Wednesday, January 15, 2020

*#வட்டுக்கோட்டை_தீர்மானம்-44* #ஈழம்

.

*#வட்டுக்கோட்டை_தீர்மானம்44*
#ஈழம் 
-------------------------
தந்தை  செல்வா   காலத்தில் வட்டுக்கோட்டையில் கூடி இனிமேல் சிங்களர்களோடு இணைந்து வாழ முடியாது. சகவாழ்வுக்கான வாய்ப்புகள் இல்லை. அப்படியே நினைத்தாலும் தமிழினம் அழிந்துவிடும் என்ற நிலை. தனி வாழ்வுதான் என்ற ஈழ வரலாற்றில் வட்டுக்கோட்டையில் வடித்த தீர்மானம் ஈழம் என்ற சுதந்திர தாகத்துக்கு அடிப்படை விதையாகும். சரியாக இந்த தீர்மானம் நிறைவேற்றி 44 ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டது. நேற்றைக்கு மே தினம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நடத்திய பாட்டாளி வர்க்க மக்களின் மே தினம் 2016  எழுச்சி  நிகழ்வு பருத்தித்துறை சிவன் ஆலய திருமண மண்டபத்தில் பிற்பகலில் நடத்தி இன்றைக்கு ஈழத்தில் தமிழர்களுக்கு என்ன தேவை என்று வலியுறுத்துகின்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானங்கள் இன்றைக்கு பிரதானமானவை மட்டுமல்ல. இவை கவனத்தில்கொண்டு தீர்வு எட்டப்பட வேண்டியவை. 
இந்த பிரச்சினைகளிலாவது சிங்கள அரசு கவனிக்க சர்வதேச சமுதாயம் வலியுறுத்த வேண்டும்.




1. இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையிலான அரசியல் தீர்வை நோக்கி தமிழ்த் தேசத்தின் அரசியலை முன்னெடுப்போம்.

தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழித்து   இலங்கைத்தீவை ஒரே(தனிச்சிங்கள) தேசமாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் கடந்த 66 ஆண்டுகளாக ஆட்சிப்பீடமேறிய சிங்கள பௌத்த ஆட்சியாளர்களைப் போன்றே தற்போதும்; 'நல்லாட்சி' வேடமிட்டு ஆட்சியேறியுள்ள அரசும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் கட்டமைப்புசார் இன அழிப்புச் செயற்பாடுகளைத் தடுத்து தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாக்கக்கூடிய வகையில் இறைமை அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் இணைந்த ஒரு நாடு என்ற அரசியல் தீர்வு அடையப்படல் வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் வேணவாவாக இருந்து வருகின்றது. அந்த வகையில் கடந்த 2009 மே மாதம் 18ம்ர பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அந் நிலைப்பாடு தொடர்ந்தும் உறுதியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எமது இவ் அடிப்படைக் கோட்பாடுகளை வலியுறுத்தி அதனடிப்படையிலான அரசியல் தீர்வு யோசனை ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முழுமையான பங்குபற்றுதலுடன் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த தீர்வுத் திட்ட யோசனை தமிழ் மக்களது இனப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு உகந்ததாக அமையும் என்பதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தி நிற்கின்றது.

தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனையின் அடிப்படையில் அரசியல் தீர்வை அடைந்து கொள்வதற்காக தாயகம், தமிழகம், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் அணிதிரண்டு உழைக்க முன்வரவேண்டும் என அறைகூவல் விடுக்கின்றோம். அந்நோக்கத்திற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அற்பணிப்புடன் செயற்படும் என்பதனை உறுதி கூறுகின்றோம்.

2. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஸ்ரீலங்கா அரசு உறுதியளித்தவாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென குரல் கொடுப்போம்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரான கொடூரமான சட்டம் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது அச்சட்டம் நீக்கப்படல் வேண்டும் என கடந்த 2015 செப்ரெம்பரில் நிறைவேற்றிய தனது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது. அந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசும் ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பிரகாரம் தவறானதென சுட்டிக்காட்டப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படல் வேண்டும். அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும். என்பதுடன் தொடரும் கைதுகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

3. சுண்ணாகம் நிலத்தடி நீர் பிரச்சினைக்கு தீர்வுகாண குரல்கொடுப்போம். யாழ் குடாநாட்டில் பல இலட்சம் மக்களின் இருப்பை பாதிக்கும் வகையில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு ஒயில் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண பிரதேச மக்களுடன் இணைந்து போராடுவோம்.

4. சம்பூர் அனல் மின்நிலைய பாதிப்பிலிருந்து அப்பிரதேசத்தை பாதுகாக்க குரல் கொடுப்போம்.

சம்பூரில் அமைக்கப்படும் அனல் மின்நிலையத்தினால் அப்பிரதேசத்தில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் என்பதனால் அத்திட்டத்திற்குப் பதிலாக பிரதேசத்திற்கு பாதிப்பில்லாத வேறு திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதேச மக்களுடன் இணைந்து மேற்கொள்ளுவோம்

5. இனவழிப்பு, போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுப்போம்.

சிறீலங்கா அரசு தான் மேற்கொண்ட சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களை மறைப்பதற்காக சர்வதேச விசாரணையை நிராகரித்து உள்ளக விசாரணை என்கிற நாடகத்தை மேடையேற்றுகின்றது. குற்றவாளியே நீதிபதியாக மாறுவதை நாம் அனுமதிக்க முடியாது. எமது மக்களுக்கு நீதி தேவை. நாம் உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம். நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற இனவழிப்பிற்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு சர்வதேசத்தை வலியுறுத்துகின்றோம்.

6. அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும்

நீணடகாலமாக சிறீலங்கா அரசின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க தொடர்ந்து போராடுவோம்.

தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா அரசின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் பழிவாங்கல் நோக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் உட்பட சிறைகளிலும் புனர்வாழ்வு நிலையங்களிலும் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும் என வலியுத்துகின்றோம்.

அவர்களின் விடுதலைக்காகவும், அவர்களது குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் நாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.

7. எமது நிலம் எமக்கு வேண்டும், எமது கடல் எமக்கு வேண்டும் எமது நிலத்தையும் கடலையும் மீட்டெடுப்போம்.

எமது நிலத்தை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது. சிங்களவர்களைக் குடியேற்றி பலவந்தமான முறையில் கபளீகரம் செய்கின்றது. இராணுவ மயமாக்கம் செய்கின்றது. சம்பூர், கேப்பாபிலவு, வலிவடக்கு உள்ளிட்ட எமது மக்களின் வளமான வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எமது கடலை சிங்கள மீனவர்களும் வேறு நாட்டு மீனவர்களும் ஆக்கிரமிக்கின்றனர். எமது மீனவர்களின் வலைகளை அறுத்தெறிகின்றனர். தடுக்கப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி கடல் வளத்தைப் பச்சையாகச் சூறையாடுகின்றனர். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி எமது நிலத்தையும் கடலையும் மீட்டெடுப்போம்.

8. விவசாயிகள், தொழிலாளர்கள் உரிமைகளுக்காகப் போராடுவோம்

நில ஆக்கிரமிப்பு, தென்னிலங்கை விவசாய உற்பத்திப் பொருட்களின் வருகை, இராணுவத்தின் விவசாய உற்பத்திகளினது வருகை, விவசாய உள்ளீடுகளின் விலை அதிகரிப்பு என்பவற்றினால் எமது விவசாயிகள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். விவசாயத்தை நம்பியதால் கடனாளியாகியுள்ளனர்.

