Tuesday, May 2, 2017

------------------------------------ 1.பிபிசி தமிழோசை நிறுத்தம். 2. யுனெஸ்கோவின் கூரியர் தமிழ் மாத இதழ் நிறுத்தம்.

சர்வதேச அரங்கில் தமிழினம்  சமீப காலங்களில்  இருபெரும் அருட்கொடைகளை இழந்துள்ளது.
------------------------------------
1.பிபிசி தமிழோசை நிறுத்தம்.

2. யுனெஸ்கோவின் கூரியர் தமிழ் மாத இதழ் நிறுத்தம்.

பிபிசி தமிழோசை 
-------------------------------
பிபிசி தமிழோசை  தனது சேவையை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 
(ஏப்ரல்29-2017) நிறுத்திக் கொண்டது. 

1941 ஆம் ஆண்டு தொடங்கி ஏறத்தாழ 76 ஆண்டுகளாக சிற்றலை மூலம் வழங்கி வந்த தமிழோசை முடிவுக்கு வந்தது. பெருகி வரும் இணைய வழி ஒலிபரப்புகள், தனியார் வானொலி சேவைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தாக்கத்தால் பிபிசியின் தமிழோசைக்கு போதிய ஆதரவில்லாத காரணத்தால் , குறைந்த நேயர்களுக்காக பெருந்தொகையை செலவு செய்ய இயலாது என இந்த முடிவை பிபிசி எடுத்திருக்கின்றது. 

இந்தியாவில் குறைவான ரசிகர்களை கொண்டிருந்தாலும் இலங்கை, இலண்டன் , ஆஸ்திரேலியா, கனடா , ஜெனிவா ஆகிய நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் நாடுகளில் ரசிகர்கள் அதிகம். 1980 போர்காலங்களில் தனியார் வானொலி சேவைகள் இல்லாத காலத்தில் பிபிசியின் தமிழோசை படையினருக்கு உதவியாக இருந்தது. போர் தீவிரமடைந்த 1983-84 காலக்கட்டத்தில் புலம் பெயர் தமிழர்களுக்கு பிபிசி வானொலி தான் தோழன். இன்று அலைபேசியை பயன்படுத்துவது போல் சிறு அளவில் ட்ரான்ஸ்சிஸ்டர்களை   காதில் வைத்துக் கொண்டு நடப்பார்கள்கள். 

சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், மதுரை தமிழ் என்பது போல் இலங்கை தமிழ் உச்சரிப்பில் உலகளாவிய தமிழை கேட்லும் போது உள்ளத்தில் கொள்ளும் உவகை என்பது , தாய் வீட்டில் பிறந்த பெண் திருமணமாகி  மாமியார் வீட்டில் இருந்து நிறைமாத கர்ப்பினியாக பிரசவத்திற்கு வளையோசையுடன் வாசல் வந்து நிற்கும் ஆரத்தி  எடுக்கும்  தாய் எத்தகைய மகிழ்ச்சி கொள்வாரோ அத்தகையது இறக்குமதியாகும் இலண்டன் தமிழோசை.

யுனெஸ்கோ கூரியர்:
-----------------------
யூனஸ்கோ தமிழ் கூரியர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் கவனிக்கப்பட்ட ஈர்க்கப்பட்ட ஏடாக இருந்தது. நஷ்டத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. தமிழர்களுக்கு நாலாந்திர பத்திரிகையும், சினிமா பத்திரிகையும் தான் பிடிக்கும் அறிவு பூர்வமான பத்திரிகைகள் எப்போது தமிழர்களிடம் எடுப்படாமல் கடந்த காலத்தில் நஷ்டத்தில் தானே நிறுத்தப்பட்டது.
டெல்லியில் இருந்த வந்த கணையாழி, சி.சு. செல்லப்பா படைப்புகள் யாவும் தலையில் வைத்து சுமந்தும், கூவி விற்றும், தமிழர்கள் வாங்க மறுத்துவிட்டார்களே.
புலனாய்வு ஏடுகளில் இருந்து இன்றைக்கு வந்து தவறான செய்திகளை மக்களுக்கு விளக்கின்றன.
அதை தான் வேண்டி, விரும்பி படிக்கின்றனர்.

கூரியர் போன்ற ஏடுகள் எவ்வளவோ விளம்பரப்படுத்தியும் தமிழர்கள் ஆகிய நாம் வாங்க மறுத்துவிட்டோமே என்ன செய்ய?

