Monday, November 30, 2020

 

#நாடாளுமன்ற_தேர்தலுக்கு_ஆன_மொத்தச்_செலவு
4750 #ரூபாய்_தான்”- #இரா_செழியன்.
———————————————-




இன்றைய வியாபாரஅரசியலில்;
அரசியல் என்றல்(காசுக்கு) ஒட்டு போடுவது என்ற புரிதலை தாண்டிய மக்கள் இல்லை.அப்படி அவை இருந்தலும் microscopic........
••••••
இரா.செழியன் தி.மு.க.வின் ஆரம்பகால உறுப்பினர். அறிஞர் அண்ணாவுக்கு நெருக்கமானவர்.

இருபத்திரெண்டு ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து சிறந்த நாடாளுமன்றவாதியாகப் பெயர் எடுத்தவர்.
நாவலர் நெடுஞ்செழியனின் இளைய சகோதரர். எம்.ஜி.ஆரின் அன்புக்கும் பாத்திரமானவர்.

2005 ஆம் ஆண்டில் செழியனை அவருடைய வீட்டில் சந்தித்து விரிவான நேர்காணல் செய்தபோது பகிர்ந்து கொண்ட சில அனுபவங்கள் இன்றைக்குப் பலருக்கு வியப்பளிக்கலாம்.

“1962 ஆம் ஆண்டில் அண்ணாவுடைய விருப்பத்தின் பேரில் தி.மு.க வேட்பாளராக பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டேன். அப்போது அது தனித்தொகுதியாக இல்லை.

தேர்தல் பிரச்சாரம் அப்போது ரொம்பவும் எளிமையாக நடந்தது. தொண்டர்கள் யாரும் வந்து பணம் கேட்க மாட்டார்கள். போஸ்டர்கள் மட்டும் தான் செலவு.

என்னிடம் ஒரு கார் இருந்தது. அதில் பெட்ரோல் போட ஒரு நாளைக்கு 30 ரூபாய் ஆகும். எம்.ஜி.ஆர் வந்து சில கூட்டங்களில் கலந்து கொண்டு நன்றாகப் பேசினார். அவ்வளவு அருமையான தொண்டர்கள்.

சில சமயங்களில் பிரச்சாரக் கூட்டத்தை முடித்துவிட்டு சிலருடைய வீட்டுத் திண்ணைகளிலேயே படுத்துத் தூங்கியிருக்கிறேன்.

மொத்தமாக எனக்கு ஆன தேர்தல் செலவு எவ்வளவு தெரியுமா? 4,750 ரூபாய் தான். அந்த அளவுக்குச் செலவழித்த நான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.”

“இன்னொரு அனுபவம். ஜனதாக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த நேரத்தில் நான் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுவிட்டேன்.

அப்போது டெல்லியில் எப்படியாவது என்னை முக்கியப் பொறுப்புக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மொரார்ஜி உட்படச் சில தலைவர்கள் நினைத்தார்கள்.

பல மாநிலங்களில் ஜனதா வெற்றி பெற்றிருந்த நேரம் அது. நான் தமிழ்நாட்டுக்கு வந்து ‘மக்கள் அரசு’ என்கிற வார இதழை நடத்திக் கொண்டிருந்தேன்.

அப்போது ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பிய வெளியுறவுத்துறை அமைச்சரான வாஜ்பாய் என்னை அழைத்துப் பேசி “எப்படியாவது நீ டெல்லிக்கு வந்துவிட வேண்டும்” என்று சொன்னார்.

“வட மாநிலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் போட்டியிட ஏற்பாடு பண்ணிவிடுகிறோம். யோசித்து வை” என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பும்போதும் என்னைச் சந்தித்தார்.

அந்தச் சமயத்தில் நான் சொன்னேன்.
“என்னுடைய பின்னணியைப் பாருங்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது இந்தி ஆதிக்கத்தை எதிர்த்திருக்கிறேன்.

