Sunday, January 26, 2020

மிருணாளினி_சாராபாய்

#மிருணாளினி_சாராபாய் 
————————————
மறைந்த மிருணாளினி சாராபாய் அவர்களை சோசலிஸ்ட் தலைவர் சுரேந்திரமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) மூலமாக டெல்லியில் சந்திக்க வாய்ப்பு 1990ல் கிடைத்தது.  அந்த அறிமுகத்திலிருந்து அவர் மறையும்வரைதொலைபேசியிலோ வாய்ப்பிருந்தால் சந்திப்பது உண்டு.  கலைகள் மட்டுமல்லாமல் நேர்மையான பொதுவாழ்வும் இருக்கவேண்டும் என்று விரும்பியவன்.   பல  அரசியல் கருத்துக்களையும் சந்திக்கும்போது வெளிப்படுத்தியுள்ளார். நிச்சயம் இந்திய வரலாற்றில் இடம்பெறுவார். அவர் புகழ் நிலைக்கவேண்டும்.
அவரது சகோதரர் மூத்த வழக்கறிஞர் பாரிஸ்டர் கோவிந்தசாமிநாதனும் என் மீது அன்பு பாராட்டியவர்.

மிருணாளினி சாராபாயின் (11.05.1918-21.01.2016) மரணத்துடன், 20-ம் நூற்றாண்டு இந்திய செவ்வியல் நடனத்தின் வரலாற்றை நினைவுகூரும் முக்கியப்புள்ளி ஒன்று மறைந்துள்ளது. இந்தியாவின் மரபான நாட்டிய வடிவங்களை, சமூகப் பிரச்சினைகளைப் பேசுவதற்கான வெளிப்பாட்டு வடிவங்களாக்க முடியும் என்பதை நிரூபித்த முன்னோடிக் கலைஞர் அவர்.

“என்னைச் சுற்றியுள்ள, நான் வாழும், சுவாசிக் கும் உலகத்துடனான தொடர்பை வெளிப்படுத்து வதற்கான உள்ளார்ந்த தேவையே எனது படைப்பு கள். சந்தோஷம்-துக்கம், வாழ்வு-மரணம், நேசம்-வெறுப்பு, உருவாக்கம்-அழிவு என என்னைச் சுற்றி நிகழ்பவை தொடர்பான விழிப்புணர்வைத் தூண்டுவதே எனது படைப்புகள்” என்று கூறியவர் மிருணாளினி சாராபாய்.

இந்திய விடுதலைப் போராட்ட கால கட்டத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடிய செயல்பாட்டாளர் அம்முகுட்டிக்கும் வழக்கறிஞர் சுப்பராம சுவாமிநாதனுக்கும் 1918-ம் ஆண்டு பிறந்தவர் மிருணாளினி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் கேப்டனாகப் பணியாற்றிய லக்ஷ்மி சேஹல் மிருணாளினியுடைய அக்கா.

பெண் நடனக் கலைஞர்கள் பற்றிய தவறான கருத்துகள் நிலவிய காலத்தில் மிருணாளினியை நடனத்திலிருந்து பிரிப்பதற்காகவே சுவிட்சர் லாந்துக்குப் பெற்றோர் அனுப்பினர். ஆனால் ஐரோப்பாவில் மிருணாளினி, மேற்கத்திய நடனத்தைக் கற்றார். மிருணாளி இந்தியச் செவ்வியல் நடனப் பயிற்சி பெற வேறு வழியின்றி அவருடைய அம்மா சம்மதித்தார்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியச் செவ்வியல் நடனம் மிகப்பெரிய அடையாள நெருக்கடியைச் சந்தித்தது. சதிராட்டம் என்ற பெயரில் தென்னிந்தியாவில் தேவதாசிகள் பயின்றுவந்த கலையானது புரவலர்களின்றி அருகிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டது. இச்சூழ்நிலையில் 1936-ல் மெய்ஞ்ஞான சபையைச் சேர்ந்த ருக்மிணிதேவி அருண்டேல், இந்தியாவின் மதிப்பு வாய்ந்த நடன வடிவங்களைப் புதுப்பிக்கும் வகையில் கலாசேத்ராவைத் தொடங்கினார். பாரம்பரிய நடன ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். மிருணாளினியின் தாய், தன் மகளை கலாசேத்ராவில் சேர்த்தார்.

