Wednesday, January 15, 2020

பொங்கல் திருநாள் -.

(இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ie இணையத்தில் பொங்கல் திருநாள் குறித்த எனது பத்தி....#ksrpost 15-1-2020.)


பொங்கல் திருநாள்


 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. இது அனுபவமொழியும் கூட. விவசாயிகளுக்கு அறுவடை முடிந்து தங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து மனதில் அமைதியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும் விழாக் காலம். நாம் பொங்கல் திருநாள் என்று இங்கே கொண்டாடுகிறோம். வடபுலத்தில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அறுவடை நாள் அறிவியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மக்களை நிம்மதிப்படுத்துகின்ற காலநேரமாகும். மனித நாகரிகம் துவங்கிய காலத்திலிருந்தே தை திங்களை கொண்டாட ஆரம்பித்தோம். பழைய கழித்து புதியன புகும் பொங்கலுக்காக வீடுகளைச் சுத்தப்படுத்தி வர்ணம் பூசுவது மட்டுமல்லாமல், மாடுகளுக்கும் மாடுகளின் கொம்புகளுக்கும் வர்ணம் பூசுவதுண்டு. விதவிதமான விளையாட்டுகள், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீரசாகசப் போட்டிகள், ரேக்ளா ரேஸ், மாட்டு வண்டிப் பந்தயம், கல்லூரி காலத்தில் மாணவர்கள் அன்றைக்கு வெளியாகும் புதிய திரைப்படங்களை பார்க்கும் ஆர்வம், கிராமங்களில் 4 மணிக்கே எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி தோட்டங்களுக்குச் சென்று வேப்பிலைத் தண்டையும், கன்னிப் பில்லையையும் சேர்த்து பொலி கட்டுதல் என்பது ஒவ்வொரு விவசாய வீட்டுப் உறுப்பினர்களின் கடமையாகும். பண்டைய தமிழகத்தில் தைப் பொங்கலை கொண்டாடியது குறித்தான இலக்கியத்தில் அகநானூறு, பதிற்றுப்பத்து, நெடுநல்வாடை, ஐங்குறுநூறு போன்ற இலக்கியங்களில் தரவுகள் உள்ளன. 



















பொங்கலுக்கு முதல்நாள் போகி. போகித் திருநாள் மழையின் அதிபதியான வருணனையும், மார்கழி மாதத்தின் நிறைவடையும் நாளையும் கொண்டாடப்படுகிறது. பழையன கழிக்கப்படுகிறது, புதியன ஏற்படுத்தப்படுகிறது, கேடுகள் ஒழிந்து நாளையில் இருந்து நல்லவை நடக்கும் என்றொரு ஒரு நம்பிக்கையில் தை பிறக்கிறது என நினைக்கும் நாள். சிலப்பதிகாரத்தில் கானல் வரிப் பாடலில் இது குறித்தான தரவுகளும் உண்டு.

அடுத்த நாள் தைத்திருநாள். கதிரவனையும், விவசாயத்தையும் வணங்கிடும் நாள். 

“பாதியே! பொருள் யாவிற்கும் முதலே!

பானுவே பொன்செய் பேரொளித்திரளே!

கருதி நின்னை வணங்கிட வந்தேன்,

ஆதவா! நினை வாழ்த்திட வந்தேன்!

நன்று வாழ்ந்திடச் செங்குவை பையை!”

என்று பாரதியும், 

“ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரி போல்

பொற்கோட்டு 

மேரு வலம் திரிதலான்!”

என்று சிலப்பதிகாரமும்,

“உலகம் உவப்ப

வலனேர்பு திரிதரு

பல்கதிர் ஞாயிறு

கடல் கண்டாங்கு!”

என்று நக்கீரின் திருமுருகாற்றுப் படையிலும் பொங்கல் திருநாளை குறித்து பாடியதுண்டு.

