Monday, May 8, 2017

"தமிழக நதிநீர் சிக்கல்கள்” குறித்து சங்கரன் கோவிலில் நடைபெற்ற புதிய பார்வை அமைப்பின் "வசந்த விழா" நிகழ்வில் எனது உரை.

சங்கரன் கோவில் நகரில் கடந்த 24 ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகள், விவாத மேடைகள் என்று பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றது. 350வது சிறப்பு நிகழ்ச்சியாகிய “வசந்த விழா” விற்கு என்னை பேச நண்பர் திரு.சிதம்பரம் அழைத்திருந்தார். நேற்று (07/05/2017) சங்கரன் கோவில் இரயில்வே பீடர் ரோடில் ஜெயசாந்தி அரங்கில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு “தமிழக நதிநீர் சிக்கல்கள்” என்ற தலைப்பின் உரையாற்றினேன். அந்த உரையின் சுருக்கம் வருமாறு, “திருநெல்வேலி மாவட்டத்தில் பூகோள ரீதியாக கரிசல் மண்ணும் செவல் காடு சந்திக்கின்ற மண் தான் சங்கரன் கோவில். சைவம், வைணவம், சாக்தம் ஆகிய வழிபாட்டுக்கு அடையாளமாக திகழும் தலம் தான் இந்த சங்கரன் கோவில். ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் ஆடித் தபசு விழாவை உலகில் வாழும் இந்துக்கள் அனைவரும் பூஜிக்கின்ற விழாவாகும். சங்கரன்கோவில் வரலாறு, ஆன்மீகம், வர்த்தகம், இலக்கியம், விடுதலைப் போராட்டம் என பல அடையாளங்களை தன்னகத்தே கொண்டதாகும். இந்து முஸ்லிம்கள் ஒற்றுமைக்கு உதாரணமாக திகழும் நகரம். மானூர் மன்னர் உக்கிரப் பாண்டியன் கட்டிய சங்கர நாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் கொண்ட இத்தலம் உயிரோட்டமான பூமியாகும். மகாகவி பாரதியார் அவர்கள் வந்து வணங்கி பாக்கள் பாடிய ஊராகும். இந்த வட்டாரத்தில் பயணம் செய்ய வேண்டுமென்றால் சங்கரன்கோவில் ரயில்வே நிலையத்தில் இருந்து தான் செல்ல வேண்டும். விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரின் காலடியும் பட்டதுண்டு. மாவீரன் பூலித்தேவர் பிறந்தது இந்த மண்ணில் தான். வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த நகர தெருக்களில் உலாவியது உண்டு. அக்காலத்தில் மதுரைக்கு தெற்கே சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், தென்காசி, கோவில்பட்டி, கழுகுமலை ஆகியவை முக்கிய கேந்திர நகரங்களாக விளங்கியது. சதுரகராதி எழுதிய வீரமாமுனிவர் சங்கரன்கோவிலிலும், குருக்கள்பட்டியிலும் தன் பணியை சிறப்பாக ஆற்றினார். அண்ணல் காந்தி அவர்கள் கோவில்பட்டி, கழுகுமலை, குருவிகுளம் என தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சாரல் பொழிய சங்கரன்கோவில் நகரத்தில் நுழைந்தார். சர்வோதய ஜெகநாதன் குருவிக்குளத்தில் ஆசிரியர் பணியில் இருந்தார். தன் கழுத்தில் இருந்த சங்கிலியை கழற்றி விடுதலை போராட்ட நிதியாக காந்தியாரிடம் வழங்கினார். தமிழில் சிந்து என்ற இசையை உலகறியச் செய்தது சென்னிகுளம் காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் தான். ஊத்துமலை ஜமீன்தார், கழுகுமலைக்கு காவடி தூக்கி செல்லும் போது ஏற்ற இறக்கமாக நடக்கும் பொழுது களைப்பு தெரியாமலிருக்க சமைத்த பாடல் தான் இந்த காவடிச்சிந்து. எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் இந்த காவடிச்சிந்துவை ஐ.நா. மன்றத்தில் பாடி பாரட்டினை பெற்றார். இந்த காவடிச்சிந்து கழுகுமலை செல்லும் போது சங்கரன்கோவில் தெருக்களில் பாடி வந்தார் அண்ணாமலை ரெட்டியார். தேவநேயப் பாவாணர் பிறந்த பூமி. தமிழறிஞர் இ.மு.சுப்பிரமணியம், ஆ.முத்துராமலிங்கம் போன்ற எண்ணற்ற தமிழறிஞர்கள் அரசியலில் காமராஜருக்கு விடுதலை போராட்டத்தை மடத்துப்பட்டி கோபால் நாயக்கரோடு இணைந்து இந்த வட்டாரத்தில் பணியாற்றியது. சுதந்திரா கட்சி என்.ஜி.