Saturday, April 4, 2020

அரைகுறைப்_பாமரன், #கணக்கன்_என #தமிழகம_அறிந்த #தினமணியின்_அன்றைய_ஆசிரியர் #ஏஎன்எஸ்

#அரைகுறைப்_பாமரன், #கணக்கன்_என #தமிழகம_அறிந்த #தினமணியின்_அன்றைய_ஆசிரியர் #ஏஎன்எஸ்
————————————————
ஏ. என் சிவராமன் குடும்பத்தைச் சேர்ந்த திரு கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்களின்  பதிவு பார்க்க நேர்ந்தது. என்னிடம் ஏ.என்.எஸ் எழுதிய பீகார் புரட்சி, பொருளாதாரக் கட்டுரைகள், மாகாண சுயாட்சி என்ற அத்தனை புத்தகங்களும் இருந்தன. எல்லாம் நண்பர்கள் வாங்கிச் சென்றது திரும்ப வரவில்லை.   அந்த புத்தகங்களுடைய அட்டைப் படங்களோடு இந்த பதிவு இருந்தது. ஏ.என்.எஸ் உடன் என்னுடைய தொடர்பு தினமணி கட்டுரையால் இருந்தது.




Kizhambur Sankara Subramanianன் பதிவில் சில செய்திகள்:

 பல முறை சிறைவாசம். சிறையில் இராஜாஜி காமராஜ் சதாசிவம் தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம் கல்கி பி.எஸ். ராமையா இப்படி பலரோடு அரட்டை க்கச்சேரி செய்தவர்.

காந்திஜி பட்டேல் டாக்டர் அம்பேத்கார் நேருஜி சத்திய மூர்த்தி ஜெபி கிருபாளனி தேசாய் அடல் பிகாரி  அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களுடன் நேரடி தொடர்பு அதோடு அவர்களோடு பல விஷயங்களை விவாதித்தது.

வ.ரா  பெ.நா. அப்புசாமி  உ வே சா 
கி வா ஜ  கம்பன் அடிப்பொடி  அ.ச.ஞா  நீதிபதி மு. மு. இஸ்மாயீல்  எஸ்.எஸ்.வாசன்  புதுமைப் பித்தன்  துமிலன்  அகிலன்  இப்படி பல இலக்கியகர்த்தாக்களுடன் தொடர்பு மற்றும் விவாதம்.
இப்படி எத்தனையோ முக்கியஸ்தர்களுடன்  ஏ. என் .எஸ் அவர்களுக்கு த்தொடர்பு உண்டு. 

இந்த தேசத்தின் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளிலும் 1920ல் இருந்து அவர் இறக்கும் 2001ஆம் ஆண்டு வரை அவருக்கு தொடர்புண்டு.( அவர் பிறந்த நாள் 1-3-1904)

தேச  நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒன்று சம்பந்தப்பட்டு இருப்பார் அல்லது அந்த நிகழ்ச்சியை விளக்கமாக வாசகர்களுக்குப் புரியும் படி எழுதியிருப்பார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஜெபி அவர்களுடைய பிஹார் இயக்கத்திற்கு மிகவும் உறுதுணை புரிந்து கூடவே இருந்து வழிநடத்தியவரில் சிவராமனும் ஒருவர். பீகார் இயக்கம் பற்றி ஒரு புத்தகமே இவர் எழுதியிருக்கிறார். 

முதன்முதலாக அரசியல் நிர்ணய சட்டத்தை தமிழில் சுருக்கமாக கொண்டுவந்தவர். அரசியல் நிர்ணயசபை என்னும் நூலை சுதந்திரத்திற்கு முன்பே எழுதியவர். மாகாண சுயாட்சி என்கிகிற நூலையும் இவர் மணிக்கொடி பிழைக்க வேண்டுமே என்பதற்காக எழுதினார் என்று பி. எஸ் .ராமையா ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.

இவருடைய வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை நான் விவரிக்கப் போகிறேன்.1981ல் இருந்து கடைசிவரை இவருடன் பயணித்தேன்.
•••
எனது பழைய பதிவு :
————————
டி.எஸ்.சொக்கலிங்கம்(தென்காசி) ஏ.என். சிவராமன்(கீழாம்பூர்), சில ஆண்டுகள் மாலன் இன்றைய ஆசிரியர் நண்பர் வைத்தியநாதன் (அம்பாசமுத்திரம்) எங்களுடைய நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள். அதன் ஆசிரியர் சம்மந்தமும் அனைத்து கொள்கைப் போக்குகளுக்கும் தினமணியில்  இடமளித்தவர். 