கலாசேத்ராவில் ஓராண்டு பரதநாட்டியப் பயிற்சியை முத்துக்குமார பிள்ளையிடம் படித்த மிருணாளினி, ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனில் சேர்ந்தார். மணிப்புரி நடனத்தை அமோபி சிங்கிடமும், கதகளியைக் கேளு நாயரிடமும் பயின்றார். கதகளி மற்றும் மோகினியாட்டம் மீதான ஈடுபாடு காரணமாகக் கவிஞர் வள்ளத்தோல் நாரயண மேனனின் பள்ளியான கேரள கலாமண்டலத்தில் சேர்ந்தார். குஞ்சு குரூப்பிடம் சேர்ந்து கதகளி வடிவத்தில் தேர்ந்தார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய கதகளி மற்றும் குச்சுப்பிடியில் அவர் பெற்ற பயிற்சிதான் பின்னாட்களில் அவரது முக்கியமான படைப்புகளுக்கு உத்வேகமாக அமைந்தது.

1940-ல் பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயைக் காதல் திருமணம் செய்துகொண்டு குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் குடியேறினார். அகமதாபாத்தில் அவர் தொடங்கிய தர்ப்பணா அகாடமி, இந்தியாவின் பிரதான நிகழ்த்துகலைப் பயிற்சிக்கூடமாக விளங்கியது. “நடனத்தில் உடல்ரீதியான, மனரீதியான பயிற்சியை அடுத்து, உடல்ரீதியான பாவங்களின் ஆன்மிக இயல்பைத் தர்ப்பணாவில் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். உதாரணத்துக்கு ‘வணக்கம்’ சொல்லும் பாவத்தில் மானுடத்துவமும் பரம்பொருளும் அடையாளபூர்வமாக இணைக்கப்படுகிறது. நடனக் கலைஞர் தனது மரியாதையைப் பூமித் தாய்க்குச் செலுத்தும்போது, கைகளைச் சேர்த்து நெற்றியின் நடுப்பகுதிக்கு உயர்த்துகிறார். அது மூன்றாம் கண் என்னும் புதிய பரிமாணத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு முத்திரையும் ஆழமான அர்த்தத்துடன் புரிந்துகொள்ளப்பட வேண்டும்” என்றார்.

தனது வாழ்நாள் முழுவதும் 300 நடனப் படைப்பு களை உருவாக்கிய மிருணாளினி சாராபாய், சமூக நீதி தொடர்பான சமகாலப் பிரச்சினைகளைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார்.

அவரது சமூக ஈடுபாடு, குஜராத்தில் நலிந்துவந்த கைவினைக் கலைகளை நோக்கி அவரைத் திருப்பியது. குஜராத் அரசின் கைவினை மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்து எண்ணற்ற கலைஞர்களுக்கும் கைவினைஞர்களுக்கும் உதவினார். சுற்றுப்புறச் சூழலியலாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கியவர் மிருணாளினி. தென்னாட்டு வரம்புக்குள் இருந்திருக்க வேண்டிய பரதநாட்டிய வடிவத்தைத் தேசிய அளவில் பரப்பிய முக்கியமான கலைஞர் அவர். அவருடைய மகள் மல்லிகா சாராபாய், முக்கியமான நடனக் கலை ஆளுமை, சமூகச் செயல்பாட்டாளர்.

20-ம் நூற்றாண்டு இந்தியச் செவ்வியல் நாட்டிய வரலாற்றில் அவரைப் போன்ற வலுவான படைப்பாளுமைகள் மிகவும் குறைவே. இத்தனை வயதிலும் உடலை வருத்திக்கொண்டு அவர் நடனமாடுவது குறித்துக் கேள்வி கேட்டபோது அவர் சொன்ன பதில் இது:

“எனது நடனத்துக்கும் எனது ஒட்டுமொத்த இருப்புக்கும் எந்த இடைவெளியும் கிடையாது. எனது ஆன்மாவின் மலர்ச்சியான நடனம்தான் எனது கை கால்களில் இயக்கத்தைக் கொண்டுவருகிறது. நான் ஆடும்போதுதான் நானாக இருக்கிறேன். நடனமாடும்போதுதான் நிரந்தரத்துவமாக இருக்கிறேன். எனது அசைவுதான் எனது பதில்.”

#மிருணாளினி_சாராபாய் 

கே.எஸ்.இராதா கிருஷணன்
25-1-2020.
#ksradhakrishnanposting 
#ksrposting


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...