ரங்கா, இராமனுஜ நாயக்கர் ஆற்றிய பணிகள், கம்யூணிஸ்டு இயக்கங்கள் வளர்ந்தது. பசும்பொன் தேவரும் இப்பகுதியில் நேதாஜியின் சீடராகவே களப்பணி ஆற்றினார். காயிதே மில்லத் இந்த நகரத்தில் இந்த நகரத்தில் உலாவிய நாட்கள், அண்ணா விரும்பிய நகரம். ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் இந்த ஊரைச் சார்ந்த டி.ஆர். சுப்பிரமணியம் திமுகவின் மாவட்ட செயலாளராக விளங்கினார். தலைவர் கலைஞர் அவர்கள் இங்கே காகிதப்பூ நாடகத்தை நடத்தியது ஒரு வரலாறு. இப்படி அரசியல் ஆளுமைகளின் காலடிப்பட்ட நகரம் தான் இந்த சங்கரன்கோவில். வர்த்தக ரீதியாக மிளகாய் வத்தல், பருத்தி ஆகிய விவசாய உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்ய வணிக கேந்திரம் இது. அமராவதி நாடார், அம்பலவாணன் பிள்ளை, ஊர்காவலன், ஏ.ஆர். சுப்பையா முதலியார், டாக்டர். சாமுவேல், டாக்டர். சீனிவாசன், பிரியாணிக் கடை சுல்தான், மறைந்த ச.சுப்பையா போன்ற பல முக்கிய பிரமுகர்கள். இந்த ஊர் பிரியாணியும், பால்கோவாவும், குல்குந்தும் பிரபலியம் ஒரு காலத்தில். நெசவுத்தொழில் பிரதானத் தொழிலாகும். நாட்டுப்புற கலைகளை வளர்த்த நகரமாகும். சூரிய நாராயண அண்ணாவி, ஓவியத் திருவுடையார், தாமிரபரணி கலைக்குழு போன்ற பல கலைக்குழுக்களும் இங்கு இயங்கின. திரையுலகில் பல படங்களை தயாரித்த குற்றாலிங்க ஆசாரி முக்கியமானவர். இப்படி எல்லாம் இந்த நகரத்தினை பற்றி பல சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நகரில் தமிழகத்தினுடைய ஆளுமைகளை எல்லாம் அழைத்து சந்திப்புகளும் சொற்பொழிவுகளும் நடத்துகின்றது புதிய பார்வை. 23 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காகவும், இலக்கியம் என பல துறைகளில் தன் பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகிறது. மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. ஆரம்பத்தில் 12 பேர் சேர்ந்து அமைத்த இந்த அமைப்பு, இன்று தமிழகமே பாரட்டும் அமைப்பாக மாறியுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.” தமிழக நதிநீர் பிரச்சனைகள் பற்றி பேச வேண்டுமென்றால் ஒரு மணிநேரத்தில் பேசிவிட முடியாது என்று விரிவாக 1.1/2 மணிநேரத்தில் என்னுடைய பேச்சு அமைந்தது. தமிழக நதிநீர் பிரச்சனைகளை பார்த்தால் தெற்கே குமரி மாவட்டம் நெய்யாறு அணையில் துவங்கி, வடக்கே பழவேற்காடு வரை பிரச்சனைகளை சொல்ல முடியும். கடந்த 10 ஆண்டுகளாக இந்த நெய்யாறு அணையை கேரள அரசு மூடிவிட்டது. தக்கலை, திரிவிதாங்கோடு, விளவங்கோடு முதலான பகுதிகள் பச்சை பசேலென்று திருவணந்தபுரம் செல்லும் சாலையின் இருபக்கமும் வாழையும், நெற்பயிர்களும் இருக்கும். முதல் ஐந்தாண்டு திட்டத்தில் திட்டமிடப்பட்டு காமராஜர் தமிழகத்தின் முதல்வரக இருந்தபோது கேரள முதல்வர் சங்கரோடு இணைந்து நெய்யாறு அணை திறப்பு விழா குமரி மாவட்டத்தில் நடந்தது. இந்த அணையின் கட்டுமாண செலவினை தமிழக அரசே அப்போது ஏற்றது. மீண்டும் தமிழக அரசிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து இந்த அணையை கேரள அரசு மூடிவிட்டது. உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கு சற்று வடக்கே நெல்லை மாவட்டத்தில் கொடுமுடியாற்று பிரச்சனையிலும் கேரளா வம்பு பிடிக்கின்றது. 