‘வடக்கு வாழ்கிறது’ என்று குரல் கொடுத்திருக்கிறேன். இப்போது நிலைமை மாறியிருந்தாலும் கூட, நான் வட மாநிலத்திற்குப் போய் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவது நன்றாக இருக்காது.” என்று மறுத்துவிட்டேன்.

பிறகு கர்நாடகத்திலிருந்து என்னைப் போட்டியிடச் சொன்னார்கள். காவிரிப் பிரச்சினை எழுந்தால் அது சிக்கலையே உருவாக்கும் என்று அதற்கும் மறுப்புத் தெரிவித்தேன்.

இருந்தும் மொரார்ஜிக்கு என்னை விட்டுவிட மனதில்லை.

தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு போன் பண்ணிவிட்டார். தமிழ் தெரிந்த ஒரு அதிகாரியை அருகில் வைத்துக் கொண்டு மொரார்ஜி பேசியதும் எம்.ஜி.ஆருக்கு ஆச்சர்யம்.

“ராஜ்யசபாவுக்கு செழியன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று மொரார்ஜி சொன்னதும், “சரி…செய்துவிடலாம்” என்றிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

மறுநாளே என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடனே ராஜ்யசபா எம்.பி.ஆக்கிவிட்டார்.

அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக எம்.ஜி.ஆரை நான் சந்திக்க முயன்றபோது “இதெற்கெல்லாம் நன்றி சொல்லக்கூடாது” என்று அவர் தடுத்துவிட்டார்.

நான் எம்.பி.யாகப் பதவியேற்று இரண்டு மாதங்கள் கழித்த பிறகு டெல்லியில் அவரைப் பார்த்து நன்றி சொன்னேன்.”

எம்.பி ஆவது அப்போது எவ்வளவு எளிமையான விஷயமாக இருந்திருக்கிறது?

(#மணா-வின் “ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்” நூலிலிருந்து ஒரு பகுதி)
———————
இரா.செழியன் என் மீது அக்கறையோடு
பேசுவர். உங்களுக்கான நியமான வாய்ப்புகள் அரசியலில் தர ஏன் மறுக்கின்றனர் என சந்திக்கும் போது
எல்லாம் என்னிடம் கேட்பார்
————————-
தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய 1967ஆம் ஆண்டு வெளிவந்த படம் பட்டணத்தில் பூதம். அதில் ஒரு பாடல்: “ கண்ணிலே கண்டதெல்லாம் காட்சியா? கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?” அது தமிழக அரசியலுக்கும் பொருந்தும் இங்கே சில நினைப்பும் நிஜமும்.

நினைப்பு: பணம் இருந்தால் தேர்தலில் ஜெயித்து விடலாம்.

2016 சட்டமன்றத் தேர்தல் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என்ற இரு பெரும் அணிகளைத் தவிர மற்ற கட்ட்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை என்ற வரலாற்றைச் சொல்லவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட 232 எம்.எல்.ஏக்களில் 170 பேர் கோடீஸ்வரர்கள். இத்தனை கோடீஸ்வரர்களால் தமிழகச் சட்டமன்றம் ஒரு போதும் நிரம்பியதில்லை. ஒருவகையில் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனெனில் அந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் மனுத்தாக்கல் செய்தவர்கள் 997 பேர். அதில் 553 பேர் கோடீஸ்வரர்கள். அதாவது பாதிக்கு மேல்!

மக்களவையும் பொருள் பொதிந்தவர்களால் நிரம்பியுள்ளது. மக்களவையில் உள்ள 23 திமுக உறுப்பினர்களில் 22 பேர் கோடீஸ்வரர்கள்.

வேட்பாளர் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மனுச் செய்தவர்களிடம் மூன்று கேள்விகளை முன் வைக்கின்றன. அவற்றில் இரண்டு: எவ்வளவு

சொத்து இருக்கிறது? எவ்வளவு செலவழிப்பீர்கள்?

