Sunday, April 5, 2020

#வெந்ததை_தின்று_விதி_வந்தால் #சாவோம்_என்பது_அல்ல_இந்த_உலக #வாழ்க்கை

#வெந்ததை_தின்று_விதி_வந்தால் #சாவோம்_என்பது_அல்ல_இந்த_உலக #வாழ்க்கை
————————————————-
 Right, Left, Centre, Socialism, கம்யூனிஷம், liberalism,இன தேசியம், தாராளமயமாக்கல், உலகமயாக்கல், சமப்படுத்துதல், பின்நவீனத்துவம், ஜனநாயகம், குடியரசு என்ற பல முழக்கங்களும்,இசங்கள்,கொள்கை கோட்பாடுகள் ஒருபக்கத்தில் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் நலமே பிரதானமானது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்  கோவிட் - 19 கரானா உலகையே ஆட்டிப் படைக்கிறது. ஐநாவில் வீட்டோ வல்லரசுகளான அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளே இன்றைக்கு இந்தக் கொடிய நோயை சந்திக்க முடியாமல் பெரும் சிக்கலில் உள்ளன. வியாபார சந்தைகளைத் தான் உலக மயம் என்று சொன்னோம். இன்று இந்த கொடிய நோய் உலக மயமாகிவிட்டது. பூமத்திய ரேகை நாடுகளான இந்தியா, ஆப்ரிக்கா தென் அமெரிக்க நாடுகளின் இதன் தாக்கம் சற்றுக் குறைவாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தென் ஆப்ரிக்காவில் இதனால் மரண செய்தியைக் கேட்க முடிந்தது. 




இந்தியா பெரும் மக்கள்தொகை கொண்ட, பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், தேசிய இனஙள் கொண்ட நாடு.  இவ்வளவு ஜனத்தொகைக்கு ஏற்ப வசதிகள் இல்லாத நமது நாட்டில் இந்த கொடிய கரானா நோய் தாக்கியுள்ளது. ரஷ்யா வடகொரியாவில் இந்த நோயின் தாக்கம் இல்லையென்றாலும் அங்கு இதுகுறித்த அச்சம் இல்லமல் இல்லை. ரஷ்யாவிலிருந்து செய்திகள் வெளிவருவது இல்லை. இந்தியாவில் மக்கள்தொகை பிரச்சினை, பொருளாதார சரிவுகளுக்கு இடையில் இந்தக் கொடிய நோயினை எதிர்கொள்கிறோம். இதற்கு அரசியலுக்கு மதங்களுக்கு அப்பால் மற்ற நாடுகளை விட நாம் ஒருவிதத்தில் எதிர்கொள்கின்றோம் என்ற நமக்கு ஏற்பட்ட ஆறுதலை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் பேரிடரில் இருந்து வெளிவந்து இந்த அகிலத்தை காப்போம். நம்மிடையே இருக்கும் அரசியல், கொள்கை சச்சரவுகள்,  இனப்பிரச்சினைகள், பிரிவுகள், எதிர்வினைகள் என்பதெல்லாம் வேறு விடயம். இப்போது உலகத்தையும் மனித நேயத்தையும் காத்து உலக சகோதராத்துவத்தைப் போற்றுவோம். மக்கள் நல அரசியல் என்பதை மனதில் கொள்வோம்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
05.04.2020
#ksrposts
•••••••••••
கண்ணில்பட்டகல்லாதது உலகளவு பதிவை அவசியம் படியுங்கள.இதுதான்
வாழக்கையா?

"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?" என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதினார். Covid-19-இனால் இறந்தால் மட்டுமல்ல, தொற்றுண்டால் கூட இந்த வரிகளிலிருக்கும் எந்த உறவுகளும் உங்கள் உடலை நெருங்க முடியாதென்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள் !!   