1989ல் செங்கோட்டை அருகே கட்டப்பட்ட அடவி நாயினார் அணைக்கும் நீர்வரத்தை தடுக்கிறது கேரளம். இந்த அணையை இடிப்பதற்காக 2002ல் அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் கடப்பாரை, மம்பட்டியுடன் வந்தது ரணமான செய்தியாகும். இதற்கடுத்து கோதையாறு, கீரியாறு திட்டமும் நெல்லை மாவட்டத்தில் 40, 50 ஆண்டுகளாக பேசப்பட்டு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அச்சன்கோவில் - பம்பை – தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பை மத்திய அரசு விரும்பியும் அதை நடைமுறைபடுத்த இயலவில்லை. உள்ளாறு திட்டம் குறித்து அறிய 1997ல் தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும் மேற்கொண்டு இந்த பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. செண்பகவல்லி மூன்றாவது முறையாக பாதிப்புகள் ஏற்பட்டு செப்பன்னிட முடியாமல் வழக்குமன்றம் வரை சென்றும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. இவையெல்லாம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் சார்ந்த நீராதாரப் பிரச்சனைகள் ஆகும். அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் அழகர் அணை திட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் போன்ற பகுதிகளுக்கான நீராதார பிரச்சனைகளிலும் கேரளா தடுக்கின்றது. முல்லை, பெரியாரை பற்றி அனைவரும் அறிந்த சிக்கலாகும். இந்த முல்லை பெரியாறு நதிமூலம் நம் மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகேயுள்ள செண்பகவல்லி திட்டம் தான். மதுரை, திண்டுக்கல் மாவட்டம் பயன்பெறும் ஆலடி அணை, மஞ்சளாறு, மாம்பழ ஆறு போன்றவற்றிலும் கேரளா தமிழகத்திற்கு எதிராக பிடிவாத போக்கை கொண்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் பரம்பிக்குளம் – ஆழியாறு, பாண்டியாறு – புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு, பவாணி, அமராவதி என அனைத்திலும் கேரளா தடுப்பணைகளை கட்டிக்கொண்டே வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் மேயாறிலும் பிரச்சனைகள். எனவே குமரி முனையில் இருந்து நீலகிரி தொட்டபெட்டா வரை கேரளத்தின் பிடிவாத போக்கு. இவையெல்லாம் கேரளத்துடன் உள்ள சிக்கல்கள். அடுத்து கர்நாடகத்தோடு காவிரி பிரச்சனையும் அனைவரும் அறிந்ததே. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசும் காலம் தாழ்த்திக் கொண்டு வருகிறது. நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறிலும் கர்நாடகா வம்பு செய்கிறது.‘ கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் கர்நாடகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரத்தோடு பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி சிக்கல்கள். கணேசபுரத்தில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுகின்றது. இப்படி தமிழகத்தில் 75 ஆற்றுச் சிக்கல்களும் உள்ளன. கிருஷ்ணா நதிநீர் வாயிலாக சென்னைக்கு குடிநீர் திட்டமும் செம்மையாக நடக்கவில்லை. இந்த நீர் நாகலாபுரம் வரை ஆந்திர விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இதற்கான நிதியை தமிழக அரசு வழங்கியும் நமக்கு பலன் கிட்டவில்லை. 1947ல் கணக்கெடுப்பின்படி 50,000 நீர்நிலைகள் இருந்தது தற்போது 20,000 ஆக குறைந்துவிட்டது. 19789 ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் தற்போது மீதமுள்ளன. இதையாவது பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இந்தியாவின் நிலப்பரத்தில் 4% தான் தமிழகம். அண்டை மாநிலங்களை நம்பிதான் நம்முடைய நீர்த்தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். கேரளத்தில் நீர்வளம், வனவளம் அதிகம். கர்நாடகத்தில் நீர்வளம், வனவளம், தாதுவளம் அதிகம். ஆந்திரத்தில் நீர்வளமும், தாதுவளமும் அதிகம். ஆனால் தமிழகத்திற்கு இந்த இயற்கை வளங்கள் அறவே இல்லை. தாமிரபரணி ஆறு மட்டுமே தமிழகத்தின் பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் வங்கக் கடலில் சேர்கிறது. மற்ற நதிகளின் நீராதரங்கள் அண்டை மாநிலங்களை நம்பிதான் இருக்கின்றோம். எனவே இது குறித்து 30 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கு தொடுத்து உச்சநீதிமன்றத்தில் இதே சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிப் பொறுப்பில் இருந்த போது 27/02/2012ல் என்னுடைய வழக்கில் தீர்ப்பை பெற்றேன். இதற்கிடையில் நதிநீர் இணைப்பை குறித்து 1990ல் அன்றைய பிரதமர் வி.