Thursday, January 16, 2020

*#நீதிபதி_பி_ஆர்_கோகுலகிருஷ்ணன்*

*நீதிபதி பி.ஆர் கோகுலகிருஷ்ணன்* 




சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போது எனக்கு நெருக்கமாக இருந்தார். தி சு கிள்ளிவளவன் (இவர் யார் என்றால் அண்ணா ஆட்சிக்கு வருவதற்கு முன் அவருக்கு உதவியாக இருந்தவர். இவரை அண்ணா திருவேங்கடம் என்றுதான் அழைப்பார்) திமுகவின் ஆங்கில பத்திரிக்கையான ஹோம்லேண்டை ஈ. வி. கே. சம்பத் மற்றும் வி. பி. ராமனோடு இணைந்து கவனித்து வந்தவர். ஈவிகே சம்பத் வெளியேறியபின் அண்ணா 1967ல் ஆட்சிக்கு வருவதற்கு முன் திமுகவை விட்டு வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார். (பழ நெடுமாறனோடு நெருக்கமாக இருந்தார்.) 

நானும் அவரும் தமிழ்நாடு காங்கிரஸ் (கா) பொதுச் செயலாளர்களாக இருந்தோம். அதன் மூலமாகத்தான் 1978 காலகட்டத்தில் அறிமுகம்.  பண்பாளர் தமிழ் மீதும் தமிழ் இசை மீதும் அக்கறை கொண்டவர். திரு வி க பெயரில் மணவழகர் மன்றத்தை தொடர்ந்து நடத்தி வந்தார். அடையார் கஸ்தூரிபாய் காந்தி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று உண்டு. சில சமயங்களில் அடையாறில் உள்ள தியோசாபிக்கல் சொசைட்டி, ஐஐடியில் நடைப்பயிற்சிக்கு வரும்பொழுது சந்திப்பது உண்டு. சமீபத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட பெசன்ட் நகர் கடற்கரையில் அவர் எப்போதும் அணிந்து வரும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் வெள்ளை பாண்டும் அணிந்துக் கொண்டு தனது உதவியாளர்களுடன் நடைப்பயிற்சிக்கு வந்த போது சந்தித்தேன்.

என்னுடைய நிமிர வைக்கும் நெல்லை நூலினை வெளியிட்டு அதை அவருக்கு அளித்தபோது அதை படித்து விட்டு கிருஷ்ணாபுரத்தையும் ஆதிச்சநல்லூரையும் பார்க்க வேண்டும் என்று சொன்னார். அதன் பின்னர் அவர் ஒருமுறை நெல்லை வந்தபோது இந்த இரண்டு இடங்களுக்கும் அவரை அழைத்துச் சென்றதெல்லாம் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. ஒபாமாவை பற்றி வைகோ எழுதிய நூலை பாரதிய வித்யா பவனில் வெளியிட ஒப்புக் கொண்டார். கல்கி ராஜேந்திரன், சிவகாமி ஐஏஎஸ் பலரும் கலந்து கொண்டனர். ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஈழத்தமிழர்கள் குறித்து வைகோ பேசியதால் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்ததால் அவரால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அந்த காரணத்தால் அந்த நிகழ்வை நான் பொறுப்பேற்று நடத்த வேண்டியிருந்தது. 

பின்னர் 2011 காலகட்டத்தில் என்னுடைய முல்லைப் பெரியாறும் தமிழக மேலவை குறித்த நூல் வெளியீட்டு விழாவிற்கு ஒரு முறை அழைத்தேன். அதில் வழக்குகள் இருக்கின்ற சூழ்நிலையில் அந்த விழாவில் நான் கலந்து கொள்வது நன்றாக இருக்காது ஆகையால் நான் அடுத்து நினைவிற்கு வருகிறேன் என்று கூறினார். அதன்பின் என்னுடைய நூல் வெளியீட்டு விழா எதையும் நான் நடத்தவில்லை. தினமணி மற்றும் மற்ற செய்தித்தாள்களில் வெளிவரும் என்னுடைய பத்திகளை படித்துவிட்டு தமிழகத்தின் உரிமைகளை சரியாக படம் பிடித்து காட்டுகிறீர்கள். நீங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் எனவும் அதற்கான வாய்ப்புகள் ஏன் தட்டி போகின்றன என தெரியவில்லை எனவும் பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார். நான் அதற்கு, ”பரவாயில்லை அது வரலேன்னா என்ன? நான் தான் பொதுத் தளங்களில் இயங்குகின்றேனே. அது போதும் ஐயா எனக்கு” என்று சொன்னால் ”அப்படி சொல்லாதீங்க, உங்களுக்கான அங்கீகாரம் வந்திருக்கலாமே” என்று அக்கறையோடு கேட்பதுண்டு. அவருடைய சகோதரர் பிஆர் பாலகிருஷ்ணன் மருத்துவத் துறை இயக்குனராக இருந்தார். 

 நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கும் போது ஒரு சில நீதிபதிகள் உத்தரவு பிறப்பிப்பது காதில் விழாது.  அவர்கள் சொல்லி முடித்த பின் அங்கிருக்கும் ஸ்டெனோவிடம் என்ன உத்தரவு என்று மீண்டும் கேட்டுதான் தெரிந்துக் கொள்ள முடியும். ஆனால் திரு. கோகுலகிருஷ்ணன் நீதிமன்ற விசாரணைகள் முடிந்து உத்தரவு வழங்கும்போது மற்ற நீதிபதிகளை காட்டிலும் அவர் கணீர் குரலில் சரியான உச்சரிப்புடன் தெளிவாக உத்தரவுகளை பிறப்பிப்பார்.  அந்தளவு அவருடைய உச்சரிப்பும் நடைமுறையும் இருக்கும். ஒருமுறை அவரிடம் விவசாயிகள் ஜப்தி வழக்கும் விவசாயிகள் துப்பாக்கிச்சூடு சம்பந்தமான வழக்கும் நடத்தியபோது ஆர்வமுடன் கேட்டு உத்தரவு பிறப்பித்தது நினைவுக்கு வருகின்றது. தமிழறிஞர், நல்ல நீதிபதி, பண்பாளர், அண்ணாவுக்கு நெருக்கமாக இருந்தவர், பப்ளிக் பிராசிக்யூடராக இருந்து நீதிபதியாக உயர்ந்தவர். அவருடைய மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. 

ஆழ்ந்த இரங்கல்கள்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
16.01.2020

#ksrposts
#ksradhakrishnanposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...