Sunday, January 19, 2020

தமிழ் உரைநடை படைப்புலக வரலாறு - #வேதநாயகம்_பிள்ளை #இராஜம்_ஐயர் #மாதவையா



பிரதாப முதலியார் சரித்திரம் 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பிரதாப முதலியார் என்பவனைக் கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது.

கமலாம்பாள் சரித்திரம் தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும் தமிழில் வெளிவந்த இரண்டாவது நாவலாகவும் (புதினம்) கருதப்படுகிறது. இதனை மதுரை மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்து சட்டக் கல்லூரியில் பயின்ற பி. ஆர். இராஜமையர் விவேக சிந்தாமணி இதழில் 1893 பெப்ரவரியில் இருந்து எழுதத் தொடங்கினார்.

விவேக சிந்தாமணியின் முதல் இரண்டு இதழ்களில் இப்புதினம் அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்ற தலைப்பிலும் மூன்றாவது இதழில் இருந்து ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்னும் தலைப்பிலும் தொடர்ந்து வந்து 1895 ஜனவரியில் நிறைவுற்றது. விவேக சிந்தாமணியில் இக்கதை வெளிவந்தபோது பி. ஆர். சிவசுப்பிரமணிய ஐயர் என்ற பெயரிலேயே எழுதினார்.

திருநெல்வேலி மாவட்டம் பெருங்குளத்தைச் சேர்ந்த மாதவையா 1892 ஆம் ஆண்டில் பத்மாவதி சரித்திரம் என்ற நாவலை எழுதத் தொடங்கினார். பிரதாப முதலியார் சரித்திரம் நாவலுக்குப் பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல், சாவித்திரியின் கதை. ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903இல் முழுமையாக வந்ததாலும், பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல் 1896இல் வந்ததாலும், தமிழின் இரண்டாம் நாவல் என்ற தகுதி பத்மாவதி சரித்திரம் நாவலுக்குக் கிட்டாமல் போனது. மாதவையா சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றத்தில் இருக்கும்பொழுது தமிழ் பயிற்சிமொழியாக கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியவர். இவருடைய உறவினர் தான் பெ.நா. அப்புசாமி. தமிழில் அறிவியல் கருத்துக்களை நூல்களாக கொண்டு வந்தவர். இரசிகமணிக்கு நெருக்கமாக இருந்தவர். இவருடைய புதல்வர் கிருஷ்ணன் இயற்கை சார்ந்த புகைப்பட கலைஞர் மட்டுமல்லாமல் இயற்கை குறித்து அதிகமாக எழுதியுள்ளார்.

இப்படி மாயவரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை, இராஜம் ஐயர், மாதவையா என தமிழ் படைப்புலகின் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இவர்களின் அடியொட்டி பல புதினங்கள் தமிழில் பல படைப்பாளிகள் மூலம் வெளியானது. அவை வருமாறு:

தி.கோ.நாராயணசாமி பிள்ளையின் சித்திரங்காட்டி சத்தியம் நிறுத்திய கதை (1879)
விநோத சரித்திரம் (1886)
மாமி மருகியர் வாழ்க்கை (1892)
முகமது காசிம் சித்திலெப்பை மரக்காயரின் அசன் பே சரித்திரம் (1885)
புஷ்பரதச் செட்டியின் அகல்யாபாய் (1885)
வேதநாயத்தின் மற்றொரு நாவல் சுகுண சுந்தரி சரித்திரம் (1887)
சி.ஈ.சுப்பிரமணிய அய்யரின் கற்பின் விஜயம் அல்லது சத்தியாம்பாள் கதை (1888)
இலங்கை எஸ்.இன்னாசித் தம்பியின் ஊசேன் பாலந்தை கதை (1891)
சு.வை.குருசாமி சர்மாவின் குறிப்பிடத்தக்க காதல் கதையான பிரேம கலாவத்யம் (1893)
தி.சரவணமுத்துப் பிள்ளையின் முன்னோடிச் சரித்திர நாவலான மோகனாங்கி (1895)
ராஜாத்தி அம்மாள் என்ற பெண் எழுத்தாளரின் ஞானப்பிரகாசம் (1897)
ச.ராமசாமி ஐயங்காரின் கமலினி (1897)
தி.எல்.துரைசாமி முதலியாரின் குணபூசணி (1897)
சி.அருமைநாயகத்தின் கிறிஸ்தவ நாவலான மீதி இருள் (1898)
கோவிந்தசாமி ராஜாவின் தழுவல் நாவலான மரகதவல்லி (1898)
ஏ.கே.கோபாலச்சாரி யின் ஜீவரத்னம் (1899)

பண்டித நடேச சாஸ்திரியின் தமிழின் நான்காவது நாவலாகக் கருதப்படும் தீன தயாளு (1900)
ஸ்ரீநிவாச ஐயங்காரின் சிவாஜி ரௌஸினாரா (1903), எஸ்.கூத்தலிங்கம் பிள்ளையின் மங்கம்மாள் (1903)
குழந்தைசாமி பிள்ளையின் சத்தியவல்லி (1910)

தமிழின் ஐந்தாவது நாவலாசிரியராகக் கருதப்படும் திரிசிரபுரம் பொன்னுசாமி பிள்ளையின் கமலாட்சி (1910)
இப்படியொரு நீண்ட பட்டியல் உண்டு. சிலவற்றை கவனத்துக்கு வராமலேயே சிதைந்து விட்டது. இதை குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ் செய்யுள், உரைநடை, நவீன படைப்புகள், பின் நவீனத்துவம், இருத்தல்வாதம், அமைப்பியல், சர்ரியலிசம் என்ற நிலையில் உரைநடையும் கவிதைகளும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெறுகின்றது. சில நண்பர்கள் வேதநாயகம் பிள்ளை, இராஜம் ஐயர், மாதவையா உரைநடகளைப் பார்த்து இன்றைக்கு உள்ள இளைஞர்கள் பாராட்டுகின்றனர். சிலர் கிண்டல் செய்யும்போது அவர்களிடம் விளக்கமாக பேச வேண்டியிருக்கிறது. இந்த முன்னோடிகளின் காலத்தில் தமிழின் உரைநடை என்ற இலக்கை தொட்ட காலம். இந்த அளவு அவர்கள் படைத்துள்ளார்கள் என்றால் அவர்கள் எடுத்த முயற்சி அசாதாரணமாக தான் இருந்திருக்கும் என்பதையெல்லாம் இந்த கால சமுதாயத்திற்கு விளக்கி சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
19.01.2020
#ksrposts
#ksradhakrishnanposts
#தமிழ்_படைப்புகள்
#தமிழ்_உரைநடை
#வேதநாயகம்_பிள்ளை
#இராஜம்_ஐயர்
#மாதவையா

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...