Tuesday, May 23, 2017

உடமைகள் இழந்தோம், உணர்வை இழந்தோம். வெறும் கூடுகளாக ஊர்வலம் வருகின்றோம்

 
-------------------------------------

 ஈழப் பிரச்சனையில் இன்றைய நிலை என தலைப்பிட்டு நேற்று பதிவு செய்து இருந்தேன். அந்த  முகநூல் பதிவை வாசித்த நண்பர் செல்வநாதன் ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)  யாழ்ப்பானத்தில் இருந்து அலைபேசி வழி என்னை தொடர்புகொண்டார்.  இலங்கை  சாவகச்சேரியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த  அமரர்.நவரத்தினம்  அவர்கள் 1982 ஆம் ஆண்டு செல்வநாதனை அழைத்து வந்து சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டார். எனது உறவினரான , கோவில்பட்டி அருகே உள்ள களாம்பட்டியை சேர்ந்தவருமான  பேராசிரியர்.வெங்கடசாமி அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்.  சந்தித்து பேசிய பின்னர் படிப்பதற்கு இடம் அளித்தார். அத்துடன் நில்லாமல் நானே செல்வநாதன் மற்றும் சில ஈழ மாணவர்களுக்கு உள்ளூர் காப்பாளராக  ( local guardian)  கையெழுத்தும் போட்டேன். மாணவப்பருவத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்த அவர்  பட்டப்படிப்பை முடிந்து, பிற நாடுகளுக்கு சென்று பின்னர்  இலங்கை திரும்பிய அவர்,  தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மீண்டும்  ஈடுபடுத்திக் கொண்டார். அப்போதெல்லாம் யார் யாரெல்லாம் புலிகள் இயக்கத்தில் இருக்கின்றார்கள் என்று  யாருக்கும் தெரியாது. எங்கிருந்தோ தகவல் வரும்,  யாரிடமிருந்து வருகின்றது என்றது கூட தெரியாது. அளிக்கப்பட்ட வேலையை செய்வார்கள். மிகவும் இரகசியமான முறையில் இயங்கினார்கள். 

அங்கு நிலைமை எப்படி இருக்கின்றது எனக் கேட்டேன். நடைபினங்களாக வாழ்வதாக கூறினார். ஏன் இப்படி நம்பிக்கை இழந்து  இவ்வாறு பேசுகின்றீர்  என ஆறுதலாக கேட்க மட்டுமே என்னால் முடிந்தது. என்னிடம் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூட வார்த்தைகள் இல்லை.  அவர் அளித்த தகவல்கள் கண்ணீரை வரவழைத்தது. 1983- 84 காலக்கட்டத்தில் கூட கொடுமைகளை,  கொடூரங்களையும் சந்தித்தோம். ஆனால் அப்போது வாழ்வை துறந்து விட வாய்ப்பு இருந்தது. இப்போது அதற்கும் வாய்ப்பில்லை. குடும்பத்தினருக்கு விசாரனை என்ற பெயரில் பிரச்சனைகளை அளித்துவிட்டுப் போக மனமில்லை. வாழ வழியில்லை, சாகவும் வழியில்லை என கேள்விப் பட்டிருக்கின்றோம் இப்போது அதனை அனுபவித்து வருகின்றோம். இறுதிப்போரில் காணமல் போனவர்கள் பற்றியும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்தும்  எந்த செய்தியும் இல்லை,  அவர்கள் இறந்து போய்விட்டனர் என கருமகாரியம் செய்யவும் மனமில்லை என்றார். 

மேலும், தமிழர்களின் விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டு  சிங்களவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை.  அரசாங்க வேலைகள் யாவும் சிங்களர்களுக்கே அளிக்கப்படுகின்றது. தனியார்த் துறையிலும் அவர்களுக்கு அடிமைகளாகவே பணியில் அமர்த்தப்படும் நிலை. சுயதொழில் செய்ய இயலாத நிலை. இது தான் நாங்கள் உடமைகள் இழந்து, உணர்விழந்து  உயிரை மட்டும் இழக்காமல் நடைபினங்களாக வாழ்ந்து வருகின்றோம். 

