Monday, November 30, 2020

 


#தலைவர்கலைஞர்_அவர்கள்
#நள்ளிரவுகைது_தமிழக_அரசியல் #வரலாற்றில்_ஒருபிழை......... 4
————————————————-



தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டது, அன்றைய மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்களும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அன்றைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும். அவரை சென்னை மத்தியச் சிறைக்குக் கொண்டுவந்தனர். ஆனால், அவரை சென்னைச் சிறையில் அடைக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், அவரை வேலூர் மத்தியச் சிறைக்கு மாற்ற முற்பட்டனர்.

ஆனால், பாலு அவர்கள் சிறை முன் நின்று மறியல் செய்தார். ‘என் தலைவர் சிறையில் தனியாக இருக்கிறார். என் கட்சிக்காரன் ஒருவர் கூட அவருடன் இல்லை. அவரால் தனியாக எந்த வேலையும் செய்ய முடியாது. நான் வேலூர் சிறைக்குச் செல்ல முடியாது. அவருடன் இருக்க என்னை அனுமதிக்க வேண்டும்’ என்று வாதாடினார். அரசுத் தரப்பில் அசைந்துகொடுக்கவே இல்லை. ‘என் ஒருவனுக்கு இடமில்லையா?’ என்று உக்கிரமாகச் சண்டையும் போட்டார். ஆனால், அனுமதி தரப்படவே இல்லை. பாலு வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.இந்த செய்தி கடந்த பதிவகளில் கவனம் இல்லாமல் விடுபட்டு
விட்டது.

கலைஞர் 1.7.2001 காலை தொடங்கி 4.7.2001 மாலை வரை நான்கு நாள்கள் சிறையில் இருந்தார். அவருக்கு அடுத்த அறையில் சென்னையில் பல்வேறு மேம்பாலங்களை வடிவமைத்த பொறியாளர் சீனிவாசன் கைது செய்யப்பட்டு அடைக்கப் பட்டிருந்தார். அந்தச் சூழ்நிலையிலும் அவரைச் சந்தித்துப் பேசிய கலைஞர், ‘தமிழ்நாட்டில் மொத்த போக்குவரத்தையும் கட்டுப்படுத்த எந்த மாதிரியான வடிவமைப்புகள் தேவைப்படும்’ என்பதை அவரிடம் விரிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

வாஜ்பாய் விஷயத்துக்கு வருகிறேன்... கலைஞர் கைது சம்பவத்தையும் அதையொட்டி தமிழகத்தில் நடந்த அரசியல் போராட்டங்களையும் அன்றைய பிரதமர் வாஜ்பாய் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். கலைஞர் கைது செய்யப்பட்ட விதத்தையும் அவர் கண்டித்தார். அவரை உடனடியாக விடுதலை செய்ய ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். சிறையிலிருந்த கலைஞரிடம் தொலைபேசியில் பேச வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கான தகவல் என்னிடம் வந்து சேர்ந்தது.அதற்கான வாய்ப்பு இல்லாமல்
ஆகிவிட்டது.

வாஜ்பாய் இந்தியாவின் பிரதமர்தான். மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். ஆனால், அவர் சிறைக்குள் இருக்கும் கைதி ஒருவரிடம் போனில் பேசச் சட்டத்தில் இடமில்லை என சொல்லி விட்டனர்.
தலைவர் கலைஞரும் அதை விரும்பவும் வில்லை.
சிறையிலிருக்கும் தன்னிடம் பிரதமர் பேசுவதற்கு சிறை விதிகளில் இடமில்லை என்பதை உணர்ந்து, அவரிடம் பேசுவதற்கு கம்பீரமாக மறுத்து விட்டார். அதனால்தான் கலைஞரை நேரில் பார்த்து நலம் விசாரித்து வரும்படி மத்திய அமைச்சர் ஜார்ஜ் மற்றும் மல்ஹோத்ரா ஆகியோரை அனுப்பி கைதுக்குத் தன் சார்பில் வருத்தத்தையும் தெரிவிக்கச் சொன்னார் வாஜ்பாய்.

மத்திய அமைச்சர்கள் வந்து சென்ற பிறகு உடனடியாக கலைஞரை ஜாமீனில் விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கலைஞர் ஜாமீனில் வெளியே செல்ல மறுத்துவிட்டார். “நான் எந்த ஊழலும் செய்யவில்லை. என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அப்படியே இருக்கும் நிலையில் அரசின் கருணையால் நான் வெளியே செல்ல விரும்பவில்லை. ஜாமீன் பத்திரத்தில் நான் கையொப்பமிட மாட்டேன்’’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார்.

