Thursday, May 11, 2017

ஜமாபந்தியும் அதன் தலையாய பணிகளும்.

ஜமாபந்தியும் அதன் தலையாய பணிகளும்.
-----------------------------------------
தமிழகத்தில் மே17 முதல் ஜமாபந்தி எனும் தலைப்பிடப்பட்ட செய்தி பார்த்தேன்.  ஜமாபந்தி என்பது அக்பரது ஆட்சிகாலத்தில் வட இந்தியாவில்  தொடங்கப்பட்ட திட்டம்  பின்னர் ஷாஜகான் காலத்தில் தென்னிந்தியாவிலும் பரவியது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஜமாபந்தி , தாலுக் ஆகிய மொகலாய சொற்கள் கூட பழமையின் அடையாளத்தை காட்டுவதாக இருப்பதால் முழுமையாக தமிழாக்கம் செய்யப்படவில்லை.

ஜமாபந்தி என்பது கிராம நிர்வாக முறையை ஒவ்வொரு ஆண்டுதோறும்  சரிபார்த்தல் என்றும் அதன் பணியை சுருங்க கூறலாம்.  வருவாய் துறை அதிகாரிகள், தாசில்தார் ஆகியோரிடம் கிராம நிர்வாகம் கணக்கு வழக்கு காண்பிப்பது இதன் தலையாய பணி. 

நிலவரி வசூலான தொகை, பயிரிடப்பட்ட நிலத்தின் அளவு, விளைச்சலின் அளவு,  கிராமத்தில் உள்ள ஆடு மாடுகளின் எண்ணிக்கை மற்றும் பிறப்பு , இறப்பு, மக்கள் தொகை கணக்கு, ஆகியவற்றையும் விவரமாக அதற்குரிய ஆதாரங்களுடன் சமர்பிக்க வேண்டும். அத்துடன் கிராமத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அதன் மீதான நடவடிக்கைகள்  குறித்தும்  அங்கு வினாக்கள் எழுப்பபடும். 

தாசில்தார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு உதவியாக தலையாரி, வெட்டியான் போன்றவர்களும் கணக்கு வழக்கு சரிபார்க்க எழுத்தாளர்களும் உதவியாக இருப்பர்.  சில சமயங்களில் மாவட்ட ஆட்சியரும் கலந்துக் கொள்வார். 

மாவட்ட வருவாய்துறை, தாசில்தார் , ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் பட்டா வழங்க கோரி மனுக்கள் அளிப்பது, பள்ளிகள் , சாலைகள் அமைத்தல்,  குடிநீர் , சாக்கடை வசதிகள், மயானம் அமைத்தல், கிராமங்களுக்கான இலவச , சலுகை திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள்.

1950, 60களில் என் தந்தையார் முனிசீப் எனப்படும் பொறுப்பில் இருந்து இதனை செய்வதை பார்த்திருக்கின்றேன். கோவில் திருவிழாக்கள் போன்று இதுவும்  ஒரு விழா போல காட்சியளிக்கும்.

#ஜமாபந்தி
#KSRadhakrishnanpostings
#Ksrpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
11-05-2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...