Friday, April 3, 2020

தமிழக_நீர்_ஆதாரங்கள்

#தமிழக_நீர்_ஆதாரங்கள்
--------------------------
 சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் 2012-ல் பணியில் இருந்தபோது, 30 ஆண்டு காலமாக வழக்கு மன்றத்தில் நதிகளை தேசியமயமாக்க வேண்டும், கங்கை - மகாநதி - கிருஷ்ணா - காவேரி - வைகை - தாமிரபரணி - குமரி,பழையாறு இணைக்கவும், கேரளத்தில் வீணாக கடலுக்குச் செல்லும் நதி நீரை கிழக்கு நோக்கி தமிழகத்துக்கு திருப்பவும், கேரளா அச்சன்கோவில் - பம்பை நதிப் படுகைகளை தமிழகத்தின் வைப்பாறுரோடு இணைக்கவேண்டும் என்று நான் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றம் 27.2.2012-ல் வழங்கியது. தேர்தல் பணியை முடித்துவிட்டு சென்னை திரும்பியவுடன் தீர்ப்பு நகலையும், அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும் தலைவர் கலைஞரிடம் வழங்கினேன். அந்த ஆவணங்களில் தமிழகத்தின் நதிகளின் எண்ணிக்கை நீண்ட பட்டியலாக இருந்தது. அதைப் பார்த்து இத்தனை நதிகள் தமிழகத்தில் இருக்கிறதாப்பா என்று வினாவினார்.

தமிழகத்தில் இயற்கையின் அருட்கொடையான நதிகளையும், நீர் ஆதாரங்களையும் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது வேதனையான விடையம்.

நதிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் நதிகள் உயிர்ப்போடு, உயிரோட்டமாக தமிழகத்தில் பாய்கின்றது. அப்படியான அரிய செல்வத்தை சரியாக காக்காமல் தவறிவிட்டோம். நாகரீகங்கள்  நதிக்கரையில்தான் பிறந்தன என்பதையும் மறந்துவிட்டோம். மாவட்ட வாரியாக  தமிழக முக்கிய நதிகள்

 மாவட்ட வாரியாக முக்கிய தமிழக நதிகள்:

1. கடலூர் மாவட்டம்

                நதிகள்  : தென்பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு, பரவனாறு,                                 வெள்ளாறு, கோமுகி ஆறு, மணிமுக்தாறு, ஓங்கூர்

2. விழுப்புரம் மாவட்டம்

                நதிகள் : கோமுகி ஆறு, மலட்டாறு, மணிமுக்தாறு

3. காஞ்சிபுரம் மாவட்டம்

                நதிகள் : அடையாறு, செய்யாறு, பாலாறு, வராகநதி, தென்பெண்ணை,                   பரவனாறு   

4. திருவண்ணாமலை மாவட்டம்

                நதிகள் : தென்பெண்ணை, செய்யாறு, வராகநதி, வெள்ளாறு

5. திருவள்ளூர் மாவட்டம்

                நதிகள் : கூவம், கொஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு

6. கரூர் மாவட்டம்

                நதிகள் : அமராவதி, பொன்னை

7. திருச்சி மாவட்டம்

                நதிகள் : காவிரி, கொள்ளிடம், பொன்னை, பாம்பாறு

8. பெரம்பலூர் மாவட்டம்

                நதிகள் : கொள்ளிடம்

9. தஞ்சாவூர் மாவட்டம்

                நதிகள் : காவிரி, வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம்,  அக்கினி ஆறு

10. சிவகங்கை மாவட்டம்

                நதிகள் : வைகையாறு, பாம்பாறு, குண்டாறு, கிருதமல் ஆறு,

11. திருவாரூர் மாவட்டம்

                நதிகள் : காவிரி, வெண்ணாறு, பாமணியாறு, குடமுருட்டி

12. நாகப்பட்டினம் மாவட்டம்

                நதிகள் : காவிரி, வெண்ணாறு

13. தூத்துக்குடி மாவட்டம்

                நதிகள் : ஜம்பு நதி, மணிமுக்தாறு, தாமிரபரணி, குண்டாறு,                                  கிருதமல் ஆறு, கல்லாறு, கோராம்பள்ளம் ஆறு

