Wednesday, April 8, 2020

விகிதாச்சார வாக்குரிமை:

விகிதாச்சார வாக்குரிமை:

விகிதாச்சார வாக்குரிமை:
--------------------------
நேற்று  திரும்பி அழைத்தல் அதாவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைப்பது குறித்தும், விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் நேற்று பதிவு செய்து ஒத்துழைப்பை கோரி இருந்தேன். பலரும் தொடர்புக்கொண்டு விருப்பம் தெரிவித்தனர்.    மிகுந்த உற்சாகம் அளிக்கின்றது. 

நேற்று அப்பதிவில் குறிப்பிட்டபடி விகிதாச்சார அடிப்படையில் வாக்குரிமை குறித்து பதிவு செய்வதாக குறிப்பிட்டு இருந்தேன். நான் எழுதிய கட்டுரை தினமணியில் வெளியானதை இங்கு பதிவு செய்கின்றேன். இதுபோன்ற பதிவுகள் 50% தாக்கத்தை ஏற்படுத்தினால் தான் குற்றவாளிகளும், வாக்குரிமையை விலைக்கு வாங்கும் பணமுதலைகளையும் பொறுப்புக்கு வரமாலும், நாட்டின் செல்வத்தை சுரண்டாமல் தடுக்கவும் முடியும்.
..................

விகிதாச்சார வாக்குரிமை – விவாதம் தேவை.
-------------------------------------
நாட்டில் தேர்தல்கள் நிர்ணயிக்கப்பட்ட 5 ஆண்டுகள் என்று இல்லாமல் திடீர் திடீரென தேர்தல் வருகின்ற நிலை இன்று எழுந்துள்ளது. ஜனநாயக நாற்றங்காலில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் உரிய எண்ணிக்கைப் பெற்றால்தான் இந்த அரசியலமைப்பு நிறுவனங்கள் சரிவர பணியாற்ற முடியும். இந்நிலைக்கு நமது தேர்தலில் சீர்திருத்தங்கள் தேவை. அரசியல் பரிணாம வளர்ச்சியில் நிலைமைகள் மாறுகின்றன. அவ்வகையில் தேர்தல் சீர்திருத்தத்தில் முக்கியமாகக் கருதப்படும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்தல் பற்றியும் விவாதம் தேவை.

விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பற்றி ஆராய்ந்தால் தேர்தலில் 1000 ஓட்டு வாங்கி பொறுப்புக்கு வரலாம். ஆனால் 999 வாக்குகள் பெற்றாலும் மக்களுடைய பிரதிநிதிப் பொறுப்புக்கு வரமுடியாத நிலை இருக்கிறது. ஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்களுடைய பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் மக்களுடைய பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அதிகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஒரு அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ வாக்குரிமை பயன்படும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசீய, பன்னாட்டு அளவில் கடமையாற்றியும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறையாகும். தொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்சினைகள், கொள்கைகள் தான் நாடாளுமன்றத்தில் – சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது ஆகும். தற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆட்பலம் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனி நபர் செல்வாக்கும், புகழ்ச்சியும் என்பது விகிதாச்சார வாக்கு உரிமை மூலம் களையலாம்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையில் முன்வைத்து விகிதாச்சார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம். மாநில அளவில், தேசீய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் போட்டியிடும். அந்த தனி நபர் வேட்பாளராக நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள் தான் வாக்குச் சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரச்சாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும். மக்கள் அளித்த ஓட்டுக்களை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். ஒரு கட்சி உதாரணத்திற்கு 10 நாடாளுமன்றத்திலும், 100 சட்டமன்றத்திற்கும் விகிதாச்சார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றன என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாச்சாரத்தின்படி உறுப்பினர்களைக் கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பலாம். அதனடிப்படையில் குறிப்பிட்ட கட்சித் தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.யாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்கு தகுதியுடையவர் ஆவார்கள்.

அரசியல் கட்சி எந்த கொள்கையின் அடிப்படையில் ஓட்டு பெற்றதோ அந்தக் கொள்கையின் திட்டங்கள் செயல்படுத்தலாம். அதற்காக வாதிட திறமைமிக்க நேர்மையான உறுப்பினர்களைப் பரிசீலனை செய்து அனுப்புகின்ற வாய்ப்பு விகிதாச்சார வாக்கு நிலையில் இருக்கின்றன. பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்கள் யாவும் கட்சியின் மேல்மட்டத்தில் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். திரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சார்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருத்தல் வேண்டும். உறுப்பினர் பதவிக் காலத்தில் காலமானதும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.