மேலும், “இந்த ஊழல் வழக்கிலிருந்து என்னை சட்டரீதியாக விடுவிக்கும்வரை, சிறையைவிட்டு வெளியேச் செல்லப் போவதில்லை” என்று தீர்மானமாகக் கூறிவிட்டார். அதற்குப் பிறகே, ‘இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவையில்லை’ (No longer required in the above case) என நீதிமன்றம் ஜாமீன் ஆணையைத் திருத்தி அனுப்பியது. அந்த வரிகளை கலைஞருக்கு படித்துக் காண்பித்து விளக்கிச் சொன்ன பிறகே கலைஞர் வெளியே செல்ல ஒப்புக்கொண்டார் கடந்த பதிவில் தலைவர் சிறையிலிருந்து விடுதலை குறித்து பதிவிட்டிருந்தேன். ஜீலை நான்காம் தேதி காலையிலிருந்தே திரு. வெங்கய்யா நாயுடு அவர்கள் கைபேசியில் தலைவருடைய விடுதலை குறித்து தொடர்ந்து விசாரித்த வண்ணம் இருந்தார். 'பிரதமரே சொல்லிவிட்டாரே இன்னும் ஏன் விடுதலை தாமதம்?' என கேட்டுக் கொண்டேயிருந்தார். அவர் பிரதமரிடம் 'கலைஞரின் கைதில் நாம் மெளனம் சாதிக்கக் கூடாது. நமது அமைச்சர்கள் இருவரை கைது செய்யும் அளவிற்கு காட்டாட்சி நடத்துகிறார்கள்' என்று கடுமையாக எடுத்துக் கூறியதைக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல 04.07.2001 அன்று காலை பேராசிரியர், அண்ணன் முரசொலி மாறன் மற்றும் டி. ஆர். பாலுவுடன் நான் சிறைக்கு சென்று அண்ணன் மாறன் கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்த பின் அனைவருக்கும் அனுமதி கிடைத்தது.

தலைவரை சந்தித்துவிட்டு அங்கிருந்து நேராக ராஜ்பவனுக்கு சென்று பொறுப்பு ஆளுநர் திரு. ரங்கராஜனை சந்தித்துவிட்டு அங்கிருந்து அனைவரும் விடைபெற்றதும் நான் மீண்டும் கிளம்பி மத்திய சிறைக்குச் சென்றேன். வெங்கய்யா நாயுடு சொன்னதை வைத்து இன்றைக்கு தலைவர் எப்படியும் விடுதலையாகிவிடுவார் என்று மத்திய சிறையில் காத்திருந்தேன். அதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. 'இன்றைக்கு ஜாமீனில் உங்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. மத்திய அமைச்சர்கள் உங்களைப் பார்த்துவிட்டு சென்றபின் வாஜ்பாய் மிகவும் கடுமையாக இந்த ஜெயலலிதா அரசிடம் நடந்துக் கொண்டதன் விளைவாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது' என்று தலைவர் கலைஞரிடம் சிறையில் சொன்னேன்.

இந்நிலையில் ஜாமீனில் நான் செல்ல விரும்பவில்லை என்று கலைஞர் சொல்லிவிட்டார். எந்த ஊழலும் நான் செய்யாத போது என் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு அப்படியே இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசின் கருணையில் நான் வெளியே செல்ல விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதேபோல ஜாமின் பாத்திரத்திலும் கையெழுத்திட மாட்டேன் என்றும் வேறு எந்த ஆவணத்திலும் கையெழுத்திட மாட்டேன் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். என்ன செய்வதென்றே புரியவில்லை. இதை சிறை அதிகாரிகள் தலைமை செயலாளரின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல இந்த வழக்கில் தவறு செய்யாத என்னை குற்றவாளியென்று சிறையில் அடைத்துவிட்டு ஜாமீனில் செல்லுங்கள் என்றால் எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். அது என்னால் முடியாது நான் இங்கேயே இருக்கிறேன் என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்.