இந்த பொங்கல் திருநாளில் புதிதாக அறுவடை செய்த நெல்லில் இருந்து கிடைத்த அரிசியை வெல்லத்திலும், புதுப்பானையின் மீது கோலங்களும், வர்ணங்களும் இட்டு, கரும்பு, மஞ்சள், குங்குமம் என சூழ பொங்கல் பொங்கி வருவதை உள்ளத்தில் போற்றி பொங்கலோ பொங்கல் என்று ஆதவனை வழிபடுகிறோம்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். உழவுத் தொழிலுக்கு கர்த்தாவாக இருக்கும் மாட்டுக்கு நன்றி சொல்லும் நன்னாள். அன்றைக்கு வீரதீர விளையாட்டுகளான மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், மாட்டு வண்டிப் பந்தயம், இளவட்டக் கல்லை தூக்குதல் போன்ற சாகச நாட்டுப்புற விளையாட்டுகள் எல்லாம் நடக்கும். இந்த தரவுகள் தமிழ் இலக்கியமான கலித்தொகையிலும் உள்ளது. முதன்முதலாக இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குவது மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் காலத்தில் துவங்கியது. 

“வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற் காவிரி” என்று பட்டினப்பாலை பாடியது.

“உலகு புரந்து ஊட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி, வையை என்ற பொய்யாக் குலக்கொடி” என்று சிலம்பு ஒலித்தது.

“வாழை வடக்கீனும் வான்கமுகு மேற்கீனும், கரும்பும் இளநீரும் கண்திறந்து மடைபாயும், கட்டும் கலம் காணும் கதிருழக்கு நெல்காணும் அரிதாள் அறுத்துவர மறுதாள் பயிராகும், அரிதாளின் கீழாக ஐங்கலந்தேன் கூடுகட்டும், மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கம் அழகான தென்மதுரை” என்று பிற்காலப் புலவர் புகழேந்தி பாடினார்.

தமிழக வளமையைப் புலவர்கள் பானார்கள், ஆண்ட அரசர்கள் காத்தனர். போர்முனையில் பெறும் வெற்றிக்கு ஏர்முனை தரும் வலிவு தான் இன்றையமையாத ஒன்று என்று அவர்கள் கருதினார்கள்.

அரசு எப்படி உழவர்களை, மக்களைப் பாதுகாத்து ஆளுவேண்டும் என்று ஆலத்தூர் கிழார் என்ற தமிழ்ப் புலவர சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற அரசனுக்கு அறிவுரை தருவதில் குறிப்பிட்டார்.

“வருபடை தாங்கிப் பெயர்புறத்து ஆர்த்துப் பொருபடை தருஊங் கொற்றமும் உழுபடை, ஊன்றுசால மருங்கின் ஈன்றதன் பயனே”

அதாவது, ‘நாட்டின் மேல் வரும் படைகளை புறங்காட்டி ஓடச் செய்து, ஆரவாரமான வெற்றி என்பது, உழும் கலப்பையை வைத்து உழவர் படை தரும் விளைச்சலால் ஏற்பட்ட பலனே ஆகும்’ என்கிறார்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து என்று திருக்குறளில் உழவுத் தொழில் அல்லாமல் பிற தொழிலில் ஈடுபடுவோரை சேர்ந்து பாதுகாக்கும் பொறுப்பு உழவர்களுக்கு உண்டு. இவர்கள் உலகம் என்ற தேருக்கு அச்சாணி ஆவார்கள் என்ற திருவள்ளுவரும் தங்களது பாடல்களில் சிறப்பாக எடுத்து சொல்கின்றனர்.

மாடுகட்டி போரடித்த அத்தகைய உழவனின் நிலைமை இன்றைக்கு மோசமாக உள்ளது. தன்னுடைய உரிமைக்காக போராடி கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக 48க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுடப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர் என்று பொங்கல் திருநாளில் பேசக் கூடாது என்றாலும், உழவர் திருநாளில் இதை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் கடமையும் உண்டு. 

