Thursday, January 23, 2020

Netaji நேத்தாஜி

" நான் தமிழனாக அடுத்த பிறவியில் பிறக்க வேண்டும்" - #நேதாஜி
பிறந்தநாள் இன்று

Humble tributes to Netaji #SubhashChandraBose anniversary.

வங்கம் தந்த சிங்கம் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய 10 சுவாரஸ்யமான விஷயங்கள்

இந்திய வரலாற்றின் ஒப்பற்ற நாயகன். வரலாற்றை அலைக்கழிக்கும் ஓர் அழியா சரித்திரம் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினம் இன்று. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய தலைவலியாய் விளங்கிய, இந்திய இளைஞர்களின் கனவாய் வாழ்ந்த இந்த சிங்கம் வங்கத்தில் உதித்த தினம் இன்று. இவரது மரணம் வேண்டுமானால் சர்ச்சைக்குள்ளானதாக இருக்கலாம், ஆனால் இந்திய சுதந்திரத்திற்கான இவரது முழக்கங்களும் போராட்டங்களும் அழியாப்புகழ் பெற்றவை. நேதாஜி என்ற ஒற்றைச் சொல்லை சொன்னால் ஒவ்வொருவரின் ரத்த நானங்களும் துடிப்பது எதனால், ஆங்கிலேயர்கள் இந்த ஒற்றை மனிதனைப் பார்த்து அரண்டது எதனால்? ஏன் இவருக்கு மட்டும் அப்படியொரு தனித்துவம்?இதோ…

ஐ.சி.எஸ் பதவியை உதரினார்:

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஐ.சி.எஸ் தேர்வில், இந்திய அளவிலேயே நான்காம் இடம்பெற்று தேர்ச்சியடைந்தார் சுபாஷ். மிகப்பெரிய பதவி.. சர்க்கார் உத்தியோகம்… ஆனால் அவையெல்லாம் ஆங்கிலேயர் முன் அவரை மண்டியிடச் செய்யவில்லை. தேர்ச்சி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை மான்டேகு பிரபுவிடம் அளித்தார் சுபாஷ். மதிப்புமிக்க பதவியை உதரித்தள்ளிய அவரைப் பார்த்து, “உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா” என்று அவர் கேட்டதற்கு, “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது” என்று சொல்லி அவருக்கே அதிர்ச்சயளித்தார்.

சிறையிலிருந்தே சீறினார்:

1924ம் ஆண்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நேதாஜி. அந்த மோசமான சிறையிலேயே அவரை முடக்க நிணைத்தது ஆங்கில அரசு. ஆனால் அப்போது நடந்த வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தவாரே வெற்றி வாகை சூடினார் போஸ். அதுதான் வங்க மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை. இந்த வெற்றி தான் ஆங்கில அரசின் கூரிய பார்வையை போஸின் பக்கம் திருப்பியது. தங்களது தடங்கல்கள் அத்தனையையும் மீறி ஒருவரால் சிறையிலிருந்து வெல்ல முடிகிறது என்றால், இவர் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பிரிட்டிஷ் அரசை உணர வைத்தது அந்த வெற்றி.

விடுதலையை நிராகரித்தார்:     

மாண்டலே சிறையில்,போஸ் அவர்கள் காச நோயால் அவதிப்பட, அனைவரும் அவரை விடுவிக்கச் சொல்லி போராட்டம் செய்தனர். அவரது உயிர் ஆபத்தான நிலையை எட்டியதால் இரண்டு நிபந்தனைகளோடு அவரை விடுதலை செய்ய நினைத்தது பிரிட்டிஷ் அரசு. ஒன்று, சுபாஷ் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 3 ஆண்டுகள் இந்தியாவில் நுழையாது இருத்தல் வேண்டும் என்பது. சுபாஷின் தாய், சகோதரர் உட்பட அனைவரும், அவர் விடுதலை ஆனால் போதும் என்று நினைத்திருக்க, “நான் ஒன்றும் கோழையல்ல மன்னிப்புக் கேட்க. என்னை என் நாட்டுக்கள் வரக்கூடாதென்று சொல்ல இவர்கள் யார்? இந்த நிபந்தனைகளை என்னால் ஏற்க முடியாது” என்று சொல்லி விடுதலையாக மறுத்துவிட்டார் சுபாஷ். மரணத்தின் பிடியிலும் மங்காமல் ஒலித்த அந்த சிங்கத்தின் கர்ஜனைக்கு அரசாங்கம் அரண்டுதான் போனது.

தி கிரேட் எஸ்கேப்:

இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்கக் ஒரு நிகழ்வு தான் காரனம். வீட்டுச் சிறையில் பயங்கர கண்கானிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயனம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். சுபாஷைக் காணவில்லை என நாடே அல்லோலப்பட, ஜெர்மனியிலிருந்து சுபாஷ் அவர்கள் முழங்க, மொத்த உலகமும் இந்தப் போராளியைப் பார்த்து வியந்தது. தன் நாட்டின் சுதந்திரத்திற்காக, தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் செல்ல முடியுமா என்று ஜப்பான்,இத்தாலி போன்ற நாடுகளே இவரை வியந்து போற்றின. உலகின் தலைசிறந்த எஸ்கேப்களில் சுபாஷின் பெயருக்கு ஸ்பெஷல் இடம் உண்டு.

