Monday, January 13, 2020

#நடிகை_தேவிகா #மணாவின்_மறக்காத_முகங்கள்



நடிகை தேவிகா

———————————————-
(தேவிகா  தம்பி  என்று   அழைக்கும் அளவில்  நன்கு  எனக்கு  அறிமுகம்.
  ஈசிஆர்யிலிருந்த   அவரின்  வீட்டு மனையை   விலைக்கு  வாங்கியன்.  வாழ்வில்  துரோகங்களைச் சந்தித்து அதுக்காக இடிஞ்சு போய் தேவிகா உட்கார்ந்திடலை..)
••••
“தேவிகா ஒரு சினிமா நடிகை தான்.

ஆனால் குடும்பப் பெண்களைவிட, உயர்ந்த குணம் படைத்தவர்.

பிரமிளா என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள்?’’
 
-என்று தன்னுடைய “சந்தித்தேன், சிந்தித்தேன்’’ நூலில் எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்.

சிவாஜிக்கு ரசிகர் மன்றங்கள் நிறையவே இருக்கிற மதுரையில், சிவாஜி-தேவிகா ரசிகர் மன்றங்கள் என்று அந்த ஜோடிக்காகவே ரசிகர் மன்றங்கள் இருந்தன.

அந்த அளவுக்கு ஒருவித ஈர்ப்பு இருந்தது சினிமா ரசிகர்களிடம்.

“அமைதியான நதியினிலே ஓடம்…’’,

“நெஞ்சம் மறப்பதில்லை…’’

“நினைக்கத் தெரிந்த மனமே… உனக்கு மறக்கத் தெரியாதா?’’

“சொன்னது நீ தானா? சொல்…சொல்..’’ – இந்தப் பாடல்களை எங்காவது கேட்கிற கணங்களில் தேவிகாவின் முகம் நினைவில் வந்து போகும்.

 
சிவாஜியுடன் ‘சாந்தி’ படத்திலும், பலே பாண்டியா படத்தில் “வாழ நினைத்தால் வாழலாம்’’ பாட்டிலும், வாழ்க்கைப் படகு படத்திலும் கறுப்பு வெள்ளைப் படங்களில் நளினமான நடிப்பை வழங்கிய தேவிகாவுக்கு ரசிகர் பட்டாளம் இருந்ததில் வியப்பில்லை.

எண்பதுகளில் திரையுலகைவிட்டு, அம்மா வேடத்தில் கூட நடிக்காமல் அவர் ஒதுங்கியிருந்த நேரம்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தேன். சாதாரண சேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.

உடம்பில் கனம் கூடியிருந்தது. மெல்லிய நைலான் புடவையை உடுத்தியிருந்தார். முகத்தின் அகலம் கூடியிருந்தது.

 
எந்த ஒப்பனையும் இல்லாமல் இருந்த அவரை அடையாளப் படுத்தியது அவருடைய வாய் திறந்த சிரிப்புதான்.

நான் போயிருந்த நேரத்தில் அவருடைய பரம ரசிகர் ஒருவர் கையில் பெரிய ஆல்பத்துடன் அவரைப் பார்க்க வந்திருந்தார். அந்த ஆல்பம் முழுக்க தேவிகா மயம்.

திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்கள், பேட்டிகள், துணுக்குச் செய்திகள் எல்லாமே கத்தரித்து வரிசையாக ஒட்டப்பட்டிருந்தன.

தான் ரசித்த நடிகைக்கு முன்னால், ரசிக நிறைகுடமாகத் ததும்பிக் கொண்டிருந்தார் அந்த ரசிகர்.

 
அவரை ஆறுதல் சொல்லி காபி கொடுத்து அனுப்பிவிட்டுக் கவனத்தைத் திருப்பி சிரித்தபடி கேட்டார்.

“காக்க வைச்சுட்டேனா?’’ என்றவர் என்னிடம் சொந்த ஊர், குடும்பம் பற்றிக் கேட்டபோது மெதுவாக, “உங்க குடும்பத்திற்கும், எனக்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு இருக்கு.. அதைச் சொல்லலாமா?’’ என்று கேட்டது தான் தாமதம்.

“சொல்லு.. சொல்லு’’- அவசரம் காட்டினார் ஒரு குழந்தையைப் போல.

என்னுடைய பால்யப் பருவம். பதிமுன்று வயதிருக்கும். ‘மாலைமுரசு’ நாளிதழில் ஒரு விளம்பரம்.

தான் தயாரித்து இயக்க இருக்கிற “புதுப்படத்தில் நடிக்க ஒரு சிறுவன் தேவை’’ என்றிருந்தது தேவதாஸ் என்ற இயக்குநர் கொடுத்த அந்த விளம்பரம்.

அதைப் பார்த்துவிட்டு, என்னுடைய புகைப்படத்தையும், என்னைப் பற்றியும், அப்பா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர் பற்றிய விபரங்களையும் அந்த வயதுக்கே உரிய கையெழுத்தில் தனியாக எழுதி அந்த நாளிதழில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு ஒரு கவரில் அனுப்பி விட்டு வழக்கம்போலப் பள்ளிக்குப் போய்விட்டேன்.