மார்கழியில் சூரியன் தெற்கே மகர ரேகையில் பிரகாசிக்கின்றான். அவனுடைய தெற்கு நோக்கிய பயணம் (தட்சிணாயணம்) மார்கழியில் முடிவடைகிறது. தை முதல் நாளன்று வடக்கே கடக ரேகை நோக்கிய பயணம் (உத்திராயணம்) தொடங்குகிறது. இது கதிரவனை வழிபடும் காலம். எகிப்தியர்கள் சூரியன் தான் ஆரோக்கியத்தையும், உடல் நலத்தையும், புத்திசாலித்தனத்தையும் வழங்குகின்றது என்று நைல் நதிக்கரையிலும், பிரமிடுகளிலும் சூரிய வழிபாடு நடத்துகின்றனர். கிரேக்கத்தில் ஹீலியோஸ் என்ற பெயரில் ஆதவன் வழிபாடு நடக்கின்றது. மெக்சிகோ, பெரு நாடுகளில் சூரியன் வீர தேவனாக வணங்கப்படுகிறார். வடபுலத்தில் சங்கராந்தி என்றும்; மராட்டியத்தில் கிச்சடி அமாவாசை என்றும்; பஞ்சாப், ஹரியானாவில் லோகிரி என்றும்; அசாம், மணிப்பூரில் போகாலிப் பிகு என்றும்; காமுதேனுப் பூஜை என்றும்; கணுப் பண்டிகை என்றும் பல விதங்களில் கொண்டாடப்படுகின்றன. ஆந்திரத்தில் கொலு பொம்மைகள், பொங்கலிடுவது, கரும்பை உறவினர்களுக்கு கொடுப்பது, கர்நாடகத்திலும் இதே பழக்கவழக்கங்கள், மகாராஷ்டிரத்தில் எள்ளையும், வெல்லத்தையும் வழங்குவது உண்டு. 

இயற்கையை எல்லா இடங்களிலும் வழிபடுகின்ற பண்டிகைகளாக விளங்குகின்றன. இந்த நாளை உத்தரப்பிரதேசத்திலும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 

மத்திய முன்னாள் அமைச்சர்கள் சி. சுப்பிரமணியம், ஒ.வி.அழகேசன், தமிழ் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியர் பெரியசாமித் தூரன் ஆகியோர் சென்னை மாநிலக் கல்லூரியில் நாட்டு விடுதலைக்கு முன்னர் மாணவர்களாகப் படித்தபோது, கிறித்துமஸ் வாழ்த்து மடலைப் போன்று பொங்கல் விழாவுக்கு நாமும் தயாரிக்க வேண்டுமென்ற யோசனையை தூரன் சொல்ல அவரே பனங்குருத்துகளை நறுக்கி பலவண்ண மைகளால் அழகுப்படுத்தி, பொங்கல் வாழ்த்துகளை தயாரித்து அண்ணல் காந்தி, ராஜாஜி, சேலம் வரதராஜூலு நாயுடு, திரு.வி.க., கல்கி கிருஷ்ணமூர்த்திபோன்ற அன்றைய முன்னோடிகளுக்கு அனுப்பியது தான் பிற்காலத்தில் பொங்கல் வாழ்த்து அட்டைகள் என்று பிரபலமானது. இது கிடைத்தவுடன் திரு.வி.க. தனது நவசக்தி ஏட்டில் பாராட்டி நாம் அனைவரும் இந்த வழக்கத்தை எதிர்காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இந்த பழக்கம் 1928 காலக்கட்டத்தில் நடந்ததாகச் செய்தி. பொங்கல் திருநாளை உழவர் திருநாள், திராவிடர்கள் திருநாள், தமிழர்த் திருநாள்,  சாமானியர்கள் உள்ளடங்கிய அனைவரின் திருநாள் என்று ஒவ்வொருவரும் கொண்டாடும் பாங்கு இன்றும் தொடர்கிறது. மாதங்களில் மார்கழி என்று திருப்பாவை, திருவெம்பாவை பாட, பின் தைத் திங்கள் பிறந்து இயற்கையை, இந்த மண்ணை வணங்குகின்றோம்.பாவை நோன்பு ஏழாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்து, சங்க காலத்தில் தித்தித்பாக பொங்கல் கொண்டாடி அதை ஒவ்வொரு தலைமுறைக்கும் கடமை என்ற சீதனமாக எடுத்துக் கொண்டு வருகிறோம்.