பி.சிங், 1992ல் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், 1996 இறுதியில் அன்றைய பிரதமர் தேவேகவுடா ஆகிய மூன்று பிரதமர்களை சந்தித்து இந்த பிரச்சனையை குறித்து முறையிட்டுள்ளேன். பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஸ் ரவுத் அவர்களை இரண்டு முறையும், மோடியின் அமைச்சரவையின் தற்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியை இரண்டு முறையும், நாடாளுமன்ற உறுப்பினரான தங்கவேலுவும் நானும் சந்தித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் நகலையும் வழங்கினோம். அதன்படி, 1. கங்கை, மகாநதி, காவிரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறோடு குமரி முனையோடு இணைக்க வேண்டும். அதாவது கங்கை குமரியை தொடவேண்டும். 2. நதிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும். 3. அச்சன்கோவில் – பம்பையை தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து நிறைவேற்றிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஒப்புக்காக இதை எடுத்துக் கொள்ள கூடாதென தெளிவுப்படுத்தியது. நதிநீர் இணைப்போடு நீர்வழிப்பாதைகளும் அமைக்கவேண்டும். சி.பி.இராமசாமி ஐயர், கே.எல்.ராவ், கேப்டன். தஸ்தூர் ஆகியோர் வழங்கிய ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாஜ்பாய காலத்தில் நதிநீர் இணைப்புக்காக சுரேஷ் பிரபு குழு அமைத்தும் எந்த பயன்பாடும் இல்லாமல் போய்விட்டது. அதுபோல இல்லாமல் ஆக்கப்பூர்வமான முடிவுகளை எட்டவேண்டுமென உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. கேரளாவில் 2000 டி.எம்.சி. தண்ணீர் வீணாக அரபிக் கடலில் செல்வதை கிழக்கு நோக்கி தமிழகத்திற்கு திருப்ப வேண்டும். 80 நதிகளில் உள்ள நீர் வீணாக அரபிக் கடலுக்கு செல்கின்றது. இப்படியான பிரச்சனைகள் உள்ளன. 369கோடி ரூபாய் மதிப்பீட்டில் 79 கி.மீட்டர் இணைப்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்பெறும் தாமிரபரணி – கருமேணியாறு – நம்பியாறு திட்டமும் பாதி வேலைகள் முடிந்து கிடப்பில் உள்ளன. அதைப்போல காவிரி – குண்டாறு இணைப்பும் பேச்சாகவே உள்ளதே அன்றி நடைமுறைக்கு வரவில்லை. தென்பென்ணை- பாலாறு இணைப்பும் எப்போது நடைமுறைக்கு வருகின்றதோ தெரியவில்லை. பண்டைய அரசர்களின் ஆட்சி காலங்களில் கூட கரிகாலன் கல்லணையை கட்டினார். வீரநாராயண ஏரியை பராமரித்தோம். அப்போதே பாசனக் கால்வாய்களை அமைத்தோம். குளங்கள், ஏரிகள், வாய்க்கால்களை அக்காலத்தில் அடிக்கடி சீரமைத்தது உண்டு. அரசர்கள் ஆயக்காட்டு பணிகளில் முக்கியத்துவம் வழங்கினர். இன்றைக்கு அது மாதிரியான சிந்தனைகள் இல்லாமல் சுயநலப் போக்கில் ஆட்சியாளர்கள் உள்ளனர். நதிநீர் ஆதாரங்களில் கேரளா, கர்நாடகா, ஆந்திரத்தோடு தமிழகம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கின்றது. நம்முடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றது. மத்திய அரசும் நம் மீது பாரா முகம் காட்டுகிறது. நதிநீர் சிக்கல்களை தீர்க்க ஹார்மன் கோட்பாடும், ஹெல்சின்கி கொள்கையும் நடைமுறையில் இருந்தாலும் அதன்படி கடமைகளை மத்திய அரசு ஆற்றுவது இல்லை. சமஸ்டி அமைப்பில் ஒரு மாநிலத்திற்கு ஒரு மாநிலம் விட்டுக்கொடுத்து செல்கின்ற பாங்கில்லை. அப்படி இருக்கும் போது பன்மையில் ஒருமை, வேற்றுமையில் ஒற்றுமை எப்படி நிலைத்திருக்கும்?
