Saturday, May 6, 2017

மணல் கொள்ளையில் ருசிகண்ட பூனை சும்மா இருக்குமா… ?

தமிழக முதலமைச்சர் இனிமேல் தனியாருக்கு மணல் குவாரிகளோ விற்பனை உரிமமோ கொடுக்கமாட்டோம் என்று மதுரையில் தெரிவித்துள்ளார். ஆனால் ருசி கண்ட பூனைகள் இந்த கொள்ளையை விடுமா என்ற சந்தேகத்தை தான் கிளப்புகின்றது. கடந்த காலத்தில் மணல் கொள்ளை எப்படி நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்.
சட்ட விரோதமாக நடந்து வரும் மணல் கொள்ளைகளால் அரசுக்கு வருமான இழப்பு எவ்வளவு ஏற்பட்டது?
ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் கோடி இருக்கக் கூடும் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அரசிற்கு லாபமாக கிடைக்க வேண்டிய இந்தப் வருமானம் முழுவதையும் இடைத்தரகர்கள், மணல் கொள்ளையர்கள் அரசை அதிகாரிகள் துணை கொண்டு ஏமாற்றினர்.
இந்த அளவில் குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடினாலும், எப்படியாவது மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வைக்க, ஏன் முறய்சிக்கின்றனர்?
உதாரணத்திற்கு, விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது மூடப்பட்ட கப்பூர் பகுதியில் இருந்த மணல் விற்பனை நிலையத்தில் ஒரு யூனிட் மணல் ரூ. 575க்கு வாங்கி ரூ. இரண்டாயிரத்திற்கு மறுவிற்பனை நடந்து வந்துள்ளது. அரசு விதிகளை மீறி முறைகேடாக ஆற்றிலிருந்து மணல் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்படி தமிழ்நாடு முழுவதும் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினர் ‘ஆசியோடு’ நடந்து வந்துள்ள மணல் விற்பனையால், கோடிகோடியாக பண ஆதாயம் அடைந்த கூட்டம் சும்மா இருக்குமா?
மணல் விலையை அதிகம் வைத்து விற்பது மட்டுமல்ல, எடுக்கப்படும் மணலின் அளவும் பணம் சுருட்ட உதவுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தான் மண் எடுக்க வேண்டிய நேரம் என்று அரசு விதி பேசுகிறது. ஆனால், எப்போது வேண்டுமானாலும் வரைமுறையில்லாமல் மண்ணை வெட்டி எடுப்பது தான் மணல் கொள்ளையர்களின் அன்றாட வாடிக்கை. அதே போன்று, இரண்டு ஜேசிபி வாகனங்கள் தான் ஆற்றில் மணல் அள்ள வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், பல இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மணல் அள்ளுவது தான் மணல் கொள்ளையர்கள் வகுத்துக் கொண்ட விதி.
அரசாங்க உத்தரவுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, மேல்மட்டத்தில் இருந்து, கீழ்மட்டம் வரை அனைவரையும் தங்களது பணபலத்தால் காலடியில் விழுந்து கிடக்க வைத்து, ஒரு நிழல் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருபவர்கள் தான் இந்த மணல் கொள்ளையர்கள்.
எந்த வரைமுறையும் இல்லாமல் அதிக மணல் அள்ளுவது, சுற்றுச் சூழலையும் பாதிக்கும் என மனோஜ் மிஸ்ரா எனும் ஆய்வாளர் குறிப்பிட்டார். திட்டமிடாமல் தொடர்ச்சியாக, ஆற்றிலிருந்து மணலை எடுத்தால், அங்கு வாழும் நுண்ணிய உயிரினங்கள் அழிந்து போகும். இந்த வகை உயிரினங்கள் கண்ணுக்கு தெரியாத அளவில் இருந்தாலும், மண் தரத்திற்கும், மண் வளத்திற்கும் ஆதாரமாக இருப்பவை. மணலை ஆழமாக தோண்டி எடுக்கிற போது அந்த பணியுடன் உயிரினங்கள் அழிவும் சேர்ந்தே நடக்கிறது. பணமே குறியாக இருக்கும் மணல் கொள்ளையர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பொதுமக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும். இந்த மணலை அள்ளி கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப படுகிறது. அந்த மாநிலங்களில் மணல் அள்ள தடை இருக்கிறது. கப்பலில் இலட்சத்தீவு வரை தமிழக மணல் தடையின்றி செல்கிறது. கேரளாவில் காவிரி மணல், தாமிரபரணி மணல், பாலாறு மணல், அமராவதி மணல் என்று விலைப்பட்டியல் போட்டு விற்கப்படும் அவலம் நடந்தேறுகிறது. மனசாட்சி இல்லாத தமிழக மணல் வியாபாரிகள் தூக்கிப் போடும் பணத் தாள்களுக்காக சிலர் அவர்களுடைய புகழ் பாடுவதை கேட்கும் போது மனது ரணமாகிறது.

#SandMafia
#மணல்கொள்ளை
#ksrpostings
#ksradhakrishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
06/05/2017


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...