யுனெஸ்கோவின் துணை இயக்குநராக இருந்தவருமான மால்கம் ஆதிசேஷையா தான், யுனெஸ்கோ கூரியர் இதழ் தமிழில் தொடங்கப்பட முக்கியக் காரணம். 1967 ஜூலை மாதம் தமிழில் தொடங்கப்படுவதை ஒட்டியே, இந்தியிலும் கூரியர் இதழ் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இதழின் ஆசிரியர்களாக எஸ். கோவிந்த ராஜூலு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் , நெ.து. சுந்தரவடிவேலு ஆகியோர் செயல்பட்டதற்குப் பின்னர், மணவை முஸ்தபா ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். யுனெஸ்கோ கூரியர் இதழ் ஆசிரியர்களின் முக்கியமான பணியைத் தாண்டி, இதழுக்குத் தொடர்ச்சியாகப் பங்களித்த பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் பணியும் அளப்பரியது.
தமிழில் பல மொழிபெயர்ப்பு இதழ்களுக்கு இருந்த முக்கியப் பிரச்சினையை யுனெஸ்கோ கூரியரும் எதிர்கொண்டது. நேரடியாக நம் மொழியில் வாசிக்கக்கூடிய அளவிலான எளிமையை, அதனால் எட்ட முடியவில்லை. இருந்தபோதும், வெளியான காலத்தில் அந்த இதழ் வெளியிட்ட கருத்துகள், பேசுபொருட்கள் அதன் சந்தாதாரர்களின் புரிதலைப் பல வகைகளில் மேம்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், பொது நூலகங்கள் அனைத்துக்கும் யுனெஸ்கோ கூரியர் சென்றுகொண்டிருந்தது.
தமிழ்ச் சிறப்பிதழ்
தமிழ்நாட்டைப் பற்றிய தனிச் சிறப்பிதழை ‘தமிழரின் வாழும் பண்பாடு’ என்ற பெயரில் யுனெஸ்கோ கூரியர் மார்ச் 1984-ல் வெளியிட்டது. அந்த இதழ் வெளியாக முக்கியக் காரணமாக இருந்த பிரெஞ்சு - தமிழ் ஆய்வாளர் பிரான்சுவா குரோ, ‘சங்க இலக்கியத்தில் நிலக் காட்சி’ என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அவருடன் எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, அம்பை, எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா), சு. தியடோர் பாஸ்கரனின் மனைவி திலகா பாஸ்கரன் (தமிழர் உணவு குறித்து) ஆகியோரும் கட்டுரைகள் எழுதியிருந்தனர். தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி சுருக்கமான, அதேநேரம் அழகானதொரு சித்திரத்தை அந்த இதழ் உலக மக்கள் மத்தியில் உருவாக்கியது. தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் அந்த இதழ் வெளியாகி இருந்தது.

நிரப்பப்படாத வெற்றிடம்
--------------------------------------------
‘யுனெஸ்கோ கூரியர்’, நிதி நெருக்கடிகளைக் காரணம் காட்டி 2001-ல் நிறுத்தப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் wus ல் அந்த இதழின் அலுவலகம் இயங்கியது. அன்றைய தமிழக அரசு நினைத்திருந்தால், ‘யுனெஸ்கோ கூரியரின் தமிழ் பதிப்பு காப்பாற்றப்பட்டிருக்கலாம்.  பின்னர் மீண்டும் வெளிவர தொடங்கி 2014 ஆம் ஆண்டில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது..

யுனெஸ்கோ கூரியர் பழைய தமிழ் இதழ்கள் தனிச் சேகரிப்பிலும், சில நூலகங்களிலும் கிடைக்கலாம்.நானும் இந்த இதழை  சில காலம் சேகரித்து பைண்ட் செய்துசேர்த்துவைத்துள்ளேன்.

தற்போதும் யுனெஸ்கோ கூரியர் ஆங்கிலத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் ஐ.நா. அங்கீகரித்துள்ள ஆறு மொழிகளில் அச்சு இதழாகவும், இணையத்தில் இலவசமாகவும் வெளியாகி வருகிறது. மொழிபெயர்ப்புச் சிக்கல்களைத் தாண்டி, வாழும் இதழாக ‘யுனெஸ்கோ கூரியர்’ - தமிழ் ஏற்படுத்திய வெற்றிடம், இதுவரை இட்டு நிரப்பப்படாமலேயே இருக்கிறது.

#பிபிசிதமிழோசை 
#யுனெஸ்கோகூரியர்
#Unescocourier
#KSRPOSTING
#KSRADHAKRISHNAN_POSTING
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
02-05-2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...