இந்த தகவல் தமிழக அரசின் கவனத்திற்கு சென்றதும் பதட்டப்பட்ட ஜெயலலிதா அரசு இந்த வழக்கை நீதிமன்றத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆஜராக தேவையில்லை என்று திருத்தம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. No longer required in this case என்று மாற்றப்பட்டு அது தலைவரின் கவனத்திற்குச் சென்றபின் விடுதலையானார்.

சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லீ தலைமையில் உள்துறைச் செயலாளர் கமல் பாண்டே பிரதமரின் செயலாளர் பிரசாடியும் கூடி உடனடியாக கலைஞரின் விடுதலைக்கு எப்படியெல்லாம் உத்தரவிடலாம் அன்றைக்கு கூடி முடிவெடுத்துவிட்டார்கள். தமிழக அரசுக்கு இதனால் சற்று பின்னடைவு ஏற்படவும் தான் தலைவர் கலைஞரை எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்தது. நான்காம் தேதி முழுவது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கலைஞரை எப்படி விடுதலை செய்வது என்பதில் தமிழக அதிகாரிகள் பரபரப்பாக இருந்தனர். ஜெயலலிதாவை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும் அதிகாரிகள் ஏதேனும் செய்ய வேண்டும் என்று துடித்ததெல்லாம் நான் அன்றைக்கு அறிவேன். அப்படி தலைவர் கலைஞர்விடுதலைசெய்யப்படவில்லையென்றால் 6 மாத காலம் தமிழக சட்டமன்றத்தை முடக்கிவைப்பதற்கான ஆலோசனைகளெல்லாம் அருண் ஜெட்லீ மூலம் அன்றைக்கு சொல்லப்பட்டது.

அப்போது லண்டனில் இருந்த சோனியா காந்தி அவர்களிடம் தினமும் வாஜ்பாய் கலைஞரின் கைதுப் பிரச்சினை குறித்து பேசியுள்ளார். அவர் கட்சியினைச் சார்ந்த ஜெயபால் ரெட்டியைத் தொடர்புக் கொண்டு அறிவாலயத்துடன் பேச வேண்டும் என்று அவரும் என்னை தொடர்புக் கொண்டதெல்லாம் அன்றைக்கு நடந்த நிகழ்வுகள். கடந்த முறை பதிவிடும்போது நினைவில் இல்லாத இந்த விஷயத்தை தற்போது பதிவிடுகிறேன்.

இதற்கிடையில் ஆளுநர் பாத்திமா பீவி 02.07.2001 அன்று ராஜினாமா செய்துவிட்டு சென்றதால் தான் ரங்கராஜன் பொறுப்பு ஆளுநராக பதவிக்கு வந்தார். ஒரு ஆளுநர் மாநிலத்தை விட்டு செல்லும்போது அவருக்கு பிரிவுபசார நிகழ்வுகள் நடத்தப்படும். ஆனால் பாத்திமா பீவி திருவிளையாடல் படத்தில் வரும் ஹேமநாத பாகவரைப் போல யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சென்னையை விட்டு கிளம்பிவிட்டார். அவர் டெல்லிக்கு சென்றாரா அல்லது கேரளாவிற்கு சென்று விட்டாரா என்று கூட தெரியவில்லை. இத்தனை பிரச்சினைகளும் அன்றைக்கு அவர் ஜெயலலிதாவிற்கு ஆமாம் மேடம் போட்டதனால் தானே வந்தது. வாஜ்பாய் அவர்கள் பாத்திமா பீவியிடம் "கலைஞர் தானே உங்களை தமிழக ஆளுநராக நியமிப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். அப்படி இருக்கும் போது நீங்கள் செய்தது நியாயமா? நீங்கள் ராஜினாமா செய்து விடுங்கள்" என்று கடுமையாக சொன்னதன் பிறகே அவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடினார்.

குருவாயூர் சென்றிருந்த ஜெயலலிதா 02.07.2001 அன்று சென்னை திரும்பியவுடன் நீண்ட ஒரு அறிக்கையினை வெளியிடுகிறார். அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்கள் அத்தனை ஆங்காரத்துடன் மனதை வேதனைப்படுத்தும் விதமாக இருந்தது. அன்றைக்கு விடுதலை பத்திரிக்கையில் கூட அந்த அறிக்கை வெளியானது. அதனை பின்னர் பதிவு செய்கின்றேன்.