ஒரு வாரம் இருக்கும். வீட்டிற்குள் நுழைந்தபோது என்னுடைய அப்பா ஒரு கவரைப் பிரித்த நிலையில் கையில் வைத்திருந்தார். கடுமையான வசவுகள். அடிகள் எல்லாம் சரமாரியாக விழுந்தன.

காரணம் அவர் கையிலிருந்த கடிதம்.  நான் சென்னைக்கு எழுதிய கடிதத்தைக் கூடவே இணைத்து என்னைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லித் தனியாக, எனது தந்தை பெயருக்குக் கடிதம் எழுதியிருந்தார் இயக்குநரான தேவதாஸ்.

பீம்சிங்கிடம் உதவி இயக்குநராக இருந்த அந்த தேவதாஸ், நடிகை தேவிகாவின் கணவர் என்பது எனக்குப் பின்னாளில் தான் தெரிய வந்தது..

அந்தச் சம்பவத்தை தேவிகாவிடம் தயக்கத்தோடு சொன்னபோது அவர் அண்ணாந்தபடி “நாங்க நடிச்ச படங்களில் தான் பிளாஷ்பேக் வரும். உன்னோட பிளாஷ்பேக் நல்லாயிருக்கே..” என்றவர் பலமாகச் சிரித்தார்.

“உனக்கும் அடி வாங்கிக் கொடுத்திருச்சா..’’ என்றவர் பல விஷயங்களை ஒருவித நெருக்கத்துடன் பேச ஆரம்பித்தார்.

இடையிடையே  உரிமையுடன் கிண்டலடித்தார். தெலுங்கில் “இளைய சகோதரன்” என்றார். பேச்சில் தெலுங்கு மொழி கலந்த நெடி இழைந்து கொண்டிருந்தது.

அவருடைய தாத்தா தெலுங்குப் படவுலகத்தோடு சம்பந்தப்பட்டிருந்ததால், சினிமாவுக்குள் நுழைந்த துவக்க கால நாட்களைப் பற்றிச் சொன்னார்.

 
முதலாளி படத்தில் எஸ்.எஸ்.ஆருடன் நடித்ததைப் பற்றிப் பேசியவரிடம் யாரைப் பற்றியும் சிறு வருத்தம் கூட இல்லை.

சொந்த வாழ்க்கையில் கணவர் தேவதாஸூடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து மகளோடு வாழ்ந்தபோதும், அதைப் பற்றிய சலிப்பு அவருடைய பேச்சில் இல்லை.

“சினிமா இன்டஸ்ட்ரியை நான் எப்பவும் தப்பாப் பேச மாட்டேன். அதுலே தான் எத்தனையோ நல்ல மனிதர்களை நான் சந்திச்சிருக்கேன்.

எஸ்.எஸ்.வாசன் எவ்வளவு பெரிய மனிதர். ‘வாழ்க்கைப்படகு’ படத்தில் எனக்கு வெயிட்டான ரோல். ஹிந்தியில் வைஜெயந்திமாலா பண்ணிய ரோலை என்னை நம்பிக் கொடுத்தாங்க. என்னால் முடிஞ்ச அளவுக்கு நடிச்சிருந்தேன்.

டான்ஸ் ஆடியிருந்தேன். படம் பெரிசாப் போகலைன்னாலும், எனக்கு நல்ல பேரு. வைஜெயந்தி கூடப் பாராட்டினாங்க…’’

சிவாஜியைப் பற்றிப் பேசும்போது மிகவும் உணர்வு வயப்பட்டார். “அவரோட பல படங்கள்லே நடிக்க வாய்ப்புக் கிடைச்சது பெரும் பாக்கியம்னு தான் சொல்லணும்..

ஆண்டவன் கட்டளை, பலே பாண்டியா, சாந்தி, கர்ணன்னு ஏகப்பட்ட படங்களில் நடிச்சு, இப்போ அவரோட ‘சத்தியம்’ படத்துலே கூட நடிச்சாச்சு.. அதெல்லாம் ஒரு கொடுப்பினை.

பத்மினி, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயான்னு பல பேர் அவரோட நடிச்சிக்கிட்டிருந்தப்போ எனக்கு இத்தனை படங்கள்லே வாய்ப்புக் கிடைக்க சிவாஜி சாரும் முக்கியக் காரணம்.’’ என்றவர் எம்.ஜி.ஆருடன் ‘ஆனந்த ஜோதி’ என்ற ஒரே படத்தில் நடித்ததைப் பற்றிச் சொன்னார்.

“எனது கனவு நிறைவேறின மாதிரி இருந்துச்சு” இயக்குநர் பீம்சிங், ஸ்ரீதர் படங்களில் நடித்துத் தமிழ்ப் படவுலகில் தனியிடம் பிடிக்க முடிந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தவர் ஸ்னாக்ஸூம், காபியும் எடுத்துவரச் சொல்லித் தெலுங்கில் கத்தினார்.

 
“என் பொண்ணைக் கூட சினிமாவில் நடிக்கக் கூப்பிட்டிருக்காங்க..’’ என்றவர் வீட்டிற்குள் இருந்த தன்னுடைய பெண்ணை அழைத்து வரச் சொன்னார்.

