Friday, January 17, 2020

புரிதலுக்கு *#ஈழஅகதிகள்_குடியுரிமை_குறித்து*

#புரிதலுக்கு
*#ஈழஅகதிகள்_குடியுரிமை_குறித்து*
———————————————
நேற்றைக்கு இலங்கை தமிழரசு கட்சி தலைவரும்  இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தொடர்பு கொண்டார். அது போல இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் அரசியல்  கட்சி    நிர்வாகிகளும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் குறித்தான தங்கள்  கருத்துக்களை கடந்த இருபது நாட்களாக என்னிடம் பேசிக்   கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே லண்டன், நியூயார்க், டொரண்டோ, பாரீஸ், ஜெனிவா, கேப் டவுன் (தென் ஆப்பிரிக்கா), ஆஸ்லோ, பிரேசில், ரோம், சிட்னி, மெல்போர்ன், பெர்த் போன்ற பல இடங்களில் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இது குறித்து என்னிடம் விவாதித்தார்கள். அவர்கள் எல்லோருடைய கருத்தும் ஒரே விதமாக இணக்கமாக இருந்தது. அந்த கருத்துகளின் சாராம்சம்  வருமாறு. இதை  இந்தியாவில்  உள்ளவர்கள் நியாயமாக பரிசீலித்தால் இந்த கருத்துக்கள் தான் சரியானவை என்று புரிதல் ஏற்படும். எந்த கருத்தையும் ஆழமாக யோசிக்காமல் முடிவுகள் எடுத்தால் எதிர்வினையாகும்.

ஏற்கனவே நான் கடந்த 05.01.2020 அதற்கு முன்னும் இதுகுறித்து எனது சமூக வளைதளங்களில் பதிவிட்ட கருத்துக்களையே  அப்படியே அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

ஈழத்தமிழரின் விருப்பம்:(அவர்களின் கருத்து)
———————————
ஈழத் தமிழ் அகதிகளிக்கு இந்திய குடியுரிமை வழங்குவது  ஈழத் தமிழருக்கும் நல்லதல்ல இந்தியாவுக்கும் நல்லதல்ல.
இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகளை அனைவரையும் பாதுகாப்பாக இலங்கை
அரசிடம் உரிய உத்தரவாத்த்தை பெற்று
இந்திய அரசு நல்ல முறையில் அனுப்ப
வேண்டும் .
இந்திராகாந்தி அரசாங்கம் பதவியிலிருந்த  1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஈழத் தமிழ் அகதிகள் பற்றிய பிரச்சனை  பெரிதாக உருவாகியது. ஆனால் இந்திரா காந்தி அரசாங்கம் அகதிகள் பிரச்சனையை தீர்க்காமல்  வைத்திருப்பதை  ஓர் அரசியல்  பிடியாக கருதும் ராஜதந்திர
கொள்கை நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

அதாவது இலங்கை  அரசின் மீது அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தவல்ல  சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்ட ஒரு முக்கிய பிடியாக இந்திராகாந்தி அரசாங்கம் அதனை கருதியது. அரசாங்கத்துக்கு   எதிரான அழுத்தங்களை கொடுக்க முற்பட்ட போதெல்லாம் ஈழத்தமிழ் அகதிகளை பற்றிய பிரச்சினையை இந்திராகாந்தி அரசாங்கம் முன்வைக்கத் தவறவில்லை.

இத்தகைய   கண்ணோட்டத்தின் அடிப்படையில் இன்றைய  மோடி அரசாங்கம் இன்றைய இலங்கை அரசாங்கத்தின்  மீது அல்லது எதிர்கால இலங்கையின் ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களை  கொடுப்பதற்கான  ஒரு பிடியாக   கொள்கை அளவில்  ஈழத்தமிழ்  அகதிகள்    விவகாரத்தை   எண்ணமுடியும் என்று  கருத வேண்டும்.

ஈழத்தமிழ் அகதிகளின் தொகை இந்திய மண்ணில் சுமாராக ஒன்றரை லட்சம் பேரென  மதிப்பிடப்படுகிறது.  முதலாவதாக   இவ்வாறு   இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் அதன்மூலம்   ஈழத் தமிழர்களின் மக்கள் தொகை இலங்கையில் குறைந்துவிடும்.

இரண்டாவதாக  ஈழத் தமிழினத்தை இலங்கை  மண்ணிலிருந்து தமிழ் இனச்சுத்திகரிப்பு  செய்யவேண்டுமென்று  திட்டமிட்டு செயற்படும் இலங்கை அரசின் விருப்பத்தை   நிறைவேற்றவல்ல ஒரு நடவடிக்கையாகவும் மேற்படி குடியுரிமை  வழங்கும்  விவகாரம் அமைந்துவிடும்.

இந்நிலையில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுவதான  முன்னெடுப்பை    ஈழத் தமிழர்கள் பக்கம் இருந்து பார்க்கும் பொழுது நீண்டகால நோக்கில்  நல்லதல்ல   என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

அத்துடன் இரட்டை குடியுரிமை விவகாரம் இவ்வாறு ஈழத்தமிழர்களுக்கு  பாதகமான இன்னொரு பக்கத்தையும் கொண்டுள்ளது.  அதாவது ஈழத்தமிழ் அகதிகள் விவகாரத்தை இக்கால ஒரு பிரச்சனையாக வைத்திருப்பதே அரசியல் பிடித்து உகந்தது என்ற இந்திராகாந்தி அரசாங்கத்தின் கொள்கைக்கு இதுவும் மாறானதாக அமைந்துவிடும். குடியுரிமை வழங்கப்படுவதன் மூலம்   இந்தியா-இலங்கை அரசுகளுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும்.

அப்படி  என்றால் என்ன தான் தீர்வு ?

அதாவது ஈழத் தமிழ்  அகதிகளுக்கு தேவைப்படுவது வசதி விட அந்தஸ்தை ஒத்த  பின்வரும்  விடயங்களை உள்ளடக்கிய   வகையிலான ஏற்பாடாகும். 

1)  சொத்துக்களை வைத்திருக்க விற்க வாங்குவதற்கான உரிமை.

2)   பிரயாணம் செய்வதற்கான ஆவணங்கள்,   வாகனம் ஓட்டுவதற்கான உரிமை ஆவணங்கள் ,  வங்கிக்கணக்கு வைத்திருப்பதற்கான உரிமை போன்ற பத்திரங்கள் தொடர்பான ஏற்பாடுகள்.

3) இந்திய குடிமகன்களுக்கு இருப்பதுபோன்ற கல்வி கற்பதற்கான உரிமைப் பத்திரங்கள்.

4) அரசாங்க  மற்றும்  தனியார் துறைகளில்  பணிபுரிவதற்கான குடிப்பதற்கான உரிமைப் பத்திரங்கள்.

போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு அதற்குப் பொருத்தமான ஒரு   வசதிவிட உரிமை வழங்கப்படவேண்டும் என்பதே  அவர் முன்வைத்த கருத்தின் உள்ளடக்கமாகும்.

இது குறித்தான எனது பதிவுகள் பின்வருமாறு:

1)https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2019/12/blog-post_73.html

2)https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2020/01/blog-post_38.html

3)https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2019/12/blog-post_19.html

#ஈழ_அகதிகள்_குடியுரிமை 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
17.01.2020
#ksrposts
#ksradhakrishnanposts

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...