Friday, August 28, 2015

ஈழத்தமிழர் - Sri Lanka Tamils - Eelam தினமணி கட்டுரை 28-08-2015



ஈழத்தமிழர் - Sri Lanka Tamils - Eelam தினமணி கட்டுரை 28-08-2015.


இன்றைய (28-08-2015) தினமணி நாளிதழில், “இலங்கைத் தேர்தல்- இனி என்ன?” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள என்னுடைய தலையங்கப் பக்க கட்டுரை.

அமெரிக்கா, ஈழத்தமிழர் பிரச்சனையில் கொடூரங்களை விசாரிக்க சர்வதேச சுதந்திரமான விசாரணை என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி, இலங்கையிலே உள்ளக விசாரணை நடத்தலாம் என்று நேற்றைக்கு அறிவித்துள்ளது பேடித்தனமானது.

___________________________________________________

இலங்கையில் இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் முடிவடைந்து மைத்ரி சிரிசேனா அதிபராகவும், ரணில் விக்கிரமசிங்கே நான்காவது முறையாக பிரதமராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி 93இடங்களில் வெற்றிபெற்றது. அவர் போட்டியிட்ட கொழும்பு மாவட்டத்தில் இதுவரை யாரும் பெறாத அளவுக்கு 5,00,566 (preference vote) விருப்ப வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இதற்கு முன் சந்திரிகா 1994ல் அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்திருந்தார். ரணில் பிரதமராவதற்கு உரிய பலம் இல்லாததால் தற்போது எதிரும் புதிருமாக இருந்த சிங்களர்கள் ஒன்று சேர்ந்து தேசிய அரசை அமைக்க உள்ளனர். மைத்ரி சிரிசேனா வேண்டுகோளின்படி, ஐக்கிய தேசியக்கட்சியின் 83உறுப்பினர்களுடன் இணைந்து இந்த தேசிய அரசு அமையும்.

இந்த தேசிய அரசாங்கம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் சிறப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா , சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, எஸ்.பி. திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த அரசில் இரண்டு அணிகளைச் சேர்ந்த 70பேர் அமைச்சர்களாக பதவியேற்க இருக்கின்றனர். இந்த தேசிய அமைச்சரவை 2017 ஆகஸ்டு 21ம் தேதிவரை இயங்கும் என்று இரு கூட்டணியினரும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தத்தில் 225 உறுப்பினர்களில் 196பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மீதம் 29பேர் தேசியப்பட்டியல் வரிசையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேசியப்பட்டியல் உறுப்பினருக்கான இடங்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் பிரித்து வழங்கப்படும்.

தமிழர்களை வஞ்சிக்க வைரிகளாக இருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை சுதந்திர கட்சியும் ஒன்றுகூடி அரசாங்கம் அமைத்தால் என்னவாகும் என்பதுதான் நமது கேள்வி.

மைத்ரி சிரிசேனா, ரணில், சந்திரிகா, ராஜபக்சே ஆதரவாளர்கள் இலங்கை அரசியல் சதுரங்கத்தில் வெவ்வேறு திசையில் பயணித்தவர்கள். இன்றைக்கு அனைவரும் ஒன்று கூடி விட்டனர். திரும்பவும் சிங்களப் பேரினவாதம் நர்த்தனமாட இருக்கின்றது.

மைத்ரி சிரிசேனா தமிழர்கள், முஸ்லீம்களின் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தபின் தமிழர்களுக்கு அளித்த உறுதியின்படி எதையும் செய்யவில்லை. அதேபோலத்தான் கடந்தகாலங்களில் ரணில் விக்கிரமசிங்கேவும் தமிழர் வாக்குகளை பெற்றுவிட்டு தமிழர்களுக்கு நன்றிபாராட்டவில்லை.

சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசியக் கூட்டமைப்பு, “இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக நிலம், ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களின் உரிமைகளையும் தனித்தன்மையையும் காக்கப் பாடுபடுவோம்” என்ற வாக்குறுதியோடு தேர்தல் களத்தில் இறங்கியது. நடந்து முடிந்த தேர்தலில் இந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு கடந்த 2010தேர்தலில் பெற்றதைப் போன்று 14இடங்களில் வென்று, தேசியப்பட்டியல் வரிசையிலும் 2இடங்களை நாடாளுமன்றத்தில் பெற்றுள்ளது.

ஒருநாடு இருதேசம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்ற கொள்கை முழக்கத்தோடு போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. முன்னாள் போராளிகளான வித்யாதரன் போன்றவர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர். இவர்களில் ஒருசிலர் வெற்று பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். டக்ளஸ் தேவானந்தா திரும்பவும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மலையகத்தில் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஆறுமுக தொண்டைமான், முத்து சிவலிங்கம் போன்றோர் வெற்றிபெற்றுள்ளனர்.

கடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வியடைந்த இராஜபக்‌ஷேவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் மீள்பிரவேசத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாகவே உலகநாடுகளால் கருதப்பட்டது. ஆனால் ராஜபக்சே திரும்பவும் தோல்வியைத் தழுவியது ஒரு ஆறுதலான விடயம். அவரோடு இருந்தவர்கள் இன்றைக்கு அமைச்சரவையில் சேர்ந்து திரும்பவும் சிங்கள இனவாத அரசாக தேசிய அரசு அமைந்தால் தமிழர்களுடைய அபிலாஷைகளும், கோரிக்கைகளும் கானல் நீராகின்ற கதைதான்.

நியாயமாக எதிர்க்கட்சித் தலைவராக அமரவேண்டிய சம்பந்தனுக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் ராஜபக்சே எதிர்கட்சித் தலைவராக அமர முயற்சிக்கின்றார். ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்ற நிலையில் சிங்களர்கள் திரும்பவும் தமிழர்களை அழிக்கக்கூடிய நிலைக்குத்தான் இந்த தேசிய அரசு செயலில் இறங்கும்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழர்கள் மீது ஏவப்பட்ட இன அழிப்பு, குறிப்பாக 2009போர்குற்றங்கள் குறித்து சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணைக்கு பன்னாட்டளவில் கடந்த 2010லிருந்து குரல்கள் எழுப்பப்பட்டும் அவையாவும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாகவே உள்ளது.

மிருகபலத்தோடு சிங்களர்கள் அமைக்கும் தேசிய அரசு தேர்தல் சீர்திருத்தம் குறித்தான 20-வது சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தால், தமிழர்களுக்கு தற்போது கிடைத்த 16இடங்கள் (14+2) கூட எதிர்காலத்தில் கிடைக்க இயலாத நிலைமைகள் ஏற்படும்.
1977 ஜூலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் இலங்கையில் ஆட்சியைப் பிடித்தது. 1972 அரசமைப்புச் சட்டத்தில் இரண்டாவது திருத்தம், 1977 அக்டோபர் 4ம் நாளன்று கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றி அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே (அதிபர் ஆட்சி) ஜெயவர்த்னே எடுத்துக்கொண்டார். இதனால் 1978 பிப்ரவரி 4ல் ஜெயவர்தனே சர்வ வல்லமை படைத்த அதிபராகினார்.

அதன்பின் நாடாளுமன்றத்துக்கான காலம் ஆறு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல்களில் பல உறுப்பினர்கள் கொண்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையும் செயல்பாட்டுக்கு வந்தது. பிரான்ஸ் நாட்டு மன்னன் லூயிXIV போல ஜெயவர்தனே “நான் தான் நாடு, நான் தான் அரசு” என்று முழுமையான சர்வாதிகாரியாகி தமிழர்களை வேட்டையாடினார்.

இந்த நிலைமைகளை மாற்றக்கூடிய வகையில் மைத்ரி சிரிசேனா பதவியேற்றபின் 19-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தின்படி, பிரதமருக்கான பழைய அதிகாரங்களை திரும்பவும் பிரதமருக்கே வழங்கப்பட்டதால் இதுவரை பொம்மையாக இருந்த பிரதமர் பதவி தற்போது ரணிலுக்கு அதிகாரத்தோடு கிடைத்துள்ளது.

2009 போருக்குப் பின், ஓரளவு வாழ்வின் நிம்மதி கிடைக்குமா என்று நம்பிக்கையோடிருந்த தமிழர்களுக்கு இலங்கையில் நிகழ்கின்ற அரசியல் சூழ்நிலைகள் பேரிடியாக அமையுமோ என்று அச்சம் நமக்கு ஏற்படுகின்றது.

இதற்கு மத்தியில் 2014வரை இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு, சர்வதேச, சுதந்திரமான, நம்பகமான விசாரணைக்கு அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தொடர்ந்து தீர்மானங்களைக் கொண்டு வந்தது. ஆனால் இப்போது திடீரென்று அமெரிக்கா இலங்கையிலேயே “உள்ளக விசாரணை” நடத்தலாம் என்று கருத்து தெரிவித்ததோடல்லாமல் தீர்மானத்தையும் கொண்டுவரப் போவதாக தன் நிலையிலிருந்து பல்டி அடித்துவிட்டது எதிர்பாராத கவலையான செய்தியாகும்.

இந்நிலையில், இந்தியாவினுடைய தலையீடு மட்டுமே தமிழர்களை தற்போது இலைங்கையில் ஏற்பட்டுள்ள சிங்கள தேசிய அரசிடம் இருந்து காக்கமுடியும். இலங்கையில் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் வருமாறு:-

· இந்தியாவின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு, இந்துமகா சமுத்திரத்தை அமைதி மண்டலமாக காக்கவும், சீனாவின் வணிகப் பாதையான “சில்க் வே” மற்றும் சீன நீர்மூழ்கிப் போர்க்கப்பல்கள் நடமாட்டம், ஹம்பன்தோட்டா, கொழும்பு, திரிகோணமலை துறைமுகங்களில் சீனாவின் ஆதிக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் வேண்டும். இதுகுறித்து, சீனா “இலங்கையில் யார் வெற்றி பெற்றாலும் எங்களை புறக்கணிக்கவோ எங்கள் ஒப்பந்தங்களை புறந்தள்ளவோ முடியாது” என்று கருத்தை வெளியிட்டுள்ளது.