இதனால் அரசியலில் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள், நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதில் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கின்றது. வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கின்றது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாச்சார வாக்கு முறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள், நேர்மையானவர்கள், மக்கள் நலம்நாடகள் எளிதாக நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன. கட்சிகளின் தேர்தல் கால செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காகப் பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் தவறுகள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையில் தடுக்கப்படலாம். ஏனெனில், தனி ஆர்வம் விகிதாச்சார வாக்குரிமையில் எவருக்கும் எழாது. இதனால், வீணான கலவரங்கள், தனிநபர் விரோதம், குள்ளங்கள் வருகின்ற நிலை விகிதாச்சார வாக்குரிமையில் இல்லை. எல்லா வாக்காளர்களும் பயன்பெறும் வகையில் வெற்றி, தோல்வி இல்லாமல் வாக்குகள் வீணடிக்கப்படாமல் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாக்காளருடைய வாக்குக் கட்சிக்குப் போய் சேர்கின்ற நிலை இந்த முறையில் ஏற்படும்.

இந்தியாவில் பல இனங்கள், மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் இருக்கின்றன. இந்நிலையில் விகிதாச்சார வாக்குரிமை நடைமுறைக்கு வந்தால் அனைத்து தேசீய இனத்தாரும் பங்கேற்கும் வகையில் நாடாளுமன்ற, சட்டமன்றப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படலாம். இதனால், இந்தியாவின் ஒருமைப்படும் இறையாண்மையும் வலுப்படும். அனைத்துக் கட்சியினரும் தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்பக்கூடிய நிலையும் ஏற்படும். மொத்தத்தில் ஒரு நாட்டில் ஒரே இடத்திலோ அல்லது ஒரு கட்சியின் கீழோ அதிகாரம் குவிவதைக் கண்காணிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஜனநாயகத் தடைகளாக இருக்கும் நிலை ஏற்படும். இந்நிலையில் ஆளும் கட்சியினர் தாங்கள் விரும்பியவண்ணம் சட்டங்களையோ, ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களையோ செய்ய முடியாமல் எதிர்க்கட்சியினரால் தடுக்க முடியும். இதனால், மத்திய அரசு எளிதில் எதிர்க்கட்சியினர் ஆளும் மாநில அரசுகளைக் கலைக்க, அவசரநிலைப் பிரகடனம், மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கால் அணுகுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்காது.

விகிதாச்சார வாக்கு முறையை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் ஏற்படலாம். இந்தியாவின் அரசியல் கட்சிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் பல்வேறு துறை அறிஞர்களைக் கலந்தாலோசனை செய்து விகிதாச்சார வாக்குரிமை இந்தியாவிற்குக் கொண்டு வரப்படும் சாத்தியக் கூறுகள் ஆராயப்பட வேண்டும்.

1930ஆம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாச்சார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாச்சார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாச்சார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டா, ஆஸ்திலேலியா போன்ற நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.

இத்தாலியில் விகிதாச்சார வாக்குரிமை நல்ல முறையிலும் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையிலும், ஜனநாயக நிலைத்தத் தம்மைக் குன்றாத வகையில் செய்யப்பட்டுள்ளது என பேராசிரியர் ஏ.கே.பால் கூறுகின்றார். சுவீடன் நாட்டில் ‘ரிக்ஸ்டேக்’ தேர்தல் சட்டம் 1920இன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930இன் அடிப்படையில் விகிதாச்சார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது. சுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசீய இனங்கள் இருப்பினும், விகிதாச்சார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1892இலிருந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்த முறையை விரும்பிய அரசியல் மேதை மில் விகிதாச்சார வாக்குரிமை நாட்டில் அனைவரும் முழுமையாகப் பங்கேற்று தேர்தலில் வாக்குகள் சிதறாமல் முழு பிரதிநிதித்துவம் ஒரு நாட்டிலுள்ள ஜனநாயக மன்றங்களில் அமையும் என்று கூறியுள்ளார்.

விதிõச்சார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாச்சார வாக்குமுறை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், இதனால் நிலையற்ற அமைச்சரவை ஏற்படும் என்று கூறுகின்றார். பேரறிஞர் அண்ணா அவர்கள் 1961ஆம் ஆண்டு டிசம்பர் 16இல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டு, 17ஆம் தேதியன்று கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்தியாவிற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் இடம்பெறும் வகையில் இம்முறையில் செயல்பாட்டுக்கு வரவேண்டும். விகிதாச்சார வாக்குரிமை மொத்தத்தில் நடைமுறையில் சாத்தியமில்லை என்ற கருத்து பலர் மத்தியில் இன்றைக்கு இருப்பினும், இந்தப் பிரச்சினையை சீர்தூக்கி ஆராய்ந்து இதனால் இந்திய ஜனநாயகத்திற்குக் கிடைக்கின்ற அரசியல் ஆரோக்கியத்தை (Healthy Politics)  கவனத்தில் கொண்டு இந்த முறை இந்தியாவில் நடைமுறையில் கொண்டு வருவதைப் பற்றிய விவாதம் இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு மிகவும் அவசியம்.

– தினமணி, 12.01.1998.

#தேர்தலில்சீர்திருத்தங்கள்
#விகிதாச்சாரவாக்குரிமை
#prsystem
#listsystem
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
8/4/2017

No comments:

Post a Comment

2023-2024