இப் பதிவில் இணைத்திருக்கும் படமானது, இங்கிலாந்தைச் சேர்ந்த Ismail Mohamed Abdulwahab என்னும் 13 வயதுச் சிறுவனின், 03/04/2020 அன்று நடந்த ஈமச் சடங்கில் எடுக்கப்பட்டதாகும். இங்கிலாந்தில் "சிறுவர்கள்" என்னும் வகையில் Covid-19-க்கு இறந்த முதலாவது சிறுவன் இவராவார் (first child in the UK to die from Covid-19). ஏற்கனவே எந்த விதமான உடல் நலப் பிரச்சனையுமில்லாத இச் சிறுவனிடம் Covid-19 சார்பான அறிகுறிகள் 23/03/2020 அன்று தென்படத் தொடங்கியுள்ளன. 26/03/2020 அன்று மருத்துவ ஊர்தி (ambulance) மூலம் இங்கிலாந்திலுள்ள புகழ் பெற்ற, சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையான King's College Hospital-க்கு எடுத்துச் செல்லப்பட்டு, உடனடியாக ventilator-இல் (சுவாசப்பையின் வேலையைச் செய்யும் செயற்கைச் சுவாச இயந்திரம்) இணைக்கப்பட்டார். இவருக்குக் Covid-19 இருப்பது அடுத்த நாள் ஊர்ஜிதப்பட்டது. தூண்டப்பட்ட கோமா நிலைக்கு (induced coma) உடனே இவர் உட்படுத்தப்பட்டார். 30/03/2020 அன்று அதிகாலை இவருடைய சுவாசப்பை செயலிழந்து, இதயம் இயங்காமல் நின்று (cardiac arrest) இறந்து போனார். Covid-19 தொற்றுக் காரணமாக வைத்தியசாலை போனதிலிருந்து இச் சிறுவனைப் பார்க்க யாருக்கும் அனுமதியில்லை. இறந்த பின்பும், இறந்த உடல்களைப் பாதுகாக்கும் அறையிலிருந்து (mortuary) நேரடியாக இவரது உடல் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுப் புதைக்கப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன் புற்று நோயினால் (cancer) இச் சிறுவனின் தந்தை காலமாகி விட்டார். இவரது 6 சகோதர சகோதரிகளில், இரண்டு பேருக்குக் Covid-19-இன் அறிகுறிகள் தென்பட்டதால், இவரது தாய் உட்பட்ட முழுக் குடும்பமும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் (self-isolation). இவரது ஈமச் சடங்கைத் தூர நின்று நேரில் பார்க்கவும் இவர்களால் முடியவில்லை. Covid-19-இனால் இறந்தவர்களின் உடல்களை நேரில் பார்ப்பதற்கு உறவினர்கள், நண்பர்கள் யாருக்குமே அனுமதியில்லை. 

Covid-19-இன் தாக்கத்தின் பயங்கரத்தை ஓரளவு புரிந்து கொள்ளக் கூடிய வயதிலிருக்கும் 13 வயதுச் சிறுவன், தனக்கும் அது சம்மந்தமான அறிகுறிகள் தென்படுகின்றனவென்று தெரிந்து கொள்கையிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உறவினர்கள் யாரும் அருகேயின்றித் தனியே நோயோடு போராடுகையிலும் எவ்வளவு பயந்திருப்பார்? வழக்கம் போலில்லாது, முகமூடி, பாதுகாப்புக் கவசமணிந்த வைத்தியர்கள், தாதிமார்கள் கொண்ட வைத்தியசாலையின் சூழல் அச் சிறுவனுக்கு எவ்வளவு பயத்தைக் கொடுத்திருக்குமென்று நினைக்கையில் மனம் மிகவும் பதறுகிறது. நோயின் தாக்கம் மருத்துவத்தின் கைகளை மீறுகையில், சிறுவனை அவர்கள் மயக்க நிலையில் வைத்திருந்ததினால், தனக்கு என்ன நடக்கிறது, தான் சாகப் போகிறேனென்பதைச் சிறுவன் உணர்ந்திருக்க மாட்டாரென்பது கொஞ்சம் ஆறுதல் தருகிறது. ஆனால் இச் சிறுவனின் குடும்பத்தினரைக், குறிப்பாகத் தாயாரை நினைக்கையில் மிகவும் வலிக்கிறது. தாயின் அரவணைப்பை இன்னும் முற்றிலும் விட்டு விலகாத சின்ன வயது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், அவரின் பக்கத்தில் நின்று, அவரது தலையைத் தடவவோ, ஆறுதல் வார்த்தை சொல்லிப் பயத்தைப் போக்கவோ அல்லது இறந்த பின் அவரது உடலைக் கட்டியணைத்துக் கதறித் தன் வேதனையை ஓரளவு குறைக்கவோ அத் தாய்க்கு முடியவில்லை. திரும்பத் திரும்ப இவற்றை நினைத்து, இறக்கும் வரை அத் தாய் வேதனையை அனுபவிக்கப் போகிறார். ஐந்து வருடங்களுக்கு முன் நோயினால் கணவனை இழந்து, தற்போது எதிர்பாராது திடீரென மகனை இழந்து, அந்த அதிர்ச்சியை உள்வாங்கும் முன்பே, இத் தாயின் மற்றைய இரு பிள்ளைகளுக்கும் Covid-19 அறிகுறிகள் தென்பட்டுள்ளன. உறவினர்கள், நண்பர்கள் யாரும் ஆறுதலுக்கோ, உதவிக்கோ இவர்கள் அருகே தற்போது செல்ல முடியாது. இத் தாய் எவ்வளவு பயத்தையும், வேதனையையும், நிலையற்ற வாழ்க்கையின் மேலுள்ள விரக்தியையும் தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பார்? 