· இந்தியப் பெருங்கடலில் கடலுக்கடியில் உள்ள கனிமவளங்களைப் பற்றி ஆராய இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுவரும் இத்தருணத்தில் சீனாவும், எரிபொருட்களின் மூலக்கூறு படிமங்கள் அங்கு கிடைப்பதை அறிந்து அவற்றைக் கைப்பற்ற விரும்புகின்றது.

· இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து ரணப்படுத்துவது போன்ற விடயங்களிலும் இந்தியா அக்கறை செலுத்தவேண்டும். ஏற்கனவே ரணில் எல்லைதாண்டும் தமிழக மீனவர்களை சுடுவோம் என மமதையில் பேசினார்.

· எதிர்வரும் செப்டம்பர் 14தேதி ஜெனிவாவில் நடைபெறும் 30வது, ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடரில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கைக்கு இலங்கை அரசு என்ன பதிலளிக்கப்போகிறது என்பதை இந்தியா கவனிக்கவேண்டிய கடமை உள்ளது. அமெரிக்காவும் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டது. ஐ.நா.அறிக்கை வெளியிடப்படுவதற்கு 48மணி நேரத்திற்கு முன்பே திடீரென இலங்கை அரசிடம் எப்படி அளிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. ஐ.நா.வின் இந்த அறிக்கை இலங்கை அரசுக்குச் சாதகமாகத்தான் இருக்குமா என்ற அச்சம் இதனால் ஏற்படுகின்றது.

· ஈழத்தில் வாழும் தமிழர்களுடைய எதிர்கால அரசியல் தீர்வுக்கும், சுயநிர்ணய உரிமை மற்றும் தேசப் பிரச்சனைகளுக்கும் அவர்கள் விரும்பும் தீர்வுக்கு பன்னாட்டு மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்துவது.

· வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவத்தைத் திரும்பப் பெறுவது.

· தமிழர்களுடைய வீடுகள், விவசாய நிலங்களை ஒப்படைப்பதைக் குறித்து நீதிமன்றங்கள் வரை வழக்குத் தொடுத்தும் இதுவரை எந்தத் தீர்வுகளும் எட்டவில்லை. கடந்த 22-08-2015 அன்று சம்பூரில் நடந்த நிகழ்வில் சிரிசேனா இனிமேல் யுத்தமும், பிரச்சனைகளும் இல்லை என்று சொன்னது நடைமுறையில் சிங்கள அரசு பின்பற்றவேண்டும்.

· மாகாண கவுன்சிலுக்கு நில நிர்வாகம் உள்த்துறை, சட்ட ஒழுங்கு, மீன்பிடிப்பு தொழில் போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டு, மாகாணக் கவுன்சிலுக்கான சுயாட்சியை மலரச் செய்வதோடு இலங்கையில் ஒற்றையாட்சி முறையை கைவிடுவது.

· 2009 முள்ளிவாய்கால் போரின் போது காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், ஆயிரக்கணக்கானோர் என்ன ஆனார்கள். பேபி சுப்பிரமணியம், பாலகுமாரன் போன்ற போராளிகள் எங்கோ அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு எப்போது சுதந்திரக்காற்று கிடைக்கும் என்பதே தெரியாத புதிராக இருக்கின்றது.
·
இந்தப் பிரச்சனைகள் தான் பிரதானமானவை. தமிழர்களின் அடிப்படையான இந்த கோரிக்கைகள் ஈடேறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இலங்கைத் தேர்தல் முடிந்தது; இனி என்ன? என்ற வினாவுக்கு பதில் இந்தியா என்ன செய்யப்போகிறது?

பந்து தற்போது டெல்லி சவுத் ப்ளாக்கில் தான் உள்ளது.

#ஈழத்தமிழர் - #SriLankaTamils - #Eelam #தினமணிகட்டுரை

#KsRadhakrishnan #KSR_Posts

  Related Articles : http://goo.gl/9EosOf http://goo.gl/PH7oZv http://goo.gl/vm6DnQ http://goo.gl/2SsF7Z http://goo.gl/QuMKVt http://goo.gl/tF9nDK http://ksr1956blog.blogspot.in/2015/03/war-trauma-in-sri-lanka.html http://ksr1956blog.blogspot.in/2015/05/19-19th-amendment-for-south-and-zero.html http://ksr1956blog.blogspot.in/2015/03/srilanka-new-country-padma-rao-sundarji.html http://ksr1956blog.blogspot.in/2015/03/modis-srilanka-visit.html http://ksr1956blog.blogspot.in/2015/08/sri-lanka-parliament-election.html http://ksr1956blog.blogspot.in/2015/03/defeat-of-raja-paksa.html http://ksr1956blog.blogspot.in/2015/08/blog-post_21.html http://ksr1956blog.blogspot.in/2015/07/thimpu-talks-struggle-for-tamil-eelam.html

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...