தினமணியில் அரைகுறைப் பாமரன், கணக்கன் என்று பல புனைப் பெயர்களில் எழுதிய பத்திரிக்கைத் துறையின் மூத்த முன்னோடி ஏ.என்.சிவராமன் என்னை 1979 என்று நினைவு, உயர் நீதிமன்ற எனது சேம்பர் தொலைபேசியில் அழைத்தார். (அப்போதெல்லாம் செல்பேசி கிடையாது). நீங்கள் இராதாகிருஷ்ணனனா? நான் ஏ.என்.சிவராமன் பேசுகிறேன். எங்கே இருக்கிறீர்கள் என்றார். நான் கோர்ட்டில் இருக்கிறேன் என்றேன். மாலை 4 மணிக்கு தினமணி அலுவலகத்திற்கு வரமுடியுமா என்றார். வருகிறேன் என்று சொல்லிவிட்டு மாலை 5 மணிக்கு சென்று அவரை சந்தித்தேன். அன்றைக்கு தினமணி அலுவலகம் அண்ணா சாலையில் கிளப் ஹவுஸ் ரோடில் உள்ள எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருந்தது. தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அலுவலகங்கள் இருந்தன. உங்கள் கட்டுரை நல்லாயிருக்குது என்று சொல்லிக் கொண்டே காபி வரவழைத்தார். எந்த ஊர் என்றார். நான் கோவில்பட்டி பக்கத்திலுள்ள கிராமம் என்றேன். அப்படியா எனது துணைவியார் ஊரும் கோவில்பட்டி தான் என்றார். இப்படியாக இருபது, இருபத்தைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்த நினைவுகள் இன்றைக்கும் கண்முன்னே காட்சியாக இருக்கிறது. 

மறுநாளே அந்த கட்டுரை தினமணியில் பிரசுரமானது. இன்று வரை முக்கியமான நாட்டு நடப்புகள், அரசியலைக் குறித்தான 800 கட்டுரைகள் வரை கணக்கில் வரும். இதற்கு மூலகாரணமாக இருந்தவர் ஏ.என்.சிவராமன். பெரியவர் ஏ.என்.சிவராமன் அவர்களை அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பு வரும். இன்றைக்கு தினமணி நாளிதழ் தந்த ஊக்கம், அனைத்துப் பத்திரிக்கைகளிலும் கட்டுரை எழுதக் கூடியதொரு வல்லமையையும் அடியேனுக்குத் தந்தது. 

தினமணி பிரசுராலாயம் ஆரம்பத்தில் 1940களின் இறுதியில் பல்வேறு நூல்களையும் வெளியிட்டது. 
மாநில சுயாட்சியைக் குறித்து முதன்முதலில் ‘மாகாண சுயாட்சி’ என்ற தலைப்பில் ஏ.என்.சிவராமனின் நூலை 1950 காலக்கட்டங்களிலேயே தினமணி வெளியிட்டது. இதைப் போலவே அரசியல் கோட்பாடுகள் செல்கின்ற சாக்ரடீஸ் போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் எழுதிய நூல்கள் வெளியாயின. இன்றைக்கு பாரதியின் 97வது நினைவு நாள்.  தினமணிக்கு 81வது பிறந்தநாள். 

_“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
 நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
 திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
 செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;_
_அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
 உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”_

என்ற இந்த பாரதியின் வரிகளை தாரக மந்திரத்தோடு தினமணி தொடர்ந்து செயல்படுகிறது. இன்னமும் தினமணிக்கு பணிகள் கடமைகளும் இருக்கின்றன. தினமணி திரும்பவும் தன்னுடைய நூல் வெளியீட்டு பதிப்புத் துறையையும் துவக்க வேண்டும். தன்னுடைய பக்கங்களையும் சற்று கூடுதலாக்க வேண்டும். அதனுடைய தலையங்கங்கள் நாட்டிற்கு வழிகாட்டுகின்றன. 

#தினமணி
#Dinamani
#Ksrposts
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-04-2020

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்