Thursday, May 25, 2017

தேவையற்ற சர்ச்சைகளும் வெற்றுக் கூச்சல்களும்

தமிழக அரசியலில் யார் அரசியலுக்கு வரவேண்டும், யார் தமிழக முதல்வர் ஆக வேண்டும் என தற்போது விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு சில அரசியல்வாதிகள் அரசியலில் முதல்வர் பதவியை அடைவதற்காக தமிழராக பிறந்தவர்கள் தான் தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் என பேசுவதை கேட்க நேர்ந்தது. அவர்கள் இப்படி பேசுவதற்கு முன், தமிழகத்தில் பிறக்காமலேயே, இந்த மண்ணுக்கு போராடாமலேயே எப்படி தமிழகத்தின் முதல்வராக முடியும் என்பதை முதலில் சிந்திக்க வேண்டாமா?

இந்திய அரசியல் சட்டத்தின்படி, தேர்தலில் போட்டியிட இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். இந்திய குடிமகனான எவரும் இந்தியாவின் எந்த தொகுதியிலும் தேர்தலில் போட்டியிடலாம் என அரசியல் சட்டம் தெளிவுபடுத்துகிறது. இந்த அரசியல் சட்டத்தை ஏற்று தேர்தலில் போட்டியிட்டவர்களே இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இதை மதிக்காதவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் விதிமுறைக்குட்படுவதாக வேட்புமனுவில் கையொப்பமிட்டு தேர்தலில் போட்டியிடுவது நகைமுரண்.

‘வந்தேறிகள்’ என இவர்களால் அழைக்கப்படுபவது எந்த விதத்தில் நியாயம்?
அவர்களும் இந்நாட்டு மக்களே. இப்படி பேச எப்படி சட்டம் அனுமதிக்கிறது எனத் தெரியவில்லை. எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற இம்மாதிரி நடவடிக்கை ஆபத்தானது என்பது குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு புரிதல் வேண்டும்.

அப்படியானால், இந்தியரும் மற்றும் தமிழ் சகோதர, சகோதரிகளோ உலகின் பல நாடுகளில் பிரதமராகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மேயர்களாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்று உள்ளனர். இவர்கள் மேலை நாட்டில் வெள்ளையர்களால் தேர்தலிலும் வென்றுள்ளார்கள்.

தென் அமெரிக்க நாடான கயானாவின் பிரதமர் நாகமுத்து எனும் தமிழர்.

சிங்கப்பூரின் துணைப்பிரதமர் தர்மன் ஷ்ன்முகரத்தினம் இந்தியாவின் பூர்வ குடிமகன். மேலும் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

நார்வே, ஓஸ்லோ மாநகரின் துணை மேயர் காம்சி (எ) ஹன்சிகா குணரத்னம் எனும் தமிழர் ஈழத்தை சார்ந்தவர்.

கனடா, ஸ்கார்புரோ ரூச் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபேசன் எனும் தமிழர் பொறுப்பில் இருந்தார்.

மேலும் பிரான்ஸ், பிரிட்டனின் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் சில தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

பிரமீளா ஜெயபால், கமலா ஹாரீஸ், ரோகித் கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமீ பேரா ஆகியோர் அமெரிக்க காங்கிரஸ் செனட்டிலும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அமெரிக்க அரசு பரிபாலணத்திலும் முக்கிய பங்காற்றுகின்றனர். கடந்த 14.05.2017 டில்லியில் இருந்து வரும் பிரபல ஆங்கில ஏடான இந்துஸ்தான் டைம்ஸ் இதழில், "POWERPLAY: THE NEW INDIAN AMERICAN NETWORK IN WAHSINGTON" என்ற முழுப்பக்க கட்டுரையில் அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இவர்களுடைய பணிகள் அமெரிக்கர்களால் வெகுவாக பாராட்டப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் வந்தேறிகள் என்றால் இந்த பெருமை இந்தியாவிற்கு கிடைத்திருக்குமா?

இப்படி நீண்ட பட்டியலே உள்ளது.

இவர்கள் எல்லாம் வந்தேறிகள் என அந்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருந்தால் இந்த பொறுப்பிற்கு வர இயலுமா அங்கே வாழும் தமிழர்களின் நிலை உயருமா? ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தமிழை தேசிய மொழியாக அறிவிக்கவும் கற்பிக்கவும் கோரிக்கை வைக்க முடியுமா?

தமிழ்நாடில் பிறந்து இந்த மண்ணின் மைந்தராக மண் வாசனையோடு தாய்மொழி தமிழை ஏற்றுக்கொண்டு இந்த மண்ணின் உரிமைக்காக இதயசுத்தியோடு போராடி உழைத்தவர்கள் தமிழ்நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் என்று சர்ச்சைக்குரிய வாதத்தை வைப்பது ஆரோக்கியமற்ற நிலையாகும். தேவையற்ற குழப்பங்கள், கடுமையான சிக்கல்களுக்கும் வித்திடும்.

தமிழகத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அப்புறப்படுத்துங்கள். இதில் எவ்வித தயவு தாட்சண்யமும் வேண்டாம். அதை விடுத்து வந்தேறிகள் என அவசியமற்ற பிரச்சனைகளை உருவாக்குவது நல்லதல்ல.

வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பினால் சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும். உலகமயமாக்கல் என்கிற நிலையில் இந்த வாதங்கள் அனைத்தும் எடுபடாது.

தேசாந்திரிகளும், உலக நாயகர்களும் இருக்கும் வரை இதுபோன்ற விதண்டாவாதங்களுக்கு இடமில்லை. இதுவே உண்மையும், யதார்த்தமும்.
ஒரு மாநிலத்தில் பிறந்து இன்னொரு மாநிலத்தில் முதல்வராக முடியுமா? என்றொரு கேள்வியும் எழுந்தது.

இதற்கு,
• அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் சர்பானந்தா பிறப்பால் ஒரிசாவை சேர்ந்தவர்,
• குஜராத் மாநில முதல்வர் விஜய் ருபானி பிறப்பால் பர்மாவை சேர்ந்தவர்.
• உபியின் முதல்வர் யோகி பிறப்பால் உத்ரகாண்டை சேர்ந்தவர்.
• டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஹரியானாவை சேர்ந்தவர்.

இவர்களே இந்தியாவில் எந்த பகுதியில் பிறந்தாலும் தான் விரும்பும் தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் செல்வாக்கை பெற்று முதல்வர் பதவிக்கு வரலாம் எனும் முன்னுதாரணங்கள்.
இப்படியான நிலையில் இந்த சர்ச்சைகள் தவிர்ப்பது நல்லது. இதற்கு மேல் இதுகுறித்து பேசுவதும், விவாதிப்பதும் நல்லதுமல்ல, நாகரிகமும் அல்ல.

#வந்தேறிகள்
#பிறநாட்டில்_தமிழர்களுடைய_தேர்தல்_வெற்றிகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-05-2017

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...