Monday, June 6, 2016

இந்திய உதவியால் ஆப்கான் சல்மா அணை

தமிழகத்தின் நீர் ஆதாரங்களான குமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லை மாவட்டம் அடவி நயனாறு, உள்ளாறு, செண்பகவல்லி அணை, விருதுநகர் மாவட்டம் அழகர் அணை திட்டம், முல்லைப் பெரியாறு, கோவை மாவட்டம் ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி என கேரள மாநிலத்தோடு தீர்க்கப்படாத பிரச்சினைகளாக நீண்ட நெடுங்காலமாக உள்ளது. கர்நாடகத்தோடும் காவிரி, தென்பெண்ணை ஆறு, ஒகேனக்கல், ஆந்திரத்தோடு பாலாறு, பொன்னியாறு, கிருஷ்ணா குடிநீர் பிரச்சினை, பழவேற்காடு பிரச்சினை என அண்டை மாநிலங்களோடு பலமுறை பேசியும் தீர்க்க முடியாத முடிச்சுகளாக உள்ளன. இதனால் பல பாதிப்புகள். ஆனால் அண்டை நாடுகளான வங்கதேசத்தோடு கங்கை நதியின் டீஸ்தா பிரச்சினை, பாகிஸ்தானோடு பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின், 1960-ல் இந்தியப் பிரதமர் நேரு, பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் ஆகியோரின் ஒப்புதலுடன் "சிந்து நதிநீர் ஒப்பந்தம்' கையெழுத்தானது. இதன்படி சிந்து நதியின் கீழ்ப்பக்க கிளை நதிகளான பியாஸ், ரவி, சட்லெஜ் ஆகிய நதிகளின் நதிநீர் உள்பட எல்லா வளங்களும் இந்தியாவுக்குச் சொந்தமாகின. சிந்து நதி, ஜீலம், சீனாப் ஆகிய நதிகள் பாகிஸ்தானுக்குச் சொந்தமாகின.  உலக அளவில் 1961ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் கொலம்பிய நதிப் பிரச்சினையில் உடன்பாடு ஏற்பட்டது.

நைல் நதி பிரச்சினையோ, அமேசான் நதி என பல நாடுகளில் பாயும் நதிநீர் பிரச்சினைகளில் தீர்வு எட்டப்பட்டுவிட்டன. ஆனால் தமிழகத்தின் உரிமைகளான நமது நதிநீர் ஆதாரங்களுக்கு அண்டை மாநிலங்களோடு தீர்வு எட்டப்படவில்லை என்பதுதான் வேதனை. இந்தியா உதவியோடு 290 மில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்ட சல்மா அணையை (Salma Dam) இந்தியப் பிரதமர் மோடியும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரஃப் கானி இணைந்து அந்த நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளனர்.

இந்நிலையில் நமது வினா, வீணாக கடலுக்கு செல்லும் தேசிய நதிகளை இணைப்பதற்கு மாநிலங்கள் ஒத்துழைப்பதில்லை. அண்டை மாநிலத்தோடு நீர் ஆதாரங்களை வழங்குவதற்கும் வம்பு செய்கின்றன. நதிநீர் இணைப்பு வேண்டும் என்று 30 ஆண்டு காலம் உச்சநீதிமன்றம் வரைசென்று போராடியவன் என்ற முறையில் வேதனையோடு இதை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டவன்.

No comments:

Post a Comment