உலகளவில் நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் பிரச்சனைகளை நாடுகள் தொழில்நுட்பத்தின் உதவியோடு சிறப்பான அளவில் பேசித்தீர்த்து வருகின்றன. • டான் நதிப் பிரச்சனையில் ஆஸ்திரியாவும், துருக்கியும் பேசித் தீர்த்துக் கொண்டது. • ரைன் நதிப் பிரச்சனையில் ஜெர்மனும், பிரான்ஸும் பேசித் தீர்த்துக் கொண்டது. • நைஜர் நதிப் பிரச்சனையில் ஆப்பிரிக்க நாடுகளுக்குள் பேசித் தீர்த்துக் கொண்டது. • நைல் நதிப் பிரச்சனையில் ஆப்பிரிக்க நாடுகளுக்குள் பேசித் தீர்த்துக் கொண்டது. • ஜோர்டான் நதிப் பிரச்சனையில் இஸ்ரேலும், ஜோர்டானும், பாலஸ்தீனமும் பேசித் தீர்த்துக் கொண்டது. • நைல் – அஸ்வான் அணை பிரச்சனையில் ஆப்பிரிக்க நாடுகளுக்குள் பேசித் தீர்த்துக் கொண்டது. • கொலம்பியா நதிப் பிரச்சனையில் அமெரிக்காவும், கனடாவும் பேசித் தீர்த்துக் கொண்டது. • சிந்து நதிப் பிரச்சனையில் நேபாளம், வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பேசித்தீர்த்துக் கொண்டது. • டெலிவர் நதிப் பிரச்சனையில் அமெரிக்காவும் அதன் அண்டை நாடுகளுடன் பேசித் தீர்த்துக் கொண்டது. இப்படி உலக நாடுகளில் நதிநீர் பிரச்சனைகளின் உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நதிநீர் சிக்கலால் உலகப் போரே ஏற்படும் என்கிற அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். தமிழகம் பாலைவனமாகிவிடுமென்று ஆய்வாளர்கள் அச்சப்படுகிறார்கள். இதனை எல்லாம் சீர்படுத்த வேண்டுமெனில் திறமையான ஆளுமைமிக்க ஆட்சியாளர்கள் வேண்டும். மக்களோ நீங்கள் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்காமல் வாக்குகளை விற்பனை பொருளாக்கிவிட்டீர்கள். இங்கே சொன்ன இத்தனை நதிநீர் பிரச்சனைகளை பற்றி நாம் தேர்தெடுத்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியுமா? வேதனையாக உள்ளது. நீங்கள் மாலையில் தொலைக்காட்சியில் மக்களை பைத்தியக்காரர்களாக்கும் தொலைக்காட்சி தொடர்களையும், வெட்டி விவாதங்களை பார்த்தும் மெய் மறந்து உள்ளீர்கள். உங்கள் கடமையை சரிவர செய்யாவிடில் தமிழகம் விரைவில் பாலைவனம் தான் (விரிவான பேச்சின் சுருக்கமே இது. ஒவ்வொரு நதிநீர் பற்றிய புள்ளி விவரங்களோடு பூகோள ரீதியாக குறிப்பிட்டேன்). #தமிழகநதிநீர்பிரச்சனைகள் #சங்கரன்கோவில் #TNwaterdisputes #sankarankovil #ksrpostings #ksradhakrishnanpostings கே.எஸ். இராதாகிருஷ்ணன் 08/05/2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...