சரி, இதற்கு என்ன தான் தீர்வு? என்றேன். 

அதை சொல்வதற்காகவே தொடர்பு கொண்டேன் என்றார். ஈழத் தமிழர்கள் குறித்து  உங்கள் முகநூல் பதிவில் நீங்கள்  குறிப்பிட்டுள்ளது தான் சரியான தீர்வுகள் . இந்தளவிற்கு எங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் ஓரளவு நிம்மதியுடன் வாழ்வோம்  என உங்கள் பதிவை பார்த்ததும் நண்பர்கள் பேசிக் கொண்டோம் என்றார். 

ஈழப் பிரச்சனையில் இன்றைய நிலை.
--------------------------------------------------------------
ஈழப் பிரச்சனைகள் குறித்து சமூக வலைத் தளங்களில் சற்று சூடான வாதங்களும், பிரதி வாதங்களும் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நடந்து வருகின்றன. அதை குறித்தான கருத்தோ விவாதமோ செய்ய விரும்பவில்லை. கடந்த சில நாட்களாக ஈழத்தில் இருந்தும் லண்டன், பாரீஸ், கனடா, நார்வே போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தோழர்கள் பேசினார்கள். முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வொரு நாட்டிலும் தாங்கள் பங்கேற்றதைப் பற்றியும் குறிப்பிட்டனர். 

இன்றைக்குள்ள சூழலில் என்ன செய்ய வேண்டும் இந்த பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும் என்பது தான் கவனிக்க வேண்டிய விடயமாகும். 

அவை,

1. இன அழிப்பை செய்த ராஜபக்சேவை சர்வதேச மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் லைபீரியா அதிபர் சார்லஸ் டெயிலரை இனஅழிப்பு குற்றத்திற்க்காக தண்டிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார். சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

முதலில் ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திரமான புலனாய்வு செய்து அவரை பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையில் சுதந்திரமான, நம்பகமான விசாரனை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும். 

அந்த விசாரனையில் ஈழத்தில் இன அழிப்பு நடந்தது என்று நிரூபிக்கப்படும். அந்த சூழலில் தான் தனிவாழ்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கும்.

2. சர்வதேச கண்காணிப்பில் ஈழத்தமிழர் விரும்பும் தீர்வான தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசங்கள் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 

இது நடைமுறைக்கு வரவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஆதரவு தேவை. மேற்குறிப்பிட்ட ராஜபக்சே மீது விசாரனை நடத்தி இனஅழிப்பு ஈழத்தில் நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் இந்த பொது வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதாகிவிடும். இது தான் அடிப்படையாக செய்ய வேண்டிய பணிகள்.

3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தும் சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

4. இறுதிப் போர் 2009 ல் நடந்தபோது கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை உடனடியாக விடுவித்து அவருடைய உறவினர்களிடம் அவர்களை சேர்க்க வேண்டும்.

5. தமிழர்களுடைய விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்களர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். அதை முறையாக தமிழர்களிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.

6. ஒப்புக்காக ஏமாற்றும் அதிகாரமற்ற மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், நில வருவாய், காவல் துறை, மீன்பிடி நிர்வாகம் என முக்கிய் அதிகாரங்களை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கின்ற நடவடிக்கையாகும். மாகாண கவுன்சில் என்பது ஏற்புடைய வாதமில்லை என்றாலும் நிர்வாகம் என்று ஒப்புக்கு ஏற்றுக்கொண்ட வகையில் இதன் உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர். 

  இப்படியான அடிப்படையான விடயங்களை கவனம் செலுத்துவது முக்கியமான கடமை. இது அவசரமும் அவசியமும் ஆகும். சொல்ல வேண்டிய அவசியத்தினால் இதை வலியுறுத்துகிறேன். ஆக்கப்பூர்வமான எண்ணங்களம் நடவடிக்கைகளும் தான் இன்றைக்கு ஈழப்பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும்.

#ஈழம்
#இலங்கை
#Eelam
#Srilanka
#ksradhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
23-05-2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...