சிறிது நேரத்தில் அவருடைய பெண் மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் வந்து பார்த்துவிட்டு நகர்ந்தது.

பேசிக் கொண்டிருந்த ஒன்றரை மணி நேரத்திற்குள் கவிஞர் கண்ணதாசனைப் புகழ்ந்தார். வெள்ளை மனசு அவருக்கு என்றார்.

முத்துராமனை, தன்னுடன் நடித்த வயதான நடிகைகளை எல்லாம் கௌரவிக்கிற விதத்தில் பேசினார். வானம்பாடி படத்தைச் சிலாகித்தார்.

கல்யாண்குமாரை வியந்து பாராட்டினார். “வாழ்க்கைப் படகு” படத்தில் ஒரு பாடல் காட்சியில் க்ளோசப்பில் அழகாக வெட்கப்பட்டதைப் பற்றிய பேச்சு வந்தபோது, சற்று கனத்த முகத்துடன் அதே மாதிரி வெட்கப்பட்டபோது, வெட்கத்திற்கு வயதாகி இருந்தது.

சிறிது நேரத்தில் அவருடைய குடும்பத்தில் நடந்ததாகச் சொல்லப்பட்ட அரசியல் தொடர்பான விஷயத்தைப் பற்றித் தயக்கத்துடன் கேட்டபோது உடனே கேட்ட கேள்வி, “உனக்கு எப்படித் தெரிஞ்சதுப்பா?’’

நிதானமாகப் பிறகு அவரே அதற்கு விளக்கமும் சொல்லி “இதை மட்டும் எழுதிறக் கூடாது.. யாருடைய வாழ்க்கையும் நம்மாலே கெட்டுப்போச்சுன்னு இருக்கக்கூடாது. இதிலே கவனமா இருக்கிறது நல்லது இல்லையா?’’- எதிர்க் கேள்வி கேட்டார்.

“நான் நம்பினவங்க பல பேர் என்னை ஏமாத்தியிருக்காங்க.. பல துரோகங்களைச் சந்திச்சிருக்கேன்.. அதுக்காக நான் இடிஞ்சு போய் உட்கார்ந்திடலை..

வாழ்க்கைன்னா அப்படியும் இப்படியும் தான் இருக்கும்.. ஏமாத்திறவங்க இருக்கிற அதே உலகத்திலேதான் நமக்கு உதவுற நல்ல மனுஷங்களும் இருக்கிறாங்க..

 
அப்படித்தான் நான் எடுத்துக்குருவேன்.. பழசையே பிடிச்சுத் தொங்கிக்கிட்டு மூஞ்சியை இப்படி ‘உம்’முன்னு வைச்சிக்கிட்டிருக்கக் கூடாது (முகபாவம் காட்டினார்).

இதையும் மீறி எனக்குன்னு கிடைச்ச வாழ்க்கை இருக்கு.. அது போக்கில் வாழ்ந்துக்கிட்டிருக்கேன்ப்பா..’’ தத்துவார்த்த ட்ராக்கில் திரும்பிய பேச்சு சடாரென்று மாறியது.

எதிரே இருந்த என்னை உற்றுப் பார்த்தபடி கை விரல்களை ‘ஆங்கில ‘வி’ எழுத்து மாதிரி வைத்து இன்னொரு கை விரல்களையும் ‘வி’ ஷேப்பில் குறுக்கே வைத்து என்னைப் புகைப்படம் எடுப்பதைப் போன்று பாவனைக் காட்டினார்.

“ஏன்.. உன் மூஞ்சிக்கு என்ன? இங்கே..பாரு…என்னைப் பாருப்பா.. கேமிரா பொஸிஷனில் இருக்கேன்லே.. பாருப்பா” என்று தெலுங்கு வார்த்தைகளை இறைத்தபடி என்னைக் கேலி பண்ணியவர் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு நிறைவாகச் சொன்னார்.




“என்னோட ஹஸ்பண்டு தேவதாஸூ என்னை மிஸ் பண்ணிருச்சு.. என் மகளை மிஸ் பண்ணிருச்சு.. அது சரி.. உன்னை எப்படிப்பா மிஸ் பண்ணிச்சு..? உனக்கு சான்ஸ் கொடுக்காம ஏன் அப்படி லெட்டர் போட்டு அடி வாங்கிக் கொடுத்துச்சு..?’’

கிண்டலான தொனி கூடிக் கொண்டிருந்த நேரத்தில், அவருடைய முன்வரிசைப் பற்களுக்கு நடுவே சிறு இடைவெளி விழுந்த அந்தச் சிரிப்பு அழகாக இருந்தது.

https://www.thaaii.com/?p=25781

தற்போது அந்திமழை  பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிற நன்பர் மணாவின் ‘மறக்காத முகங்கள்’ என்கிற புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிற ஒரு கட்டுரை. 

வாழ்த்துக்கள் மணா மணா

#நடிகை_தேவிகா 
#மணாவின்_மறக்காத_முகங்கள்

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
13.1.2020.
#ksrpostings
#ksradhakrishnanpostings

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...