பொங்கல் வரலாற்றைப் பற்றி முதலாம் ராஜேந்திரன் காலத்தில் இருந்தும் தரவுகள் கிடைக்கின்றன. திருவொற்றியூர் கல்வெட்டில் ’புதியீடு விழா’ என்று அறுவடை நாளை குறிக்கின்ற தரவு உள்ளது. 

இன்றைக்கு உலகமயமாக்கல் வேகமாக நகர்ந்தாலும், நம்முடைய கலாச்சாரம், பண்பாடு என்பதை பாதுகாப்பதில் முதலில் நிற்பது தைத் திருநாள் கொண்டாட்டங்கள் தான். 

கதிரவன், உழவு, இயற்கை, வள்ளுவர் பேராசான் என தமிழகத்தின் அடையாளங்களை ஒழுங்குபடுத்துகின்ற இந்த தை திருநாளைப் போற்றுவோம், வணங்குவோம். வருகின்ற காலத்தில் சுயநலமற்று நல்லதை நினைப்போம், நேர்மையான பணிகளை ஆற்றுவோம், இயற்கையின் அருட்கொடையை வேண்டி மகிழ்ச்சியாய வாழ்வோம். 

*******

வீட்டு நிலைகளில்,மாட்டு தொழவங்களில், வயல்களில்.மானவாரி நிலங்களில்  #பொங்கலுக்கு #வேப்பிலை, #கண்பீளைப்பூ சேர்த்து காப்பு கட்டுவது மரபு.

பொங்கல் அன்று விடியலில் வேப்பிலை, கண்பீளைப்பூ, #ஆவாரம்பூ போன்றவற்றை வீட்டு வாசலிகளில் கட்டி வைப்பார்கள். சில வீடுகளில் சொருகி வைப்பார்கள். 

பொதுவாக இவை மூன்றுமே கிருமிநாசினியாகும். நோய் நொடி வராமல் இருக்கவும், துஷ்ட தேவதைகள் அல்லது காத்து கருப்பு நம்மை தாக்காமல் இருக்கும்.

தைப்பொங்கல் திருவிழா என்பது அறுவடைத் திருவிழா மட்டுமல்ல, அப்போது புதிதாக மலரும் பூக்களையும் பறித்து சூரியனை வணங்கும் திருநாள்.

தை மாதத்தில் மலரும் ஆவாரம்பூ மற்றும் அப்போது தளிர்த்து பூத்து நிற்கும் கண்ணுப்பிள்ளையை பறித்து வந்து படைக்கிறார்கள்.

கண்பீளை பூச்சிகள் வராமல் தடுக்கக்கூடியது. மேலும் அம்மை, அக்கி, மஞ்சள்காமாலை போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடியது. 

அறுவடை முடிந்து விளைபொருள்கள் வீடு வந்தபிறகே கொண்டாடப்படுகிறது பொங்கல். அப்படி வீட்டுக்கு வரும் விளைபொருட்கள்தான் ஒரு வருஷத்துக்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருக்க வேண்டும் என்ற உழவர்களின் நம்பிக்கை .

*********

தை புத்தாண்டு பிறந்து பொங்கல் நாளின் போது விவசாய அறுவடைகள் முடிந்துவிடும்.  விவசாயிகள் அகம் மகிழ்ந்து போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், கரி நாள் என்று கொண்டாடி கிராமங்களேமகிழ்ச்சியில் தளைக்கும். எனக்கு நினைவு தெரிந்தவரை கிராமத்தில் சிலம்பாட்டம், கபடி, பின்பு 1960களில் கைப் பந்து (volley ball) என்று விளையாட்டுப் போட்டிகள் நடப்பது வாடிக்கை.

ஞாயிறைப் போற்றும் வகையில், அதாவது சூரியன் உதிப்பது உத்ராயணம், தஷ்ணாயணம் என அழைக்கப்படுவது உண்டு.  தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயணம் என்றும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தஷ்ணாயணம் என சூரியன் இடம் மாறுவதை காலங்களில் வகைப்படுத்துவார்கள். உத்ராயணம் காலத்தில் தை பிறக்கிறது.  நாம் தைப் பொங்கல் கொண்டாடுவதைப் போல ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் மற்றும் வட புல மாநிலங்களிலும் மகர சங்கராந்தி என்று அறுவடை நாளை கொண்டாடுவது உண்டு.