இவையெல்லாம் பணம் இருந்தால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்ற எண்ணத்தை மக்களிடம் மட்டுமல்ல, அரசியல்வாதிகளிடமும் ஏற்படுத்தியுள்ளன. அதன் காரணமாக பணத்தை மட்டுமே நம்பி களத்திலிறங்குவோர் உண்டு. பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டதன் காரணமாக இரு தொகுதிகளில் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட வரலாறு கொண்ட தமிழகத்தில் இது வியப்பளிக்கக் கூடியது அல்ல.

ஆனால் பணம் இருந்தால் போதும் தேர்தலில் ஜெயித்து விடலாம் என்பது முழுவதும் உண்மையல்ல.

1951ஆம் ஆண்டு.சுதந்திரம் பெற்ற பின்மக்களவைக்கு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல். திண்டிவனம் தொகுதி. களத்தில் காங்கிரஸ் வேட்பாளராக இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி அதிபர் ராம்நாத் கோயங்கா. அவரை எதிர்த்து தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற சிறிய கட்சியின் வேட்பாளராக திருக்குறள் வீ. முனுசாமி. திருக்குறளைப் பரப்புவதே தனது முழு நேரப்பணியாக ஏற்றுக் கொண்டவர். பெரும் செல்வந்தர் எனச் சொல்வதற்கில்லை. சுதந்திரம் வந்த புதிது என்பதால் காங்கிரசின் செல்வாக்கு நாடு முழுதும் உச்சத்தில் இருந்தது.பணம், ஊடகம், ஆள்பலம் இவையும் கோயாங்காவிற்கு ஆதரவாக இருந்தது. ஆனால் முனுசாமி, கோயாங்காவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வாக்குகள் (கோயங்கா: 1,22,561 வாக்குகள்;

முனுசாமி: 2,14,722 வாக்குகள்) பெற்று வென்றார். தினமணியைத் திருக்குறள் வென்றது.

அதெல்லாம் அந்தக் காலம். இப்போது அவையெல்லாம் கனவில் கூட நடக்காது என்ற முணுமுணுப்புக் கேட்கிறது. சரி சமீப காலத்திற்கே வருவோம். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல். 2016 ஆண்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் மிகப்பெரும் செல்வந்தராக (சொத்து மதிப்பு ரூ 300 கோடிக்கு மேல், ஜெயலலிதாவை விடப் பெரும் செல்வந்தர்) விளங்கியவர் வசந்த குமார். கன்னியாகுமரியில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். அந்தத் தேர்தலில் தயாநிதி மாறன் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர் போன்ற பெரும் பணக்காரர்களால் வெற்றி பெற முடியவில்லை.

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த வேறு சில பணக்காரர்கள்: சுப்புராயன் (1952 மக்களவை), ஜி.டி. நாயுடு (1952,1957 மக்களவை) டி.எஸ். சௌந்திரம் அம்மாள் (TVS நிறுவனர் T.V. சுந்தரமய்யங்காரின் மகள்- 1967 மக்களவை) புதுக்கோட்டை அரசர் விஜய ரகுநாத தொண்டைமான் (1971 மக்களவை) டிடிவி தினகரன் (2004 மக்களவை) ஆர்.பிரபு (2009 மக்களவை) சி.பா. ஆதித்தனார் (1962, 1977 சட்டமன்றம்) நல்லசேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் (1967 சட்டமன்றம்) ராமநாதபுர அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி (1967 சட்டமன்றம்) ஜெயலலிதா (1996)

நிஜம்: தேர்தலில் வெல்லப் பணம் தேவையாக இருக்கலாம். ஆனால் பணம் மட்டும் போதாது- #மாலன்

ஜனசக்தியின் உரிமையான வாக்குகள் விற்பனை என்ற நிலை எனபது மிக
இழிவாக கொச்சைதனமானது என்று புரிதல் முதலில் வரவேண்டும். அரசியல் என்றால்பணதான் என நினைக்கும் கயவர்களை தூக்கி குப்பையில் போடவேண்டும்.இங்கு நிலை, பொது வாழ்வு தாழ்நது #தகுதியே_தடை
#வாழ்க_நாடும்_மக்களும்

#தேர்தல்
#Elections
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
17.07.2020.
#ksrposts

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...