14. தேனி மாவட்டம்

                நதிகள் :  வைகையாறு, சுருளியாறு, தேனி ஆறு, வரட்டாறு,

                வைரவனாறு

15. கோயம்புத்தூர் மாவட்டம்

                நதிகள் : சிறுவாணி, அமராவதி, பவானி, நொய்யலாறு, பம்பாறு

16. திருநெல்வேலி மாவட்டம்

                நதிகள் : தாமிரபரணி, கடனா நதி, சிற்றாறு, இராமநதி, மணிமுத்தாறு,பச்சை ஆறு, கறுப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடிஆறு,   அனுமாநதி,கருமேனியாறு, கரமணை ஆறு.(சேர்வலாறு.மணிமுத்தாறு.கடனா ஆறு. பச்சையாறு. சிற்றாறு. பேயனாறு. நாகமலையாறு,காட்டாறு.சோம்பனாறு,கௌதலையாறு.உள்ளாறு.பாம்பனாறு.காரையாறு.நம்பியாறு.கோதையாறு.கோம்பையாறு.குண்டாறு இவை அனைத்தும் தாமிரபரணியின் துணையாறுகள் )

17. மதுரை மாவட்டம்

                நதிகள் : பெரியாறு, வைகையாறு, குண்டாறு, கிருதமல் ஆறு,   சுள்ளி ஆறு, வைரவனாறு, தேனியாறு, வாட்டாறு, நாகலாறு, 

                வராகநதி, மஞ்சள் ஆறு, மருதாநதி, சிறுமலையாறு, சுத்தி ஆறு, 

                உப்பு ஆறு

18. திண்டுக்கல் மாவட்டம்

                நதிகள் : பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி, சண்முகாநதி,                                          நங்கட்சியாறு, குடகனாறு, குதிரையாறு, பாலாறு, புராந்தளையாறு,                        பொன்னை, பாம்பாறு, மஞ்சள் ஆறு

19. கன்னியாகுமரி மாவட்டம்

                நதிகள் : கோதையாறு, பறளியாறு, பழையாறு, நெய்யாறு, வள்ளியாறு

20. இராமநாதபுரம் மாவட்டம்

                நதிகள் : குண்டாறு, கிருதமல் ஆறு, வைகை, பாம்பாறு,                                                           கோட்டகரையாறு, உத்திரகோசம் மங்கை ஆறு

21. தருமபுரி மாவட்டம்

                நதிகள் : காவிரி, தொப்பையாறு, தென்பெண்ணை  

22. சேலம் மாவட்டம்

                நதிகள் : காவிரி, வசிட்டாநதி, வெள்ளாறு

23. விருதுநகர் மாவட்டம்

                நதிகள் : கௌசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனா நதி, கிருதமல்                     ஆறு

24. நாமக்கல் மாவட்டம்

                நதிகள் : காவிரி, உப்பாறு, நொய்யலாறு

25. ஈரோடு மாவட்டம்

                நதிகள் : காவிரி, பவானி, உப்பாறு

26. திருப்பூர் மாவட்டம்

                நதிகள் : நொய்யலாறு, அமராவதி, குதிரையாறு

27. புதுக்கோட்டை மாவட்டம்

                நதிகள் : அக்கினி ஆறு, அம்பூலி ஆறு, தெற்கு வெள்ளாறு, பம்பாறு,                             கோட்டகரையாறு

28. கரூர் மாவட்டத்தில் இரண்டு அணை மட்டுமல்ல. திண்டுக்கல்  மாவட்டத்தில் தொடங்கினாலும் குடகனாறு, நங்காஞ்சி ஆறு கரூர் மாவட்டத்தின் பெரும்பகுதியில் ஓடி பின்னர் அமராவதியில் கலந்து காவிரியில் கலக்கிறது.

 இப்படி நதிகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கின்றது.