எமது தொழிலாளர்கள் தென்னிலங்கைத் தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பினாலும் வர்த்தக நிறுவனங்களின் படையெடுப்பினாலும் தமது தொழில்களை இழந்துள்ளனர். கட்டடத் தொழில், வீதி அபிவிருத்தி என்பவற்றைத் தென்னிலங்கைத் தொழிலாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இவற்றைத் தடுத்து நிறுத்தி எமது விவசாயிகளினதும், தொழிலாளர்களினதும் உரிமைகளுக்காகப் போராடுவோம்.

9. காணாமல் போனோர் விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்கி சர்வதேச விசாரணைக்காக குரல் கொடுப்போம்

காணாமல் போனோரின் குடும்பங்கள் தங்கள் உறவுகளின் உண்மை நிலை தெரியாது நீண்ட நாட்களாகத் தவிக்கின்றனர். சிறீலங்கா அரசு கண்துடைப்புக்கு ஆணைக்குழுவினை உருவாக்கி விசாரணைகளை மேற்கொண்டதால் உரிய பயன் எதுவும் கிடைக்கவில்லை. நாம் இந்த விவகாரத்தை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வோம். சர்வதேச விசாரணைக்காகக் குரல் கொடுப்போம்.

10. போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், பொதுமக்களின் நலன்களுக்காக சமூகமாக ஒன்றிணைந்து பாடுபடுவோம்

தமிழ் மக்களின் விடுதலைக்காக செயற்பட்ட பொதுமக்களும் முன்னாள் போராளிகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டவண்ணமுள்ளனர். தமிழ் மக்களின் நலன் என்ற பொதுநோக்கம் காரணமாக பாதிக்கப்பட்டதனால் இவர்களை சமூகமே பொறுப்பெடுக்க வேண்டும். தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள் இத்துயரங்களைச் சுமக்க அனுமதிக்க முடியாது. இந்தப் பெரும் துயரத்தை அவர்களினால் தனித்து சுமக்கவும் முடியாது. சமூகமாக ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களின் நலன்காக்க முயற்சி செய்வோம்.

11. தமிழ் பெண்கள் அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெற ஒன்றிணைந்து போராடுவோம்

தமிழ் பெண்கள் இன்று ஆணாதிக்கம், வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை என மூவகை ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். இன ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. தமிழ்ப் பெண்கள் என்பதற்காகவே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். துணைகளை இழந்ததால் ஆயிரக்கணக்கில் குடும்பத்தின் ஒற்றைத் தலைவர்களாயுள்ளனர். அவர்கள் சுமக்கும் துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. தமிழ்ப் பெண்கள் அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலைபெற அவர்களை அமைப்பாக்கி ஒன்றிணைந்து போராடுவோம்.

12. நில உரிமை, வீட்டுரிமை உட்பட மலையக மக்களின் தேசிய உரிமைகளை உறுதிப்படுத்த குரல்கொடுப்போம்

மலையக மக்கள் தங்களை ஒரு தனியானதேசமாகஅடையாளப்படுத்துகின்றனர். அதனை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். மலையக தேசத்தை தாங்கும் துண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம், மக்கள் கூட்டம் என்பன தொடர்ச்சியாக சிதைக்கப்பட்டு வருகின்றன. இன்று உலகில் தாம் உருவாக்கி வளப்படுத்திய நிலத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாதவர்களாக இருப்பவர்கள் மலையக மக்கள்தான். தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ்  மக்களின்  அரசியல் பெருவிருப்பினை 1976 இல் உலகிற்கு முரசறைந்த    வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்   நாற்பதாவது எழுச்சியாண்டில் நாம் இன்று காலடி பதித்துள்ளோம். 14.05.1976 அன்று தந்தை சா.ஜே.வே செல்வநாயகம் அவர்களின் தலைமையில்; நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது தமிழ் மக்கள் தாம் பட்டறிந்த அனுபவங்களின்;படி எக்காலத்திலும் சிங்கள பௌத்த  பேரினவாத அரச கட்டமைப்புக்குள்;  வாழ்தல் சாத்தியமற்றது என்பதனைத் தெளிவாக முரசறைந்தது. 1977ஆம் ஆண்டுப் பொதுத்  தேர்தலின் போது இத்தீர்மானத்தை  தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டு போட்டியிட்ட   வேட்பாளர்களுக்கு வாக்களித்து தமிழ் மக்கள்  தமது தெளிவான  ஆணையையும் வழங்கியிருந்தனர்.  