நான் வசிப்பதும் இங்கிலாந்தில் தான். சீனாவில் Covid-19-இன் தாக்கம் அதிகரிக்கையில், அந்த நோய் இங்கு வராது என்று தான் ஐரோப்பாவிலுள்ள பலரது எண்ணமாகவிருந்தது. ஒரு மாதத்திற்குள் இத்தாலி நாட்டில் இந்த நோய் உச்சமடைகையில், இங்கிலாந்துக்குப் பரவினாலும் "எங்களால் சமாளிக்க முடியும்" என்ற மன நிலையே இங்கிருந்தது. ஆனால் இரு வாரங்களுக்குள் இங்கு நிலைமை மோசமாகி, "Lockdown" என்னும் பெயரில், மக்களை வீடுகளுக்குள் இருக்கக் கட்டுப்படுத்தும், ஊரடங்குச் சட்டமின்றிய சட்டம் கொண்டு வரப்பட்டது. பாடசாலைகள், நிறுவனங்கள், உணவு, அத்தியாவசியப் பொருட்கள் சாராத கடைகள் காலவரையின்றி மூடப்பட்டன. சுய தொழில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மக்கள் கூடுவது குற்றமாக்கப்பட்டது. தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவது தடுக்கப்பட்டது. அதிகப்படியான மக்கள் அரசின் வேண்டுகோளிற்குக் கட்டுப்பட்டு, இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கின்றனரென்றே சொல்லலாம். இருந்தும் இங்கிருக்கும் அதி உயர்ந்த மருத்துவ வசதியானது இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாமலும், இறப்பின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாமலும், தேவைப்படும் மருத்துவ வசதிகளின் கையிருப்புப் பற்றாக்குறையின் சவாலை எதிர்கொள்ள முடியாமலும் தற்போது திண்டாடுகிறது. இதனால் Covid-19 நோய் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வைத்தியசாலை சென்றால் மருத்துவ வசதி கிடைக்குமாவென்ற நிலை இங்கு எழுந்துள்ளது. வைத்தியசாலைகளிலும் Covid-19 தவிர்ந்த மற்றைய நோய்களுக்குரிய மருத்துவ சேவைகள் மிகக் குறைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர Covid-19-இனால் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை, வருமானத்தை இழந்துள்ளார்கள். வயதானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, யாரினதும் உதவியின்றி பல்வேறு பிரச்சனைகளால் தம், தம் வீடுகளிலேயே இறக்கிறார்கள். வேறு நோய்கள் எதுவுமில்லாத இளம் வயதினரையும், சிறுவர்களையும் இந்த நோய் தாக்காது அல்லது தாக்கினாலும் அவர்கள் இலகுவில் மீண்டு வருவார்களென்றிருந்த நம்பிக்கையைக் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடைபெற்ற இளம் வயதினரின் இறப்புகள் பொய்யாக்கி விட்டன.  