இப்படி இந்தியா முழுவதும் தை மாதத்தை கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் தை பிறப்பதை விமரிசையாகவும், எதையோ எதிர்பார்த்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர். எனவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறோம்.

நினைவு தெரிந்த காலத்திலிருந்து 1950, 1960 களிலிருந்து 1990 வரை கிராமங்களில் தைப் பொங்கல் ஒரு உற்சாகத்தோடு, உறவுகளோடு கொண்டாடுவதை பார்த்துள்ளேன்.  தொலைக்காட்சிகள் வந்தவுடன் அந்த கொண்டாட்டங்கள் கொஞ்சம் அடங்கிவிட்டன.  1993 லிருந்து தொலைக்காட்சிகளின் முன்பு உட்கார்ந்துகொண்டு பொங்கலை வீட்டின் உள்ளேயே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். தெருக்களிலும், கிராமத்தின் மந்தைகளிலும் கொண்டாடிய பொங்கல் வீட்டுக்குள் அடங்கிவிட்டது.

அதிகாலையில் எழுந்து பள்ளிப் பருவத்திலேயே கன்னிப் பிள்ளை, வேப்ப இலைகளை அடங்கிய கொப்புகளை எடுத்துக்கொண்டு வயற்காட்டிலும், தோட்டத்திலும் மற்றும் வானம் பார்த்த மானாவாரி நிலங்களிலும் சூரிய உதயத்திற்கு முன், விடியற்காலை வைகறைப் பொழுதில் இந்த கன்னிப் பிள்ளை, வேப்ப இலைகளை அந்த விவசாய நிலங்களில் கட்டுவதுண்டு.  இதற்கு பொழி என்று அழைப்பதுண்டு. விடியற்காலை இருட்டில் பேட்டரி லைட்டோடு பின் பனிக் காலத்தில் பனித்துளிகள் உடம்பில் படும் வண்ணம் கட்டியதெல்லாம் இன்றைக்கு மலரும் நினைவுகளாக உள்ளன.  பொழியை கட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது சூரிய உதயம் ஏழு மணிக்கு வீட்டின் வெட்டவெளியில் கரும்பு, மஞ்சள், மாவிலை போன்றவற்றோடு பொங்கல் இடுவதை பார்க்க ரம்மியமாக இருக்கும்.

பொங்கல் என்பது கிராமம், விவசாயம், தொன்மை சார்ந்த திருவிழா ஆகும். இது சூரியனை வணங்கும் வழிபாடு என்று கூட கூறலாம். இது உழவுக்கும், வேளாண்மைக்கும் எடுக்கின்ற திருவிழா. இந்த பழமை வாய்ந்த ஏர்ப்பிடிப்பு கிராம விழா தற்போது சடங்காகவும், சம்பிரதாயமாகவும் ஆகிவிட்டது.

தீபாவளியைப் போல புத்தாடையில் மஞ்சள் தடவி, விடியற்காலை குளித்து பொங்கல் இடும்போது ஏற்படுகின்ற அதிர்வலைகள் இன்றைய காலக்கட்டத்தில் ஏற்படவில்லையே என்று மனதிற்குள் எண்ண ஓட்டமும் இருக்கிறது.

பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையையொட்டி வீட்டிற்கு வெள்ளையடித்து, பழையதை ஒதுக்கி, மறுநாள் பொங்கலுக்காக, வீட்டையும் மாட்டுத் தொழுவத்தையும் ஒரு தொண்டாக சுத்தப்படுத்துவதும் உண்டு.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளங்களிலோ, ஊரணிகளிலோ குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணமிட்டு, மாலை ஆறரை மணி அளவில் மாட்டுப் பொங்கலுக்கு பொங்கலிட்டு, படையலிட்டு பூஜைகள் செய்வதெல்லாம் உண்டு. அந்த பூஜைகள் இரவு ஏழு, எட்டு மணி வரை நீடிக்கும். ஏரி கலப்பைகளையும், மாட்டு வண்டிகளையும், நன்றாக துடைத்து சுத்தப்படுத்துவதும் உண்டு. 