ஹிட்லரிடம் முறைப்பு:

ஜெர்மனியில் ஹிட்லரை சுபாஷ் அவர்கள் சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். என்னதான் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், சுபாஷின் தேசப்பற்று அவரை கோபமடையச் செய்தது. இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட, அதை எதிர்த்துப் பேசிய போஸ், அவ்வாக்கியத்தை திரும்பப் பெறச்சொன்னார். “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று ஹிட்லர் கூற, “எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்” என்று மொழிப்பெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினார் சுபாஷ். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் முன் முதல்முறையாக அப்படி ஒருவர் பேச, சுபாஷின் திராணியை நினைத்து வியந்தனர் ஹிட்லரின் உதவியாளர்கள்.

தீர்க்கதரிசி:

1938 குஜராத் காகிரஸ் மாநாட்டில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தனது முதல் உரையை வாசித்தார் சுபாஷ். “ஆங்கிலேய அரசு பிரித்தாலும் சூட்சியை இங்கு அமுல்படுத்தும். நம் தேசத்தை சுக்குநூறாக உடைக்கும். நாம் ஒற்றுமையோடு அதை எதிர்த்து வெல்ல வேண்டும்” என்று கூறினார். எது நடக்கக்கூடாது என்று அவர் நினைத்தாரோ, அதுவே ரத்தமும் சதையும் சிதற இந்நாட்டில் அரங்கேறியது. ஆங்கில அரசின் ஒவ்வொரு அசைவும் எப்படி இருக்கும் என்று நன்கு அறிந்தவர் போஸ் அவர்கள்.

ஜெய் ஹிந்த்:

இன்று பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவரும் சொல்லிவரும் ‘ஜெய் ஹிந்த்’ சுலோகத்தை முதல் முதல் பயன்படுத்தியவர் நேதாஜி தான். இந்த வார்த்தையைச் சொல்லும்போதெல்லாம் நமக்குள் எழும் அந்த தேசப்பற்று தான் அம்மாபெரும் மனிதனுக்கு நம் காணிக்கை.

ரத்தம் தா..சுதந்திரம் தருகிறேன்..

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து இந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் சுபாஷ் சந்திர போஸ். ஒவ்வொரு இளைஞனையும் தனது சீறிய பேச்சால் சுதந்திரப் போரில் பங்குபெறச் செய்தார். “ரத்தம் கொடுங்கள். நான் சுதந்திரம் தருகிறேன்” என்ற சுபாஷின் பேச்சு ஒவ்வொரு இளைஞனையும் தட்டி எழுப்பியது. இந்திய தேசிய ராணுவத்தில் சுபாஷின் ரத்தம் பாய்ச்சப்பட, அது ஆங்கிலேயரின் இந்தியப் படையிலும் பாய்ந்தது. இனி இந்திய ராணுவத்தை நம்ப முடியாது என்பதால் தான், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறியது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடலுக்கு அடியிலும் சீற்றம்:

சுபாஷின் சீற்றம் தரையில் மட்டும் வெளிப்படவில்லை. அது கடல்,கரை,காற்று,மலை அனைத்தையும் கடந்து நின்றது. ஜப்பான் சென்று இந்திய சுதந்திரப் போருக்கு ஆயத்தமாக விரும்பிய சுபாஷ், ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல் வழியாக சுமார் மூன்று மாதம் பயணம் செய்து டோக்கியோவை அடைந்தார். எங்கும் விமானங்கள் குண்டுகள் வீசி வந்த இரண்டாம் உலகப் போர் சமயம் இப்படி மூன்று மாத காலம், உயிரைத் துட்சமாய் மதித்து அவர் செய்த இப்பயணம் உலக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றது.

தமிழகத்துடனான தொடர்பு:

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில், லட்சுமி அம்மையார் படைத்தளபதியாக இருந்தது நாம் அறிந்ததே. அதுமட்டுமல்லாது, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவிடமும் நல்ல உறவைக் கொண்டிருந்தார் நேதாஜி. 1949ல் கமுக்கத்தில் நடந்த ஒரு மாநாட்டில், “நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் சரியான தருனத்தில் வருவார். என்னோடு நேரடியான தொடர்பில் இருக்கிறார்” என்று கூறீயிருந்தார் பசும்பொன் ஐயா. இவரே பார்வேர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வேண்டாம் பாரத ரத்னா:

1992ம் ஆண்டு இறந்தவர்களுக்குத் தரப்படும் ‘போஸ்துமஸ்’ முறையில் நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. “எங்கள் தலைவர் எப்போது இறந்தார்?அவர் மரணம் உண்மையில்லை” என்று கூறி பலரும் அவ்விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போஸின் குடும்பமும் அவ்விருதை ஏற்க மறுத்தது. தங்கள் தலைவனின் மரணத்தை பல ஆண்டுகள் ஆனபின்னும் கூட சிலர் ஏற்க மறுத்தனர். இதுதான் சுபாஷுக்கான மரியாதையை. 

வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இந்திய சுதந்திரத்தையே நினைத்துக்கொண்டிருந்த ஒரு மாமனிதனை நாம் ஒரு நொடியும் மறக்கக் கூடாது. அதுவே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை. அதற்கு முன்னாம் இந்த பாரத ரத்னாவெல்லாம் தூசிற்குச் சமம். அவரது சாம்பல் தைவானின் வானத்திலோ, ஜப்பானின் கோவிலிலோ இல்லை இமையமலையின் பனிகளிடையோ…எங்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அவர் பேசிச் சென்ற சொல் ஒவ்வொன்றும் சுவாசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் நாசியிலும் கலந்திருக்கிறது. அதை நாம் பரசாற்ற உரக்கச் சொல்வோம்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
#ksradhakrishnanposting #ksrposting #Netaji #bose
23-1-2020.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...