருந்து செலவு குறையும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தேர்தலுடைய கால விரயம் என்ற பல பிரச்சினைகளை தவிர்க்க முடியும். ஒரு சில மாநில அரசாங்கம் கவிழ்ந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்கின்றார்கள். கவிழ்ந்து விட்ட எஞ்சிய காலத்தில் அடுத்த தேர்தல் நடத்தும் வரை தேசிய அரசாங்கம் (National Government) என்ற நிலையை உருவாக்கலாம். தேசிய அரசாங்கம் பிரச்சினை குறித்து ஜனதா ஆட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் கவிழ்ந்தபோது விவாதிக்கப்பட்ட ஒரு கருத்தாகும். இது குறித்து நேற்றைக்கு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தம் குறித்து தாக்கல் செய்த எனது வழக்கு குறித்து விவாதித்தபோது தேர்தல் ஆணையம் ஒரு சமய தேர்தலுக்கு ஒத்துக்கொண்டது ஒரு மகிழ்ச்சியான விஷயம். இத்தோடு விகிதாச்சார பிரதிநிதித்துவம், அரசே வேட்பாளர்களுக்கு செலவு செய்தல் (State funding of election), வாக்களிப்பதை கட்டாயமாக்குதல், வேட்பாளர்களுடைய தகுதித் தன்மை, கிரிமினல்களை தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது, ஒவ்வொரு மாநிலத்திலும் மேலவையை உருவாக்குவது என்ற பல தேர்தல் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று நான் பொதுநல வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். அது குறித்து முழுமையான விவரங்களை பின் நாட்களில் பதிவு செய்கின்றேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1984 வரை சட்டமன்றத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் ஒன்றாகவே நடைபெற்று வந்தது.

No comments:

Post a Comment