இந்த நோயின் உக்கிரம் இங்கிலாந்தில் உச்சமடைய நேரமெடுத்தது போல், இந்தியாவிலும் உச்சமடைய இன்னும் 2 வாரங்களோ அல்லது அதற்குக் கொஞ்சம் கூடுதலான காலமெடுக்குமென்றே தோன்றுகின்றது. அதாவது இந்தியா இன்னும் இந்த நோயின் உக்கிரத்தைச் சந்திக்கவில்லை, ஆனால் சீக்கிரம் சந்திக்குமென்றே எனக்குத் தோன்றுகிறது. இங்கிலாந்தில் வருமானமில்லையெனில் அரசாங்கம் உடனே நிதி, வீடு கொடுக்கும். எத்தனை லட்சங்கள் முடியக் கூடிய, நவீன வைத்திய சேவைகளும் இந்த நாட்டுக்குரிய மக்களுக்கு இலவசம். அதனால் பட்டினி, மருத்துவமின்றிய வாழ்க்கை இங்கில்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை இங்கு வழக்கத்திலில்லை. ஒரு அறையில் பலர் தங்கும் நிலையுமில்லை. இதனால் Covid-19 ஒருவருக்கு வந்தாலும், தனிமைப்படுத்தலென்பது இலகு. இவ்வளவு வசதிகளிருந்தும், இங்கிலாந்து இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இத்தகைய சலுகைகள் கிடையாது அல்லது மிகக் குறைவு. உங்களிடம் வசதிகள் இருக்கலாம். ஆனால் ஒரே அறையைப் பகிரும் வாழ்க்கையைப் பல பேர் உங்கள் சூழலில் வாழலாம். இவர்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்துச் செயற்படுங்கள். தம்மைத் தனிமைப்படுத்த இவர்கள் எங்கே செல்ல முடியும்? இவர்களிடம் மருத்துவம் செய்யப் பணமிருக்குமா? இலவச அரசு வைத்தியசாலைக்குச் சென்றாலும், இந்த நோய் தாக்கிய ஆயிரக்கணக்காக நோயாளிகளால் மருத்துவமனைகள் நிறைந்திருக்கும் தருணம் வருகையில், இவர்களுக்கு அங்கு இடமிருக்குமா? நோய் வராமல் தடுப்பதே இவர்களுக்கிருக்கும் ஒரே சிறந்த வழி. அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் உதவி மிக இன்றியமையாதது. இந்தியாவில் Covid-19-ஐக் கட்டுப்படுத்தத் தற்போது காணப்படும் ஊரடங்குச் சட்டம், தற்பாதுகாப்புச் சட்ட திட்டங்கள் உங்கள் உயிரையும், மற்றவர்களின் உயிரையும் காப்பாற்றப் போடப்பட்டவை. இவற்றை நீங்கள் தீவிரமாகக் கடைப்பிடிப்பது அரசிற்கு நீங்கள் செய்யும் உதவியல்ல. உங்கள் உயிரையும், உங்கள் குடும்பத்தினரின், அயலவரின் உயிரையும் காப்பாற்றும் தனி மனித முயற்சியே. 

தயவு செய்து முடிந்த வரை உயிருடன் வாழ முயலுங்கள். "என் உயிரில் உனக்கென்ன அக்கறை?" என்று என்னிடம் கேட்கத் தோன்றினால், தாராளமாகச் செத்துப் போய் விடுங்கள். ஆனால் உங்கள் அலட்சியப் போக்கால் மற்றவர்களையும் கொன்று விடாதீர்கள் !! நன்றி 🙏 

PS:
உங்கள் சூழலில் அன்றாடம் உழைத்து, அந்த வருமானத்தில் அன்றைய உணவை உண்ணும் நிலையில் பல குடும்பங்கள் கண்டிப்பாகவிருக்கும். நோய் ஒன்று உலகையே உலுக்கும் நிலையிலும், நாளை அது உங்கள் வீட்டின் கதவையும் தட்டலாமென்னும் நிலையிலும், உணவுப் பொருட்களை விளைவித்து, அதைத் தருவித்து, விற்பனை செய்யும் வரை அந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பல வித மக்கள் இந்த நோய்க்கு ஆளாகினால், உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்கிற நிலையிலும், பல வித உணவு வகைகளை நீங்கள் தாராளமாகச் சமைக்கையில், அவற்றைப் படமெடுத்து முகநூலில் பதிய வேண்டுமென்று நினைத்தாலும், கூடவே நோயினால் உணவின்றி அல்லற்படும் மனிதர்களில் ஒரு சிலருக்காவது ஒரு வேளையாவது கஞ்சியளிக்க வேண்டுமெனவும் நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு உணவளிக்கையில் அதைப் படமெடுத்து முகநூலில் பதிய நினைக்காதீர்கள். இன்னொரு உயிருக்கு உதவி செய்வதென்பது, அதுவும் இத்தகைய சூழலில், அனைத்து மனிதர்களிடமிருக்க வேண்டிய "மனிதாபிமானம்" எனப்படும் குணமாகும். படமெடுத்துப் பதிவிடுவதற்கு மனிதாபிமானமென்பது எமது சாதனையல்ல !! கல்லாதது உலகளவு

Main photo: Photographer unknown.

No comments:

Post a Comment

2023-2024