இன்று நாற்பத்தி நான்கு ஆண்டுகள் கழிந்த பின்;னரும் 1977ம் ஆண்டுத் தேர்தலின்போது வழங்கப்பட்ட ஆணை மக்கள்  மனங்களில்  இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. 1983இல் கருத்துச் சுதந்திரத்தை மறுதலிக்கும் வகையில்  கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டமூலம் தமிழீழம் எனும் தனிநாட்டை அரசியற் தீர்வாக ஏற்றுக்கொள்வது பற்றிப் பேசுவதையே தண்டனைக்குரிய குற்றமெனப் பிரகடனப்படுத்தியதன் மூலம், தாயக  மக்கள்  தமது உண்மையான அரசியல் விருப்பைத் தெரிவிக்கவல்ல அரசியல்வெளி இன்று மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சர்வதேச  சட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்;படையில் ஈழத் தமிழ் மக்கள் தமது தன்னாட்சி உரிமையினை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் நடாத்தப்பட்ட பெரும் இனவழிப்புப் போர் மூலம் தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து,  தமிழ் மக்களின் விடுதலை வேட்கையினை சிறிலங்கா அரச பயங்கரவாதம் அடக்கிவிட   நினைத்தாலும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் மூச்சில் தமிழீழ விடுதலை பற்றிய கனவும் எண்ணங்களும் கலந்தே உள்ளன. முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு சிங்கள பௌத்த  பேரினவாத  அரச கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் வாழ்தல் சாத்தியமே அற்றது என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

போர் ஒன்றின் ஊடாகத்  தாம்  பெற்ற இராணுவ  வெற்றியினை சிங்கள ஆட்சியாளர்கள் அரசியல் வெற்றியாக்க முனைகின்ற நிலையும், அனைத்துலக அரசுகள்  தமது  நலன்களின் அடிப்படையில் அமைந்துள்ள சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்தினைத் தக்கவைப்பதில்; கொண்டுள்ள அக்கறையும் இன்று ஒரே புள்ளியில் சந்திக்கின்றன.

ஈழத்தமிழர்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்தி நிற்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பத்தி நான்கு ஆண்டு நிறைவும், தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்குத் தீர்வு வழங்குவதாகக் கூறி புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை வரைவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எடுக்கும் முயற்சிகளும் இவ்  ஆண்டில்  எதிரெதிரே சந்திக்கின்றன. மறுபுறத்தில் இயல்பு வாழ்க்கை மறுக்கப்பட்டு, இராணுவ நெருக்குவாரங்களுக்குள் வாழும் தமிழ் மக்கள், ஆறாம் திருத்தச்சட்டம் அமுலில் உள்ள நிலையில், தமது அரசியல் வேணவாக்களைவெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈழத்தமிழர்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்தவதற்கு ஐ.நா. மேற்பார்வையில் முறையிலான வாக்கெடுப்பினை நடாத்துவதன் அவசியத்தினை நாம் வலியுறுத்தி நிற்கும் அதே வேளையில், இவ்விடயத்தில் ஈழத் தாயகமும் - புலம் பெயர் மக்களும் - தமிழகமும் -  உலகத் தமிழர்களும் இணைந்து ஒன்றையொன்று வலுப்படுத்தும் வகையிலான மூலோபாயத்துடன் செயற்திட்டங்களை முன்னெடுக்க  வேண்டியுள்ளது.




கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
15-01-2020.
#ksrpostings
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...