Thursday, May 18, 2017

புதுமாத்தளன்

முள்ளிவாய்க்கால் அளவிற்கு    என்ற ஊரின் பெயர் பிரபலமடையவில்லை. ஆனால், இறுதிப்போரில் அங்கு தான் மிகப் பெரிய மனிதப் பேரவலம் நடந்தது. அங்கு தான், ஒரே இடத்தில்  பெருந்தொகையான மக்கள் கொல்லப் பட்டனர். 

எந்த வகையான பாதுகாப்பும் இல்லாத வெட்ட வெளியில், பல்லாயிரக் கணக்கான மனிதர்கள் புழு, பூச்சிகள் போன்று கொல்லப் பட்டிருப்பார்கள். அதை ஒரு பாதுகாப்பு வலையமாக அறிவித்திருந்த அரச படையினர், கனரக ஆயுதங்களை பயன்படுத்தி, கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களை நடத்தி இருந்தனர். 

குட்டையான பனை மரங்களை தவிர, வேறெந்த மரமும் இல்லாத வெட்ட வெளியில், மக்கள்  கூடாரம் அடித்து தங்கி இருந்தனர். நாலாபுறமும் இருந்து வந்த ஷெல் வீச்சுகளுக்குள் இருந்து தப்புவதற்கு தற்காலிக பதுங்குகுழிகளும் உதவவில்லை. ஒரு பக்கம் இந்து சமுத்திரம், மறு பக்கம் நந்திக் கடல், பத்து சதுர கிலோமீட்டர்களுக்குள் இலட்சக் கணக்கான மக்கள் பொறிக்குள் அகப்பட்ட எலிகளாக சிக்கி இருந்தனர். 

புதுமாத்தளன் பகுதியில்,  புலிகள் கட்டியிருந்த மிக உயரமான மண் அணை இருந்த படியால், இராணுவம் அந்தப் பிரதேசத்தை கைப்பற்றுவதற்கு உக்கிரமான யுத்தம் நடந்தது. அதன் எச்சங்களை இப்போதும் பார்க்கலாம். 

அங்கு இப்போதும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பிரசன்னம் அச்சத்தை ஊட்டுவதாக உள்ளது. அந்தப் பிரதேசம் இப்போதும் அணுகுண்டு வீசப் பட்ட பகுதி போல வெறிச்சோடிக் கிடந்தது. UN மற்றும் NGO க்களின் பெயர் பொறித்த கூடார சீலைகள் இப்போதும் அங்கே கிடக்கின்றன.   

போர் அழிவுகள் ஏற்படுத்திய வடுக்கள் காரணமாக, புதுமாத்தளன் பகுதி இப்போதும் ஆளரவமற்ற சூனியப் பிரதேசமாக காட்சி தருகின்றது. இறந்தவர்கள் பிணங்களாக நடமாடும் பாதாள லோகத்திற்கு வந்து விட்டது போன்ற திகில் உணர்வு ஏற்படுகின்றது. 

புது மாத்தளன் கிராமத்தில் இருந்து, பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முள்ளிவாய்க்கால்  போருக்கு முன்னரும் அங்கு மக்கள்  பெருமளவில் வாழ்ந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் பொதுச் சந்தை, பாடசாலைகள், தேவாலயங்கள், கோயில்கள் அதற்கு சாட்சியமாக உள்ளன.  

புதுமாத்தளனுக்கும், முள்ளிவாய்க்கால்லுக்கும் இடையிலான புவியியல் வேறுபாட்டை, அங்கு செல்லும் ஒருவர் நேரில் காண முடியும். முள்ளிவாய்க்கால் கிராமத்தில் தான் அடர்த்தியான மரங்களை காண முடியும். 

அத்துடன் முல்லைத்தீவு பெருநிலப் பரப்புடன் சேர்ந்திருக்கும். அது ஓரளவிற்கு பாதுகாப்பானது. அங்கு தான் புலிகளின் தலைவர்களும், முக்கிய உறுப்பினர்களும், குடும்பத்துடன் தங்கி இருந்தனர். அதனால் தான் முள்ளிவாய்க்கால் இன்றைக்கும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...