Sunday, January 19, 2020

#ராசி_மணல் (காவிரி- தென்பெண்ணை-பாலாறு இணைப்புத்திட்டம்)



———————————————-
ஒரு மாநிலத்தில் இருந்து உற்பத்தியாகி ஓடி வரும் நதியின் குறுக்கே அந்த நதியினால் பயன்பெறும்  அண்டை மாநிலங்களின் ஒப்புதல்  இன்றி அணைகள் கட்டக்கூடாது என்பதை கர்நாடகம்  அப்பட்டமாக  மீறி, கண்ணம்பாடி தவிர்த்து கபினி, ஹாரங்கி, ஹேமாவதி  என காவிரியின் குறுக்கே 6க்கும் மேற்பட்ட அணைகளை கட்டி  காவிரியின் நீரை  தடுத்து நிறுத்தியதோடு மட்டுமில்லாமல் தற்போது மேகேத்தாட்டு அணைக்கட்டும் முயற்சியில் கர்நாடகம்இறங்கியிருப்பது தமிழகத்தில் சுமார் 18 லட்சம் ஏக்கர் சாகுபடி  நிலப்பரப்பு பாலைவனமாகும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால்     நிலத்தடி நீர்  அதல
பாதாளத்துக்கு செல்வதோடு சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 25 மாவட்டங்களின் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாக்கிவிடும். தமிழகத்தின் மொத்த உணவு உற்பத்தியில் 40 சதவீதம் முற்றிலும் பாதிக்கப்படும்.

தென்பெண்ணை தடுப்பணை விவகாரத்தில் வலுவான வாதம் வைக்கப்படாததால் பின்னடைவை சந்தித்த தமிழகம் மேகேத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் முனைப்புக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை  போடும் நடவடிக்கைகளைதுரிதப்படுத்துவதுடன், கர்நாடகத்தின் ஒப்புதலுடன் காவிரியின் இடது கரையில் கீழ்நோக்கி 42 கி.மீ தொலைவில், தமிழக கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் இருந்து மேல்நோக்கி 18 கி.மீ தொலைவில் ராசி மணலில் உபரியாக வரும் காவிரி நீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அணைக்கட்ட வேண்டும். 

ராசி மணல் தமிழகத்துக்கு சொந்தமான கிருஷ்ணகிரி   மாவட்ட  வன எல்லைப்பகுதி. இங்கு அணைக்கட்ட ஏதுவாக பள்ளத்தாக்கும், ஏறத்தாழ 400 அடி உயரத்துக்கு இருபுறமும் குன்றுகளும் இயற்கையாக அமைந்துள்ளன. அடர்ந்த வனப்பகுதி என்பதால்இந்தஅணைக்கட்டப்படுவதால் குடியிருப்புகள், விளைநிலங்கள் மூழ்கும் அபாயமும் இல்லை. அதோடு கிருஷ்ணகிரி மாவட்ட  அஞ்செட்டி வனப்பகுதியில் பெரிய பள்ளத்தாக்கும், அங்கு பெய்யும் மழைநீரை கொண்டு வரும் தொட்டியாலா  கானாறும் காவிரியுடன்  ராசி  மணலில் இணைகிறது.

மேட்டூர் அணை கட்டப்பட்டு கடந்த 80 ஆண்டுகளில் பல முறை நிரம்பி உபரி நீர் கடலில் சென்று கலந்துவிடுகிறது என்பதைகாரணம் காட்டியே கர்நாடகம் மேகேத்தாட்டுவில் அணையை கட்ட முயற்சிக்கிறது.  ஏற்கனவே தமிழகத்தில் பல அணைகளை கட்டி நீர் மேலாண்மையில் முத்திரை பதித்த காமராஜர், ராசி மணல் அணை திட்டத்திற்கு 1961ல் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படாத நிலையில், எம்ஜிஆர் ஆட்சியின் போது திட்டத்தை நிறைவேற்ற தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை தொடர்ந்து வந்த திமுக ஆட்சியின்போது ராசி மணல் அணைக்கட்ட மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன காரணத்தாலோ இத்திட்டம் இன்றுவரை கிடப்பில் தான் போடப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரியில் வெள்ளம் வரும் சமயங்களில் 75 டிஎம்சி நீரை தேக்க முடியும். உபரிநீர் கடலில் சேருவதை முழுமையாக தடுக்க முடியும். இதனால் கர்நாடகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதுடன் அவர்களது அனுமதியும் தேவைப்படாது. ஒத்துழைப்பு மட்டுமே போதும். எனவே, இவ்விஷயத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து ராசி மணல் அணைக்கட்டும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் கோரிக்கை.

அதேநேரத்தில் ராசி மணலில் கட்டும் அணையால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்  மட்டுமின்றி வடமாவட்டங்களும் பயன்பெறும். ராசி மணல் அணை கட்டும் இடம் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ளது. இங்கு காவிரியுடன் தொட்டியாலா கானாறு சேரும் இடம் 150 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அணை கட்டப்படும்போது தொட்டியாலா பள்ளத்தாக்கு கானாற்றில் 20 கி.மீ தூரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் வாய்ப்பு அமையும். அங்கிருந்த இந்த நீரை 25 கி.மீ தூரத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு வந்து ஒசூருக்கு கிழக்கே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கெலமங்களம் அணையில் சேர்க்க முடியும். அங்கிருந்து கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீர் அங்கிருந்து நெடுங்கல்   தடுப்பணை வழியாக சாத்தனூருக்கும், தென்
பெண்ணைபாலாறுஇணைப்புக்கால்வாய் மூலம் பாலாற்றுக்கும் திருப்பிவிட முடியும்.

இதனால் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்  மட்டுமின்றி, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், தென்சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களும் பயன்பெறும். மேலும்  காவிரி- தென்பெண்ணை-பாலாறு இணைப்புத்திட்டத்தை காவிரியின் உபரிநீர் வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தவும் முடியும். ராசி மணலில் அணைக்கட்டப்பட்டால் காவிரியில் உபரிநீர் வரும் காலங்களில் 50 முதல் 75 டிஎம்சி வரை தேக்கி வைக்கப்பட்டு அதில் இருந்து 30 டிஎம்சி நீரைபாலாற்றுக்கும்,தென்பெண்ணைக்கும் திருப்பிவிட முடியும்.  உரிய ஆதாரங்களுடன், தகுந்த வாதங்களை வைத்து மத்திய நீர்வள ஆணையம் மூலம் அனுமதி பெற்று ராசி மணல் அணை திட்டத்தை வேகமாக   செய்து முடிக்கப்பட வேண்டும். எனவே, தமிழகத்தின் 9 மாவட்டங்களை வளப்படுத்த ராசி மணல் அணை திட்டத்தை நிறைவேற்றி  மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் கோரிக்கை ஆட்சியாளர்களின் காதுகளில் கேட்குமா?

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
18.01.2020
#ksrposts
#ksradhakrishnanposts
#ராசிமணல்
#மேட்டூர்_அணை
#கிருஷ்ணகிரி

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...