இவையெல்லாம் படிப்படியாக குறைந்து, ஏதோ பொங்கல் என்று இன்றைக்கு நடப்பது மனதளவில் சோபிக்கவில்லை.  இருப்பினும் கால மாற்றம், பரிணாம மாற்றங்கள், உலக மயமாக்கல், தொலைக்காட்சிகள் என்ற நிலையில் பழைமையிலிருந்து இன்றைய பொங்கல் மாறுபட்டுவிட்டது. தமிழர்கள் தைத் திருநாளை பாரம்பரியமாக கொண்டாடுவது முக்கிய நிகழ்வாக நாட்டில் நடப்பதை எக்காலத்திலும்அழியாது என்ற நம்பிக்கை உள்ளது.

சில கிராமங்களில் மாட்டுப் பொங்கல் முடிந்து கரி நாள் அன்று நாட்டுப்புற தெய்வங்களான சிறுவீட்டம்மன் போன்ற தெய்வங்களின் உருவங்களை கோவில்பட்டி போன்ற நகரங்களில் செய்து கிராமத்தில் வைத்து இரண்டு வாரங்கள் முறையான பூஜைகள் செய்து இரண்டு வாரத்திற்குப் பிறகு, பெரிய கொண்டாட்டமாக, திருவிழாவாக, அந்த நாட்டுப்புற தெய்வங்களை ஊர் முழுக்க சுற்றி எடுத்து வந்து குளத்தில் கரைப்பது உண்டு. அன்றைக்குப் பெரும் திருவிழா. அந்த திருவிழாவில் கரகாட்டம், வில்லிசை, நாடகம், பாவைக் கூத்து போன்ற நிகழ்வுகளும் கிராமத்தில் விடிய விடிய நடக்கும்.  இதுவும் தைப் பொங்கலின் தொடர்ச்சி ஆகும்.

இப்படியான தொன்மையான நாகரிகத்தின் பழக்க வழக்கங்களை இந்த ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது.  

தைப் பிறந்தால் ஒரு நம்பிக்கை, ஒரு மகிழ்வு, ஒரு எதிர்பார்ப்பு. விவசாயிகளுக்கு தைப் பிறந்தால் வீட்டில் திருமணங்களோ, புது வீடு கட்டினால், புகுமனை விழாவோ என்பது நடத்துவது ஒரு வாடிக்கை.  அதனால்தான் தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதுண்டு.

கவிஞர் கண்ணதாசனோடு நெருங்கிப் பழகியவன். அவர், "நம்பிக்கை நம்பிக்கை" என்பார்.  அவர் சொல்கின்ற விதத்தைப் பார்த்தால், மனதளவில் ஒரு தைரியத்தை கொடுக்கும்.  அதைப் போல தை மாதம் நெருங்கிவிட்டால், தை பிறக்குது, எல்லாம் சரியாகிவிடும் என்பது நாட்டுப்புற நம்பிக்கை. இந்த நம்பிக்கையில்தான் இந்த மானிட வாழ்வே உள்ளது. அதற்கு அச்சாரமாக திகழ்வதுதான், தைப் பொங்கல் திருநாள், உழவர் திருநாள். நாம் அனைவரும் போற்றுவோம்.  

நம்பிக்கையில் நம்பிக்கையோடு பயணிப்போம். போலிகளை ஒதுக்குவோம். நல்லவற்றை அடையாளம் காண்போம்.  தைத் திருநாள் 

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஞாயிறு போற்றுதும்..... ஞாயிறு போற்றுதும் ....திங்கள் போற்றுதும் ...திங்கள் போற்றுதும் ...மாமழை போற்றுதும்


#தமிழ்ப்புத்தாண்டு 

#தைத்திருநாள்

#பொங்கல்வாழ்த்துகள்#ksradhakrishnanposting 




#ksrposting 

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...