தமிழ்நாட்டு நதிகளில் உள்ள நீர்த் தேக்கங்கள் / அணைகள்:

நீர்த் தேக்கத்தின் பெயர்

வராக நதி படுகை

1. வீடூர்

பெண்ணையாறு படுகை

2. கிருஷ்ணகிரி

3. சாத்தனூர்

4. தும்பஹள்ளி

5. பாம்பார்

6. வாணியாறு

வெள்ளாறு நதிப் படுகை

7. வெல்லிங்டன்

8. மணிமுக்தா நதி

9. கோமுகி நதி

காவேரி நதிப் படுகை

10. மேட்டூர்

11. சின்னாறு

12. சேகரி குளிஹல்லா

13. நாகவதி

14. தொப்பையாறு

15. பவானி சாகர்

16. குண்டேரி பள்ளம்

17. வரட்டுப் பள்ளம்

18. அமராவதி

19. பாலாறு, பெருந்தலாறு

20. வரதமா நதி

21. உப்பாறு (பெரியாறு மாவட்டம்)

22. வட்டமலைக் கரை ஓடை

23. பரப்பலாறு

24. பொன்னையாறு

25. உப்பார் (திருச்சி மாவட்டம்)

வைகை நதிப் படுகை

26. வைகை

27. மஞ்சளாறு

28. மருதா நதி

வைப்பார் நதிப் படுகை

29. பிளவுக்கல் (பெரியாறு நீர்த்தேக்கம்)

30. பிளவுக்கல் (கோவிலாறு நீர்த்தேக்கம்)

31. வெம்பக்கோட்டை நீர்த்தேக்கம்

32. குள்ளுர் சந்தை

தாமிரபரணி நதிப் படுகை

33. மணிமுத்தாறு

34. கடனா

35. ராம நதி

36. கருப்பா நதி

37. குண்டாறு

கோதையாறு நதிப் படுகை

38. பேச்சிப் பாறை

39. பெருஞ்சாணி

40. சித்தாறு - ஐ

41. சித்தாறு - ஐஐ

மேற்கு நோக்கிப் பாயும் நதிக்களை கிழக்கே திருப்புதல்

பெரியாறு நதிப் படுகை

42. பெரியாறு

43. மேல் நீராறு அணைக்கட்டு

44. கீழ் நீராறு

சாலக்குடி நதிப்படுகை

45. சோலையாறு

46. பரம்பிக்குளம்

47. தூனக்கடவு

48. பெருவாரிப் பள்ளம்

பாரதப் புழை நதிப் படுகை

49. ஆழியாறு

50. திருமூர்த்தி

 இப்படி நீர்த்தேக்கங்களையும் நீண்ட வரிசைப்படுத்தலாம்.

 தமிழக நீர்நிலைகள்

நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20,000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.இதை குறித்தான எனது
வழக்கும் சென்னை உயரநீதி மன்றத்தில்
நிலுவையில் உள்ளது.

மதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன. பழவேற்காடு ஏரியை ஆந்திர அரசு சிறிது சிறிதாக அபகரித்துக் கொண்டது. வீராண ஏரியும் சரியாகப் பராமரிப்பு இல்லை.

இன்றைக்கு தமிழகத்தில் 18,789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக்கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் என்ன? ரியல் எஸ்டேட் என்று சமூக விரோதிகள் நீர் நிலைகளை கபளிகரம் செய்து தங்களுடைய சொத்துகளைப் போல விற்று கொழுத்துப் போய்விட்டனர். இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல் மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்துவிட்டது.

மணல் திருடர்கள் ஆறுகளிலும், ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்ததனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்துவிட்டன. இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும் ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு திருட்டுத் தொழிலுக்கும் துணை போகும் ஆட்சியாளர்களால்தான் இந்த மாதிரியான கொடூரங்கள் நடந்து வருகின்றன. மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும், நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது. அது அக்காலம் இன்றைக்கு நாம் ஓட்டுப்போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக் கூடிய கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர். மனிதர்கள் பூமியில் தோன்றலாம். சில காலங்களில் வாழ்ந்து மடியலாம். ஆனால் நாகரீகத்தின் தொட்டிலான நதிகள் என்றைக்கும் நிரந்தரமானது. அதை தாயை வணங்குவதைபோல நதிதீரங்களை வணங்கி பாதுகாப்பதுதான் மானிடத்தின் அடிப்படை கடமையாகும்.

#தமிழகநீர்ஆதாரங்கள்
#நீர்நிலைகள்
#ஏரிகள்  #குளங்கள்
#அணைகள்
#ஆறுகள்
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
3/4/2020.


No comments:

Post a Comment

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100  சற்று முன் அவருடன் சந்திப்பு ———————————————————- புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன்  ஆர்நல்ல...