Saturday, January 18, 2020

என் டி ராமாராவ்

#என்_டி_ராமாராவ்
================

கிருஷ்ணா மாவட்டம் நிம்மகுரு கிராமத்தில் பிறந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என் டி ராமாராவின் நினைவு நாள் இன்று. கடந்த 1996 ஜனவரி 18ல் காலமானார். இருநூறுக்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்கள், பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளார்.

அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆந்திர மாநில சுற்றுப் பயணத்திற்கு சோனியாவுடன் வந்த பொழுது ஹைதராபாத் விமான நிலையத்தில் அன்றைய காங்கிரஸ் முதல்வர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அஞ்சைய்யாவை ராஜீவ் நடத்திய விதத்தை கண்டித்து ஆந்திராவின் பெருமையை காக்க தெலுங்கு தேசம் என்ற கட்சியை காங்கிரஸ் ஏகாதிப்பத்தியத்திற்கு எதிராக தொடங்குகினேன் என்று அறிவித்தார். கட்சி (1982)ஆரம்பித்தவுடன் வெற்றிகளை குவித்து ஆந்திர முதல்வரானார். மூன்று முறை ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தார்.








என் டி ஆர் விடியற்காலை 3 மணிக்கு எழுந்து விடுவார். தன்னை சந்தித்து முக்கியமான விஷயங்களைப் பேச வேண்டுமென்றால் விடியற்காலை 4 மணி வாக்கில் வரச் சொல்வார். ஈழத்தமிழர் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபொழுது அதை அக்கறையோடு விசாரித்து தன்னுடைய கருத்துக்களை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வெளிப்படுத்துவார். மதுரை டெசோ மாநாட்டில் கலந்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதெல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளது.

இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் இவருடைய ஆட்சி கலைக்கப்பட்டது. அதை கண்டித்து கடுமையான போராட்டங்கள் அகில இந்திய அளவில் எதிர்க் கட்சிகளை திரட்டி நடத்தினார். டெல்லி ராஜபாட்டையிலேயே தனது கட்சி பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து பேரணி நடத்தி குடியரசுத் தலைவரை சந்தித்து என்னுடைய ஆட்சி தர்மத்திற்கு மாறாக கலைக்கப்பட்டது, அதர்மத்திற்கு துணை போகாதீர்கள் என்று குடியரசுத் தலைவரிடம் நேருக்கு நேராக எச்சரிக்கையும் செய்தார்.

இவர் அமைத்த அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகளுடைய தோழமை வலுவாகி வி பி சிங் பிரதமராக பொறுப்பேற்க அடிகோலியது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைச் சொல்லும் பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின் “பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்” நூலினை செம்பதிப்பாக வெளியிட நான் முயற்சித்த போது அதற்கு அணிந்துரையும் ஆங்கிலத்தில் தந்தார். இந்த நூலின் மூலப் பிரதி தனித்தனியாக கிழிந்து அண்ணன் விருதுநகர் பெ.சீனிவாசன் அவர்களிடம் இருந்தது. இவர் தான் பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து விருதுநகரில் 1967 தேர்தலில் திமுக சார்பில் களம் கண்டவர். அண்னன் சீனிவாசனிடம் சண்டை போட்டு 1989 தேர்தலில் சிவகாசியில் அவர் போட்டியிட்டார், நான் கோவில்பட்டியில் போட்டியிட்டேன். அப்போது அவர் என்னைப் பார்க்க வந்தபோது அவர் காரில் இரண்டு தொகுப்பாக இருந்த நூலை அவரிடம் மன்றாடிக் கைப்பற்றியதெல்லாம் வேறு விஷயம். இந்த நூலுக்கு என்.டி.ஆர் அணிந்துரை கொடுத்தும் கடந்த 1989ல் இருந்து நான் எவ்வளவோ முயன்றும் 2019 ஜனவரியில் தான் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த நூலினை வெளியிட முடிந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் தன் வாழ்நாளில் இறுதியாக நூலுக்கு அளித்த அணிந்துரை இந்த நூலுக்குத்தான். அப்போது என்.டி.ஆர் அணிந்துரை கொடுத்தார். அதை ஒரு நூல் பதிப்பத்தகத்திடம் கொடுத்து தொலைத்து விட்டார்கள் என்று சொன்ன போது “என்னய்யா... அதுல எல்லாம் கவனமா இருக்க வேண்டாமா? என்.டி.ஆர் அணிந்துரை குடுத்துருக்கார். அது தொலைந்து விட்டது என்கிறாயே” என்றார்.

மாநில உரிமைகள் சமஷ்டி அமைப்பின் மாண்பு, ஆட்சி கலைப்பான 356 சட்டப் பிரிவு கூடாது என்று தொடர்ந்து தன்னுடைய அரசியல் களத்தில் 1982ல் இருந்து போராடியவர். மாநில கட்சிகளின் ஒருங்கிணைப்போடு தான் இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த முடியும் என்ற கருத்தை வலியுறுத்தியவர். ஹைதராபாத்தில் மாநில கட்சிகளின் மாநாட்டை நடத்தி மாநிலங்களுக்கு சுயாட்சி, மாநிலங்களுடைய மாண்பை பாதுகாக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர், ஃபாரூக் அப்துல்லா, பிரகாஷ் சிங் பாதல், அசாம் கனபரிஷத் மஹந்தா, தேவிலால் போன்ற பல தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில் மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றினார். வி பி சிங்கிற்கும் தலைவர் கலைஞருக்கும் மிக நெருக்கமாக இருந்தவர். இன்றைக்கு அவருடைய நினைவு நாள்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
18.01.2020
#ksrposts
#ksradhakrishnanposts
#NTR
#NTRamarao
#Andhra
#ஆந்திர_அரசு


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...