இதற்கிடையில் வாழப்பாடி ராமமூர்த்தி கலைஞர் அவர்களை, 'தலைவரே' என்று தான் எப்போதும் அழைப்பார். அவரும் வெளியூர் சென்றுவிட்டு திரும்பியதும் என்னிடம் என்ன நடந்தது என்று தொலைபேசியில் விசாரித்தார். பிஜேபி தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி டெல்லியில் இருந்து பேசி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார். 01.07.2001 நள்ளிரவு முதல் 02.07.2001 நள்ளிரவு வரை நடைபெற்ற வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது குறித்து வாஜ்பாய் திருப்தியடைந்ததாக தகவல்கள் வந்தது. இந்த வேலைநிறுத்தம் தமிழகம் புதுச்சேரியில் வெற்றிகரமாக நடந்ததற்கு பேராசிரியர் நன்றி தெரிவித்ததை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

தலைவர் கலைஞர் விடுதலையானவுடன் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு அறிவாலயம் வந்து முரசொலி மாறன், பேராசிரியருடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சி ஊடக நிருபர்களும் அங்கே கூடியிருந்தனர்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்துவிட்டு பின் ஒரு கட்டத்தில் கலைஞர் சட்டையைக் கழற்றி காவல்துறை தன்னிடம் எப்படியெல்லாம் மோசமாக நடந்துக் கொண்டார்கள் என காட்டிய போது பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அதிர்ந்துப் போனார்கள்.

காவல் துறை அதிகாரிகளாக ரவீந்திரநாத்தும், முத்துக் கருப்பன், ஜார்ஜ்,நெல்சன், முகமது அலி, சமுத்திர பாண்டியன், சண்முக ராஜேஸ்வரன், முருகேசன் என பலர்.....

அறம் வெல்லும் அநீதி வீழும்.
வழக்கு தொடுத்த காரனமான ஜெயலலிதா இன்றும் A1 ஆகவே புதைந்து அவரது இல்லம் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது.

முகம்மது அலி முத்திரைத்தாள் மோசடிவழக்கில் சிறை சென்றார்.
முத்துக்கருப்பன் ஜெயலலிதா ஆட்சியிலேயே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ரவீந்திரநாத்தும் ஜெயலலிதா ஆட்சியிலேயே பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.அந்த மேம்பால ஊழல் வழக்கில் FIR கூட பதிவாகவில்லை. இங்கே அறம் வென்றது. ஆனால் கைது நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் சிறை சென்றதையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போது அநீதி வீழ்ந்தது.

இதனை எல்லாம் தன் வாழ்நாளிலேயே பார்த்து விட்டு மறைந்தார். தன்னுடைய வாக்கு பலித்ததில் எத்தனை ஆனந்தம் அடைந்திருப்பார் தலைவர் கலைஞர்.
ஜூன்30ல் இவ்வாறக நினைவு கொள்வோம்.. என இவர்களெல்லாம் கலைஞர் கைதினை முன்னின்று நடத்திய அதிகாரிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

06.07.2001 அன்று அப்பல்லோ மருத்துமனைக்குச் சென்று உடல்நிலையை கவனித்து விட்டு 08.07.2001 அன்று வீட்டிற்கு திரும்பிவிட்டு அறிவாலயம் வந்துவிட்டார். தலைவர் மருத்துவமனையில் இருந்த நேரம் அவருடைய குடும்பத்தார் முழுவதும் அவருடன் இருந்தனர். மதுரையிலிருந்து அழகிரியும் அவருடைய மனைவியும் வந்துவிட்டார்கள்.

06.07.2001 அன்று மதுரையில் கைதுச் செய்யப்பட்ட தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் மதுரை மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் சாலை மார்க்கமாக சென்னை வந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து தலைவரைச் சந்தித்தார்.

அப்போது பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமி அவர்களும் காலில் நரம்பு ஒடிந்து அப்போலோவில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

மாநில மனித உரிமை ஆணையத்திற்கு 11.07.2001 அன்று கழகத் தலைவர் தளபதி ஸ்டாலினுடன், நள்ளிரவில் கலைஞர் கைதின் போது காவல்துறை அத்துமீறியதை குறித்து விரிவான விசாரணை வேண்டும் என்று நான் தயாரித்த திரும்பவும் விரிவான கோரிக்கை மனுவை தாக்கல் செய்தோம். இதே மாதிரி மனு டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பினோம். (தொடரும்)

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
17.07.2020
#ksrposts
#கலைஞர்_கைது

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...